குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 22
ரோமாபுரி நிறுவப்பட்டதைப் பற்றிய கட்டுக்கதையின்படி, பல லத்தீன் குலங்கள் (100 குலங்கள் என்று கட்டுக்கதை கூறுகிறது) ஒரு இனக்குழுவாக ஒன்றுசேர்ந்து முதன்முதலாக குடிபுகுந்தன. நூறு குலங்களைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சபேல்லியன் இனக்குழுவும் விரைவில் அங்கே குடிபுகுந்தது; கடைசியில் நூறு குலங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட, பலவிதமான அம்சங்களைக் கொண்ட மூன்றாவது இனக்குழுவும் வந்து அவற்றுடன் சேர்ந்து கொண்டது. இங்கே குலம் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்துமே இயற்கைப் பொருட்கள் அல்ல, சில சந்தர்ப்பங்களில் குலமும் கூடப் பழைய இருப்பிடத்திலிருந்து வந்த தாய்க் குலத்தின் ஒரு கிளையே என்பவற்றை இக்கதை முதல் பார்வையிலேயே வெளிப்படுத்துகிறது. செயற்கையாக அமைக்கப்பட்ட அடையாளங்களை இந்த இனக்குழுக்கள் தாங்கியுள்ளன; எனினும் அவை பெரும்பாலும் இரத்த உறவு உள்ளவர்களைக் கொண்டைவையாக இருந்தன; மேலும், செயற்கையாக அமைக்கப்படாமல், இயற்கையாக வளர்ந்த பண்டைய இனக்குழுவின் மாதிரியிலிருந்து அவை அமைக்கப்பட்டன. மேலும், இந்த மூன்று இனக்குழுக்களில் ஒவ்வொன்றுக்கும் ஓர் உண்மையான, பழைய இனக்குழு மூலக்கருவாக இருந்திருப்பதும் சாத்தியமே. இணைக்கின்ற கண்ணியாகிய பிராட்ரியில் பத்து குலங்கள் அடங்கியிருந்தன. அந்த பிராட்ரியில் குரியா என்று அழைக்கப்பட்டது, ஆகவே மொத்தம் அவற்றின் எண்ணிக்கை 30 ஆகும்.
ரோமானியக் குலம் என்ற அமைப்பும் கிரேக்க குலம் என்பதும் ஒன்றேயென்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை. அமெரிக்க செவ்விந்தியர்களிடம் காணப்படுகின்ற புராதன வடிவத்தைத் தாங்குகின்ற சமுதாய அலகிலிருந்து அதன் தொடர்ச்சியாக வெளிவந்ததே கிரேக்க குலம் என்று கூறினால், அது ரோமானியக் குலத்துக்கும் பொருந்தும். எனவே அதைப் பற்றி விவரிப்பதை நாம் சுருக்கிக் கொள்ளலாம்.
குறைந்தபட்சம் ரோமாபுரியின் ஆதிகாலத்தில் ரோமானியக் குலத்துக்குப் பின்வரும் அமைப்பு இருந்தது:
1. மரணமடைந்து விட்ட குல உறுப்பினர்களின் சொத்தைப் பரஸ்பரம் சுவீகாரம் செய்து கொள்ளும் உரிமை; சொத்து குலத்துக்குள்ளேயே இருந்தது. கிரேக்க குலத்தில் இருந்த மாதிரியே ரோமானியக் குலத்தில் தந்தையுரிமை ஏற்கெனவே அமுலில் இருந்ததால் பெண் மரபு வழியில் வந்த குழந்தைகள் வாரிசுரிமையைப் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டனர். நாமறிந்த மட்டில் எழுதப் பட்ட ரோமானியச் சட்டங்களிலேயே மிகப் பழைமையான பன்னிரண்டு பட்டியல்கள் என்னும் சட்டங்களின்படி சொந்தக் குழந்தைகள்தான் சொத்துக்கு முதல் வாரிசாக உரிமையைப் பெற்றார்கள்; சொந்தக் குழந்தைகள் இல்லாவிட்டால், அக்னேட்டுகள் (அதாவது, ஆண் மரபு வழியைச் சேர்ந்த இரத்த உறவினர்கள்) அவர்கள் இடத்துக்கு வந்தனர்[பன்னிரண்டு பட்டியல்கள் என்னும் சட்டங்கள் – பிளெப்ஸ் எனப்படுகின்ற சாமான்யர்கள் பட்ரீஷியச் சீமான்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் விளைவாக கி. மு. