மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 2

இணைய வர்த்தகம் எப்படி நடக்கிறது?

இணைய வர்த்தகம் நடைமுறையில் எப்படி இயங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட வடிவில் அடக்குவது கடினம். ஏனெனில் அது இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து முதிர்ச்சி அடைந்த வடிவத்தை எட்டவில்லை. வளர்ந்துவரும் ஒரு கட்டமைப்பு. ஆதலால் இதில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள் வழி இது என்னென்ன வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயலலாம். அதன் அடிப்படையில் இது இந்தியாவில் எந்தவிதமாகச் செயல்படும் என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

அலிபாபா:

இது மூன்று இணையத்தளங்களைக் கொண்டிருக்கிறது. சீன உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் இணைக்க ஒன்று, மற்ற நாட்டு உற்பத்தியாளர்களையும் சீன நாட்டின் உற்பத்தியாளர்களையும் இணைக்க மற்றொன்று. மூன்றாவது, வசதி படைத்தோர் வாங்கும் பொருட்களுக்கானது. முதல் இரண்டிலும் உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்த கட்டணமில்லை. மூன்றாவதற்கு உண்டு. உற்பத்தியாளர்கள் இங்கே தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தனிக்கட்டணம் உண்டு. உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் வாடகை கொடுத்து கடையைத் திறக்க ஆகும் செலவு இல்லை. அதனால் பொருளின் விலையைக் குறைத்து வாடிக்கையாளரை ஈர்த்து, விற்பனையை அதிகரிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். வாடிக்கையாளர் தனக்கு அருகில் இருக்கும் கடைகளில் உள்ள பொருட்களை மட்டுமே வாங்கி நுகர முடியும் என்ற எல்லையைக் கடந்து தனக்குத் தேவையான பிடித்தமான பொருளை நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து பெரும் வாய்ப்பைப் பெறுகிறார்.

அலிபாபா உற்பத்தியாளரிடம் இருந்து பொருளை வாங்கிவைத்து விற்பனை செய்வதில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை. வாடிக்கையாளர், தனது அலிபே மூலமாகப் பணத்தை உற்பத்தியாளருக்கு அனுப்பினால் பொருளை உற்பத்தியாளர் வாடிக்கையாளருக்கு அனுப்பி விடுவார். பணம் இந்த நிறுவனம் வழியே பரிமாற்றப்படுவதால் பணத்துக்கான நம்பகத்தன்மையை வாடிக்கையாளருக்கு இந்த நிறுவனம் உறுதி செய்து கொடுக்கிறது. அந்தப் பரிமாற்றத்தைத் தனது பரிமாற்று வங்கியின் மூலம் நிகழ்த்துவதால் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு கட்டணம் அதற்குக் கிடைக்கிறது. இங்கே அலிபாபா மெய்நிகர் கடையின் உரிமையாளர், பொருள் விற்பனைக்கு உதவும் தரகர், பரிவர்த்தனை மேற்கொள்ளும் வங்கியாளர் ஆகிய மூன்று பாத்திரங்களை ஏற்கிறது. உற்பத்தியாளரே விற்பனையாளர். கடை உரிமையாளர் இங்கே விலக்கப்படுவதால் கிடைக்கும் பலனை அலிபாபா, விற்பனையாளர், வாடிக்கையாளர் ஆகிய மூவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அமேசான்:

அலிபாபாவில் இருந்து வேறுபடும் இடம், இது உற்பத்தியாளரிடம் இருந்து பொருளை வாங்கி தனது கிட்டங்கியில் (Godown) வைத்து விற்பனை செய்யும் மொத்த வணிகராகவும் (Wholesale) இருப்பது. அதேநேரம் தற்போது நடைமுறையில் இருக்கும் கடை உரிமையாளர், விற்பனையாளர் ஆகியோரை இந்தப் பரிவர்த்தனையில் இருந்து விலக்கி விற்பனையாளர் பாத்திரத்தையும் தானே ஏற்று அதன் மொத்த பலனையும் பெறுகிறது. மொத்தமாக வாங்கும்போது இதன் பேரவலிமை அதிகம். உற்பத்தியாளர் தனது பொருளின் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் படுகிறார். இதனால், மற்றவர்களை விட சந்தையில் இவர்களால் குறைந்த விலையில் பொருளை விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடிகிறது. அமேசான் பே அல்லது கடன் அட்டையை பயன்படுத்தி பொருளை வாங்க முடியும்.

