குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 23
ரோமாபுரி நிறுவப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு குலத்தின் பந்தங்கள் இன்னும் அதிக பலமாக இருந்ததனால் ஒரு பட்ரீஷியக் குலம், ஃபேபியன்களின் குலம் செனெட்டின் அனுமதியைப் பெற்று அண்டை நகரமாகிய வெயி மீது தானாகவே ஒரு படையெடுப்பை நடத்த முடிந்தது. அணிவகுத்துச் சென்ற 306 ஃபேபியன்கள் மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் விட்டு வந்திருந்த ஒரு சிறுவன் குலத்தைப் பெருக்கினான்.
நாம் கூறியபடி, பத்து குலங்கள் ஒரு பிராட்ரியை அமைத்தன; இங்கே அது குரியா என்று அழைக்கப்பட்டது; கிரேக்க பிராட்ரியைக் காட்டிலும் முக்கியமான சமூகச் செயல்கள் அதற்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குரியாவுக்க்கும் சொந்த மதச் சடங்குகளும் புனிதச் சின்னங்களும் பூசாரிகளும் உண்டு. பூசாரிகள் ஒரு குழுவாக ரோமானியப் பூசாரிச் சங்கங்களில் ஒன்றில் திரண்டிருந்தனர். பத்து குரியாக்கள் கொண்டது ஒரு இனக்குழு. மற்ற லத்தீன் இனக்குழுக்களைப் போலவே அதற்கு ஆதியில் அநேகமாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் இராணுவத் தளபதியாகவும் உயர்தரப் பூசாரியாகவும் இருந்திருக்கின்றான். அந்த மூன்று இனக்குழுக்களும் சேர்ந்து ரோமானிய மக்களினமாக (populus Romanus) இருந்தன.
ஆக, ஒரு குலத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் – ஆகவே ஒரு குரியாவிலும் இனக்குழுவிலும் சேர்ந்திருப்பவர்கள்தான் – ரோமானிய மக்களினத்தைச் சேர்ந்திருப்பவர்களாக இருக்க முடியும். இந்த மக்களினத்தின் முதல் நிர்வாக அமைப்பு பின்வருமாறு: முதலில் பொது விவகாரங்களை செனெட் நடத்தி வந்தது, அது முந்நூறு குலங்களின் தலைவர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது என்பதை நீபூர் என்பவரே முதன்முதலில் சரியாகக் கூறினார்; குலங்களின் முதியவர்கள் என்ற வகையில் அவர்கள் தந்தையர்கள் என்றும் அமைப்பு என்ற முறையில் செனெட் (மூத்தோர் கவுன்சில், senex என்றால் மூத்த, வயதான என்று பொருள்) என்றும் அழைக்கப்பட்டார்கள். அங்கேயும் ஒவ்வொரு குலத்திலும் ஒரே குடும்பத்திலிருந்து நபர்களைப் பொறுக்கு கின்ற வழக்கம் முதல் பரம்பரைப் பிரபுத்துவத்தை அமைத்தது. இந்தக் குடும்பங்கள் தம்மைப் பட்ரீஷியன்கள் என்று அழைத்துக் கொண்டன; செனெட் பதவிகளும் மற்ற எல்லாப் பதவிகளும் தமக்கு மட்டுமே உரிமையானவை என்று கோரின. மக்கள் காலப் போக்கில் இந்தக் கோரிக்கைகளை அனுமதித்தபடியால் அவை அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகி விட்டன. முதலில் செனெட்டர்களும் அவர்களுடைய சந்ததியினருக்கும் பட்ரீஷியன் என்ற பட்டத்தையும் அதற்குரிய சலுகைகளையும் ரோமுலஸ் வழங்கியாதாகக் கூறுகின்ற கட்டுக்கதை இந்த உண்மையை வெளியிடுகிறது. அதீனிய bule என்பதைப் போலவே இந்த செனெட்டும் பல விவகாரங்களை முடிவு செய்வதற்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளைப் பற்றி, குறிப்பாக புதிய சட்டங்களைப் பற்றிப் பூர்வாங்க விவாதங்களை நடத்தவும் அதிகாரம் பெற்றிருந்தது. புதிய சட்டங்களைப் பற்றி comitia curiata (குரியாக்களின் சபை) எனப்படும் மக்கள் சபையில் முடிவு செய்யப்பட்டது. அதில் கூடியிருக்கும் மக்கள் குரியா முறையில் வைக்கப்பட்டிருந்தார்கள்; ஒவ்வொரு குரியாவிலும் அவர்கள் அநேகமாக