குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 20
சொலோனுக்கு முன்பு, திட்டவட்டமாகக் கூற முடியாத ஒரு காலத்தில் ஒவ்வொரு இனக்குழுவிலும் பன்னிரண்டு நௌக்ரரிகள் எனப்படும் சிறு பிரதேச மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நௌக்ரரியும் ஒரு யுத்தக் கப்பலைத் தயாரித்து அதனுடன் சாதனமும் நபர்களும் தர வேண்டியிருந்தது. மேலும், இரண்டு குதிரை வீரர்களையும் அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடு குல அமைப்பை இரண்டு முனைகளில் தாக்கியது: முதலாவதாக, அது உருவாக்கிய சமூக அதிகாரம் ஆயுதமேந்திய மக்கள்தொகை மொத்தத்துடன் இனியும் ஒன்றாக இருக்கவில்லை; இரண்டாவதாக, அது பொதுக் காரியங்களுக்காக, மக்களை இரத்த உறவுக் குழுக்களின் அடிப்படையில் அல்லாமல் பிரதேச அடிப்படையில், பொதுக் குடியிருப்புப் படி, பிரித்து வைத்தது. இதன் முக்கியத்துவத்தைப் பின்னர் பார்ப்போம்.
குல அமைப்பு சுரண்டப்படுகின்ற மக்களுக்கு உதவியளிக்க முடியாதபடியால் அவர்கள் உதித்துக் கொண்டிருந்த அரசின் பாதுகாப்பைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருந்தது. சொலோன் நிர்வாக அமைப்பின் மூலம் அரசும் அவர்களுக்கு உதவி செய்தது. அதே சமயத்தில், பழைய அமைப்பைப் பாதிக்கின்ற வகையில் அது தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. சொலோன் கி.மு. 594 இல் தனது சீர்திருத்தத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதைப் பற்றி இங்கே நமக்கு அக்கறையில்லை. சொலோன் சொத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் அரசியல் புரட்சிகள் என்று சொல்லப்படுகின்ற தொடர்வரிசையைத் துவக்கி வைத்தார். இதுவரை நடந்திருக்கின்ற புரட்சிகள் எல்லாமே ஒரு வகைச் சொத்தை எதிர்த்து இன்னொரு வகைச் சொத்துக்குப் பாதுகாப்பளிப்பதற்கு நடைபெற்றவையே. ஒரு வகைச் சொத்தை அழிக்காமல் அவை இன்னொரு வகைச் சொத்தைப் பாதுகாக்க முடியாது. மகத்தான பிரெஞ்சுப் புரட்சியில் முதலாளித்துவச் சொத்தைப் பாதுகாப்பதற்காக நிலப்பிரபுத்துவச் சொத்து பலியிடப்பட்டது. சொலோன் செய்த புரட்சியில் கடன் வாங்கியவர்களின் சொத்தின் நன்மைக்காக கடன் கொடுத்தவர்களின் சொத்து நஷ்டமடைய வேண்டியிருந்தது. கடன்கள் வெறுமனே ரத்து செய்யப்பட்டன. துல்லியமான விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அடமானம் வைக்கப்பட்ட நிலங்களிலிருந்த அடமான அறிவிப்புக் கம்பங்களைத் தான் அகற்றியதாகவும் கடன் காரணமாக வெளியே விற்கப்பட்டவர்களும் ஓடிப் போனவர்களும் வீடு திரும்பச் செய்ததாகவும் சொலோன் தன்னுடைய கவிதைகளில் பெருமையுடன் கூறியிருக்கிறார். சொத்து உரிமைகளைப் பகிரங்கமாக மீறுவதன் மூலமாகத்தான் இதைச் செய்திருக்க முடியும். உண்மையிலேயே, முதலிலிருந்து கடைசிவரை, எல்லா அரசியல் புரட்சிகளும் என்று சொல்லப்படுவனவற்றின் குறிக்கோள் ஒரு வகைப்பட சொத்தைப் பறிமுதல் செய்வதன் மூலம் – களவாடுவதன் மூலம் என்றும் கூறலாம் – பிறிதொரு வகைப்பட்ட சொத்தைப் பாதுகாப்பதேயாகும். இப்படியாக, சொத்து உரிமைகளை மீறிக் கெடுப்பதன் மூலமாக மட்டுமே தனிச்சொத்தை 2,500 ஆண்டுகளாகப் பாதுகாக்க முடிந்தது என்பது முற்றிலும் உண்மையாகும்.