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் வகுத்தளிக்கப்பட்ட ரோமானியச் சட்டத் தொகுப்பு. சொத்துடைமையின் அடிப்படையில் ரோமானியச் சமூகத்தில் படிவரிசை முறை ஏற்பட்டதையும் அடிமைமுறையின் பரிணாம வளர்ச்சியையும் அடிமையுடைமை அரசின் உருவாக்கத்தையும் இச்சட்டங்கள் பிரதிபலித்தன. இச்சட்டங்கள் பன்னிரண்டு பட்டியல்களில் எழுதப்பட்டிருந்தபடியால் இப்பெயரைப் பெற்றன.]. அவர்களும் இல்லாவிட்டால், குல உறுப்பினர்கள் வாரிசுகளாயினர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சொத்து குலத்துக்குள்ளேயே இருந்தது. செல்வப் பெருக்கம், ஒருதார மணம் ஆகியவற்றால் படைக்கப் பட்ட புதிய சட்ட வரையளவுகள் குலத்தின் உறுப்பினர்களுக்கு இருந்த சம வாரிசுரிமை நடைமுறையில், முன்னே கூறியபடி அநேகமாக நெடுங்காலத்துக்கு முன்பே, அக்னேட்டுகளோடு முதலில் குறுக்கப்பட்டு, பிறகு குழந்தைகளுக்கும் ஆண் மரபு வழியில் வந்த அவர்களுடைய சந்ததியினருக்குமாகக் குறுக்கப்பட்டது. பன்னிரண்டு பட்டியில்களில் இது தலை கீழ் வரிசையில் தரப்படுகிறது என்பது உண்மையே.
2. ஒரு பொது இடுகாடு வைத்திருத்தல். கிளாடியா என்ற பட்ரீஷியக் குலம் ரெகில்லியிலிருந்து வந்து ரோமாபுரியில் குடிபுகுந்த பொழுது சிறிய நிலப் பகுதியையும் நகரத்தில் ஒரு பொது இடுகாட்டையும் பெற்றது. அகஸ்டசின் காலத்தில் கூட டியூடபர்க் காட்டில் வீழ்ச்சியடைந்த வாரசின் தலை ரோமாபுரிக்குக் கொண்டுவரப்பட்டு gentilitius tumulusஇல் அடக்கம் செய்யப்பட்டது [குல இடுகாட்டில்]. எனவே அவனுடைய குலத்துக்கு (குவின்டிலியா குலத்துக்கு) சொந்தமாக ஒரு இடுகாடு இருந்தது.
3. பொதுவான மத விழாக்கள். இந்த sacra gentilitia பிரசித்தமானவை [குலத்தின் புனித விழாக்கள்].
4. குலத்துக்குள்ளாகத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை. ரோமாபுரியில் இது எழுத்து வடிவிலான சட்டமாக எக்காலத்திலும் இருந்ததாகத் தோன்றவில்லை. எனினும் அந்த வழக்கம் இருந்தது. நம் காலத்துக்கு எட்டியிருக்கின்ற எண்ணற்ற ரோமானிய தம்பதிகளின் பெயர்களில் ஒன்றிலாவது கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே குலப் பெயர் இருக்கவில்லை. வாரிசுச் சட்டமும் இந்த விதியை நிரூபிக்கிறது. திருமணத்தின் மூலம் ஒரு பெண் தனது அக்னேட் உரிமைகளை இழக்கிறாள், தனது குலத்தை விட்டுப் போய் விடுகிறாள். அவளோ, அவளுடைய குழந்தைகளோ அவளது தகப்பனாரின் சொத்துக்கு வாரிசாக முடியாது; அப்படியில்லாவிட்டால், தகப்பனாரின் குலம் அந்தச் சொத்தை இழந்து விடும். ஒரு பெண் தனது சொந்த குலத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வில்லை என்ற ஊகம் ஒன்றுதான் இந்த விதிக்கு அர்த்தத்தைத் தருகிறது.
