
இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பும் அடிப்படைகளை உருவாக்குதலும்!
புதிய மின்னணு பொருளாதார முறையை பொறுத்தவரை தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்குப் பெரிய குறிப்பிடும்படியான முக்கிய பாத்திரம் வகிக்க இடமில்லை. ஆனால் சந்தை என்ற அளவில் இது மிகப்பெரியது. ஆதலால் அமெரிக்க – சீன நிறுவனங்களுமே இந்த 130 கோடி மக்களை சந்தையைக் கைப்பற்ற போட்டியிட்டன. இதற்குள் செல்வதற்குமுன் இந்தப் பொருளாதாரத்துக்கு இந்தியாவில் உள்ள வாய்ப்பு என்ன என்று அறிந்துகொள்வது அவசியம்.
இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பு: மற்ற வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரையில் விவசாயம் பெருகி, தொழில்மயமாகி, உற்பத்தியில் உச்சத்தைத் தொட்டு, இன்று விற்பனையில் புதுமைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இது தலைகீழ். இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முறைசாரா (சுயதொழில்) பொருளாதாரத்தின் பங்கு 52.4%. நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களில் அங்கு வேலைசெய்யும் முறைசாரா (முறையான பணி ஒப்பந்தம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, சமூக பாதுகாப்பின்றி வேலை செய்பவர்கள்) தொழிலாளர்களின் அளவு 86.8% (2018). இதில் விவசாயத் தொழிலாளர்கள் மட்டும் 40% மேல் இருக்கிறார்கள். மீதி தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சேவை துறைகளில் வேலை செய்கிறார்கள். ஆக இந்தியப் பொருளாதாரத்தின் அளிப்பு (Supply) இவர்களின் தேவையை (Demand) பொறுத்தே இருக்க முடியும்.
இந்தியர்களின் வாங்கும் ஆற்றல்: இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிப்பவர்களான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் ஒரு மணிக்கு பெறும் சம்பளம் Rs.317.6 (US$4.89 – 2017). அமெரிக்காவில் எந்த சாதாரண வேலையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் US$7.25/மணி, தென்கொரியாவில் US$6/மணி, தைவானில் US$4.54/மணி, சீனாவில் US$2.83/மணி (2017). அங்கே தனிச்சிறப்பான திறன்மிக்க தொழிலாளர்களின் சம்பளம் இதைவிட பலமடங்கு அதிகம். இதிலிருந்து சாதாரண முறைசாரா இந்திய தொழிலாளரின் சம்பளத்தையும் வாங்கும் ஆற்றலையும் (Buying Capacity) அறிந்து கொள்ளலாம். சுருக்கமாக, இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அதிகம் வாங்குகிறார்கள் மற்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் ஆற்றலின்றி இருக்கிறார்கள். விலையுயர்ந்த பொருட்களோடு சாதாரண கடைகளில் விற்கும் பொருட்களை இணைய தளத்தில் விற்றால் மட்டுமே லாபகரமாக இயங்க முடியும்.
அடிப்படை தேவைகள், செயலுத்திகள்:
இந்தப் பொருளாதார முறையை நினைத்த மாத்திரத்தில் செயல்படுத்திவிட முடியாது. அதற்கான அடிப்படைகளான இணையம், வங்கி, இணையப் பயனாளர்கள், தரவுகளின் தொகுப்பு, வியாபார உத்தி எனப் பல அடிப்படையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரமாக எப்படி மாற்றுவது அல்லது கைப்பற்றுவது?
மிக எளிமையாக மாற்றலாம். கோடிக்கணக்கான மக்கள் சுயதொழிலாக செய்துவரும் இந்தத் தொழில்களைப் பெருநிறுவனங்கள் செய்ய அனுமதித்தால் அவர்கள் சில வருடங்களில் இந்த தொழில்களைச் செய்பவர்களை வெளியேற்றி வியாபாரத்தின் பெரும்பகுதியைப் பிடித்துக்கொள்வார்கள். முறைப்படுத்தப்படாமல் கிடக்கும் இந்த தொழில்கள் முறையான பொருளாதாரத்துக்குள் வந்துவிடும். இந்திய மக்களின் வாங்கும்திறன் குறைவாக இருந்தாலும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் புதிய இணைய வர்த்தக முறை செயல்படுத்தப்படும்போது விற்பனையாளருக்கும், இணையவெளி உரிமையாளருக்கும், பரிவர்த்தனையில் பங்கெடுக்கும் வங்கிகளுக்கும் நட்டம் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
அடையாளத்தில் தொடக்கம்:
ஆனால், முதலில் இந்தியாவில் அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இணைய உலகில் பொருட்கள் வாங்கும்போது நாமும் விற்பனையாளரும் பணத்தைக் கொடுத்து பொருளை பரிமாறிக்கொள்ள தற்போது நடைமுறையில் உள்ள உருவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பில்லை. இதைத் தவிர்த்து நமது அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தும் கடவுச் சீட்டு எண் (Passport Number), குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி எண் (PAN Card) என எதையும் இதில் பயன்படுத்தலாம். மற்ற நாடுகளில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பொதுவான அடையாள அட்டை எண்ணை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது மின்னணு அடையாள அட்டை அல்ல. நமது நாட்டில் மட்டும் தனிச்சிறப்பாக நபர்களின் அங்க அடையாளங்களுடன் இப்படியான அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. அது பில்கேட்சின் பாராட்டையும் பெற்றது. ஏன்?
