மின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவது என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இதனால் உலக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும், அவர்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனை முறையும் மாறும், மாற்றும் வாய்ப்பு இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த அடிப்படையில் மின்னம்பலம் தளத்தில் பாஸ்கர் செல்வராஜ் எழுதும் இது குறித்து தொடராக எழுதி வருகிறார். மின்னணுப் பொருளாதாரம், அதன் பின்னணி, அதை முன்வைத்து உலகில் நடந்து வரும் மாற்றங்கள் என விரிவாக அலசுகிறது இந்தத் தொடர்.
பாஸ்கர் செல்வராஜ்; தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர் தொடர்புக்கு naturebas84@gmail.com
*****************
2009இல் ஆதார் அடையாள அட்டை அறிமுகம், 2012இல் 2ஜி அலைக்கற்றை ஏல விவகாரம், 2015இல் பணப் பரிவர்த்தனைக்கான வங்கி (Payment Bank), 2016இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2017இல் ஜிஎஸ்டி, இதோ தற்போது விவசாய விளைபொருள் விற்பனை சட்டம் என அரசு தொடர்ச்சியாக அவ்வப்போது ஒரு காரணத்தைச் சொல்லி இவற்றை செய்து வருகிறது. நாமும் தனித்தனியாக இவற்றுக்கு எதிராகப் பேசியும் போராடிக்கொண்டும் இருக்கிறோம். இவற்றை தொகுப்பாகப் பார்க்கும்போது இந்த நடவடிக்கைகள் ஒற்றை நோக்கத்தைக் கொண்டிருப்பது தெரிய வரும். அந்த நோக்கம் இந்தியப் பொருளாதாரத்தை புதிய பொருளாதார முறையான மின்னணு பொருளாதாரத்துக்கு (Digital Economy) மாற்றி அமைப்பது என்பதை எளிதில் ஊகித்தறிய முடியும். அது என்ன மின்னணு பொருளாதாரம்?
மின்னணு பொருளாதாரம் (Digital Economy) என்றால் என்ன?
சுருக்கமாகச் சொல்வதென்றால் மின்னணு தொழில்நுட்ப உதவியுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலை மின்னணு பொருளாதாரம் என்று அழைக்கிறார்கள். இதில் இணையத்தைப் பயன்படுத்தி நாம் உரையாடுவது முதல் ஊபர், ஓலா பயணம், இணையத்தில் பொருள் வாங்குவது, முகநூல், யூடியூப், டிக்டாக் பயன்பாடு என எல்லாம் இதில் அடங்கும். இவ்வளவுதானா? இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தோன்றலாம். ஆனால் இது வெறும் துவக்கம் மட்டுமே. தலைமை அமைச்சர் சொல்வது போல இந்த புதிய இந்தியா இப்போது தான் பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே பெரும் பிரச்சினைகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய இந்தியா வளர்ந்து பெரிதாகும்போது என்னவாக இருக்கும்? நமது வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை இதன் அடிப்படைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலமே ஓரளவு ஊகித்து செயலாற்ற முடியும்.
இந்த மின்னணு தொழில்நுட்ப உருவாக்கத்தை நான்காம் தொழிற்புரட்சி என்கிறார்கள். முதலிரண்டு தொழிற்புரட்சி ஏற்பட்டு உற்பத்தி பெருகிய போது அதனை உலகம் முழுக்க விற்க காலனியாதிக்கம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட போட்டியில் உலகம் இரு போர்களைக் கண்டது. பின்பு தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு உற்பத்தி மேலும் பெருகிய போது உலகமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடுகளின் எல்லைக்குள் நடந்த பொருள் உற்பத்தி, விற்பனை, வேலை செய்யும் தொழிலாளர்கள் என்ற முறை மாறி அனைத்தும் எல்லைகளைக் கடந்தது. இந்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அமெரிக்காவின் தலைமையில் ஒரு புதிய உலக ஒழுங்கு (World Order) கட்டமைக்கப்பட்டது. இந்த உற்பத்தி சங்கிலியில் மென்பொருள் மற்றும் சேவை துறையில் பங்கெடுத்த இந்தியா, குறிப்பாகத் தென்மாநிலங்கள், ஒரு குறிப்பிட்ட அளவு பலனடைந்தன. நமது வாழ்வும், நிலையான மாற்றம் இல்லை என்றாலும், மாற்றம் கண்டிருக்கிறது.
