மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3

போட்டியை ஊக்குவித்து எழுச்சி பெற்ற சீனா!

அமெரிக்காவில் தோன்றிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருட்களை சந்தைபடுத்துவதிலும் விற்பனையிலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்ட நிறுவனங்களை சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி முற்றுரிமை (Monopoly) கொண்ட பெருவணிக நிறுவனங்களாக (Wholesale) மாற்றியது. அது பொருட்களின் உற்பத்தி பெருக்கத்துக்கான முனைப்பைக் குறைத்து பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து சந்தை சுருக்கத்துக்கு காரணமானதையும் அந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நிறுவனங்கள் கார் முதல் காய்கறிகள் வரையான பொருட்களை விற்கும் நிலைக்கு வந்திருப்பதையும் நேற்றைய தேடல் காட்டியது.

போட்டியை ஊக்குவித்த சீனாவின் முதலாளித்துவ அரசியல் சர்வாதிகாரம் 80களில் அமெரிக்க நிறுவனங்களின் தேவைக்குப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துகொண்டே சீனா தனது தேசிய முதலாளித்துவத்தைக் கட்டமைக்கும் வேலைகளில் இறங்கியது. இந்தியாவைப்போல தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தும் பயனாளராக (User) இல்லாமல் ஜப்பானைப்போல அந்த தொழில்நுட்பங்களைத் தன்வயப்படுத்தி வளர்த்தெடுத்து புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கி தொழில்மயமான நாடாக மாறியது. தகவல் தொழில்நுட்ப துறையிலும், மென்பொருட்களை உருவாக்கி அமெரிக்க நிறுவனங்களின் பன்னாட்டு சந்தைப் பரவலாக்கத்துக்கு சேவை செய்யும் இந்தியாவின் பாதையில் இருந்து மாறுபட்டு, தொழில்நுட்பத்திலும் தகவல் தொழில்நுட்ப பொருட்களின் உற்பத்தியிலும் அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியை அடைந்து ஒரு போட்டியாளனாக வளர்ந்து நிற்கிறது.

உற்பத்தி மதிப்பும் சமூக மாற்றமும்: இந்தத் தகவல் தொழில்நுட்ப உருவாக்கத்தில் அமெரிக்காவின் வழியை சீனா பின்பற்றினாலும் அதைப் பயன்படுத்துவதில் சீனா மாறுபடுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தியை சீனாவுக்கு மாற்றும்போது விலைமதிப்புமிக்க பொருட்களை மலிவான தொழிலாளர்களைக்கொண்டு உற்பத்தி செய்து அதிக விலையில் வாங்கும் திறனுடைய அமெரிக்கத் தொழிலாளர்களிடம் விற்கும்போது பொருள் உற்பத்தி மதிப்பில் (Values) ஏற்படும் மாற்றத்தை அறிந்தே சீனா அனுமதித்து இருக்கும் என்கிறார்கள். மதிப்பில் மட்டுமல்ல; அதன் சமூக தாகத்தையும் சந்தையில் ஏற்படுத்தப்போகும் விளைவுகளையும் சேர்த்தே அவர்கள் அனுமானித்து இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதன் பிறகான சமூக பொருளாதார மாற்றங்களின் வழி இந்த அனுமானத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வந்திருப்பதாகவே தோன்றுகிறது.

சந்தை சுருக்கத்தைத் தவிர்த்த சீனா: அமெரிக்காவை போன்றே உற்பத்தி தொழில்நுட்பத்தையும் சந்தைபடுத்துதல் மற்றும் விற்பனைக்கான தகவல் தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுத்தாலும் அவற்றை வாங்கி நுகரும் சீன மக்களின் வாங்கும்திறன் அமெரிக்க மக்களுடன் ஒப்பிடத்தக்கதாகவோ மற்ற நாடுகளின் சந்தைகளை சீன நிறுவனங்கள் பிடிக்கும் அளவுக்கான சீன பொருளாதார அரசியல் சூழலோ இல்லை. அதற்காக தொழில்நுட்பத்தை வேண்டாமென்று மறுப்பதோ, பொருளாதாரத்தில் இருந்து விலக்குவதோ சீனாவை பின்தங்க வைக்கும். அமெரிக்காவைப் போல இந்த தொழில்நுட்பங்களைக் கைகொண்டிருக்கும் நிறுவனங்களை சந்தையில் சுதந்திரமாக அனுமதிக்கும்போது சீனாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சி முழுமை அடையாமல் குறைபிரசவத்தில் பிறந்த நோய்த்தொற்று ஏற்பட்ட நோயாளியாகவே இருக்கும். இதற்கான விடையாக இதே சந்தை தொழில்நுட்பத்தை உற்பத்தியைப் பெருக்கும் கருவியாகவும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் உந்து சக்தியாகவும் சீனா மாற்றியது.

