வங்கிகள் யாருக்காக?

முன்குறிப்பு 1: இது போன்ற சிக்கல்களில் தொடர்புடையவர்கள் ஏன் வங்கியின் பெயரை மறைக்கிறார்கள்? என்ன வங்கி என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே.

முன்குறிப்பு 2: படித்து வேலையில் இருக்கும் நடுத்தர பிரிவினர்களே இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்றால், ஒப்பீட்டளவில் அறியாமையில் இருக்கும் எளிய மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்களின் நடப்புகளும் இவ்வாறு வெளிவர வேண்டும்.

ஒரு Nationalised bank ல கார் லோன் இரண்டரை லட்சம் வாங்கியிருந்தேன். ஐந்து வருசம் EMI கட்டனும். மாதாமாதம் கட்ட வேண்டிய EMI ஐ விடக் கொஞ்சம் அதிகமாகவே திருப்பிச் செலுத்தி வந்தேன். சீக்கிரம் அசலைக் கட்டி முடித்தால் வட்டி கொஞ்சம் குறையுமே என்ற நப்பாசை தான். இப்படிச் சுமார் ஒன்னரை அல்லது ஒன்னே முக்கால் வருடம் கட்டி இருப்பேன் என்று நினைக்கிறேன். இது இப்படியே இருக்கட்டும்.

இதற்குள் BE முடிச்ச எங்க மகளுக்கு மேற்படிப்பான MTech சேரவும், +2 முடிச்ச மகன் BE Ist year படிக்கவும், நல்ல reputed காலேஜ்கள்ல இடம் கிடைச்சது. இரண்டு கல்லூரிகளிலுமே கட்டணங்கள் சற்றே அதிகம் தான். முன்னெச்சரிக்கையாக GPF கணக்கில் முன்கூட்டியே பணம் எடுத்து, கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி விட்டு, அடுத்த செமஸ்டர் கட்டணங்கள் மற்றும் ஹாஸ்டல் பீஸ் கட்டுவதற்கு என்று சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் வங்கிக் கணக்கில் வைத்திருந்தேன். திடீர் என்று பணம் தேவைப்பட்டால் பணத்துக்கு எங்கே போறது?

சரி. இப்ப நிகழ்வுக்கு வருவோம். ஒரு நாள் பகல் சுமார் 12 மணி இருக்கும். ATM இல் கைச் செலவுக்குக் கொஞ்சம் பணம் எடுத்து விட்டு, தற்செயலாக என் சேமிப்புக் கணக்கில் மீதம் உள்ள தொகையைப் பார்த்தேன். ஒரு கணம் என் இதயமே நின்று விட்டதைப் போல இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் அளவுக்கு இருந்த கணக்கில் பணம் ரொம்பக் குறைவாகவே இருந்தது.மீண்டும் மீண்டும் பார்த்தேன். அதே அளவு தான் காட்டியது. கடைசி பத்து டிரான்சாக்சன் பார்க்கும் ஆப்சன் கொடுத்து விவரம் பார்த்தேன். நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சுமார் ஒன்னே முக்கால் லட்சத்துக்கும் அதிகமாக என் கணக்கில் இருந்து ஒரே தடவையில் எடுக்கப்பட்டதாகக் காட்டியது. நான் யாருக்கும், எதற்கும் செக் எதுவும் கொடுக்கவில்லை. பின் பணம் எப்படிப் போயிற்று? எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. சுமார் ஒன்று முக்கால் லட்சத்தை, ( 2009 இல்), அதுவும் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கென்று பாதுகாத்து வைத்த பணம் காணோம் என்றால்….?