இப்போது இந்த புதிய மின்னணு தொழில்நுட்ப புரட்சி உலகை அடுத்த மாற்றத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க இதற்கு தோதான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக ஒழுங்கும் மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்குத் தகுந்தாற்போல் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் என்ன? அதனை கைக்கொண்டிருக்கும் நாடுகள் எவை? அவற்றுக்கு இடையிலான போட்டி, இந்தியாவின் தெரிவு, பொருளாதார மாற்றங்கள், அதனால் ஏற்படப்போகும் தொழில் மற்றும் விவசாய மாற்றங்கள், வேலைவாய்ப்பு, வேலை இழப்பு என பல பரிமாணங்களில் இதனை அணுக வேண்டி இருந்தாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார நடைமுறைக்கும் இந்த புதிய முறைக்கும் என்ன வேறுபாடு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இணைய வர்த்தகம்:
தற்போதைய வர்த்தக முறை உற்பத்தியாளர், அதனை வாங்கி விற்கும் வணிகர், கடை அதன் வாடகை, வாடிக்கையாளர், பணத்தைக் கொடுத்து பொருளைப் பரிமாறிக் கொள்வது என்பதாக உள்ளது. இணைய வர்த்தகம் என்பது காற்றில் கடையைத் திறந்து, இணையம் இருக்கும் எல்லா இடங்களிலும் பொருளை கடைவிரிக்கும் புதிய வியாபார உத்தி. மெய்யான மனிதர்களுக்கு இடையில் மெய்நிகர் உலகில் பணத்தைச் செலுத்திப் பொருளைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வர்த்தக முறை. கடை உரிமையாளரின் இடத்தையும், வணிகர்களின் சந்தைபடுத்தும் பாத்திரத்தையும் இணையவெளி (App) உரிமையாளர் எடுத்துக் கொள்கிறார். அவர்கள் இருவரும் இந்த புதிய முறை பொருளாதாரத்தில் இருந்து மெல்ல விலக்கப்படுகிறார்கள் அல்லது பதிலீடு செய்யப்படுகிறார்கள். கோடிக்கணக்கான கடை உரிமையாளருக்கும், வணிகர்களுக்கும் செல்லும் பணம் இந்த புதிய சில இணையவெளி உரிமையாளர்களுக்குச் செல்கிறது.
இணைய விற்பனை வளாகம் (Superapp or Supermall):
உண்மையில் இது காற்றில் கடையைத் திறப்பதல்ல. இந்த கடை வழங்கியில் (Server) திறக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. முதலில் தனித்தனியாக கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பின்பு அனைத்து வகையான கடைகளையும் கொண்ட பெரிய விற்பனை வளாகங்கள் (Shopping Mall) வந்தது. பின்பு ஒவ்வொரு உற்பத்தியாளரும் சேவை வழங்குபவர்களும் தனித்தனியாக இணையதளம் ஆரம்பித்து விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முயற்சி செய்து வந்தார்கள். இப்போது ஒரே மென்பொருள் தளத்தில் (Superapp) பல வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்கள், பயண மற்றும் இருப்பிட சேவை வழங்குபவர்கள் என அனைவரும் சந்தைப்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் இணையத்தில் தேடி அலைய தேவை இல்லை. விரும்பும் பொருளை ஒரே இடத்தில் பார்த்து தெரிவு செய்து கொள்ளலாம். விற்பனையாளரும் ஒரே நேரத்தில் எல்லா வாடிக்கையாளரையும் சென்றடைய முடியும்.
