
பாஜக எனும் பாசிசக் கூட்டத்துக்கும் பொய்களுக்கும் இடையிலான நெருக்கம் அவ்வளவு எளிதில் இற்று விடக் கூடியது அல்ல. இந்தியாவை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க ஆவன செய்து விட்டு, ஜின்னா நாட்டை துண்டாடுகிறார் என பரப்பியதில் தொடங்கிய பொய்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். என்றாலும் தற்போது அது புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்பது கவனத்துக்கு உரியது.
இந்தியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த கமுக்க(இரகசிய)ச் செய்தி தான். இந்தியாவின் தொடக்க கால தலைவர்கள் ஊடகத் துறையை ‘இந்தியாவின் நான்காவது தூண்’ என்றெல்லாம் உவந்து கூறியதுண்டு. இன்றோ அது கார்ப்பரேட்டுகளின் கால் நக்குவதில் முதலிடத்திற்கு போட்டி போடுகிறது.
அண்மையில் இரண்டு செய்திகள் இந்தியாவில் பரபரப்பான பேசுபொருளாகியது.
1. ஜனவரி ஆறாம் தேதி பரபரப்பாக பேசப்பட்ட ‘யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றைக் கையாள்வதில் திறன்பட செயல்பட்டதாக அமெரிக்காவின் டைம் இதழ் பாராட்டியதாக’ வெளியான செய்தி.
2. ஜனவரி ஒன்பதாம் தேதியை ஆக்கிரமித்த ‘பாலக்கோட் தக்குதலுக்கு இந்தியா நடத்திய எதிர் தாக்குதலின் போது இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானிற்குள் ஊடுருவித் தாக்கியதில் 300 பாகிஸ்தானியர் கொல்லப் பட்டனர் என்கிற செய்தி உண்மைதான் என்று ஆஹா ஹிலாலி என்கிற முன்னாள் பாகிஸ்தானிய தூதரக அதிகாரி ஒப்புக் கொண்டார்’ எனும் செய்தி.
இரண்டுமே பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட போலிச் செய்திகள் என்பது ஒருபுறமிருக்க, இந்த இரண்டு செய்திகளையுமே ஊடகங்கள் கொண்டாடின. இவைகளை வெளியிடுவதிலும் பரப்புவதிலும், மகிழ்வையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தின. இது அன்றாடம் நடப்புகளை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்; ஏதாவது ஒரு அச்சு நாளிதள் தன் வீட்டுக்கு தினசரி வந்து கொண்டிருப்பது செய்திகளை அறிந்து கொள்வதைக் காட்டிலும் தனக்கு படித்தவன் எனும் மரியாதையைப் பெற்றுத் தரும் என நம்பும், மக்களின் முகத்தில் மலத்தை அள்ளி வீசிய செயலுக்கு ஒப்பானது.
முதல் செய்தியை எடுத்துக் கொள்வோம், நியூஸ்18 தொலைக்காட்சியும், ஜிநியூஸ் தொலைக்காட்சியும் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியாகும் செய்தியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பின. ரிபப்ளிக் போன்ற தொலைகாட்சிகள் இது போன்ற அல்வாக்களை விட்டு வைக்கும் என எதிர்பார்க்க முடியுமா? ஏபிபி கங்கா, டிவி 9 பரத்வர்ஷ் உள்ளிட்ட பல பகுதியளவிலான அனைத்து செய்தி ஒளிபரப்புகளும் இதை வாந்தியெடுத்தன. ஒப்பீட்டளவில் பார்த்தால், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு இல்லை. என்றாலும் தமிழ் ஊடகங்களிலும் இந்த செய்திகள் வெளியாயின. ஆனால், உண்மையில் டைம் இதழ் யோகியைப் பாராட்டியதா?
உலகத்தின் பிரபலமான இதழ்களின் ஒன்றான டைம் இதழில், உத்திரப் பிரதேச அரசு, மூன்று பக்கம் கொண்ட ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. பணம் கொடுத்தால் விளம்பரம் என்ற பெயரில் எதையும் வெளியிட ஆயத்தாமாக இருப்பவை தானே ஊடகங்கள். (அண்மையில் சன் டிவியில் அதிமுக விளம்பரம் வெளிவந்ததை நினைவுபடுத்திப் பார்க்கலாம்) இந்த விளம்பரத்தை, டைம் இதழ் யோகியைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருப்பதாக திரித்து உபி முதல்வர் யோகியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில், 15 டிசம்பர் 2020 அன்று செய்தி வெளியிடப்படுகிறது. அதாவது உபி அரசு விளம்பரமாக கொடுத்து வெளியிடச் செய்து, பின்னர் அதையே டைம் இதழ் வெளியிட்ட செய்தி என்று தன்னுடையை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான் உள்ளிட்ட பல பிரபலமான சமூக ஊடகக் கணக்குகள் இந்த போலி செய்திகளை பரப்ப தொடங்கின. இதை காட்சி அச்சு ஊடககங்கள் அனைத்தும் தொடர்ந்து வெளியிட்டன. அரசுக்கு எதிரான புலனாய்வுகளுக்கு பெயர்போன தெகல்கா நாளிதழிலும் கூட இந்தச் செய்தி வெளி வந்தது.