சீனாவின் மாற்று: புதிய தகவல் தொழில்நுட்பத்தில் உருவான இணையதளங்களில் உற்பத்தியாளர்கள் சந்தைபடுத்தவும், வாடிக்கையாளர்கள் பொருளை வாங்க விரும்பும்பட்சத்தில் இணையதள உரிமையாளர்கள் சிறிதளவு கட்டணம் பெற்றுக்கொண்டு அந்த பரிவர்த்தனையை முடித்துக்கொடுக்கும் தரகனாகவும் மாற்றியது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் கடை வாடகையையும் சந்தைபடுத்த ஆகும் செலவையும் மிச்சபடுத்துவதால் வாடிக்கையாளருக்கு மலிவான விலையில் பொருளை விற்க முடிகிறது. வாங்கும் ஆற்றல் குறைவாக உள்ள பெரும்பகுதி மக்களுக்கு நுகரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இணையதள உரிமையாளரை, பொருளை விற்க அனுமதிக்கும்பட்சத்தில் அவர் உற்பத்தியாளரிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிகரித்த சந்தை தேவையைப் பயன்படுத்தி அதிக விலையில் விற்க முயற்சி செய்வார். அது விற்பனையைக் குறைத்து உற்பத்தி பெருக்கத்தைத் தடுத்து நுகர்வைக் குறைக்கும்.

அதேநேரம் விற்பனையாளராக இருக்கும் உற்பத்தியாளர்கள் சந்தையை கட்டுப்படுத்தும் வாய்ப்பும் இன்றி போகிறது. அது போட்டிபோட்டுக் கொண்டு விலையைக் குறைக்க செய்கிறது. விலையை மேலும் குறைக்க வேண்டுமானால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அது புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து குறைந்து செலவில் அதிக உற்பத்தியை செய்ய வழிவகுக்கிறது. பெரும் செல்வ பெருக்கத்துக்கு வித்திடுகிறது. அமெரிக்க முறையை போலவே இந்த முறையில் கடை உரிமையாளர், வணிகர் ஆகிய இருவரும் பலி கொடுக்கப்பட்டாலும், தொழில்நுட்ப தரகன் அல்லது சேவை என்ற புதிய பாத்திரம் உருவாக்கப்பட்டு பெருவணிகன் உருவாவது கவனமாக தவிர்க்கப்பட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.