தரவுகள் (Data):
இதுவரையிலும் இது சாத்தியமின்றி இருந்தது. ஏனென்று புரிந்து கொள்ள நாம் இணையத்தில் மற்றவருடன் எப்படி காணொலியில் உரையாடுகிறோம் என்று அறிய முயல்வோம். ஒருமுனையில் ஒருவர் திறன்பேசியில்(Smartphone) தனது உருவத்துடன் பேசுவது பல குறுந்தகவல்களாக (Data) திறன்பேசியினால் மாற்றப்படும். அது வலைப்பின்னல்கள் வழியாக கடத்தப்பட்டு எதிரில் உள்ளவரை சென்றடையும். இந்த தகவல்கள் அந்தந்த கருவிகளுக்கென உள்ள தனிச்சிறப்பான எண்ணைக் கொண்டிருக்கும். அதன் மூலம் சரியாகக் குறிப்பிட்ட மின்னணு சாதனத்தைச் சென்றடையும். நாம் இந்த தகவல்களை பெற இயலாதபோது அது வழங்கியில் (Server) சேமித்து வைக்கப்பட்டு பின்பு நம்மை அடையும். இதேபோல நாம் தகவல்களை வழங்கியில் சேமித்து வைத்து தேடுபொறியில் (Google) தேடுபவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். தேடுபவர் வழங்கியுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தரவிறக்கிக் (Download) கொள்கிறார்.
Cloud computing, 5G:
இப்படி அனுப்பும் அல்லது பெறும் தகவல்களின் அளவைப் பொறுத்து இணைய சேவை வழங்குபவர் நம்மிடம் கட்டணம் பெறுகிறார். அதேபோல தகவல்களை வழங்கியிலோ அல்லது நமது மின்னணு சாதனத்திலோ சேமிக்கும் அளவு எல்லை அற்றது அல்ல என்பது அனைவரும் அறிந்தது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இந்த எல்லையைத் தகர்த்திருக்கின்றன. அதேபோல இந்த தகவல்கள் செல்லும் வேகமும் முன்பு மெதுவாக இருந்தது. 2ஜியில் ஆரம்பித்து தற்போது 5ஜி வரை வந்துவிட்டது. இந்த இரண்டும் மெய்நிகர் உலகில் ஒரே தளத்தில் Superapp அல்லது மாபெரும் இணைய விற்பனை வளாகத்தில் (Supermall) பொருளைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்யும் சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. திறன்பேசிகளை தயாரிக்கும் வன்பொருள் மற்றும் மென்பொருட்களின் (Hardware and Software) உற்பத்தி வளர்ச்சி கண்டு இருப்பதோடு இந்த தொழில்நுட்பங்களும் (Cloud Computing, 5G) முதிர்ச்சி கண்டு வருகின்றன. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களான கூகுள், அமேஸான், முகநூல், அலிபாபா, டென்சென்ட், ஹுவாவெய் போன்ற சில நிறுவனங்களே இந்த தொழில்நுட்பங்களை வைத்திருக்கின்றன.
மாபெரும் தரவுகள், செயற்கை நுண்ணறிவு, தீர்வுநெறி (Big Data, Artificial Intelligence, Algorithm) :
நமது திறன்பேசியை (smartphone) பயன்படுத்தி இணையத்தில் எதை செய்தாலும் அது அந்த சாதனத்துக்கே உரித்தான தரவுகளை உருவாக்குகிறது. அந்த சாதனம் ஒரு குறிப்பிட்ட தொடர்பு எண்ணுக்கு உரித்தானது. அந்த தொடர்பு எண் குறிப்பிட்ட நபருக்கு உரித்தானது. அந்த நபருக்கு என தனித்த மின்னணு அடையாளத்தை உருவாக்கி இந்த எண்ணுடன் இணைத்துவிட்டால் அவரின் தனிப்பட்ட விருப்பங்கள், தெரிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அவரின் வங்கிக்கணக்கையும் இதனோடு இணைத்து விட்டால் அவரின் பொருளாதார பின்புலம், செலவு செய்யும் பழக்கம், எந்த பொருளை விரும்பி வாங்குகிறார் ஆகிய விவரங்களும் கிடைத்துவிடும்.