வால்மார்ட்:

இது முதலில் அமெரிக்காவின் இரண்டாம்கட்ட நகரங்களில் கடையைத் திறந்து பின்பு அமெரிக்கா முழுவதும் கடைகளை நிறுவி குறைந்த விலையில் பொருளை விற்று மாபெரும் சங்கிலித்தொடர் கடைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்து மொத்த விற்பனை சந்தையில் (Wholesale Market) முதல் இடத்தில் இருக்கிறது. குறைந்த கூலிக்கு மிகக் குறைந்த ஆட்களை கொண்டு கடையை நடத்தியும், மொத்தமாக பொருளை வாங்குவதால் உற்பத்தியாளர்களிடம் அடிமாட்டு விலைக்குப் பொருளைக் கொடுக்க சொல்லி வற்புறுத்தியும் சந்தையில் மற்றவர்களை விட மிக குறைந்த விலைக்கு பொருளை விற்று அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இந்நிறுவனத்தின் வியாபார உத்தி உலகம் அறிந்தது. இதனுடைய விற்பனை வெற்றியின் சிறப்பம்சம் பொருட்கள் அனைத்தும் எந்திரங்களின் மொழியில் உதாரணமாக QRcode அடையாளப்படுத்தப்பட்டு அவற்றினால் பொருள் இருப்பு, விற்பனை, தேவை ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. இதனடிப்படையில் உற்பத்தியாளருக்கு உடனடியாக செய்தி அனுப்பி அவர் பொருளைக் கொண்டு வந்து நிரப்பி விடுவார். இணையத்திலும், நேரடியாக இதன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கலாம். வால்மார்ட்பேயும் அமேசான்பே போன்றே இயங்குகிறது.

7-லெவன் (7-Eleven):

இது சங்கிலித்தொடர் சில்லறை விற்பனைக் கடை. இணைய வர்த்தகத்தில் வராது என்றாலும் இந்திய சூழலை கணக்கில்கொண்டு இதனையும் தெரிந்து கொள்வது அவசியம். அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்ட ஜப்பானிய நிறுவனமான இது 24 மணிநேரமும் இயங்கும் சங்கிலித்தொடர் பெட்டிக்கடைகளை நடத்துகிறது. தினசரி நாம் பயன்படுத்தும் கொத்தமல்லி முதல் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், மது வகைகள், புகையிலை பொருட்கள், உப்பு, சர்க்கரை வரை அனைத்து பொருட்களையும் விற்கிறது. உற்பத்தியாளர்களிடம் மொத்தமாகப் பெற்று தனது சங்கிலித்தொடர் கடைகளுக்கு விநியோகிக்கிறது. நகரின் ஏதாவது ஒரு தெருவில் கடை திறக்க விரும்பும் ஒருவர் இந்த சங்கிலித்தொடர் நிறுவனத்துடன் முகவராக ஒப்பந்தம் செய்து கொண்டு கடையைத் திறக்கலாம்.

நிறுவனமே கடைக்கான உள்கட்டமைப்பு பொருட்கள், இடுபொருட்களைக் கொடுத்து கடையை அமைத்துக் கொடுத்து, கடைக்குத் தேவையான தினசரி சரக்குகளையும் கொண்டு வந்து கொடுத்துவிடும். முகவரும், நிறுவனமும் இணைந்து முதலீடு செய்ய வேண்டும். முகவர் தேவையான பொருட்களை தினமும் இணையத்தில் அனுப்பாணை (Order) அனுப்பினால் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட வண்டியில் வந்து சரக்கைக் கொடுத்து விட்டு போய்விடுவார்கள். வாங்கும் பொருளை, முகவர் ஆட்களை வைத்து விற்பனை செய்தால் போதும். முகவரின் முதலீட்டு அளவைப் பொறுத்தும், விற்பனையின் அளவைப் பொறுத்தும் முகவருக்கு லாபம் பிரித்துக் கொடுக்கப்படும். இந்த சங்கிலித்தொடர் கடைகள் உலகின் பலபகுதிகளிலும் இயங்குகின்றன. நாடுகளைப் பொறுத்து கடன் அட்டை மூலமும், முன்பண மதிப்புக் கூட்டப்பட்ட அட்டைகள் (Prepaid Cashcards) மூலமும், பணத்தைக் கொடுத்தும் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். இது மையப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தியையும், விற்பனையையும் அடிப்படையாகக் கொண்ட வியாபார உத்தி. இதில் பெட்டிக்கடை உரிமையாளர்கள் வெறும் வாங்கி விற்கும் முகவர்களாக மாற்றப்படுகிறார்கள். சிறு குறு உற்பத்தியாளர்கள் இதில் பங்கெடுக்கும் வாய்ப்பு குறைவு.