சுதந்திரமான அதீனியர்கள் மறுபடியும் அடிமையாக்கப்படாமல் தடுப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டியிருந்தது. இது முதலில் பொது நடவடிக்கைகளின் மூலம் சாதிக்கப்பட்டது. உதாரணமாக, கடன் வாங்கிய நபரை அடமானம் வைக்கின்ற ஒப்பந்தங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், ஒரு நபர் சொந்தமாக வைத்துக் கொள்ளக் கூடிய நிலத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்சம், பிரபுக்கள் விவசாயிகளுடைய நிலங்களைக் கவர்வதைத் தடுப்பது இதன் நோக்கம். அதன் பிறகு அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றில் நமக்கு முக்கியமானவை பின்வருமாறு:
ஒவ்வொரு இனக்குழுவிலிருந்தும் நூறுபேர் வீதம் கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை நானூருக்கு உயர்த்தப்பட்டது. ஆக, இன்னும் இனக்குழுவே அடிப்படையாக இருந்தது. ஆனால் இது ஒன்றுதான் பழைய அமைப்பிலிருந்து எடுத்துப் புதிய அரசியலமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அம்சமாகும். மற்றபடி, சொலோன் சொந்த நிலம், சாகுபடி அளவு ஆகியவற்றைக் கொண்டு, குடிமக்களை நான்கு வகுப்புகளாகப் பிரித்தார். முதல் மூன்று வகுப்புகளுக்கும் குறைந்தபட்சச் சாகுபடி அளவு 500, 300, 150 மிதிம்னசுகள் (ஒரு மிதிம்னஸ் என்பது சுமார் 41 லிட்டர்கள்) தானியம் என்று சொலோன் நிர்ணயித்தார். அதை விடக் குறைந்த நிலம் உள்ளவர்களும் நிலமே இல்லாதவர்களும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள். முதல் மூன்று வகுப்புகளின் உறுப்பினர்கள்தான் பதவி வகிக்க முடியும். உச்ச உயர் பதவிகள் முதல் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டன. மக்கள் சபையில் பேசுவதற்கு மட்டுமே நான்காம் வகுப்பினருக்கு உரிமையிருந்த்து. ஆனால் இங்கே எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; இங்கே எல்லா அதிகாரிகளும் தமது செய்கைகளுக்கு பதிலளித்தாக வேண்டும்; எல்லாச் சட்டங்களும் இங்கே முடிவு செய்யப்பட்டன; இங்கே நான்காவது வகுப்புதான் பெரும்பான்மையாக இருந்தது. செல்வத்தின் பாற்பட்ட சலுகைகள் என்ற வடிவத்தில் பிரபுத்துவச் சலுகைகள் ஓரளவுக்குப் புதுப்பிக்கப்பட்டிருந்தன, ஆனால் தீர்மானகரமான அதிகாரம் மக்களிடம் இருந்தது. போர்ப் படைகளைத் திருத்தியமைப்பதற்கும் இந்த நான்கு வகுப்புகளே அடிப்படையாக இருந்தன. முதல் இரண்டு வகுப்புகளும் குதிரைப் படையைத் தந்தன; மூன்றாவது வகுப்பு கவசமிணிந்த காலாட்படையைக் கொடுத்தது; நான்காவது வகுப்பு கவசமில்லாத சாதாரண காலாட்படையில் அல்லது கப்பற்படையில் பணி புரிந்தது. இவ்வகுப்பினருக்கு அநேகமாக ஊதியம் அளிக்கப்பட்டிருக்கலாம்.
இப்படியாக, நிர்வாக அமைப்பில் தனியுடைமை என்ற முற்றிலும் புதிய அம்சம் ஒன்று புகுத்தப்பட்டது. அவரவர் சொந்தமாக வைத்துள்ள நில அளவுக்குத் தகுந்தபடி குடிமக்களின் உரிமைகளும் கடைமைகளும் தர வாரியாக அமைக்கப்பட்டன; உடைமை வர்க்கங்கள் செல்வாக்கு அதிகரித்த பொழுது பழைய இரத்த உறவுக் குழுக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன, குல அமைப்பு மற்றொரு தோல்விக்கு உள்ளாயிற்று.
