
செய்தி;
உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, இன்று (ஜனவரி 11) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போப்பண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும்வரை, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் சிக்கலைத் தீர்க்க தவறிவிட்டீர்கள். புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்ட விளைவு தற்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அப்போது மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்தது” என்று கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசின் பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கிறீர்கள்… என்ன பேச்சு வார்த்தை நடக்கிறது? என்ன பேசுகிறீர்கள்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை துஷார் மேத்தாவிடமும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடமும் எழுப்பினர்.
இதையடுத்து அட்டர்னி ஜெனரல், இவ்வழக்கில் அவசரமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதை கேட்ட தலைமை நீதிபதி, நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். இவ்விவகாரத்தில் போதுமான அளவுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார்.
மேலும், போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னதாக, அவர்களிடத்தில் சொல்லுங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், உச்ச நீதிமன்றம் அதன் கடமையைச் செய்யும் என்று சொல்லுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், “விவசாயிகளுக்கு இந்த சட்டம் நன்மை பயக்கிறது என ஒரு மனு கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சட்டத்தை நிறுத்திவைத்தால் பேச்சுவார்த்தைதான், குழு முன் பேச்சு வார்த்தை சிறப்பாக நடக்கும்” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை எட்டுவதற்குக் கால அவகாசம் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் இதையேதான் தெரிவித்தீர்கள். போராட்டக்களத்தில் உயிர் துறப்பது நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது?. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏதாவது நடந்தால் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால்தான் எந்த முடிவுக்கும் இரு தரப்பால் வர முடியவில்லை என்ற விமர்சனம் நீதித்துறை மீது வரக்கூடாது. அதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பெண்கள் உட்பட விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகின்றனர் இதிலிருந்தே தீவிரம் தெரியவில்லையா? அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று போராட்டத்தை தொடருமாறு அறிவுறுத்துங்கள் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். மேலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் என அட்டர்னி ஜெனரல் கூறிய போது, காந்தியின் சத்யா கிரக போராட்டம் போல அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
இறுதியாக, விவசாயிகளின் கோரிக்கை பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். அதை நாங்கள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
செய்தியின் பின்னே:
நீதிமன்றத்தின் இந்த ஓநாய் கண்ணீருக்கு போராடும் விவசாயிகளும் மக்களும் ஏமாற மாட்டார்கள். ஏமாறக் கூடாது. முதலில் இதை நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றதே, போராட்டத்துக்கு எதிரானது தான்.
அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று ஓராயிரம் வழக்குகளில் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் இந்த நீதிபதிகள். அதாவது அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து மக்கள் நீதி மன்றத்துக்கு வந்தால், ‘கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டோம்’ என்பதும், அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக மக்கள் தீரத்துடன் போராடினால் அதையே மாற்றிப் போட்டு தட்டுவதும் நீதி மன்றங்கள் வழக்கமாகச் செய்வது தான். எனவே, போராடும் விவசாயிகளும் மக்களும் ஏமாற மாட்டார்கள். ஏமாறக் கூடாது.
போராட்டங்களில் தலையிடும் உரிமை நீதி மன்றங்களுக்கு கிடையாது. இது அரசின் கொள்கை முடிவுகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான சிக்கல். இதை போராடும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீதி மன்றங்களுக்கு வழக்கு வந்தால், அந்த வழக்கு குறித்து மட்டுமே தீர்ப்போ கருத்தோ சொல்ல வேண்டும். சட்டம் சரியா தவறா என்று கருத்து கூறுங்கள் அல்லது தீர்ப்பு எழுதுங்கள். மாறாக மக்களின் போராட்டங்களில் கருத்து கூறுவது நீதிபதிகளின் வேலை அல்ல.
நீதி மன்றங்களுக்கு மெய்யாகவே இந்த வேளாண் சட்டங்களின் மீதும், போராடும் மக்களின் மீதும் அக்கரை இருந்தால், இந்த சட்டங்களை அரசு கொண்டு வந்த முறை சரியானது தானா? கொண்டு வந்தது பொருத்தமானது தானா? ஏன் மரபுகள் மீறப்பட்டிருக்கின்றன? ஏன் நிலைக்குழுவுக்கு அனுப்பவில்லை? போன்ற விவகாரங்களை சூமோட்டாவாக எடுத்துக் கொண்டு விசாரிக்கட்டும்.
இதில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், இந்த போராட்டத்தை இல்லாமல் செய்வதற்கு அரசு பல வழிகளில் முயன்றது. காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை வீசியது, தடியடி நடத்தியது, சாலைகளில் பள்ளம் வெட்டியது, சரக்குப் பெட்டகங்களை நிறுத்தி வழியை மறித்தது, பேச்சுவார்த்தை நாடகங்களை ஆடியது. இப்படி செய்யப்பட்ட முயற்சிகள் அத்தைனையும் வீணானதால் தற்போது நீதி மன்றத்தை ஏவி விட்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அதாகப்பட்டது, “யோக்கியன் வர்ரான் செம்பெடுத்து உள்ள வை” அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்.