அதிகார குவிப்புக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பம்: இந்த முறையில் இருக்கும் பிரச்சினை, இணையம் இன்றியமையாத பாத்திரம் வகித்து பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் வாய்ப்பை மட்டுமல்ல, வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் முதல் பொதுவான சமூக அரசியல் பார்வைகள்வரை தெரிந்துகொண்டு அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் தந்து ஜனநாயக மறுப்புக்கும் சர்வாதிகார இருப்புக்கும் வழி செய்வது. ஆரம்பம் முதலே இதன் ஆற்றலைப் புரிந்துகொண்ட சீனா, அமெரிக்க தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களை வெளியேற்றி சொந்த இணைய வலைப்பின்னல்கள் முதல் தேடுபொறி (Google), சமூக வலைதளங்கள் என அனைத்தையும் சுயமாக உருவாக்கிக் கொண்டது. இந்தத் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைத் தவிர்த்து தனது இருப்பையும் இறையாண்மையையும் பாதுகாத்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த நாட்டின் சொத்தாக மாற்றியது. இந்த மூலதன பங்கேற்புக்கான ஜனநாயக மறுப்பின் காரணமாகவே மேற்கத்திய ஊடகங்கள் சர்வாதிகார கூச்சல் போட்டு வருகின்றன. இதில் மக்கள் மீதான அக்கறை என்று எண்ணத்தக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அமெரிக்க – சீன சமச்சீரற்ற உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி நிலை: ஆக ஒரு நாட்டின் சுயசார்பு இந்தத் தொழில்நுட்பத்தில் அடையும் சுயசார்புடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது. இதைச் சரியாக உணர்ந்துகொண்ட சீனா உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பங்களில் மட்டுமல்ல சந்தை சார்ந்த மின்னணு பொருளாதாரத்தின் அனைத்து தொழில்நுட்பத்திலும் சுயசார்பை எட்டியது. போட்டியைத் தவிர்த்த லாபத்தை முன்னிலைப்படுத்திய அமெரிக்க நிறுவனங்கள் திறன்பேசி உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் பின்தங்கின. போட்டியால் உந்தப்பட்ட சீன நிறுவனங்கள் இணைய வன்பொருட்களின் உற்பத்தியில் பாய்ச்சலை நிகழ்த்தின. உற்பத்தியைப் பெருக்கி 4ஜி சாதனங்கள், திறன்பேசிகள் உள்ளிட்ட சாதனங்களின் விலையைக் குறைத்து இந்தப் பொருட்களின் பரவலாக்கத்துக்கும் பரந்துபட்ட மக்களின் பயன்பாட்டுக்கும் வழிவகுத்தன. இதன் வளர்ச்சிப்போக்கில் செயற்கை நுண்ணறிவு (AI), Cloud Computing உள்ளிட்ட துறைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாகவும் 5ஜி உள்ளிட்ட சாதனங்களில் அவற்றை விஞ்சியதாகவும் இருந்தது. விற்பனை தொழில்நுட்பத்தில் வளர்ச்சியும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் பின்னடைவும் கண்ட அமெரிக்கா இந்த இரண்டிலும் முன்னேற்றம் கண்ட சீனாவுடன் சமச்சீரற்ற உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி நிலையை அடைந்தது.

சீனாவின் ஆதிக்க அரசியல்:

இப்படி ஏற்படுத்தப்பட்ட உற்பத்தி – விற்பனை சார்ந்த வளர்ச்சி தவிர்க்க இயலாமல் தனிநபர்களின் செல்வக்குவிப்புக்கு வழிவகுக்கிறது. அதன் பெருக்கத்துக்கு சந்தை விரிவாக்கத்தைக் கோருகிறது. இதற்கு வழி இல்லாதபோது இருக்கும் சந்தையைச் சுரண்டுவதில் இறங்கும். இந்த மூலதனத்தைக் கட்டுப்படுத்தினால் அதன் விரிவாக்கத்துக்கு அது ஒன்றுபட்ட கட்சியை உடைத்துப் பல கட்சி ஜனநாயகத்தை உருவாக்கும். சந்தையை சுரண்ட அனுமதித்தால் மக்களை மீண்டும் வறுமையில் தள்ளி அவர்களின் எழுச்சிக்கு வழிவகுத்து கட்சியைக் குப்பையில் வீசுவார்கள். இந்த இருதலைக்கொள்ளி பாம்பாக உருவெடுத்த பிரச்சினைக்குத் தீர்வாக சொந்த மக்களைக் காத்துக்கொண்டு இந்த நிறுவனங்களை மற்ற நாட்டு சந்தைக்கு அனுப்பி வைத்து அந்த நாடுகளின் மக்களை சுரண்ட கைகாட்டுகிறது.

டாலர் சார்பின் பலவீனம்:

2008இல் அமெரிக்காவில் எழுந்த பொருளாதார நெருக்கடி அதன் சந்தை பலவீனத்தையும் கட்டமைப்பு நெருக்கடியையும் காட்டுவதாக இருந்தது. இந்த நெருக்கடிக்குத் தீர்வாக தனது உலக பணமாக விளங்கும் பெட்ரோ டாலர் பலத்தைப் பயன்படுத்தியது. அதிக அளவில் பணத்தை உற்பத்தி செய்து அதனால் ஏற்படும் பணவீக்கத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அதைச் சுற்றோட்டத்துக்கு கொண்டுவரும் வகையில் எண்ணெய் விலையைச் செயற்கையாக 100 டாலருக்கும் மேலாக உயர்த்தியது. இது மற்ற நாடுகள் சேர்த்து வைத்த செல்வத்தை மறைமுகமாக கொள்ளையிடுவதோடு பொருள் உற்பத்தியின் அடிப்படையான எரிபொருளின் விலையை உயர்த்தி செல்வ உருவாக்கத்தையும் குறைக்கிறது. இதற்கு மாற்று ஏதுமற்ற சூழலில் மற்ற நாடுகள் இதை ஏற்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை. சீனாவைப் பொறுத்தவரை உற்பத்தியில் தன்னிறைவை எட்டினாலும் எரிபொருளுக்கு அது மத்திய கிழக்கு நாடுகளையும் பொருட்களின் போக்குவரத்து பலம் பொருந்திய அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடல்வழியாகவுமே நடக்கிறது. அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு சீனாவின் ராணுவம் பலம் பொருந்தியதுமில்லை. ஆதலால் சீனாவும் மற்ற நாடுகளைப்போல இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