பதற்றத்தில் கை கால்கள் எல்லாம் லேசாக நடுங்க ஆரம்பித்தன. என்ன செய்வது என்று புரியாமல் சற்று நேரம் பக்கத்தில் இருந்த மாடியின் படிக்கட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டேன். என்னுடன் கூட யாரும் இல்லை. நான் அப்போது தனி ஆள் தான். அந்தப் பதற்றத்திலும், சற்றே கண் மூடி அமைதியாக, எதையும் நினைக்காமல் அமைதியாக இருந்தேன்.சுமார் ஐந்தாறு நிமிடங்கள் ஆயிற்று பதற்றம் குறைய…

சம்பந்தப்பட்ட வங்கி, அந்த ATM இருந்த கட்டிடத்தின் மாடியிலேயே இருந்தது. உடனே மேலே வங்கிக்குச் சென்றேன். கிட்டத்தட்ட மதிய நேரம் நெருங்கி இருந்தாலும் வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது.. கொஞ்ச நேரம் வரிசையில் காத்திருந்து சேமிப்புக் கணக்கு கௌண்டர் கிளார்க்கிடம் என் கணக்கில் திடீரென்று பணம் குறைந்த விவரம் சொல்லி, எதனால் அப்படி நடந்தது என்று கேட்டேன். என் முகத்தை சற்றே உற்றுப் பார்த்த அவர், “சார் எனக்கு எதுவும் தெரியலை, மேனேஜரைக் கேளுங்க” என்றார். சிறிய கியூபிக்கலுக்குள் இருந்த மானேஜரைச் சற்றே காத்திருந்து தான் பார்க்க முடிந்தது. அவரிடமும் விவரம் சொல்லிக் கேட்டேன். ஒரு நிமிடம் என் பாங்க் ஸ்டேட்மென்டைப் பார்த்தவர், என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து “சார், இன்னிக்கு ரொம்பவும் பிசி.. இப்போ பார்க்கறது சிரமம். நாளைக்கு வாங்க பார்த்துச் சொல்றேன்” என்றார். எனக்கு லேசாகக் கோபம் துளிர்த்தது. “சார்.. என்னோட பணம் சுமார் ஒன்னே முக்கால் லட்ச ரூபாய் காணோம்.. ரொம்ப அசால்டா நாளைக்கு வாங்கன்னு சொல்றீங்க” என்று அவரைக் கேட்டேன். அவர் பதில் சொல்வதற்குள் என் மொபைல் அழைத்தது.

ஆபிஸ்ல மிகப் பெரிய டெக்னிகல் பிரச்சினை எங்கிருந்தாலும் உடனே இங்கு வாருங்கள்” சொந்த வேலையில் தலை போகிற விசயம்….! ஆனால் சோறு போடும் வேலை தானே தலையாய விசயம்…? உடனே ஓடினேன் ஆபிஸுக்கு. திடீரென்று ஏற்பட்ட உயர் மின் அழுத்தக் கோளாறு காரணமாக, எலக்ட்ரானிக் கருவிகளில் நிறையப் பழுதுகளும், ஏகப்பட்ட டெக்னிகல் பிரச்சினைகளும் ஏற்பட்டு இருந்தன. அனைத்தையும் சரி செய்து முடித்து வீட்டுக்குப் போகவே அன்று இரவாகி விட்டது. அன்று மதிய உணவு சாப்பிடவில்லை. அடுத்த நாள் எப்படா விடியும் என்று இரவெல்லாம் காத்திருந்து , காலையில் ஆபீஸ் போய், முக்கியமான வேலைகளை எல்லாம் சுமார் ஒரு மணி நேரம் கவனித்து விட்டு வங்கிக்கு ஓடினேன்.