5. நிலத்தைப் பொதுவாக வைத்திருத்தல். ஆதிகாலத்தில், இனக்குழுப் பிரதேசம் முதலில் பிரிக்கப்பட்டதிலிருந்து இப்படித்தான் இருந்தது. லத்தீன் இனக்குழுக்களுக்கு இடையில் நிலத்தில் ஒரு பகுதி இனக்குழுவிடமும் ஒரு பகுதி குலத்திடமும் ஒரு பகுதி அன்று தனிப்பட்ட குடும்பங்களாக அநேகமாக இருக்க முடியாத குடும்பங்களிடமும் உடைமையாக இருந்தது. ரோமுலஸ் என்பவர் தான் முதலில் தனிநபர்களுக்கு நிலத்தை வழங்கினார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு ஹெக்டேர் (இரண்டு யூகரா) நிலம் தரப்பட்டது. எப்படியிருப்பினும், அதற்குப் பின்னாலும் குலங்களின் உடைமையில் நிலம் இன்னும் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். அரசு நிலங்களைப் பற்றி இங்கே சொல்வது அவசியமல்ல; குடியரசின் உள்நாட்டு வரலாறு முழுவதுமே அவற்றைச் சுற்றி சுழன்றது.
6. ஆபத்துகளின் போது உதவி செய்வதும் பாதுகாப்பு அளிப்பதும் குல உறுப்பினர்களின் பரஸ்பரக் கடமையாகும். இதன் அற்பமான எச்சங்களைத்தான் ஏடறிந்த வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ரோமானிய அரசு மிகவும் தலைமையான பலத்தைக் கொண்டிருந்ததனால் ஆபத்துக்களின் போது உதவியளிக்கின்ற கடமை அதற்கு ஏற்பட்டது. அப்பியஸ் கிளாடியஸ் கைது செய்யப்பட்ட பொழுது சொந்த விரோதிகள் உட்பட அவனது குலம் முழுவதுமே துக்கத்திலாழ்ந்தது. இரண்டாவது பூனிக் யுகத்தின் போது கைது செய்யப்பட்ட குல உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விடுவிப்பதற்கு அந்தக் குலங்கள் எல்லாம் ஒன்றுபட்டன[இரண்டாவது பூனிக் யுத்தம் (கி, மு. 218 – 201) – பண்டைக்காலத்தின் மிகப் பெரிய அடிமையுடைமை அரசுகளான ரோமாபுரிக்கும் கார்தேஜுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம். மத்திய தரைக் கடலின் மேற்குப் பகுதியில் ஆதிக்கம் பெறுவதற்கும் புதிய பிரதேசங்களையும் அடிமைகளையும் கைப்பற்றுவதற்கும் இந்த யுத்தம் நடைபெற்றது. இரண்டாவது பூனிக் யுத்தத்தில் கார்தேஜ் படுதோல்வி அடைந்தது.]. இதைச் செய்யக் கூடாது என்று செனெட் தடை செய்திருந்தது.
7. குலப் பெயரைத் தாங்குவதற்கு உரிமை. சக்கரவர்த்திகள் ஏற்படுகின்ற காலம் வரை இது அமுலிலிருந்தது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் தமது முந்திய எசமானர்களின் குலப் பெயர்களைத் தாங்களும் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களுக்கு அந்தக் குலத்தின் உரிமைகள் தரப்படவில்லை.
8. குலத்திற்குள் அந்நியர்களை சுவீகரித்துக் கொள்வதற்கு உரிமை. ஒரு குடும்பத்தில் சுவிகரித்துக் கொள்வதின் மூலம் இது செய்யப்பட்டு, (செவ்விந்தியர்கள் மத்தியில் இருப்பதைப் போல) அப்படியே குலத்துக்குள் சுவீகரித்துக் கொள்வதில் முடிந்தது.
9. தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவோ, பதவியிலிருந்து நீக்கவோ உரிமை இருப்பதாக எங்குமே கூறப்படவில்லை. எனினும் ரோமாபுரியின் முதல் காலப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அரசனிலிருந்து கீழாக, எல்லாப் பதவிகளும் தேர்தல் அல்லது நியமனத்தின் மூலம் நிரப்பப்பட்டதனாலும் குரியாக்கள் தமது புரோகிதர்களைத் தேர்ந்தெடுத்ததினாலும் குலத் தலைவர்கள் (principes) விஷயத்திலும் தேர்தல் முறை இருந்தது என்று நாம் ஊகிப்பதற்கு நியாயமுண்டு. ஒரே குடும்பத்திலிருந்து வேட்பாளர்களைப் பொறுக்குவது என்ற விதி ஏற்கெனவே எவ்வளவுதான் நன்கு நிலைநாட்டப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
ரோமானியக் குலத்தின் உரிமைகளும் கடமைகளும் இப்படித்தான் இருந்தன. தந்தையுரிமைக்கு முழுமையாக மாறியது என்று ஒரு விதிவிலக்கைத் தவிர, அவை இராகோஸ் குலத்தின் உரிமைகள், கடமைகளை அப்படியே பிரதிபலிக்கும் உண்மையான பிம்பமாகும். இங்கும் “இராகோசை தவறுக்கிடமின்றிக் கண்டுபிடிக்க முடியும்.”
ரோமானியக் குல அமைப்பைப் பற்றி நமது மிகப் பிரசித்தி பெற்ற வரலாற்றாசிரியர்களிடையேயும் கூட இன்னும் குழப்பமிருப்பதைப் பின்வரும் உதாரணம் காட்டுகிறது. குடியரசு காலத்திலும் அகஸ்டஸ் காலத்திலும் இருந்த ரோமானியப் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சி நூலில் (ரோமானிய ஆராய்ச்சிகள், பெர்லின், 1864, தொகுதி 1) மொம்ஸென் பின்வருமாறு எழுதுகிறார்:
“குலத்தால் சுவீகரிக்கப்பட்ட நபர்களும் அதன் பாதுகாப்பு பெற்று வந்த நபர்களும் உட்பட – ஆனால் அடிமைகள் விலக்கப்பட்டிருந்தனர் – குலத்தின் எல்லா ஆண் உறுப்பினர்களும் குலப்பெயரைத் தாங்கியிருப்பதுடன் பெண்களும் அந்தப் பெயரை வைத்துக் கொண்டுள்ளனர் … இனக்குழு” [stamm] (மொம்ஸென் gens என்னும் சொல்லை இப்படி மொழிபெயர்க்கிறார்) “என்பது … ஒருபொதுவான – மெய்யான, ஊகிக்கப்பட்ட அல்லது புனைந்து உருவாக்கப்பட்ட கூட – முன்னோரிடமிருந்து பெறப்பட்ட ஒரு சமூகம். அது பொதுவான சடங்குகள், இடுகாடுகள், வாரிசுரிமை ஆகியவற்றால் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளது. தம்மளவில் சுதந்திரமானவர்களான எல்லாத் தனிநபர்களும், ஆகவே பெண்களும் அச்சமூகத்தில் பதிவு செய்யப்படலாம், பதிவு செய்யப்பட வேண்டும். திருமணமான பெண்ணின் குலப் பெயரை நிர்ணயிப்பது மட்டும் சற்றுக் கஷ்டமானது, தமது சொந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரையும் மணம் புரியக் கூடாது என்று தடுக்கப்பட்டு வந்த வரையிலும் இந்தக் கஷ்டம் இருக்கவில்லை; மேலும், நெடுங்காலம் வரை குலத்துக்கு உள்ளே மணம் புரிவதை விட வெளியே மணம் புரிவது