கடைசியில் ‘நியூஸ் லாண்டரி’ எனும் இணைய தளம் இந்த புழுத்துப் போன இழி செயலை அம்பலப்படுத்தியது. இதன்பிறகு ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டனவே தவிர, இந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்டதற்காக ஒரு இதழ் கூட, திரும்பத் திருப்ப ஒளிபரப்பியதற்காக ஒரு தொலைகாட்சி கூட பெயரளவுக்குக்கேனும் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இரண்டாவது செய்தியை எடுத்துக் கொள்வோம். துல்லியத் தாக்குதல், 56 இஞ்ச் மோடி என்று அன்று எத்தனை நாட்கள் இந்திய ஊடகங்கள் மோடியை ஜாக்கி வைத்து தூக்கின? எந்த பன்னாட்டு ஊடகமும் இந்த தாக்குதல் வெற்றியடைந்ததாக, இலக்கு தகர்க்கப்பட்டதாக ஏற்கவே இல்லை. என்றாலும் இதை ஐயம் கொள்வோர் அனைவரும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பின் கடந்தும் போனார்கள். இப்போது அதன் இரண்டாவது சுற்று. அந்த தாக்குதலில் 300 பேர் மரணமடைந்ததை பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற தூதரக அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டார் என்று கூத்தாடின வட இந்திய ஊடகங்கள். (நல்ல வேளை தமிழ்நாட்டு ஊடகங்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தன) அதற்கு சான்றாக, பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் காணொளி ஒன்றும் காட்டப்பட்டது.
இந்தச் செய்தியை முதன் முதலில், இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் என்றும், தெற்காசியாவின் மிகப்பெரும் செய்தி நிறுவனம் என்றும் தன்னை அழைத்துக் கொள்ளும் செய்தி நிறுவனமான ANI (Asian News International) தான் வெளியிட்டது. ஓரிரு நாட்களுக்குப் பின்னர் வெளியில் தெரியாமல் அந்தச் செய்தியை நீக்கியும் விட்டது. அதற்குள் வட இந்திய ஊடகங்கள் அனைத்தும் அர்ணாப்பாக மாறி களத்தில் குதித்தன. இப்போதோ எதுவும் தெரியாததைப் போல் அடுத்தடுத்த செய்திகளுக்கு நகர்ந்து விட்டன. குறைந்தளவு தன்னுடைய பார்வையாளர்களுக்கு வருத்தம் தெரிவிக்கக் கூட இந்த ஊடகங்கள் தயாராக இல்லை. அப்படி என்றால் தங்கள் பார்வையாளர்கள் மீது இந்த ஊடகங்கள் வைத்திருக்கும் மதிப்பு என்ன? எதைப் போட்டாலும் தின்னும், எதை ஏற்றினாலும் சுமக்கும் கழுதைகள் என்றா?
உண்மையில் நடந்தது என்ன? ஹம் டிவி எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் தூதரக அதிகாரியான ஆஹா ஹிலாலி என்பவர், “சர்வதேச எல்லையை மீறி வந்ததால் இந்தியா போர் தொடுத்தது என்றே ஆகிறது. குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த மதராஸாவைத் தாக்கி இந்தியா 300 பேரைக் கொல்ல நினைத்தது. 300 குழந்தைகள் அங்கு இருந்ததாக இந்தியாவுக்குக் கிடைத்த தகவல் தவறு. உண்மையில் இந்திய விமானங்கள் குண்டு வீசியது ஒரு மைதானத்தின் மீதுதான்.” என்று கூறுகிறார். இந்த காணொளியை எடுத்துக் கொண்டு, அதில் சில திருத்தங்கள் செய்து 300 பேர் இறந்ததை பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒப்புக் கொண்டார் என்று போலியாக மறுதயாரிப்பு செய்துள்ளனர்.
பாஜக எனும் கட்சியைப் பொருத்தவரை, மக்களை மதரீதியாக பிளந்து பார்ப்பனிய மேலாதிக்கத்தை நீடிக்கச் செய்வது எனும் ஒற்றை நோக்கத்தில், அதற்காக எதையும், எதையும் செய்யும் வெறியில் இருக்கிறது. பொய் சொல்வதால் மக்களிடம் அம்பலப்பட நேருமே என்பது குறித்தெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ஓட்டுப் போடுவதற்கும் கலவரம் செய்வதற்கும் மட்டுமே மக்கள் தேவை மற்றப்படி அவர்கள் உயிரினங்களே இல்லை என்பது தான் மக்கள் குறித்த பாஜகவின் பார்வை. இவைகளை மாற்ற முடியாது. எனவே, பாஜக குறித்தும் ஊடகங்கள் குறித்துமான தங்கள் மதிப்பீடுகளை மாற்றுவது குறித்து மட்டுமே மக்கள் யோசிக்க வேண்டும்.