நேற்றுப் பார்த்த அதே மேனேஜரை இன்றும் சென்று பார்த்தேன். அவர் என் முகத்தைப் பார்ப்பதையே தவிர்த்தார். வேறு எதோ வேலையில் படு பிசியாக இருப்பது போலக் காட்டிக் கொண்டார். நேராக அவர் டேபிளின் எதிரில் இருந்த இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். அவரது க்யூபிக்கலுக்குள் நானும் அவரும் மட்டுமே. நான் எதுவுமே பேசவில்லை. அவரது முகத்தை, குறிப்பாக அவரது கண்களை மட்டும் இமைக்காமல் உற்றுப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துக்கு மேல் அவரால் என் கண்களைத் தவிர்க்க முடியவில்லை. ஏதோ அப்போது தான் என்னைப் பார்ப்பவர் போலப் பார்த்து, “வாங்க சார், என்ன விசயம் ?” என்று கேட்டார். நான் நேற்று வந்து அவரைச் சந்தித்த விசயத்தையும், என் சேமிப்புக் கணக்கில் இருந்து என் பணம் சுமார் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் எனக்குத் தெரியாமலே எடுக்கப்பட்டிருப்பதையும் நேற்று அவரிடம் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்தி, நேற்று பிசியாக இருப்பதாகவும் அதனால் இன்று வரச் சொல்லியும் அவர் சொன்னதை அவருக்கு நினைவு படுத்தினேன்” ஆமாம் ஆமாம். நேத்து வந்தீங்க இல்லையா… அக்கௌண்ட் நம்பர் சொல்லுங்க..” என்று கேட்டார். சொன்னேன். அவரது டேபிளில், இடது புறம் இருந்த கம்ப்யூட்டரில் கொஞ்ச நேரம் தட்டித் தட்டி எதையோ பார்த்தார். கொஞ்ச நேரம் அதில் கழிந்தது. பின்னர் என்னை நோக்கித் திரும்பினார் “சார். எதோ பிரச்சினை இருக்கு. என்னன்னு எனக்குத் தெரியலை. எதுக்கும் நீங்க சீப் மேனேஜரைப் பாருங்க ” என்றார்.

இதைச் சொல்லும் போது அவர் நேரடியாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது போலத் தெரிந்தது. எனக்கு ஏதோ வயிற்றைப் பிசைவது போல இருந்தது. “சார் பிரச்சனை என்ன சார்.. எனக்கு ஒன்றும் புரியலை.. கொஞ்சம் சொல்லுங்க சார்” என்று கேட்டேன்..” சார், எனக்கு எதுவும் தெரியாது, நீங்க சீப் கிட்டயே கேட்டுக்கோங்க. எனக்கு கேஷ்ல கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி் விட்டு எழுந்து வெளியே போய் விட்டார். எனக்கு some thing fishy என்று மட்டும் தெரிந்தது. இந்த ஆளுக்கு எதோ விசயம் தெரிகிறது, ஆனால் சொல்லாமல் மறைப்பது மட்டுமல்லாமல் என்னைத் தவிர்க்கிறான் என்றும் புரிந்தது. சரி சீப் மேனேஜரைப் பார்க்கலாம் என்று நினைத்து, மேனேஜர் க்யூபிக்கிளை விட்டு வெளியில் வந்து, முன்னாள் இருந்த சீப் மேனேஜர் சேம்பருக்கு அருகில் வந்தேன். அவர் சேம்பர் கதவு சாத்தியிருந்தது. உள்ளே வேறு யாராவது முக்கியமான வாடிக்கையாளர் யாராவதுடன் பேசிக் கொண்டிருப்பார் போல இருக்கிறது என்று நினைத்துக் காத்துக் கொண்டிருந்தேன்.

காத்திருந்த வேளையில் மனசு என்னென்னவோ கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டது. என் ATM கார்டு போலவே யாராச்சும் டூப்ளிகேட் கார்டு தயார் செய்து பணத்தை எடுத்திருப்பார்களோ. என் PIN நம்பரைத் தெரிந்து கொண்டு யாராச்சும் களவாடியிருப்பார்களோ… என் செக் புக்கில் இருந்து ஒரு செக் லீஃபைத் திருடி, என் கையெழுத்தைப் போலவே போட்டுப் பணத்தை எடுத்திருப்பார்களோ….. வங்கி ஊழியர்களிலேயே யாராச்சும் டெக்னிகலாகத் திட்டம் போட்டு என் பணத்தை ஸ்வாஹா பண்ணிட்டாங்களோ….. நானே யாருக்காச்சும் செக் கொடுத்து விட்டு அதை மறந்து போய் இப்படி அலைகிறேனோ….. ஒருவேளை இந்தப் பணம் திரும்பக் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? என் பிள்ளைகளின் அடுத்த செமெஸ்டர் பீஸ் எப்படிக் கட்டுவது? நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