இப்படி உருவாகி மண்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான நபர்களின் மாபெரும் தரவுகளைச் சேமித்து வயது, பாலினம், பகுதி வாரியாக பிரித்து பகுத்தாயும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்களையும், தீர்வுநெறிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த பொருளுக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதுவரை சொல்லிவிடும். அதோடு யார் யார் வாங்கும் விருப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் இணைய செயல்பாடுகளைக் கொண்டு சரியாக இனம் கண்டு அவரிடம் விளம்பரம் செய்து பொருளை விற்றுக் கொடுத்துவிடும். அப்படி வாங்க முடிவுசெய்து விட்டவரை கடைக்குக் கொண்டு வருவதைவிட அவரிடமே பொருளைக் கொண்டு கொடுத்துவிட்டால் வேலை முடிந்துவிடும். பொருள் குறித்த நபரிடம் சென்று சேர்வதை செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பம் உறுதி செய்யும். சரி இந்த பரிவர்த்தனையை (exchange) எப்படி செய்வது?
பரிமாற்ற ஊடகம் (பணம்):
தற்போது வேலை செய்தோ, பொருளை விற்றோ அதற்கு ஈடாக பணத்தைப் பெறுகிறோம். அந்தப் பணத்தைக் கொண்டு மற்ற பொருட்களையோ சேவையையோ வாங்குகிறோம். இப்படியான இந்த பரிமாற்றத்தில் பணம் முக்கிய ஊடகமாக சுற்றி சுழலுகிறது. தற்போது பணம் என்ற ஊடகத்தின் மூலம் நடைபெறும் இந்தப் பரிமாற்றம் இணைய வர்த்தகத்துக்கு ஏற்ப ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்குச் செல்வதாக மாற்றி அமைக்கப்பட்டால் இணையத்திலேயே எல்லாம் முடிந்துவிடும். நம் கண்முன்னால் சுற்றிசுழலும் பணம் கண்ணுக்குத் தெரியாத அதேநேரம் பாதுகாக்கப்பட்ட இணையவழி பணபரிமாற்று அமைப்புகள் மூலம் நடைபெறுவதாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது நமது கைகளில் பணம் வந்து செல்ல வேண்டிய தேவை இன்றிப் போகிறது. அது அச்சடிக்கப்பட்ட பணத்தின் தேவையைக் குறைக்கிறது, காலப்போக்கில் இல்லாமல் ஆக்கும் வேலையையும் செய்கிறது. மின்னணு நாணய உருவாக்கத்துக்கான (Digital currency) தேவையை உருவாக்குகிறது.
பணப்பரிமாற்று வங்கி (Payment Bank):
தற்போதைய நேரடியாக காகிதப் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் பரிமாற்ற முறை இணைய உலகில் சாத்தியமில்லை. தற்போது நாம் வைத்திருக்கும் பல்வேறு வங்கிக் கணக்குகளை அதில் இணைப்பது எளிதானதும் அல்லது பாதுகாப்பானதும் அல்ல. அதோடு ஒவ்வொருமுறை நாம் பொருளை வாங்க நமது அட்டை எண்ணை விற்பனையாளரிடம் கொடுத்து, விற்பனையாளரின் கணக்கு எண்ணில் இருந்து பாதுகாப்பான வலைப்பின்னல்கள் வழியாக வங்கிக்குச் சென்று, வங்கியால் உறுதிப்படுத்தப்பட்டு பின் அந்த பரிவர்த்தனை முடிவடைய ஆகும் காலம் அதிகம். இம்முறையில் நாடு முழுவதும் ஒரு நொடிக்கு கோடிக்கணக்கான பரிவர்த்தனை செய்யும் சாத்தியமில்லை. பதிலாக நாம் செலவழிக்க கையில் உள்ள பணத்தை இம்மாதிரியான செயல்பாடுகளுக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தி பாதுகாப்பான வலைப்பின்னல் வழியாக பரிமாற்றம் செய்யும்போது சிக்கல் குறைவு, வேகம் அதிகம். இம்மாதியான செயல்பாடுகளுக்கென இயங்கும் வங்கிகள் பணப்பரிமாற்று வங்கிகள் எனப்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகள் மற்ற வங்கிகளைப் போன்றதே. ஆனால், இந்த வங்கிகள் கடன் கொடுக்க அனுமதி இல்லை. இதில் நாம் வைத்திருக்கும் பணத்தின் அளவும் (1 லட்சம்) கட்டுப்படுத்தப்பட்டது. இந்த வங்கிக் கணக்கைக் கொண்டு பொருளை வாங்கலாம், நபர்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதனை தற்போது நாம் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொண்டு பணத்தை இதற்கு மாற்றிக் கொண்டு செலவு செய்து கொள்ளலாம்.
