குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 21
ஒரு இனக்குழுவில் இப்படிப்பட்ட பத்து அலகுகள் (டேம்கள்) இருந்தன. பழைய குல இனக்குழுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது ஸ்தல இனக்குழு என்று இப்பொழுது சொல்லப்பட்டது. ஸ்தல இனக்குழு என்பது சுயாட்சியுள்ள அரசியல் நிறுவனம் மட்டுமின்றி, ஒரு இராணுவ அமைப்புமாகும். அது ஒரு பிலார்ஹை, அதாவது இனக்குழுவின் தலைவனைத் தேர்ந்தெடுத்தது, அவன் குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கினான்; மேலும், அது காலாட்படைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு டாக்ஸியார்ஹையும் இனக்குழுப் பிரதேசத்தில் திரட்டப்பட்ட படை முழுவதற்கும் தலைமை வகித்த ஸ்டிரேடகசையும் தேர்தெடுத்தது. மேலும், அது ஐந்து யுத்தக் கப்பல்களையும் ஆட்களையும் தளபதிகளையும் கொடுத்தது; அது ஓர் ஆட்டிக்கா மாவீரனையும் தனது காவல் தெய்வமாகப் பெற்றுக் கொண்டது, அந்த மாவீரன் பெயரையே அது தாங்கியிருந்தது. கடைசியாக, அது ஏதன்ஸ் கவுன்சிலுக்கு ஐம்பது பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்தது.
இவை எல்லாவற்றின் முடிவுநிலையாக அதீனிய அரசு இருந்தது. பத்து இனக்குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்நூறு நபர்களைக் கொண்ட கவுன்சிலாலும், கடைசிக் கட்டத்தில் மக்கள் சபையாலும் அது நடத்தப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் அந்த சபையில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியும். அத்துடன், அர்கன்களும் இதர அதிகாரிகளும் வெவ்வேறு நிர்வாகப் பிரிவுகளையும் நீதிமன்றங்களையும் கவனித்துக் கொண்டார்கள். ஏதன்சில் தனித்தலைமையான நிர்வாக அதிகாரி எவருமே கிடையாது.
இந்தப் புதிய நிர்வாக அமைப்பின் மூலமாகவும் பகுதியளவுக்கு அந்நியக் குடியேறிகளையும் பகுதியளவுக்கு விடுவிக்கப்பட்ட அடிமைகளையும் கொண்டும் பாதுகாப்பு பெற்று வந்தவர்களை அதிக எண்ணிகையில் சேர்த்துக் கொண்டும் குல அமைப்பின் உறுப்புகள் பொது விவகாரங்களிலிருந்து நீக்கப்பட்டன. அவை தனிப்பட்ட சங்கங்கள், மதச் சங்கங்கள் என்ற நிலைக்கு இறங்கி விட்டன. ஆனால் அவற்றின் தார்மிக செல்வாக்கும் பழைய குல அமைப்பின் காலத்தைச் சேர்ந்த மரபுவழிக் கருத்துகளும் அபிப்பிராயங்களும் நெடுங்காலம் நீடித்திருந்த பிறகு, படிப்படியாகத்தான் மறைந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட அரசு அமைப்பில் இது நன்கு தெரிய வந்தது.
மக்கள் திரளினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கின்ற சமூக அதிகாரமே அரசின் அடிப்படையான குணாம்சம் என்று நாம் பார்த்தோம். அக்காலத்திய ஏதன்சில் ஒரு மக்கள் படையும் மக்களால் நேரடியாக ஆட்களும் சாதனங்களும் அளிக்கப்பட்ட கப்பற்படையும் தான் இருந்தன. வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் மக்கள் தொகையில் ஏற்கெனவே அதிகப் பெரும்பான்மையாகி விட்டிருந்த அடிமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இவ்விரண்டும் பயன்பட்டன. குடிமக்களைப் பொருத்தமட்டில், சமூக அதிகாரம் முதலில் ஒரு போலீஸ் படை என்ற வடிவத்தில் மட்டுமே இருந்தது. அரசு தோன்றிய காலத்திலிருந்து போலீஸ் படை இருந்து வந்ததனால்தான் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாவி பிரெஞ்சுக்காரர்கள் நாகரிகமடைந்த தேசங்கள் என்று கூறுவதற்கு பதிலாக போலீஸ் தேசங்கள் (nations police’es) என்று கூறினார்கள் [இது சிலேடையாகும்: police’ என்னும் பிரெஞ்சுச் சொல் “நாகரிகமடைந்த” என்பதையும் police என்னும் சொல் “போலீஸ்” என்பதையும் குறிக்கும்.]. இப்படியாக, அதீனியர்கள் தமது அரசுடன் ஒரு போலீஸ் படையையும் நிறுவினார்கள். இது வில்லும் அம்பும் தாங்கிய காலாட்படையினரையும் குதிரைப் படையினரையும் கொண்ட போலீஸ் படை ஆகும். தெற்கு ஜெர்மனியிலும் ஸ்விட்சர்லாந்திலும் இவர்களை landja’ger என்று கூறுகிறார்கள். இந்தப் போலீஸ் படையில் இருந்தவர்கள் அடிமைகளே. இந்தப் போலீஸ் வேலையை சுதந்திரமான அதீனியர் மிகவும் தகுதிக்குறைவானதாகக் கருதினார்; ஆயுதமேந்திய அடிமை என்னைக் கை செய்தால் கூடப்பரவாயில்லை, ஆனால் நான் இந்தக் கேவலமான வேலையைச் செய்ய மாட்டேன் என்று நினைக்கின்ற அளவுக்குச் சென்றார். இது பண்டைய குல வகைப்பட்ட மனப்பான்மையின் ஒரு வெளியீடாகும். போலீஸ் படை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. ஆனால் அது இன்னும் பிஞ்சுப் பருவத்தில் இருந்தது; பழைய குல உறுப்பினர்களுக்கு மதிப்புக் குறைவானதாகத் தோன்றிய ஒரு தொழிலுக்குப் பெருமை தேடித் தருகின்ற அளவுக்குப் போதிய தார்மிக செல்வாக்கை அந்த அரசு பெற்றிருக்கவில்லை.