இன்னும் சீப் சேம்பர் கதவு திறக்கவில்லை. எனக்கு டென்சன் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலேயே ஆகி இருக்கும். இன்னும் சீப் சேம்பர் கதவு திறக்கவில்லை” இன்ஜினியர் சார். என்ன சார் ரொம்ப நேரமா உக்காந்திருக்கீங்க. யாரைப் பார்க்கனும் சார் ?” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். வங்கியின் கடைநிலை ஊழியர் அவர். அறிமுகமானவர் தான். சீப் மானேஜரைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் சொன்னேன். பணத்தைப் பற்றி எல்லாம் சொல்லவில்லை” அடடா.. முதல்லயே என் கிட்டக் கேட்டிருக்கக் கூடாதா சார்? இன்னிக்கு சீப் வர மாட்டாரே சார். ரீஜினல் ஆபிஸுக்குப் போயிருக்கார். போகனும்னு நேத்தே என் கிட்ட சொன்னாரே” என்று சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த மானேஜரையாவது மறுபடியும் பார்த்து எதாச்சும் கேட்கலாம் என்று பார்த்தால் அந்த ஆளையும் காணோம். இதற்குள் வங்கி லஞ்ச் டைம் ஆகி விட்டது. எனக்கும் பசித்தது. ஆபிஸுக்குத் திரும்பி வந்து விட்டேன்.

மறுபடியும் திரும்பி பேங்குக்குப் போக முடியாமல் ஆபிஸ் வேலைகள் இருந்ததால் அன்று அவ்வளவு தான். வீட்டுக்குப் போய் விட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் பாங்கு லீவு. இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு. சனி ஞாயிறு கழிந்து, திங்களன்று பேங்க் போனேன். அன்றும் சீப் மேனேஜர் வரவில்லை. அவரது புரோமோசன் விசயமாக அவசரமாக கார்ப்பரேட் ஆபிஸுக்குப் போய் விட்டார் என்ற செய்தியை அறிந்தேன். எனக்குக் கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. என்ன செய்வது என்று நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. அந்த மேனேஜரையாவது பார்க்கலாம் என்று போனேன். அந்த ஆளையும் காணோம். சரி வரட்டும் என்று அங்கே நின்றிருந்தேன்.

அப்போது, சற்று தூரத்தில் இருந்த ஒருவர், ஒரு டேபிளின் மேல் பாதி உட்கார்ந்த மாதிரியும் ஒரு காலைத் தரையில் ஊன்றியிருந்த மாதிரியும் இருந்தவர், கை நீட்டி என்னை அருகில் அழைத்தார். யார் அவர், எதற்கு அழைக்கிறார், என்னைத்தானா இல்லை வேறு யாரையாவது அழைக்கிறாரா என்று குழம்பியபடி அவரிடம் போனேன். அவரை இதுவரை நான் அந்த பாங்கில் பார்த்ததும் இல்லை” சார், இரண்டு மூணு நாளா உங்களை நான் பார்த்துட்டே இருக்கேன். தினமும் வர்ரீங்க. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கீங்க. யார் நீங்க, உங்க பிரச்சினை என்ன?” என்று கேட்டார். என் பணம் என் கணக்கில் இருந்து குறைந்திருக்கும் விசயத்தைச் சொன்னேன். தொகை கேட்டார், அதையும் சொன்னேன். ஒரே நிமிடம். எதோ ஒரு டாக்குமென்டைப் பார்த்தவர், ‘லோன் எதாச்சும் வாங்கியிருந்தீங்களா’ என்று கேட்டார். ‘கார் லோன்’ என்று சொன்னேன்” அந்த லோன் பணத்தை அப்படியே உங்க பேங்க் அக்கௌண்ட்ல இருந்து எடுத்து உங்க லோன் செட்டிலாயிடுச்சு” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை””சார். யார் எடுத்தாங்க?” என்று கேட்டேன்.” பேங்க்ல இருந்தே எடுத்து உங்க கடனை அடைச்சிட்டாங்க” என்றார் “சார், லோன் பீரியட் அஞ்சு வருடம் சார். நான் EMI ஒழுங்காத்தான கட்டிட்டு வர்றேன். ஒரு தடவை கூட டீபால்ட் ஆகலை. அப்படி இருக்கும்போது, எப்படி என்கிட்ட சொல்லாம திடீர்னு மொத்தக் கடனையும் அவங்க திருப்பி எடுத்துக் கொள்ள முடியும் ?” என்று கேட்டேன். அவர்,” சார், இதில் இருக்கற விசயத்தை அப்படியே உங்களுக்குச் சொன்னேன். வேற எதுவும் எனக்குத் தெரியாது , வேணும்னா லோன் செக்சன்ல கேட்டுப் பாருங்க” என்றார். அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விட்டு, அவர் யார் என்று அவரிடமே கேட்டேன். வங்கி விஜிலென்ஸ் இலாகாவில் இருந்து இந்த வங்கியின் வரவு செலவுகள் பற்றி இன்ஸ்பெக்சன் செய்ய வந்துள்ள டீமில் அவரும் ஒருவராம்.