பணப்பரிமாற்று வலைப்பின்னல்கள் (Payment Network Operators):
தற்போது நாம் தகவல்களை இணையத்தில் பரிமாறிக் கொள்ளும்போது அது இணைய வலைப்பின்னல்கள் வழியாக மறுமுனையைச் சென்றடைகிறது. இதே வழியில் பணப்பரிமாற்றத்தையும் செய்யும்போது இந்த வலைபின்னலில் ஊடுருவி பணத்தை எடுத்துச் செல்லும் ஊடுருவல்காரர்கள்(Hackers) இருக்கிறார்கள். இதைத் தடுக்க மிக பாதுகாப்பான தனித்த தொழில்நுட்பம் மற்றும் பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கும் உரிமையாளர்கள் (VISA, Master card) இந்த சேவையை வழங்குகிறார்கள். பணப்பரிமாற்றம் தவிர வங்கிகள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் செய்ய இதற்கு அனுமதி இல்லை. நாம் இந்த சேவையை பயன்படுத்த, பரிமாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு பணத்தைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனாலேயே சிறு வணிகர்கள் கடன் அட்டை அல்லாது பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கினால் விலையைக் குறைத்துக் கொள்வதாகக் கூறுவார்கள். விநாடிக்குப் பல கோடிக்கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனையில் இந்தப் பணப்பரிமாற்று வங்கிகளும், வலைப்பின்னல் நிறுவனங்களும் தவிர்க்க முடியாதவை ஆகி இந்த புதிய வர்த்தகத்தில் பெரும் பொருள் ஈட்டுகின்றன.
சாரமாக, வரலாற்று ரீதியாகப் பொருளாதாரத்தில் பிரிக்க முடியாத அங்கம் வகித்த கடை உரிமையாளர்களும், வணிகர்களும் இங்கே படிப்படியாக காணாமல் போகிறார்கள். நம் கைகளில், நமது கட்டுப்பாட்டில் இருக்கும் பணம் நம்மை அறியாமல் நமது கட்டுப்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு, எப்போதும் வங்கிகளின் கட்டுப்பாட்டில், வங்கிகளுக்குள் சுற்றிச்சுழலும் வெறும் எண்களாக மாறுகிறது. இதுவரையில் நடைமுறையில் இருந்த வணிக சமன்பாடும் செல்வப் பகிர்வும் மாற்றி அமைக்கப்பட்டு பொருளாதாரம் புதிய பரிமாணத்தை அடைகிறது. ஒரு குறிப்பிட்ட சிலரிடத்தில் மட்டும் அதிக செல்வம் சேர வழி செய்கிறது.
கருத்தாக்க வடிவில் மேலே சொல்லப்பட்ட இந்த முறை நடைமுறையில் எப்படி இயங்குகிறது?
வளரும்…
மேலும் படிக்க
1.The Foundations of ourDigital Economy. 2. https://www.dhpa.nl/wp-content/uploads/2017/04/FoundationsDigitalEconomy.pdf 3. TOOLKITFOR MEASURINGTHE DIGITALECONOMY 4. https://www.oecd.org/g20/summits/buenos-aires/G20-Toolkit-for-measuring-digital-economy.pdf 5. Big Data: How it is Generated and its Importance 6. http://www.iosrjournals.org/iosr-jce/papers/conf.15013/Volume%202/1.%2001-05.pdf