பெண்களுக்கு அதிகக் கஷ்டமாக இருந்தது என்பது வெளிப்படையாகும். இந்த உரிமை, குலத்துக்கு வெளியே மணம் புரியும் உரிமை, குலத்துக்கு வெளியே மணம் புரியும் உரிமை (gentis enuptio) ஒரு தனிப்பட்ட சலுகையாகவும் பரிசாகவும் 6ஆம் நூற்றாண்டிலேயே வழங்கப்பட்டது … ஆனால், எங்கெல்லாம் இப்படி வெளியில் மணம் நடந்ததோ, அங்கெல்லாம் ஆதி காலத்தில் பெண்கள் தமது கணவர்களின் இனக்குழுவுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். பண்டைக்கால மத வகைப்பட்ட திருமணத்தின் மூலம் பெண் தனது கணவனின் சட்ட பூர்வமான, சடங்கு முறையுள்ள சமூகத்தில் முழுமையாகச் சேர்ந்து தனது சமூகத்தை விட்டு விலகினாள். இதைப் போன்று நிச்சயமானது வேறொன்றுமில்லை. மணமான பெண் தனது குல உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில் செயல்பூர்வமான மற்றும் செயலற்றதான வாரிசு உரிமைகளை இழக்கிறாள், ஆனால் தன் கணவனின், தன் குழந்தைகளின், அவனுடைய குல உறுப்பினர்களின் வாரிசுக் குழுவினுள் நுழைகிறாள் என்பது யாருக்குத் தான் தெரியாது? மேலும், கணவன் அவளைத் தனது குழந்தையைப் போல சுவீகரித்து தன் குடும்பத்துக்குள் கொண்டுவந்தால், அவனுடைய குலத்திலிருந்து அவள் எப்படிப் பிரிந்திருக்க முடியும்?” (பக்கங்கள் 8 – 11.)
இப்படி, ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சேர்ந்த ரோமானியப் பெண்கள் ஆதியில் தமது குலத்திற்கு உள்ளாக மட்டும் மணம் புரிய உரிமை பெற்றிருந்தனர் என்று மொம்ஸென் வலியுறுத்துகிறார்; ஆகவே ரோமானியக் குலம் அகமண முறைக் குலமேயாகும், புறமண முறைக் குலமல்ல என்பது அவருடைய கருத்து. இக்கருத்து மற்ற மக்களினங்கள் எல்லாவற்றின் அனுபவத்துக்கும் முரண்பட்டிருக்கிறது; அது லிவி என்பவர் எழுதிய நூலின் (நூல் 39, அத்தியாயம் 19) சர்ச்சைக்கிடமான ஒரு பகுதியை – அந்த ஒரு பகுதியை மட்டுமே என்று சொல்லாவிட்டாலும் கூட – பிரதானமாக ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதியின்படி, ரோமாபுரி நிறுவப்பட்டு 568 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி. மு. 186இல் செனெட் பின்வருமாறு உத்தரவிட்டது:
“ஃபெஸெனியா ஹிஸ்பால்லாவுக்கு தனது சொத்தை முடிவு செய்ய உரிமையுண்டு, அதைக் குறைக்க உரிமையுண்டு, குலத்துக்கு வெளியே மணம் புரிய உரிமையுண்டு, ஒரு பாதுகாப்பாளரைப் பொறுக்கிக் கொள்ள உரிமையுண்டு. தனது (மரணமடைந்த) கணவன் உயிலின் மூலமாக இந்த உரிமையைக் கொடுத்திருப்பதைப் போல அவள் இப்படி நடந்து கொள்ளலாம். அவள் ஒரு சுதந்திரமான நபரை மணம் புரிவதற்கு அனுமதிக்கப்படுவாள்; மேலும், அவளை மணம் புரியும் ஆணுக்கு இதனால் கெட்ட நடத்தைப் பழியும் அவப்பெயரும் சேராது.”