பின்னர், லோன் செக்சனுக்குப் போனேன். அங்கிருந்த ஒரு பெண் ஊழியரை , அணுகி ‘என் கார் லோன் முழுவதையும் ஒரே தவணையில் ரெகவர் செய்திருக்கீங்களே மேடம் ? ஏன் ?” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்க சீப் கிட்டக் கேளுங்க” என்று சொன்னார். நான் ” சீப் வரலையே மேடம். நீங்கதானே லோன் செக்சன் பார்க்கறீங்க. உங்களுக்குத் தெரியாம இருக்காது. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க, ப்ளீஸ்” என்று கேட்டேன். அதற்கு அவர், ” சார், உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. உங்களோட கண்ட கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லிட்டிருக்க முடியாது ” என்று சொல்லி விட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். எனக்கு அந்தப் பெண்ணின் பதில் முகத்தில் அறைந்ததைப் போல இருந்தது.

வெளியில் வந்து, மேனேஜரை மீண்டும் பார்க்கலாம் என்று நினைத்து மேனேஜரின் கியூபிக்கல் அருகில் நின்று அவருக்காகக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த கியூபிக்கிலை நோக்கி நடந்து வந்த மேனேஜர் அங்கு நான் நிற்பதைப் பார்த்ததும், டக்கென்று நின்று வேறு ஒரு கிளார்க்கிடம் நின்று கொஞ்ச நேரம் ஏதோ பேசுவது போல இருந்து விட்டு, மெல்லத் திரும்பி, ஸ்டிராங்க் ரூம் எனப்படும் பணம் வைக்கும் அறைக்குள் சென்று விட்டார்.எனக்கு எதோ புரிய ஆரம்பித்தது” இந்த மேனேஜர் ஏதோ நாடகம் ஆடுகிறான். இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது. இனிமேல் இதை இங்கு விசாரித்துப் பிரயோஜனம் எதுவும் இல்லை” என்று முடிவு செய்து ஆபிஸுக்கு வந்து விட்டேன்.