போட்டியைத் தவிர்த்த அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஜனநாயகம்:

அடிப்படை தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் அமேசான், அலிபாபா இரண்டும் ஒன்றாக இருந்தாலும் அவை வர்த்தகத்தில் ஆற்றும் பாத்திரம் வேறாக இருக்கிறது. இந்த வேறுபாடுகளை அமெரிக்க, சீன நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னணியில் வைத்து பார்த்தே புரிந்துகொள்ள முடியும். புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பொருள் உற்பத்தி பெருக்கத்தையும், புதிய பொருட்களின் பெருக்கத்தையும் கண்ட அமெரிக்க நிறுவனங்கள் செலவைக் குறைத்து லாபத்தை பெருக்க உற்பத்தியை ஆசியாவுக்கு மாற்றின. அது உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்களிப்பையும் அவர்களின் வருவாயையும் குறைத்து வாங்கும் ஆற்றலற்றவர்களாக மாற்றி சந்தையின் அளவை சுருக்கியது. பெருகிய பொருட்களுக்கான சந்தைக்கு மற்ற நாடுகளின் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதாகவும் சுருங்கிய சந்தைக்கு கடன் பொருளாதாரத்தையும் தீர்வாகக் கண்டன. உலகம் முழுக்க விரிந்து பரவிய இந்நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் உற்பத்தியை ஓரிடத்தில் இருந்து கட்டுப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் இணைய தகவல்தொடர்பு தொழில்நுட்பம் தோன்றியது.

உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி பொருள் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கியது என்றால் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சந்தைப்படுத்துதலிலும் அதனை கட்டுப்படுத்துவதிலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது எனலாம். இந்த விற்பனை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் அது ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பதும் போட்டியாளர்களை சந்தையில் இருந்து வெளியேற்றி சில நிறுவனங்களுக்கான முற்றுரிமையை (Monopoly) வழங்கியது. இது போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமெரிக்க ஜனநாயகத்தை போட்டியைத் தவிர்க்க உதவும் ஏகாதிபத்திய ஜனநாயகமாக்கியது. இந்தப் போட்டியற்ற சூழல் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக விலையைக் கூட்டி விற்பனையை மேலும் அதிகரித்து லாபத்தை பெருக்குவதை நோக்கி நகர்த்தியது. இது தவிர்க்க இயலாமல் சமூக செல்வத்தைப் பெருக்குவதற்குப் பதிலாக மேலும் மேலும் குறுக்கி ஒரு குறிப்பிட்ட சிலரிடம் கொண்டு போய் குவித்தது. இந்த குறுக்கத்துக்கு விடையாக இப்போது விற்பனையாளரையும், கடை உரிமையாளரையும் இந்தப் பொருளாதாரத்தில் இருந்தே விலக்கி அவர்களுக்குச் செல்லும் பங்கையும் தனதாக்கிக் கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறது.

உப்பு, புளி, கொத்தமல்லி விற்பனைக்கு இறங்கிய பெருநிறுவனங்கள்: இந்த செல்வக்குவிப்பும் சந்தை குறுக்கமும் நிறுவனங்களை விலைமதிப்புமிக்க பொருட்களை விற்பனை செய்து வந்ததில் இருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, மருத்துவம் முதல் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் வரை விற்பனை செய்யும் நிலையை நோக்கி நகர்த்தி இருக்கிறது. இதுவரையிலும் பெரும்திரளான மக்கள் (Masses) பங்கேற்று வந்த இந்த பொருளாதாரத்தில் பெருநிறுவனங்கள் பங்கேற்று லாபமடையும் வாய்ப்பின்றி இருந்தது. இப்போது உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விற்பனை ஆகிய அனைத்தும் இணையம் என்ற ஒற்றை புள்ளியில் குவிக்கப்பட்டுவரும் நிலையில் இணைய தரவுகளின் திரட்சியை உருவாக்குகிறது. அந்த திரட்சி ஒரு சில நிறுவனங்களிடம் குவிக்கப்படும்போது ஒரு நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் உற்பத்தி, தேவை, அளிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு கண்டறியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எரிபொருள் கட்டமைப்பில் இருந்து இணைய கட்டமைப்புக்கு: இந்த விற்பனை சார்ந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க இயலாமல் உற்பத்தியின் அடிநாதமான எரிபொருளை (பெட்ரோல், டீசல்) அடிப்படையாகக்கொண்ட உலக பொருளாதாரக் கட்டமைப்பில் இருந்து மின்னணு பொருளாதாரத்தின் சுவாசமான இணையத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கி நகர்த்துகிறது. கூடவே இதுவரையிலும் திரவ எரிபொருள் சார்ந்த போக்குவரத்தில் இருந்து மாறாமல் இந்த உற்பத்தி துறையைப் பிடித்து வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்களின் பிடியிலிருந்து அதை விடுவித்து மின் ஆற்றலில் (Electric) நவீன மின்னணு தொழில்நுட்பத்தைக் கொண்டு தானியங்கி (Autonomous) முறையில் இயங்கும் ஊர்திகளை (Vehicles) உருவாக்கும் புதிய துறையை உருவாக்கி இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர் என்றும் ஒரு பொருளாதார சுழற்சியை உருவாக்கும் வல்லமை கொண்டது எனவும் இதனை கணிக்கிறார்கள்.