இங்கே விடுதலையடைந்த அடிமையான ஃபெஸெனியா குலத்துக்கு வெளியே மணம் புரிந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டாள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இதன்படி, அவளுடைய கணவன் தன்னுடைய மரணத்துக்குப் பிறகு குலத்துக்கு வெளியே மணம் புரிந்து கொள்வதற்கான உரிமையை உயிலின் மூலம் அவளுக்கு வழங்க உரிமையுள்ளவன் என்பதும் அதைப் போல சந்தேகத்திற்கு இடமில்லாததாகும். ஆனால் எந்தக் குலத்துக்கு வெளியே?
மொம்ஸென் ஊகிக்கின்றபடி, ஒரு பெண் தனது குலத்துக்குள்ளேதான் மணம் புரிந்தாக வேண்டுமென்றால், மணமான பிறகு அவள் இந்த குலத்துக்குள்ளேயே தங்கினாள் என்றாகும். ஆனால் முதலாவதாக, அது ஒரு அகமண முறைக் குலம் என்ற வாதம் நிரூபிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அந்தப் பெண் குலத்துக்குள்ளேதான் மணம் புரிய வேண்டுமென்றால், ஆணும் அதே மாதிரி செய்ய வேண்டியவனே. இல்லாவிட்டால், அவனுக்கு என்றைக்கும் மனைவி கிடைக்க மாட்டாள். தனக்கே இல்லாத, தன்னாலேயே அனுபவிக்கப் பெறாத ஓர் உரிமையை ஆண் உயிலின் மூலம் தன்னுடைய மனைவிக்குத் தர முடியும் என்ற நிலையை அடைகிறோம்; இது சட்ட ரீதியில் அபத்தமாகும். மொம்ஸென் இதை உணர்ந்து பின்வருமாறு ஊகிக்கிறார்:
”குலத்துக்கு வெளியே மணம் செய்து கொள்வதற்கு ஆட்சியில் இருக்கின்ற நபரின் ஒப்புதல் மட்டுமன்றி, குலத்தின் எல்லா உறுப்பினர்களின் ஒப்புதலையும் பெற வேண்டுமென்று சட்டம் அநேகமாக கோரியிருக்கும்” (பக்கம் 10, குறிப்பு).
முதலாவதாக, இது மிகவும் துணிவான ஊகம்; இரண்டாவதாக, நூல் பகுதியின் தெளிவான வாசகத்துக்கு இது முரணாகும். கணவனுக்கு பதிலாக செனெட் அவளுக்கு இந்த உரிமையை வழங்குகிறது; கணவன் கொடுக்க முடிந்திருப்பதைக் காட்டிலும் கூடுதலாகவோ, குறைவாகவோ அது ஒன்றும் வழங்கவில்லை. ஆனால் அது ஒரு பரிபூரண உரிமையைத் தருகிறது. அதில் நிபந்தனைகள் எதுவும் கிடையாது. எனவே அவள் இந்த உரிமையைப் பயன்படுத்துவதனால் அவளுடைய புதிய கணவன் பாதிக்கப்படக் கூடாது. இந்த உரிமையை அவள் பயன்படுத்துவதனால் அவளுக்கு எத்தகைய தொல்லையும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிகழ்கால, எதிர்கால கான்சல்களுக்கும் பிரேட்டர்களுக்கும் செனெட் உத்தரவு கூடப் போடுகிறது. ஆகவே மொம்ஸனின் ஊகம் முற்றிலும் தவறு என்று தோன்றுகிறது.
மேலும், ஒரு பெண் மற்றொரு குலத்தைச் சேர்ந்த ஆணை மணந்தாள் என்றும் ஆனால் அவள் தன் குலத்துக்குள்ளேயே தங்கி விட்டாள் என்றும் வைத்துக் கொள்வோம். மேலே காட்டிய மேற்கோளின்படி, அப்பொழுது தன் சொந்த குலத்துக்கு வெளியே மணப்பதை அவளுடைய கணவன் அனுமதிக்கும் உரிமை பெற்றவனாகிறான்; அதாவது, தான் சேராத ஒரு குலத்தின் விவகாரங்கள் குறித்து ஏற்பாடுகள் செய்வதற்கு அவனுக்கு உரிமையுண்டு. இது முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதிருப்பதால் இதைப் பற்றி நாம் மேலும் எழுதுவது அவசியமில்லை.