அதே வங்கியின் வேறொரு ஊரில் உள்ள கிளையில் பணி புரியும் என் நண்பரைப் போனில் தொடர்பு கொண்டு விசயம் அனைத்தையும் சொல்லி, ஏன், எதனால், எப்படி இது நடந்தது என்று வினவினேன். இவ்வளவு நாட்கள் ஏன் இதைத் தன்னிடம் சொல்லவில்லை என்று செல்லமாகக் கோவித்துக் கொண்ட நண்பர், ஒரு மணி நேரம் தனக்கு அவகாசம் வேண்டும் என்று சொல்லிப் போனை வைத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரிடம் இருந்து போன். விசாரித்து அவர் சொல்லிய செய்தியின் சாராம்சம் இது தான். கார் லோன் பெறுவதற்காக வங்கியில் நான் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் எப்படியோ தொலைந்து விட்டதாம். எனக்குப் பிணையாக ( surity) போட்டவரின் ஆவனங்களும், என் ஆவணத்துடனேயே இருந்ததையும் காணவில்லையாம். எந்த விதமான ஆவணமும் இன்றி வங்கி எனக்குக் கடன் தந்ததைப் போலத்தான் இப்போது நிலைமை. ஒருவேளை நான் கார் கடன் தொகையைக் கட்டாவிட்டால் என்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வங்கியிடம் எந்த ஆவணமும் இல்லை. கணக்கில் வராமல் யாருக்கோ தவறுதலாக கடன் தந்ததைப் போல. இந்தச் சூழ்நிலையில் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்சன் வேறு வந்து விட்டார்கள். இந்தச் சமாச்சாரத்தை அவர்கள் கண்டு பிடித்து விட்டால், லோன் செக்சன் பார்க்கும் கிளார்க்கும், மேனேஜரும் மாட்டிக் கொள்வது உறுதி.. அவர்களின் வேலைக்கே கூட இது உலை வைத்து விடும். இந்தச் சமயத்தில் தான் என் சேமிப்புக் கணக்கில் கார் லோன் தொகையை விட அதிகமான தொகை, என் பிள்ளைகளின் படிப்புக்காக நான் ஒதுக்கி வைத்த தொகை, இருப்பதை அந்த இருவரும் அறிந்துள்ளனர். தாங்கள் இருவரும் இந்தப் பிரச்சினையில் இருந்து முதலில் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இருவரும் கலந்து பேசி, என் கணக்கில் இருந்து கார் லோன் தொகையை ஒரே தவணையாகப் பிடித்தம் செய்து லோன் கணக்கை முடித்து விட்டனர். இப்போது கணக்கில் வராத கடன் என்று எதுவும் இல்லாததால் வங்கிக்கு கிளீன் சர்டிபிகேட். யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. என்னைத் தவிர.

அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமே வரவில்லை. சுமார் ஒன்னே முக்கால் லட்ச ரூபாயை யாரும் ஏமாற்றி எடுத்துக் கொண்டு ஓடி விடவில்லை. பணத்துக்கு இழப்பு என்று இல்லை. கடன் அடைபட்டு விட்டது என்ற அளவில் லேசான திருப்திதான். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக நான் அனுபவித்த மனத் துயரம் ? பட்ட அவமானங்கள்? அதிலும் என்னைக் கடந்த ஐந்து நாட்களாக எப்படி அலைக்கழித்து அவமானப் படுத்தினார்கள்? அவர்கள் இருவரும் தவறு செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க என் பிள்ளைகள் இருவரின் எதிர்காலத்தைப் பலிகடா ஆக்க நினைத்த இவர்களைச் சும்மா விடலாமா? செய்வதையும் செய்து விட்டு என்னைக் கிள்ளுக்கீரை போல நடத்தியவர்கள். பேங்க் விஜிலென்ஸ் நடவடிக்கையில் தப்பித்திருக்கலாம். ஆனால், இவர்களை அப்படித் தப்பிக்க விடுவது நியாயமா? இயற்கை நியதியா? அது மட்டுமல்ல, கார் அந்த பேங்க் பேர்ல ஹைபாதிகேட் ஆகியிருக்கு. பணம் முழுக்க அசலும் வட்டியும் எடுத்த பிறகும் கூட என் பெயருக்கு வண்டியை மாத்தித் தரலை. இன்னும் வண்டி பேங்குக்குத்தான சொந்தம். சரி. என்ன செய்யலாம்?

கொஞ்சம் மனதை அமைதிப்படுத்திட்டு, பொறுமையா ஒரு லெட்டரை அந்த பேங்க் சேர்மனுக்கு டைப் பண்ண ஆரம்பித்தேன். நான் கார் லோன் வாங்கிய விசயம், இதுவரை தவறாமல் EMI கட்டி வந்தது, என் குழந்தைகள் படிப்புக்காக GPF இல் எடுத்து, என் அக்கௌண்ட்டில் போட்டு வைத்தது, என் முதுகில் குத்துவதைப் போல, பேங்க் என்னை ஏமாற்றிப் பணம் முழுக்க எடுத்துக் கொண்டது போன்ற அனைத்து விவரங்களையும் எழுதி, என் குழந்தைகள் படிப்புத் தடைபட்டால், அதற்கு முழுக்க முழுக்க பேங்க்தான் காரணம் என்றும், பத்து நாட்களுக்குள் இந்தப் பிரச்சனையை பேங்க் சரி செய்து தராவிட்டால், என் மன உளைச்சல், அவமானம், அலைக்கழிப்பு, பிள்ளைகளின் படிப்பு பாதிப்பு போன்ற அனைத்து விசயங்களுக்காகவும் வங்கியின் மேல் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன் என்றும் எழுதி, சேர்மன், ரீஜனல் ஆபிஸர், மற்றும் சம்பந்தப்பட்ட கிளையின் சீப் மேனேஜர் ஆகியவர்களுக்கு ரிஜிஸ்டர் தபால், A/D மூலம் அனுப்பி வைத்தேன். அனைவருக்கும் தபால் கிடைத்ததற்கான AD நான்கைந்து நாட்களுக்குள் வந்து விட்டது. நான் அமைதியாகக் காத்திருந்தேன்.

