கேள்விக்கென்ன பதில்?

செய்தி:

ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார்.

“ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய சங்கத் தலைவர்கள் நான் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். உண்மை என்னவெனில்… அமைதியான முறையில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டம், டிராக்டர் அணிவகுப்பு ஆகியவை அரசுடைய சதித்திட்டத்துக்கு பலியாக்கப்பட்டுவிட்டது. செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டுள்ளவர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் அறிமுகமானவர்.அவர்தான் , செங்கோட்டையில் கொடியை ஏற்றி வன்முறையைத் தூண்டியவர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களைக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளின் வரலாற்று அணிவகுப்பாக இது அமைந்திருந்தது. , 99.9% விவசாயிகள் அமைதியாக இருந்தனர்” என்று ராஜேவால் கூறினார்,

இதற்கிடையில் டெல்லி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், “தேசிய நினைவுச் சின்னமான செங்கோட்டைக்குள் அவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி நுழைந்தார்கள்? யார் அவர்களை உள்ளே அனுமதித்தனர், யார் வாயிலைத் திறந்தார்கள்? செங்கோட்டை காவல்துறையினரால் மட்டுமல்ல, ஆயுதப்படைகளாலும் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”என்று கேள்விகளை எழுப்பினார்.

“எங்கள் போராட்டத்தால் அரசாங்கம் மிகவும் கவலையாக இருந்தது என்பது மிகவும் தெளிவாக உள்ளது, இது பல மாதங்களாக அமைதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பஞ்சாப் தொழிற்சங்கம், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மற்றும் முன்னர் பாஜகவுடன் தொடர்பு கொண்டிருந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து ஆகியோருடன் போலீஸ் நடத்திய சதித்திட்டத்தில்தான் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்புகளின் போது செயற்கையாக வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி செய்வதை ரத்து செய்துள்ளோம். அமைதியான முறையில் எங்கள் போராட்டம் தொடரும்”என்று விவசாய சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

செய்தியின் பின்னே:

விவசாயிகள் பேரணியில் கலவரம். 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயம். இவர்கள் விவசாயிகளா வன்முறையாளர்களா? தேசியக் கொடியை இறக்கியது எந்த விதத்தில் சரி? என்றெல்லாம் விவாதித்த ஊடகப் புலிகள் யாராவது இந்தக் கேள்விகளை விவாதிப்பார்களா? பிரதமரோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரத்தில் இருக்கும் எவருமோ இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள். எனவே, பிற கட்சிகளைப் போல் பாஜகவும் ஒரு கட்சி என நினைத்து அதற்கு ஆதரவான மனநிலையில் இருக்கும் ஒருவெரேனும் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூற முன்வருவார்களா?

காவலரைத் தாக்கும் அடியாள்.
  1. தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பாஜக தலைவர்களுக்கும் நெருக்கமானவர் என்பது குறித்து உங்கள் விளக்கம் என்ன?
  2. செங்கோட்டையில் முற்றுகையிட்டவர்களும் உள்ளே நுழைந்தவர்களும் கொடியேற்றியவர்களும் ஒட்டுமொத்த டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டவர்களில் எத்தனை சதவீதத்தினர்? மொத்த பேரணியும் செங்கோட்டை செல்லாமல் திட்டமிட்ட பாதையில் செல்லும் போது, குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ஏன் செங்கோட்டை முற்றுகைக்கு சென்றார்கள்?
  3. காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் பாதுகாப்பளிக்கும் தேசியச் சின்னமான செங்கோட்டையில் போராட்டக் காரர்கள் என்ற பெயரில் வந்தவர்கள் எளிதாக உள்ளே நுழைந்தது எப்படி? செங்கோட்டை முற்றுகையை, கொடியேற்றலை முறியடிக்க சிறப்பு ஆயுதப் படையும், காவல் துறையும் செய்த முயற்சிகள் என்ன? (டிராக்டர் பேரணி தில்லிக்குள் நுழையாமல் இருக்க காவல் துறை செய்திருந்த முன்னேற்பாடுகளுடன் ஒப்பிட்டு இந்தக் கேள்வியைப் பாருங்கள்) ஏன் அது குறித்த காணொளியோ, புகைப்படங்களோ வெளியாகவில்லை?
  4. வன்முறையாளர்கள், குழப்பம் விளைவித்தவர்கள் என்று பலரை விவசாயிகள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் காவல் துறை, விவசாயிகள் அடையாளம் காட்டியவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்திருக்கிறது? குறிப்பாக நடிகர் தீப் சித்து மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் என்ன?
  5. தங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் இல்லை என டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார், ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனரே. விவசாயிகள் நடத்திய பேரணியில் விவசாயிகள் அல்லாத அடியாட்கள் யார்? இது குறித்து விளக்கம் சொல்லும் கடமையும் பொறுப்பும் யாருக்கு இருக்கிறது?
  6. விவசாயிகள் கூட்டமைப்பில் பதிவு செய்யாத இரண்டு சங்கங்கள் நாங்கள் போராட்டத்திலிருந்து விலகுகிறோம் என்று அறிவித்த உடன் அனைத்து ஊடகங்களும் போராட்டம் கைவிடப்படுவதாக ஓலமிட்டனவே எப்படி?

அதாகப்பட்டது, “ஊதுற சங்க ஊதிட்டோம், காதும் வாயும் இருக்குறவன் பதில சொல்லு” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s