ஆதார்:
கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக் குழு நாட்டில் கண்காணிப்பை மேற்கொள்ள 2000ஆம் ஆண்டு பல்நோக்கு அடையாள அட்டையை (Multi Purpose Identity Card) அறிமுகப்படுத்த தனது ஆலோசனையை வழங்கியது. 2008 பொருளாதார சரிவு வரை செயல்படுத்தப்படாமல் அல்லது பொருட்படுத்தப்படாமல் கிடந்த இந்த ஆலோசனை, 2008இல் சர்ச்சைக்குரிய 2ஜி அலைக்கற்றை ஏலத்துக்குப் பிறகு உயிர்ப்பெற்று 2009இல் இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் மின்னணு ஆதார் அடையாள எண் (Digital Identity card) உருவாக்கமாகச் செயல்வடிவம் பெற்றது. அப்போது இது சரிந்து கிடந்த மென்பொருள் துறைக்கு தொழில்வாய்ப்பு தரும் செயலாகவும், மக்களை வேவுபார்க்கும் அரசின் நடவடிக்கையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. மக்களின் தனிமனித சுதந்திரத்தை மீறும் இந்த அடையாள எண் உருவாக்கம் மக்களின் எதிர்ப்பையும், நீதிமன்றங்களில் வழக்கையும் சந்தித்தாலும் இவை எல்லாவற்றையும் மீறி ஆதார் மின்னணு அடையாள எண் உருவாக்கம் செயலாக்கம் பெற்றது. இன்று ஆதார்தான் எல்லாவற்றுக்குமான நமது அடையாளமாகவும் ஆதாரமாகவும் மாறி இருக்கிறது.
இணையத்தை கைகொள்ளும் போட்டி:
மின்னணு அடையாள எண்ணை அடுத்து புதிய பொருளாதார முறைக்கு தேவையானது இணைய பரவலாக்கம். மின்னணு பொருளாதாரத்தின் சுவாசக்காற்றான இணையம் எல்லா இடங்களிலும் பரவி இருப்பது இன்றியமையாதது. மின்னணு பொருளாதாரத்தின் ஆன்மாவான இந்த இணைய வலைப்பின்னல்களை கைகொள்பவர் இருவகையான பலன்களைப் பெறுகிறார்.
1. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தனிநபர்களுக்கு இந்த தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்குவதால் அடையும் லாபம்.
2. கோடிக்கணக்கான தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தரவுகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதால் இணைய வர்த்தகத்தில் தன்னை பிரிக்க முடியாத அங்கமாக ஆக்கிக்கொண்டு அதன் லாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுகிறார். ஏனெனில் இந்த வலைப்பின்னல் வழியே செல்லும் தரவுகளின் திரட்சியைக் (Big Data) கொண்டே நபர்களின் விருப்பங்கள், எந்த பகுதியில் எந்த பொருளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். இதனை அடைவதற்கான பெரும் போட்டி 2ஜி ஊழல் விவகாரமாக வெடித்ததை உலகமும் இந்தியாவும் கண்டது.