சுமார் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் நான் ஆபிஸில் இருக்கும்போது மனைவியிடமிருந்து போன். “பேங்க்ல இருந்து மூனு பேர் வீட்டுக்கு வந்திருக்காங்க. எதோ கார் லோன் சம்பந்தமா பேசனுமாம்னு சொல்றாங்க. நீங்க இப்போ வீட்டுக்கு வர முடியுமா” ன்னு மனைவி. எனக்குப் புரிஞ்சிடுச்சு. என்னோட ரிஜிஸ்டர் தபால் கம்ப்ளெயின்ட் வேலை செய்யுதுன்னு” இப்போ நான் வர முடியாது. இங்கே ரொம்ப பிசி” ன்னு சொல்லிட்டேன். நிஜமாவே அப்போது நான் பிசிதான். அடுத்த அரை மணி நேரத்தில் அவங்க மூனு பேரும் என்னும் ஆபிஸுக்கே, என் சேம்பருக்கே வந்துட்டாங்க. யார்னு பார்த்தா லோன் செக்சன்ல இருந்த அந்தப் பெண்மணி, அப்புறம் அந்த மேனேஜர். மூனாவது ஒருத்தர். அவரை நான் பார்த்ததில்லை. அவர்தான் சீப் மேனேஜர்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.

மூன்று பேரையும் உட்காரச் சொன்னேன். மத்த ரெண்டு பேருக்கும் மூஞ்சியே இல்லை. என் பார்வையைத் தவிர்க்கத் தலையைக் குனிந்தபடியே இருந்தாங்க. சீப் மேனேஜர் தான் பேசிட்டே இருந்தார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ரொம்ப சாரின்னு சொன்னார். நான் என்ன உதவி கேட்டாலும் செய்வதாகவும், பர்சனல் லோன் எவ்வளவு கேட்டாலும் தர்றேன்னும் ஏதேதோ சொன்னார். என்னோட கம்ப்ளெயின்ட்டை திருப்பி வாங்கிக்கனும்னு ரொம்ப ரிக்வோஸ்ட் பண்ணினார். நான் எந்த ரியாக்சனையும் காட்டிக்கலை’ இன்னைக்கு நான் ரொம்ப பிஸி. இது சம்பந்தமா பேசறதுக்கு இப்போ எனக்கு நேரமில்லை’ங்கற மாதிரி சொல்லிட்டேன். சுமார் அரை மணி நேரம் கெஞ்சிப் பார்த்தாங்க. நான் மசியலை. ‘நாளைக்கு வர்றோம் சார்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