மாற்று ஏற்பாடுகள்:

தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட சீனா தமது பலவீனங்களை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியது. சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உலகின் இரண்டாவது பெரிய எரிபொருள் உற்பத்தியாளரான ரஷ்யா அதன் ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தக்கவைக்கவும் போட்டியாளர்களைச் சமாளிக்கவும் அமெரிக்க அழுத்தத்துக்கு முகம்கொடுக்க வேண்டி வந்தது. பொதுவான எதிரியை எதிர்கொள்ள இருவரும் கரம் கோத்தனர். சீனாவின் எரிபொருள் சந்தையை ரஷ்யாவுக்குக் கொடுத்து, பதிலாக அதன் ராணுவப் பலத்தையும் தொழில்நுட்பத்தையும் சீனா பெறும் நடவடிக்கையில் இறங்கியது. இந்தப் பரிவர்த்தனையைச் சொந்த நாணயத்தில் செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டதன் வாயிலாக எரிபொருளுக்கான டாலர் சார்பை இல்லாமல் ஆக்கி ராணுவ ரீதியிலான பலவீனத்தை தற்காலிகமாக இட்டு நிரப்பும் நேரடி ஆதாயத்தைப் பெறும் அதேவேளை மறைமுகமாக அமெரிக்காவின் ஆதார பலமாக விளங்கும் அதன் உலக பண ஆதிக்கத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்துவரும் சவுதி அரேபிய நாடுகளுக்குத் தனது உலகின் பெரிய எரிபொருள் சந்தையை மறுப்பதன் மூலம் அந்த முகாமை பலவீனமாக்கும் வேலையையும் செய்தது.

சீனாவின் புவிசார் அரசியல்:

இந்த நிலவழி குழாய் வழியாகப் பெறும் எரிபொருள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்வழிக்கு மாற்றாகவும் அமைந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அது நிலவழியாக ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களை நீர்வழி மற்றும் வான்வழி பாதைகள் வழியாகவே சென்றடைய முடியும். ஆசிய – ஐரோப்பிய சந்தை நிலவழியாக வரலாற்று ரீதியாக பட்டுசாலை (Silkraod) என்றழைக்கப்படும் நிலவழியாக தொடர்பில் இருந்ததும் அதில் சீனா முக்கிய பங்காற்றியதையும் மீளுருவாக்கம் செய்யும் வேளையில் சீனா இறங்கியது. அதன் அமைவிடமும் (Geographical Location) நிலப்பகுதியைக் காக்கும் அளவுக்கு பலம் பொருந்திய அதன் பெரிய ராணுவத்தையும் அடிப்படையாகக் கொண்டு கடல்வழி வாணிபத்துக்கு பதிலாக நிலவழி வாணிபத்தை முன்னெடுக்கும் One Belt One Road திட்டத்தை அறிவித்தது. இந்த மாற்று சீனாவில் பெருகிய மூலதனத்துக்கும் உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளவுமான வாய்ப்பாகப் பார்த்தது.