இணையம் சார்ந்த நிறுவனங்களின் போட்டி:
2008 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகான சீனாவின் எழுச்சி இணைய வலைப்பின்னலுக்கான சாதனங்கள் மற்றும் திறன்பேசிகளின் உற்பத்தி தொழில்நுட்பத்தைக் கைகொண்டது மட்டுமல்ல; அதை வளர்த்தெடுத்து அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டி அமெரிக்காவைப் பின்தள்ளும் அளவுக்கு வளர்ந்தது. இது இயல்பாக உலகம் முழுக்க உள்ள இணைய சந்தையைப் பிடிக்க இருவருக்குமிடையிலான போட்டியாக வளர்ந்தது. மனித உரிமைகள் பிரச்சினையின்றி மனிதர்கள் பெருகி இருக்கும் இந்தியாவும் சீனாவும் தரவுகளைக் குவித்து இந்தப் பொருளாதார முறையை பரிசோதனை செய்யவும் செயல்படுத்தவும் சரியான நாடுகள். சீனா கூகுள், முகநூல், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களை அனுமதிக்காமல் தனது மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அந்த நாட்டின் சொத்தாகப் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் தலையீட்டுக்கான கருவியாக இருந்து வருவதால் அவ்வாறான செயல்பாட்டுக்கு இடமளிக்காமல் அதன் இறையாண்மையையும் பாதுகாத்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இருவருக்குமே வேட்டைக்காடு. கூகுள், முகநூல், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தமது மென்பொருட்களின் வழியாக இந்திய மக்களின் தரவுகளை கைகொள்கிறது என்றால் சீனாவின் நிறுவனங்கள் (Ex.Huawei) இந்தியாவில் இணையத்துக்கான சாதனங்களை விற்பதன் மூலம் கைப்பற்றுகின்றன. நமது திறன்பேசி வழங்கியுடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமல்ல; இவ்வகையான தொடர்புகளை ஏற்படுத்த பயன்படுத்தும் சாதனங்களின் வழியும் (Machine to Machine Transfer Point Data) தரவுகளை பெற முடியும். இந்தியாவின் திறன்பேசி சந்தையை சீன நிறுவனங்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் அலிபாபாவின் பணப்பரிமாற்று வங்கியான பேடிஎம் (Paytm), இந்த நிறுவனத்தின் முதலீட்டில் பிக்பேஸ்கட் சங்கிலித்தொடர் கடை என அவர்கள் வேகமாக முன்னேற ஆரம்பித்து இருந்தார்கள்.
ஜப்பானின் ஜனநாயகமா தென் கொரியாவின் சர்வாதிகாரமா:
இந்த தொழிற்போட்டியின் பின்புலத்திலும் ஒபாமாவின் வெளியுறவுக்கொள்கையான Pivot to Asia அறிவிப்பையும் இணைத்தே அலைக்கற்றை விவகாரத்துக்குப் பிறகான இந்திய அரசியலைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்போது அமெரிக்க நிறுவனங்கள் ஒன்று சீன நிறுவனங்களுடன் இந்திய சந்தையைப் பகிர்ந்து கொண்டு சமமாக போட்டியிடலாம். அது ஜனநாயக அரசியலைக் கோரும். மற்றொன்று சீன நிறுவனங்களை அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியேற்றலாம் இது சர்வாதிகார அரசியலைக் கோருவது. இது சிலருக்கு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகத் தோன்றலாம். அவர்களுக்கு ஒரு வரலாற்று நினைவூட்டல். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பானில் நுழைந்த அமெரிக்கப் படைகள் முதலில் செய்தது ஜப்பானிய ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை பலருக்கும் பிரித்துக் கொடுத்தது. அடுத்து முன்பு தொழில் துறையில் ஈடுபட்டவர்களுக்கு நிதி ஆதாரங்களை மறுத்து புதியவர்கள் தொழில் தொடங்க தாராளமாக முதலீடுகள் கிடைக்க செய்தது. மூன்றாவது அந்த நாட்டின் வலுவான ராணுவத்தைக் கலைத்து, அமெரிக்க ராணுவத்தை அங்கே நிலைநிறுத்தியது. என்னதான் ஜப்பானில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு உற்பத்தி பெருகினாலும் இன்றுவரையிலும் அது அமெரிக்காவின் அங்கமாக இருக்கிறதே ஒழிய போட்டி பொருளாதாரமாக உருவெடுக்கவில்லை. இப்படித்தான் ஜப்பானில் மன்னராட்சி மறைந்து ஜனநாயகம் மலர்ந்து வளர்ந்தது.
ஜப்பானை தோற்கடித்தபின் கொரியாவின் தென் பகுதியில் நிலைகொண்ட அமெரிக்க ராணுவம் அந்தப் பகுதிக்கு அரசியல், பொருளாதார ராணுவ உதவி அளித்து தனி நாடாக்கியது. கொரியப் போருக்குப்பின் மக்கள் தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் கேட்டு போராடினார்கள். அவர்களுக்குக் கிடைத்த அரசியல் உரிமைகளை மறுத்து அம்மக்களை இரவு பகலாக கசக்கி பிழிய வகைசெய்யும் ஜெனரல் பார்க்கின் ராணுவ சர்வாதிகார ஆட்சியும், சியபோல் (Chaebol) என்று அழைக்கப்படும் ஒரே குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தில் மொத்த தென் கொரியாவின் தொழில்களையும், நிதி ஆதாரங்களையும் ஒப்படைக்கும் பொருளாதார (Crony Capitalism) முறையும்தான். இதுவரையிலும் அமெரிக்க ராணுவம் அங்குதான் நிலைகொண்டு உள்ளது. அப்போது முதல் இப்போது வரை அது யாருடைய நலனை பாதுகாத்து நிற்கிறது? இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் அதிபர் மூன் இந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தென் கொரிய பொருளாதாரத்தை மீட்க முயன்று கொண்டிருக்கிறார். இது தென் கொரியாவின் சர்வாதிகாரம் தோன்றி வளர்ந்த முறை.