பெட்ரோ டாலரில் இருந்து மின்னணு பணம்: பொருளாதாரத்தை எரிபொருள் சார்ந்த கட்டமைப்பில் இருந்து இணையம் சார்ந்த கட்டமைப்புக்கு மாற்றும்போது எரிபொருள் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு உலக பணமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பெட்ரோ டாலருக்குப் பதிலாக இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மின்னணு பண (Digital Currency) உருவாக்கத்தை நோக்கி பொருளாதாரம் நகர்கிறது. இது பழைய கட்டமைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் இணையத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்குமான மோதலாக அமெரிக்காவில் மாற்றம் அடைகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் இந்த மாற்றத்தை எதிர்க்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு இந்தப் பொருளாதார மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை இனவெறியூட்டி டிரம்ப்பை ஆட்சியில் அமர்த்தியது. எக்ஸ்சான் நிறுவன அதிபர் அமெரிக்க வெளியுறவு செயலர் பதவியில் நேரடியாக வந்தமர்ந்தார். அதன்பிறகு எண்ணெய் நிறுவனக் கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட முன்னாள் சிஐஏ தலைவர் இந்தப் பதவியில் வந்தமர்ந்து இவர்களுக்கான அரசியலை மேற்கொண்டார்.

எண்ணெய் அரசியலை வீழ்த்திய இணைய அரசியல்: எண்ணெய் நிறுவனங்களின் நலனை முன்னிறுத்தி இணைய நிறுவனங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாகப் பழைய கட்டமைப்பை முன்னிலைப்படுத்திய இவர்களின் அரசியலை, இணைய தரப்பு மட்டுமல்ல; இந்தியா தவிர்த்த மற்ற உலக நாடுகள், அமெரிக்காவின் சந்தை பலவீனத்தையும் சீனாவின் சந்தை மற்றும் தொழில்நுட்ப பலத்தையும் கணக்கிட்டு நிராகரித்து விட்டன. இறுதியில் பழைய பனிப்போர் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட முன்னெடுப்பு, உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டுவரும் டிரம்ப்பின் முயற்சி ஆகியவை முறியடிக்கப்பட்டு அவர் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மரபுசாரா ஆற்றலைப் பயன்படுத்தும் கொள்கையை முன்னிறுத்தும் பைடன் அரியணையில் அமர்த்தப்பட உள்ளார். இதுவரையிலும் குறைவான விலையில் இருந்த மின்னாற்றலில் இயங்கும் ஊர்திகளைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு ஒரே மாதத்தில் விண்ணை முட்டி அந்நிறுவன அதிபர் மஸ்க் உலகின் முதல் 10 பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறி இருப்பது தற்செயலானது அல்ல.

இந்த நவீன விற்பனை தொழில்நுட்ப வளர்ச்சி சந்தை சுருக்கத்தின் விளைவு என்றால் இதே தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாளராக வளர்ந்து நிற்கும் சீனாவின் சந்தை மட்டும் எப்படி விரிவடைந்தது?

இந்தத் தொழில்நுட்பத்தைக் கைகொண்டிருக்கும் அமெரிக்க – சீன நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி இந்தியாவில் எப்படி எதிரொலித்தது?

வளரும் …

தொடரின் முந்திய பகுதி

  1. மின்னணு பொருளாதாரம் 1

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s