அண்மையில் ஒரு செய்தி வெகுமக்கள் கவனிப்பு இல்லாமல் கடந்து சென்று விட்டது எனக் கருதுகிறேன். ‘ஒரிஸ்ஸா பாலு தலைமையிலான ஒரு குழு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, இந்தியப் பெருங்கடலில் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது’ என்பது தான் அந்தச் செய்தி.
தமிழர்கள் யார்? அவர்களின் தொல்பிறப்பிடம் எது என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் இங்கு உள்ளன. கடல்கோள் பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் பேசுகின்றன. மட்டுமல்லாமல், உலகின் அனைத்துப் பகுதி மக்களிடமும் கடல் நிலத்தை விழுங்கிய, மக்கள் தப்பியோடிய கதைகள் நிலவுகின்றன.
இவைகளை முன்வைத்து, இந்தியாவின் தென்பகுதி தொடங்கி ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் வரை முக்கோண வடிவிலான நிலப்பரப்பு இந்திய்ப் பெருங்கடலில் இருந்தது. அதுவே குமரிக் கண்டம். அதிலிருந்து தான் மக்கள் தோன்றி உலகம் முழுதும் பரவினர் என்று ஒரு கருத்து இங்கு நிலவி வருகிறது.
இதற்கு நேர் மாறாக, இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அது தான் பின்னர் கடல்கோளால் பிரிக்கப்பட்டது. இதைத்தான் பெரிய கண்டம் இருந்ததாக மிகைப்படுத்திக் கூறுகிறார்கள் எனும் கருத்தும் இங்கு இருந்து கொண்டிருக்கிறது.
எதிரும் புதிருமான இந்த இரண்டு கருத்துகளில் எது சரியானது? அல்லது இந்தியப் பெருங்கடலில் உண்மையில் நிகழ்ந்தது என்ன? என்பன குறித்து கடலாய்வுகள், தொல்லியல் ஆய்வுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் ஆய்வு எனும் பெயரில் குழப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழர்களின் குமரிக்கண்டம் என்பது சுமேரியா தான், என்பதும் அதில் ஒன்று. இவ்வாறான குழப்பங்களுக்கு நடுவே தெளிவான உண்மையான வரலாறு அறியப்படாமலேயே கிடக்கிறது. அவை ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமா என்ன?
ஆனால் ஒன்றிய அரசின் பார்ப்பன மேலாதிக்கம், இதுவரை அது தொல்லியல் ஆய்வுகளுக்கு கொடுத்துவரும் மரியாதை, பார்ப்பன புராணக் குப்பைகளை வரலாறாக்க எந்த எல்லைக்கும் செல்ல ஆயத்தமாக இருக்கும் அதன் தன்மை, தொல்லியல் கடலியல் ஆய்வுகள் உட்பட அனைத்து ஆய்வுத் துறைகளையும் பார்ப்பன மயமாக்கி வைத்திருக்கும் பாங்கு, கீழடியின் ஆய்வுகளை தொடர்ந்து நடத்தவும், ஆய்வு முடிவுகளை வெளியிடவும் மக்கள் போராட வேண்டிய நிலையில் இருப்பது ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், இந்த ஆய்வுகள் உண்மையை வெளிக் கொண்டுவருமா? எனும் ஐயம் ஏற்படுவதை தடுக்கவே முடியவில்லை.
எனவே, இந்த ஆய்வுகள் தற்போது செய்வதை விட, மெய்யாகவே தொல்லியல் ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளும், பார்ப்பன திரித்தல்களையும், திணிப்புகளையும் செய்யாத ஓர் ஒன்றிய அரசு அமையும் போது இது போன்ற ஆய்வுகளைச் செய்வது தான் சரியானதாக, பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
2010 செம்மொழி மாநாட்டில் பா.பிரபாகரன் ஆற்றிய ‘தமிழினத்தின் தடங்கள்’ எனும் தலைப்பிலான உரையின் திருத்தப்பட்ட வடிவமே, கிழக்கு பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கும் ‘குமரிக் கண்டமா? சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்’ எனும் இந்த நூல்.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்