
உலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும், உயரத்துக்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர் வாழும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல் உலகப் பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. வழமை போலவே இந்தியா இந்தப் பட்டியலில் பிந்தங்கி இருப்பதோடு – 107 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்திய 94 வது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88வது இடம்), இலங்கை (64), வங்க தேசம் (75), நேபாளம் (73), மியான்மர் (78) ஆகிய சிறிய, வரிய நாடுகளை விட மிக மோசமான நிலையில் இருப்பதை அக்குறியீடு அம்பலப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், அதாவது வளர்ச்சி நாயகன் என்று விளம்பரப்படுத்தப்பட்ட திருவாளர் மோடியின் ஆட்சியில் உயரத்துக்கு ஏற்ற எடையற்ற இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, அதற்கு முந்திய ஐந்தாண்டுகளைக் காட்டிலும் 2.2 சதவீதம் அதிகரித்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராட்சி நிறுவனமும், தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனமும் தனித்தனையாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகள், இந்திய கிராமப்புறங்களில் நான்கில் மூன்று பேர் சத்தான சரிவிகித உணவுக்கு வழியின்றி வாழ்வதாக குறிப்பிட்டுள்ளன.
சத்தான சரிவிகித உணவுக்கு வழியில்லாத கிராமப்புற இந்திய மக்கள், உயரத்துக்கு ஏற்ற எடையும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் இல்லாத இந்தியக் குழந்தைகள் என்ற இந்த விவரமெல்லாம் காட்டுவதென்ன? கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவையைக் கூட ஈடு செய்து கொள்ள முடியாத வறுமையின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள் என்பது தான்.
உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த தரவரிசை இடம் கொரோனா பாதிப்புகளுக்கு முந்தைய கணிப்பாகும். இப்பெருந்த் தொற்று தீவிரப்படுத்தி இருக்கும் நிச்சயமற்ற நிலையைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் இந்தியா இந்த தரவரிசைப் பட்டியலில் இன்னும் கீழே சரிந்து விழக் கூடும்.
அரைகுறை பட்டினி எனும் இந்த அவலத்தை, அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமென்றால், ரேசன் கடைகளில் அரைசி, கோதுமை, சமையல் எண்ணெய் மட்டுமின்றி பருப்பு வகைகள் தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்து அளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேசன் வினியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு விதமான சத்துணவுத் திட்டங்களை விரிவிபடுத்த வேண்டும். மிகவும் முக்கியமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புர ஏழைகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களையும், அவர்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக் கூடிய கூலியையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
ஆனால் மோடி அரசோ, இதற்கு நேர் எதிர்திசையில், ரேசன் வினியோகத்தில் உணவௌப் பொருட்களுக்குப் பதிலாக பணப்பட்டுவாடாவைக் கொண்டுவர முயல்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, பதுக்கலுக்கும் விலை உயர்வுக்கும் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் வேலை உத்திரவாதத்தையும், குறைந்தபட்ச கூலி கொடுப்பதையும் இல்லாது ஒழித்திருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இச்சீர்திருத்தங்கள் மூலம் ஏழைகளை, அடித்தட்டு மக்களை தமது வயிற்றைச் சுருக்கிக் கொண்டு வாழச் சொல்கிறது மோடி அரசு. இப்படிப்பட்ட ஆட்சியில் பட்டினிச் சாவுகள் நடக்கத் தொடங்கினாலும் ஆச்சரியங் கொள்ள முடியாது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் பட்டினிக் குறியீடு தரவரிசை குறையாதது துரதிஷ்டவசமானது என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள். ஆடு கொழுக்கட்டும் என்று ஓநாய்களும் நரிகளும் வேடுமானால் காத்துக் கிடக்கலாம். ஆனால் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இந்த நியதியை ஏற்றுக் கொள்வதில்லை. அம்பானி உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் எந்தளவுக்கு முன்னேறிச் செல்கிறாரோ அந்தளவுக்கு இந்த்யாவில் ஏழ்மையும் பட்டினியும் அதிகரிக்கவே செய்யும். இது தான் முதலாளித்துவ சமூக விதி. கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூறிவரும் இந்த உண்மையைத் தான் உலகப் பட்டினிக் குறியீடு 2020 ம் எடுத்துக் காட்டி இருக்கிறது.
மேகலை – புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020