அடுத்த நாள் அந்த சீப் மட்டும் வந்தார். என்னென்னவோ சொன்னார். தனக்கு இந்த விசயமே தெரியாது. தனக்குத் தெரியாமலேயே அந்த ரெண்டு பேரும் செஞ்ச வேலை இது. ஆனால் இதற்குத் தான் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னார். கடைசியில் கண்களில் நீர் வழிய சில விசயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு ரீஜனல் மேனேஜராகப் புரோமோசன் ஆர்டர் ரெடியா இருக்காம். பிளேஸ் ஆப் போஸ்டிங் விசயமாத்தான் கார்ப்பரேட் ஆபிஸ் போயிருந்தாராம். இந்த சமயம் பார்த்து என் கம்ப்ளெயின்ட் நேரடியா சேர்மனுக்கே போயிட்டதால, இவரோட பிரமோசனை அப்படியே ஹோல்ட் அப் பண்ணி வெச்சிருக்காங்களாம். இவரோட பிராஞ்ச்ல இந்தப் பிரச்சனை வந்ததால, இதை இவரே நல்லபடியா செட்டில் பண்ணிட்டு வந்தால்தான் பிரமோசன் பற்றிப் பேச முடியும். இல்லாட்டி இவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இவரைப் பதவி இறக்கம் பண்ணிடுவாங்களாம். நான் பட்ட அவமானங்கள், மனக் கஷ்டங்களுக்குத் தன் சொந்தப் பணத்தில் இருந்து நஷ்ட ஈடு தர்றதாகச் சொன்னார். மேலும் என் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட முழுத் தொகையையும் தன் சொந்தப் பணத்திலிருந்து தருவதாகவும், மேலும் கேட்டாலும் தருகிறேன் என்றும் சொல்லி ரொம்ப வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். நான் சொன்னேன். “சார், எனக்கு உங்க மேலே தனிப்பட்ட வருத்தம் எதுவும் இல்லை. என்னை உங்க ஸ்டாப் எப்படி அலைய விட்டு அவமானப் படுத்துனாங்கங்கற வலியிலதான் நான் கம்ப்ளெயின்ட் பண்ணேன். உங்க ஸ்டாப் அப்படி மோசமான நடந்திருந்தாலும், உங்களைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தவோ, உங்கள் பிரமோசனைத் தடுத்துக் கெடுக்கற அளவோ, அல்லது உங்களுடைய சொந்தப் பணத்தைப் பிடுங்கிக் கொள்ளும் அளவோ தரம் குறைந்த மனிதன் நான் அல்ல” என்றேன்.

அப்போதான், அவர் முகத்தில் கொஞ்சம் உயிர் வந்தது”உங்க பெரிய மனசுக்கு ரொம்ப நன்றி சார். நான் இந்த விசயத்தில் என்ன செய்யனும்னு நீங்க எதிர் பார்க்கறீங்க?” என்று கேட்டார். அசல் வட்டி எல்லாம் சேர்த்து முழுப் பணத்தையும் எடுத்தது அல்லாமல், இன்னும் என்னோட கார் RC யில் உங்க பேங்க் பேர்லதான் ஹைபாதிகேசன் இருக்கு. அதை உடனே என் பேருக்கு, RTO ஆபிஸ்ல மாத்தி எனக்குக் கொடுக்கனும். இரண்டாவது, உங்க பேங்க் லெட்டர் ஹெட்ல, எனக்கு உங்க பேங்க் செய்த அவமானங்களை எல்லாம் ஒத்துக் கொண்டு, அதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு எனக்கு ஒரு லெட்டர் தரனும். இந்த இரண்டும் போதும். மத்தபடி உங்க பணமெல்லாம் எனக்கு வேண்டாம்னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோசம். என் கையைப் பிடிச்சு நன்றி சொல்லிட்டு , சீக்கிரம் ரெண்டையும் முடிச்சுத் தர்றேன்னு சொல்லிட்டுப் போனார்.

சொன்ன மாதிரியே, RCயை என் பேருக்கு மாத்திக் கொடுத்தார். அப்புறம் அவங்க பேங்க் லெட்டர் ஹெட்ல, தங்கள் பிராஞ்ச் செய்த தவறுகளை எல்லாம் ஒப்புக் கொண்டு , அதற்காக என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு, unconditional apology, கேட்பதாக டைப் செய்து, தன் சீலுடன், சீப் மேனேஜர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். நானும், “சீப் மேனேஜர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கடிதம் கொடுத்ததால், இந்த விசயத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க மாட்டேன்” என்று கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அதோடு விசயம் முடிந்தது. ஒரு நல்ல மனிதரின் பதவி உயர்வைத் தடை செய்யாமல் இருந்த ஒரு மனத்திருப்தி மட்டும் எனக்கு மிஞ்சியது.

நன்றி. ( முக நூல் நண்பர் திரு.நாகராஜன் வெள்ளியங்கிரி.)

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s