எனினும் சொத்துக்குத் தகுந்தபடி தரவாரியாக அரசியல் உரிமைகளைத் தருவது அரசின் இன்றியமையாத செயல் அல்ல. அரசு அமைப்பின் வரலாற்றில் அது முக்கியமாக இருந்திருக்கலாம், எனினும் பல அரசுகள், அதிலும் அதிக முழுமையாக வளர்ச்சி பெற்றிருந்த அரசுகள் அது இல்லாமலே இயங்கின. ஏதன்சில் கூட அது தற்காலிகமான பாத்திரமே வகித்தது. அரிஸ்டிடிஸ் காலத்திலிருந்து எல்லாப் பதவிகளும் எல்லாக் குடிமக்களுக்கும் எட்டக் கூடியவையாக இருந்தன.
அடுத்த எண்பது ஆண்டுகளில் அதீனியச் சமூகம் ஒரு போக்கில் படிப்படியாகச் சென்றது; அதற்கடுத்த நூற்றாண்டுகளிலும் அதே போக்கில் சென்று அது மேலும் வளர்ச்சியடைந்தது. சொலோனுக்கு முந்திய காலப் பகுதியல் நிலத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்குவது மிதமிஞ்சி நடைபெற்றது. அது இப்பொழுது தடுக்கப்பட்டது. நிலச் சொத்து வரையறையின்றிக் குவிக்கப்பட்டிருந்ததும் தடுக்கப்பட்டது. வர்த்தகமும் அடிமை உழைப்பின் மூலம் மேன்மேலும் வளர்கின்ற கைத்தொழில்களும் கலைத் தொழில்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற தொழில்களாக மாறின. அறிவியக்கம் வளர்ச்சியடைந்தது. பழைய மிருகத்தனமான முறையில் தங்களுடைய சொந்தக் குடிமக்களைச் சுரண்டுவதற்குப் பதிலாக இப்பொழுது அதீனியர்கள் பிரதானமாக அடிமைகளையும் அதீனியர்களல்லாத வாடிக்கைக்காரர்களையும் சுரண்டினார்கள் ஜங்கம் சொத்துகள், பணம், அடிமைகள், கப்பல்கள் என்ற வடிவத்தில் செல்வம் மேன்மேலும் அதிகரித்தது. அனால் சில வரையறைகளோடிருந்த முதல்காலப் பகுதியில் நிலம் வாங்குவதற்குரிய சாதனமாக இருந்தது மாறி அதுவே ஓர் இலட்சியமாகி விட்டது. இது, ஒரு புறத்தில் புதிய, செல்வமிக்க, தொழில்துறை மற்றும் வர்த்தக வர்க்கம் பிரபுக்களின் பழைய அதிகாரத்துடன் வெற்றிகரமாகப் போட்டியிடுவதை உண்டாக்கி விட்டது. ஆனால், மறு புறத்தில், இது பழைய குல அமைப்புக்கு எஞ்சியிருந்த கடைசி ஆதாரத்தையும் பிடுங்கி விட்டது. குலங்கள், பிராட்ரிகள், இனக்குழுக்களின் உறுப்பினர்கள் இப்பொழுது ஆட்டிக்கா முழுவதிலும் சிதறிக் கிடந்தார்கள், ஒருவரோடொருவர் முற்றிலும் கலந்து விட்டிருந்தனர். எனவே அவை அரசியல் அமைப்புகள் என்ற முறையில் சிறிதும் பயன்படவில்லை. அதீனியக் குடிமக்களில் ஏராளமானவர்கள் எந்தக் குலத்தையும் சேர்ந்திருக்கவில்லை. அவர்கள் வெளியிலிருந்து வந்து குடிமக்களாக சுவீகரித்துக் கொள்ளப்பட்டவர்கள், ஆனால் பழைய இரத்த உறவுமுறை அமைப்புகள் எதிலும் சுவீகரித்துக் கொள்ளப்படவில்லை. மேலும், பாதுகாப்பு மட்டுமே பெற்று வந்த அந்நியக் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. [ஆட்டிக்காவில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த அந்நியர்கள், மெடோய்க்குகள் (metoikos) என்று சொல்லப்படுபவர்கள் இங்கே குறிக்கப்படுகிறார்கள். அவர்கள் அடிமைகளல்ல என்றாலும், அதீனியக் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த எல்லா உரிமைகளும் அவர்களுக்குத் தரப்படவில்லை. அவர்கள் பிரதானமாக கைத்தொழிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் மீது விசேஷமான வரி விதிக்கப்பட்டது; அவர்கள் முழு உரிமைகளுள்ள குடிமக்களிலிருந்து “புரவலர்களைக்” கொண்டிருக்க வேண்டும், அவர்கள் மூலமாகவே நிர்வாகத்துக்கு மனுக்களை அனுப்ப வேண்டும்.]