பார்க்க ஜனநாயகம் பகுத்துப் பார்த்தால் சர்வாதிகாரம்: இந்தியாவில் ராணுவ சர்வாதிகாரம் சாத்தியமற்றது மட்டுமல்ல அவசியம் இல்லாததும்கூட. சாதியாகப் பிரிந்து ஜனநாயகம் என்றால் ஓட்டுபோடுவது என்ற புரிதலில் உள்ள மக்கள் கிளர்ந்து எழப் போவதுமில்லை அவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டிய அவசியமுமில்லை. அறநெறியற்ற அனைத்தையும் அடையும் ஆசை கொண்ட முதலாளியும் சதித்தனமும் சர்வாதிகார சிந்தனையும்கொண்ட அரசியல் கட்சியும் இந்தியாவுக்குப் போதுமானது. அமெரிக்காவின் அரசியல் பொருளாதார தொழில்நுட்ப பின்புலமும், அம்பானி அதானியின் அளவு கடந்த பொருளாதார அபிலாஷைகளும், ஆர்எஸ்எஸ்ஸின் அகண்ட பாரத கனவும் அதன்கீழ் இயங்கும் அமைப்புகளும், அதன் அசைக்க முடியாத முதல் மூவர்ணதாரின் அரசியல் ஆதரவும், அவர்களின் விவசாயம் தவிர்த்த மற்ற தொழில்களில் செலுத்தும் ஆதிக்கமும் அதைப் போட்டியின்றி தக்கவைப்பதற்கான அரசியல் தேவையும் ஒன்றிப்போனதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதற்கு வெளியில் இந்த அரசியலை எதிர்கொள்பவர்களின் பலவீனம்தான் கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
அலைக்கற்றை ஊழல் பூதாகாரமாகப் பேசி ஊதிபெருக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தளம் அடித்து நொறுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் அரசியல் தரம் தாழ்ந்து அவமானப்படுத்தப்பட்டார்கள். இந்தியாவிலேயே குஜராத் மட்டும்தான் வளர்ந்ததை போன்று அது இந்திய வளர்ச்சிப் பாதையின் அடையாளமாகக் கட்டமைக்கப்பட்டது. மோடி வளர்ச்சியின் நாயகனாக ஊதி பெருக்கப்பட்டார். வாய்சவடால்களின் மூலம் இந்தியாவின் இணையில்லா தலைவராகவும் பின்பு வட இந்தியரின் காட்பாதராகவும் ஆனார். காட்சி ஊடகங்களின் பலத்தையும் சமூக ஊடகங்களின் பலத்தையும் இந்தியா முதன்முதலாக கண்டது. வாட்ஸ்அப், முகநூல் குழுமங்கள் வழி பரப்பப்பட்ட பொய்த்தகவல் பிரச்சார உத்தி, முகநூல் நிறுவனத்தினால் சேர்க்கப்பட்ட நமது தனிப்பட்ட தகவல்களைப் பகுப்பாய்வு செய்து தொகுதி வாரியாக உள்ள ஓட்டுக்கள் அதில் ஆதரவு எதிர்ப்புநிலை கொண்டவர்களின் அளவு, வெற்றிக்குக் கொஞ்சம் நெருக்கமாக உள்ள தொகுதிகளில் ஆர்எஸ்எஸ்ஸின் ஆட்களை இறக்கி ஆதரவைத் திரட்டுவது என Data Driven Digital Economy இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே Data Driven Digital Politics இந்தியாவுக்கு வந்து பிஜேபியை ஆட்சியில் அமர்த்தியது.
பிறகு நடந்தது என்ன? எப்படி இணையத்தைப் பரவலாக்கி தரவுகளைச் சேகரித்து முறைசாரா பொருளாதாரத்தின் உற்பத்தி, சந்தை, நுகர்வோர் சம்பந்தமான தரவுகளையும், தொழில் போட்டியின்றி ஏகபோகமாக மொத்த சந்தையும் கைப்பற்றப்பட்டது?
வளரும் .. .. ..
பாஸ்கர் செல்வராஜ் – மின்னம்பலம்
தொடரின் முந்திய பகுதிகள்