பிரதான உருவரைகளில் முழுமை பெற்ற இந்த அரசு அதீனியர்களுடைய புதிய சமூக நிலைமையுடன் எவ்வளவு நன்றாகப் பொருந்தியிருந்தது என்பது செல்வமும் வர்த்தகமும் தொழில்துறையும் விரைவாக வளர்ச்சியடைந்ததிலிருந்து புலனாயிற்று. சமூக, அரசியல் அமைப்புகள் ஆதாரப்பட்டிருந்த வர்க்கப் பகை முரண்பாடு இப்பொழுது பிரபுக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் ஏற்படவில்லை; அது அடிமைகளுக்கும் சுதந்திரமான மனிதர்களுக்கும், பாதுகாப்பு பெற்று வந்தவர்களுக்கும் முழு உரிமையுள்ள குடிமக்களுக்கும் இடையில்தான் ஏற்பட்டிருந்தது. ஏதன்ஸ் சுபிட்சத்தின் உச்ச நிலையில் இருந்த பொழுது பெண்கள், குழந்தைகள் உட்பட சுதந்திரமான அதீனியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90,000 தான்; இரு பாலாருமடங்கிய அடிமைகளின் தொகை 3,65,000; மற்றும் பாதுகாப்பு பெற்ற வந்தவர்கள் – அதாவது அந்நியக் குடியேறிகளும் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளும் – 45,000. ஆக, வயதுவந்த ஒவ்வொரு ஆண் குடிமகனுக்கும் குறைந்தபட்சம் 18 அடிமைகளும் இரண்டு பாதுகாப்பு பெற்று வந்தவர்களும் இருந்தார்கள். அடிமைகளில் பலர் பெரிய கூடங்களைக் கொண்ட தொழில் பட்டறைகளில் மேற்பார்வையாளர்களின் கீழ் ஒன்றாக வேலை செய்தார்கள். அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததை இது விளக்கும். வர்த்தகமும் தொழில்துறையும் வளர்ச்சியடைந்த பொழுது சிலரிடம் செல்வம் திரண்டு குவிவதும் நடந்தது; சுதந்திரமான குடிமக்கள் பெருந்திரளாக ஏழ்மையடைந்தார்கள். அவர்கள் கைத்தொழில்களில் ஈடுபட்டு அடிமையுழைப்புடன் போட்டி போட வேண்டும், இல்லையேல் பஞ்சைகளாக வேண்டும். மேற்கூரிய இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கைத்தொழிலில் ஈடுபட்டு அடிமையுழைப்புடன் போட்டி போடுவது கேவலமாக, இழிவாகக் கருதப்பட்டது; மேலும், அதிக வெற்றி பெறுவது அரிதே. அன்றைக்கிருந்த சந்தர்ப்பங்களில் பஞ்சைகளாவதுதான் நடைபெற்றது. அவர்கள் பெரும்பான்மையினர் என்பதால் தாங்கள் வீழ்ச்சியடைந்த பொழுது அதீனிய அரசையும் கீழே இழுத்து விட்டார்கள். அரசர்களுக்கு முன்னால் கெஞ்சிக் குழைகின்ற ஐரோப்பியப் பள்ளியாசிரியர்கள் நம்மை நம்பச் செய்வதற்கு விரும்புவதைப் போல ஏதன்ஸ் ஜனநாயகத்தினால் வீழ்ச்சியடையவில்லை. அது சுதந்திரமான மனிதனுடைய உழைப்பைக் கேவலப்படுத்திய அடிமைமுறையினால்தான் வீழ்ச்சியடைந்தது.
அதீனியர்களிடையில் அரசு எழுந்தது பொதுவாக அரசு நிர்மாணத்துக்குக் குறியடையாளமான உதாரணமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு பக்கத்தில், அது தூய்மையான வடிவத்தில் நடைபெற்றது, வெளிநாட்டு, உள்நாட்டு பலாத்காரம் குறிக்கிடாமல் அது நடைபெற்றது (பிஸிஸ்டிராடஸ் ஆட்சியைக் கைப்பற்றியது குறுகிய காலத்துக்கே, அதன் பிறகு அது எந்தச் சுவடுமில்லாமல் மறைந்து விட்டது); ஏனென்றால், மறு பக்கத்தி, அது அரசின் மிகவும் வளர்ச்சியடைந்த வடிவத்தை, ஜனநாயகக் குடியரசைப் பிரதிநிதித்துவம் செய்தது, அந்த அரசு குல சமுதாயத்திலிருந்து நேரடியாக வெளிவந்தது; கடைசியாக, ஏனென்றால், முக்கியமான எல்லா விவரங்களும் போதுமான அளவில் நமக்குத் தெரிந்திருக்கின்றன.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
- மாமேதை ஏங்கல்ஸ்.
- 1884 ல் எழுதிய முன்னுரை
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
- ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
- குடும்பம் – 1
- குடும்பம் – 2
- குடும்பம் – 3
- குடும்பம் – 4
- குடும்பம் – 5
- குடும்பம் – 6
- குடும்பம் – 7
- குடும்பம் – 8
- குடும்பம் – 9
- இராகோஸ் குலம் 1
- இராகோஸ் குலம் 2
- கிரேக்க குலம் 1
- கிரேக்க குலம் 2
- அதீனிய அரசின் உதயம் 1
- அதீனிய அரசின் உதயம் 2