அந்தப் பெண் முதலில் இன்னொரு குலத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணந்தாள்; அதன் காரணமாக வேறு சிக்கலெதுவுமின்றி தனது கணவனுடைய குலத்தில் அங்கம் வகித்தாள் என்று நாம் ஊகிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மொம்ஸெனே இதை ஒத்துக் கொள்கிறார். அப்பொழுது இந்த விஷயம் முழுவதும் தானே விளங்கும். அந்தப் பெண் தன்னுடைய திருமணத்தால் தனது பழைய குலத்திலிருந்து பிரிக்கப்பட்டு கணவனுடைய குலக் குழுவுக்குள் சுவீகரிக்கப்பட்டு அந்தப் புதிய குலத்தில் ஒரு விசேஷ நிலையை வகிக்கிறாள். இப்பொழுது அவள் குலத்தில் ஒரு உறுப்பினர், ஆனால் இரத்த உறவு கொண்டவள் அல்ல. அவள் சுவீகரிக்கப்பட்ட முறையானது மணத்தின் மூலமாக அவள் புகுந்திருக்கும் குலத்துக்குள்ளேயே மணம் புரிந்து கொள்வதற்கு தடையே இல்லாதவாறு தொடக்கத்திலிருந்தே விலக்கி வைக்கிறது. மேலும், பொதுவான பரம்பரை உரிமைகளைக் கொண்ட குலக் குழுவுக்குள் அவள் சுவீகரிக்கப்பட்டிருக்கிறாள்; கணவன் மரணமடைகின்ற பொழுது அவனுடைய சொத்தில் ஒரு பகுதியை, அதாவது குலத்தின் சக உறுப்பினனுக்குரிய ஒரு பகுதிச் சொத்தை அவள் பெறுகிறாள். இந்தச் சொத்து குலத்துக்குள்ளே தான் இருக்க வேண்டும், தனது முதல் கணவனின் குலத்துக்குள்ளேதான் அவள் மணக்க வேண்டும், வேறு குலத்துக்குள் மணம் புரியக் கூடாது என்பதை விட இயற்கையானது எது? எனினும் விலக்கு அளிக்கப்பட வேண்டுமானால், அந்தச் சொத்தை விட்டுச் சென்ற முதல் கணவனைக் காட்டிலும் அதைச் செய்ய அதிகாரமளிப்பதற்கு வேறு யாருக்குத் தகுதியுண்டு? தன் சொத்தில் ஒரு பகுதியை அவளுக்குக் கொடுத்து அதே சமயத்தில் திருமணத்தின் மூலம் அல்லது திருமணத்தின் விளைவாக அந்தச் சொத்தை இன்னொரு குலத்திற்கு மாற்றி விடுவதற்கும் அவளை அனுமதித்த பொழுது அந்தச் சொத்துக்கு இன்னும் அவன் சொந்தக்காரனாகவே இருந்தான். எனவே உண்மையிலே அவன் தன்னுடைய சொத்தைத்தான் முடிவு செய்திருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய கணவனின் குலத்துக்கும் இடையிலுள்ள உறவைப் பொறுத்தமட்டில், கணவன்தான் சுதந்திரமாக முடிவு செய்து திருமணத்தின் மூலம் தனது குலத்துக்குள் அவளைப் புகுத்தினான். எனவே இன்னொரு திருமணத்தின் மூலம் இந்தக் குலத்தை விட்டுச் செல்வதற்கு அவளுக்கு அதிகாரமளிப்பதற்கும் அவன்தான் சரியான நபர் என்றும் இயற்கையாகப் படுகிறது. சுருக்கமாகக் கூறினால், அகமண முறை வகைப்பட்ட ரோமானியக் குலம் என்னும் விசித்திரமான கருத்தைக் கைவிட்டு, அது ஆரம்பத்தில் புறமண முறைக் குலமாகவே இருந்ததென்று மார்கனுடன் சேர்ந்து நாமும் கருதுகின்ற அதே வினாடியில் விஷயம் எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் தோன்றும்.