இதற்கிடையில் வகுப்புகளின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரபுத்துவம் தனது முந்திய சலுகைகளைத் திரும்பப் பெறுவதற்கு முயன்றது. குறுகிய காலத்துக்கு தன்னுடைய மேலாதிக்கத்தைத் திரும்பவும் பெற்றது. ஆனால் கிளிஸ்தேனிசின் புரட்சி (கி.மு. 509) அதை இறுதியாக வீழ்த்தியது. அத்துடன் குல அமைப்பின் கடைசி எச்சங்களும் வீழ்ச்சியடைந்தன.
கிளிஸ்தேனிஸ் தனது புதிய நிர்வாக அமைப்பில் குலங்களையும் பிராட்ரிகளையும் ஆதாரமாகக் கொண்டிருந்த பழைய நான்கு இனக்குழுக்களையும் புறக்கணித்தார். அவற்றினிடத்தில் முற்றிலும் புதிய ஒரு அமைப்பு வந்தது. ஏற்கெனவே நௌக்ரரிகளில் முயன்றிருந்தபடி குடிபுகுந்த இடத்துக்குத் தகுந்தபடி குடிமக்களைப் பிரிப்பதை அது முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்பொழுது நிர்ணயிக்கின்ற அம்சமாக இருந்தது இரத்த உறவுமுறை அமைப்பில் அங்கமல்ல, குடிபுகுந்த இடமே; இப்பொழுது பிரிக்கப்பட்டது மக்களல்ல, பிரதேசமே; அரசியல் ரீதியில் மக்கள்தொகை பிரதேசத்தின் இணைப்பாகம் ஆகி விட்டது.
ஆட்டிக்கா முழுவதும் சுயாட்சியுள்ள நூறு சமுதாயப் பிரதேசங்கள் அல்லது டேம்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு டேமிலுள்ள குடிமக்கள் (டேமாட்டுகள்) தமது அதிகார பூர்வமான தலைவனையும் (டேமார்ஹ்) பொருளாளரையும் முப்பது நீதிபதிகளையும் தேர்ந்தெடுத்தார்கள்; அந்த நீதிபதிகள் சில்லறை விவகாரங்களை முடிவு செய்கின்ற அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். டேமின் குடிமக்களுக்குத் தனிக் கோவில், காவல் தேவதை இருந்தது அல்லது மாவீரன் இருந்தான். அவர்களே பூசாரிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். டேமில் தலைமையான அதிகாரம் டேமாட்டுகளின் மன்றத்திடம் இருந்தது. இது சுயாட்சியுள்ள அமெரிக்க நகரக் கூட்டுச் சமூகத்தின் முன்மாதிரி என்று மார்கன் சரியாக குறிப்பிடுகிறார். உச்ச வளர்ச்சி பெற்ற நவீன அரசு எந்த அலகுடன் முடிகிறதோ அதே அலகுடன் ஏதன்சில் உதித்துக் கொண்டிருந்த அரசு தொடங்கியது.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
- மாமேதை ஏங்கல்ஸ்.
- 1884 ல் எழுதிய முன்னுரை
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
- ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
- குடும்பம் – 1
- குடும்பம் – 2
- குடும்பம் – 3
- குடும்பம் – 4
- குடும்பம் – 5
- குடும்பம் – 6
- குடும்பம் – 7
- குடும்பம் – 8
- குடும்பம் – 9
- இராகோஸ் குலம் 1
- இராகோஸ் குலம் 2
- கிரேக்க குலம் 1
- கிரேக்க குலம் 2
- அதீனிய அரசின் உதயம் 1