போட்டி தீவிரமடைதல்:

இப்படி ஏற்படும் ஒருங்கிணைவை உடைப்பதும் சீனப் பொருட்களுக்கான சந்தையை மறுப்பதும் அமெரிக்க – சீன போட்டி அரசியலாக மாறியது. டாலரில் ஏற்படும் உடைப்பைத் தடுக்க அவ்வாறான முயற்சி செய்யும் நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள டாலர் மற்றும் பணப்பரிமாற்று அமைப்பைக் கொண்டு அவர்களின் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கும் வேலைகளை அமெரிக்கா செய்தது. அவ்வாறான நாடுகளுக்குப் பொருளாதார வர்த்தக உதவிகள் செய்வதன்மூலம் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் அரசியலை சீனா செய்தது. அதற்கான மாற்றுக் கட்டமைப்புகளை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டது. இது அமெரிக்க அணிகளுக்குள்ளும் அதன் ஆளும் வர்க்கத்துக்குள்ளும் ஒற்றுமையைக் குலைத்தது. நேட்டோ அணிகளின் உள்குழப்பங்களும், கத்தார் – சவுதி மோதலும், எண்ணெய் ஆதரவு இணைய ஆதரவு அணி என அமெரிக்க அரசியல் பிளவும் இதற்கான உதாரணங்கள்.

பலவீனமடைந்த அமெரிக்கா:

இந்தப் பிளவின் காரணமாக டிரம்ப் நிர்வாகம் சீனாவின் மீதான வர்த்தகப் போரை இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளின் ஆதரவின்றி தனியாக நடத்த வேண்டி வந்தது. தகவல் தொழில்நுட்பப் பொருட்களின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் சிப்களை சொந்தமாக தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் எட்டவில்லை. அந்த பலவீனத்தைப் பலமாகப் பயன்படுத்தி சீனாவைத் தாக்க செய்த முயற்சி செய்தது. இந்த நேரத்தில் தோன்றிய கொரோனா பெருந்தொற்றை எதிரி பலவீனமடைந்த தருணமாகக் கருதி இது சீன வைரஸ் என்று முத்திரை குத்தி அவர்களை இதற்கு காரணமாக்கி சீனாவின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி உலக அரங்கில் தனிமைப்படுத்தி பனிப்போர் காலத்திய அணி திரட்டல் முயற்சியில் ஈடுபட்டது. இந்தக் கடைகட்ட முயற்சி (Desperate) அவர்களின் அரசியல் தோல்வியின் அடையாளமாகவும் பலவீனத்தை வெளிபடுத்தும் தருணமாகவும் இருந்தது.

பலம் பெறும் சீனா:

இந்தப் பெரும்தொற்றை திட்டமிட்ட முறையில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு எதிர்கொண்ட சீனா, கொரோனாவுக்கு எதிராக மட்டும் வெற்றி பெறவில்லை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தத் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை அமெரிக்கா மீண்டும் டாலர் பலத்தைக் கொண்டே எதிர்கொண்டது. இதில் குறைவான பொருளாதார பாதிப்பை கண்ட சீனா, இந்தியா தவிர்த்த ஆசிய நாடுகளை இணைத்து தனது தலைமையில் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. எதிரி பலமிழந்து இருக்கும் சூழலை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது மின்னணு நாணயத்துக்கான சோதனை ஓட்டத்தை நடத்தி இருக்கிறது. பல்வேறு நாட்டு மத்திய வங்கிகளும் தத்தமது மின்னணு நாணயங்களை உருவாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இது எப்படி டாலரின் ஆதிக்கத்தை பாதிக்கும்… அமெரிக்கா எப்படி இதற்கு வினையாற்றும் என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் எதிரொலித்தல்:

இந்த கொரோனா பெரும்தொற்றுக் காலத்தில் இவர்களின் போட்டி பொருளாதார அரசியல் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதிகம் உணரப்பட்டு இருக்கிறது. முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்தப் பெரும்தொற்றுக் காலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை சீர்திருத்தங்கள் (Reforms) என்று சொல்வதைவிட மற்றுருவாக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஏற்கனவே இருக்கும் பொருளாதார முறையை மாற்றி அமைப்பது சீர்திருத்தம். அந்த பொருளாதார முறையையே மாற்றி அமைப்பது மற்றுருவாக்கம்தானே!

அது என்ன? அதற்கும் இந்தப் போட்டிக்கும் என்ன சம்பந்தம்?

வளரும் .. .. ..

பாஸ்கர் செல்வராஜ் – மின்னம்பலம்

தொடரின் முந்திய பகுதிகள்

  1. மின்னணு பொருளாதாரம் 1
  2. மின்னணு பொருளாதாரம் 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s