கடைசியாக, மற்றொரு கருத்தும் இருக்கிறது. அது அநேகமாக மிகவும் அதிகமான அளவு ஆதரவைப் பெற்றிருக்கிறது. லிவியின் நூலில் அந்தப் பகுதியின் சரியான அர்த்தம் பின்வருமாறு என்று கருதப்படுகிறது:
“விடுதலையடைந்த அடிமைப் பெண்கள் விசேஷ அனுமதி இல்லாமல் குலத்துக்கு வெளியே மணக்க கூடாது அல்லது குடும்ப உரிமைகளை இழப்பதுடன் சம்பந்தப்பட்டதாக, குலக் குழுவிலிருந்து விலகிச் செல்வதில் முடியக் கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” (லாங்கே எழுதிய ரோமானிய பண்டைக்காலப் பழக்கங்கள், பெர்லின், 1856, தொகுதி 1, பக்கம் 195; இதில் ஹூஷ்கேயைக் குறிப்பிடுகின்ற பொழுது லிவியின் நூலிலிருந்து நாம் எடுத்துக் கொண்ட பகுதி விமர்சிக்கப்படுகிறது).
இந்த ஊகம் சரியானால், அந்த நூல் பகுதி சுதந்திரமான ரோமானியப் பெண்களின் அந்தஸ்தைப் பற்றி நிரூபிப்பது மிகவும் குறைவு; மேலும், அவர்கள் குலத்துக் குள்ளாகவே மணம் புரியக் கடமைப்பட்டவர்கள் என்று கூறுவதற்கு ஆதாரம் இன்னும் குறைவு.
Enuptio gentiis என்னும் சொற்றொடர் இந்த நூல் பகுதில்தான் வருகிறது. ரோமானிய இலக்கியம் முழுவதிலும் வேறெங்கும் இது காணப்படவில்லை. Enubere (வெளியில் மணம் புரிதல்) என்ற சொல்லின் லிவியின் நூலில் மூன்று முறைதான் வருகிறது; அதுவும் குலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதல்ல. ரோமானியப் பெண்கள் தமது குலத்துக்குள்ளேதான் மணக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்ற விசித்திரமான கருத்து ஏற்பட்டதற்கு இந்த ஒரு நூல் பகுதியே காரணமாகும். ஆனால் அதைச் சிறிதும் நிலைநிறுத்த முடியாது. ஏனென்றால், அந்தப் பகுதி விடுதலையடைந்த அடிமைப் பெண்களின் மீதுள்ள விசேஷமான கட்டுபாடுகளைக் குறிப்பதாக இருக்க வேண்டும், அப்படியானால் அது பிறவியிலேயே சுதந்திரம் பெற்ற பெண்கள் சம்பந்தமாக எதையும் நிரூபிக்கவில்லை; அல்லது அது பிறவிலேயே சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் பொருந்தியதாக இருக்க வேண்டும், அப்படியானால் பெண்கள் குலத்துக்கு வெளியே மணம் புரிவது பொது விதியாக இருந்தது என்பதையும் திருமணத்தின் மூலமாகத் தமது கணவனுடைய குலத்துக்கு மாற்றப்பட்டார்கள் என்பதையும்தான் அது நிரூபிக்கிறது. எனவே அது மொம்ஸெனுக்கு எதிராகவும் மார்கனுக்கு ஆதரவாகவும் இருக்கிறது.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
- மாமேதை ஏங்கல்ஸ்.
- 1884 ல் எழுதிய முன்னுரை
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
- ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
- குடும்பம் – 1
- குடும்பம் – 2
- குடும்பம் – 3
- குடும்பம் – 4
- குடும்பம் – 5
- குடும்பம் – 6
- குடும்பம் – 7
- குடும்பம் – 8
- குடும்பம் – 9
- இராகோஸ் குலம் 1
- இராகோஸ் குலம் 2
- கிரேக்க குலம் 1
- கிரேக்க குலம் 2
- அதீனிய அரசின் உதயம் 1
- அதீனிய அரசின் உதயம் 2
- அதீனிய அரசின் உதயம் 3