குல ரீதியில் வைக்கப்பட்டிருக்கலாம். பிரச்சனைகளைப் பற்றி முடிவு செய்கின்ற பொழுது முப்பது குரியாக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்கு இருந்தது. குரியாக்களின் சபை சட்டங்களை நிறைவேற்றியது அல்லது நிராகரித்தது; rex (அரசன் என்று சொல்லப்பட்டவன்) உட்பட எல்லா உயர் அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்தது; யுத்தப் பிரகடனம் செய்தது (ஆனால் செனெட் சமாதானத்தை முடிவு செய்தது); தலைமை நீதிமன்றம் என்ற வகையில், ரோமானியக் குடிமக்களுக்கு மரணதண்டனை விதிக்கத் தக்க எல்லா வழக்குகளையும் பற்றி – சம்பந்தப்பட்ட தரப்பினர் மேன் முறையீடு செய்கின்ற பொழுது – முடிவு செய்தது. கடைசியாக, செனெட்டுக்கும் மக்கள் சபைக்கும் பக்கத்தில் ரெக்ஸ் இருந்தான், இவன் கிரேக்க பஸிலியஸ் போன்றவனேதான்; ஆனால் மொம்ஸென் எழுதுவதைப் போல கிட்டத்தட்ட சர்வாதிக்கம் பெற்ற அரசன் அல்ல [லத்தீன் சொல்லாகிய rex என்பது கெல்டிக்-ஐரிஷ் மொழியிலுள்ள righ (இனக்குழு தலைவன்) என்பதற்கும் கோதிக் மொழியிலுள்ள reiks என்பதற்கும் சமமாகும். நமது Furst (ஆங்கிலத்தில் first, டேனிஷ் மொழியில் forste) போலவே இது ஆதியில் குலத் தலைவனையோ, இனக்குழுத் தலைவனையோ குறித்தது என்ற விஷயம் பிற்காலத்தில் வந்த அரசனுக்கு, தமது மக்களினத்தின் இராணுவத் தலைவனுக்கு thiudans என்ற விசேஷச் சொல்லை கோத்கல் 4ஆம் நூற்றாண்டிலிருந்தே உபயோகித்து வந்தார்கள் என்பதிலிருந்து தெரிகிறது. உல்ஃபிலா மொழி பெயர்த்துள்ள பைபிளில் ஆர்டக்ஸெர்க்ஸ்சும் ஹீராடும் reiks என்று ஒருபோதும் அழைக்கப்படவில்லை, thiudans என்றுதான் அழைக்கப்பட்டார்கள். சக்கரவர்த்தி டைபேரியசின் அரசும் reiki என்னாமல் thiudinassus என்று தான் அழைக்கப்பட்டது. கோதிக் thiudansஇன் பெயரில் அல்லது நாம் தவறாக மொழிபெயர்க்கின்ற அரசர் Thuidareiks, Theodorich, அதாவது Dietrich என்னும் பெயரில் இந்த இரண்டு பெயர்களும் ஒன்றாகவே கலந்திருக்கின்றன. (ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு)]. ரெக்ஸ் என்பவனும் இராணுவத் தளபதியாகவும் உயர்தரப் பூசாரியாகவும், சில நீதிமன்றங்களுக்குத் தலைமை அதிகாரியாகவும் இருந்தான். அவனுக்கு சிவில் வேலைகள் இல்லை. இராணுவத் தளபதி என்ற முறையில் கட்டுப்பாட்டு அதிகாரத்தின் விளைவாக வந்து சேர்ந்தவற்றைத் தவிர, நீதிமன்றத் தலைவன் என்ற முறையில் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய அதிகாரத்தின் விளைவாக வந்து சேர்ந்தவற்றைத் தவிர குடிமக்களின் உயிர், சுதந்திரம், சொத்து விஷயங்களில் அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ரெக்ஸ் பதவி பரம்பரையாக வருவதல்ல. அதற்கு மாறாக, முந்திய ரெக்ஸ் பிரேரணை செய்ய, குரியாக்களின் கூட்டத்தில் அவன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு, இரண்டாவது கூட்டத்தில் உரிய சடங்குகளுடன் பதவியில் அமர்த்தப்பட்டான். அவனைப் பதவியிலிருந்து விலக்கவும் முடிந்தது என்பதற்கு டார்க்வினியஸ் சுபெர்பசுக்கு ஏற்பட்ட கதி உதாரணமாகும்.
வீர யுக்த்தைச் சேர்ந்த கிரேக்கர்களைப் போலவே, அரசர்கள் என்று சொல்லப்பட்டவர்களுடைய காலத்தைச் சேர்ந்த ரோமானியர்கள் ஒரு இராணுவ ஜனநாயகத்தில் வாழ்ந்தார்கள். அது குலங்கள், பிராட்ரிகள் மற்றும் இனக்குழுக்களை ஆதாரமாகக் கொண்டிருந்தது. குரியாக்களும் இனக்குழுக்களும் ஓரளவுக்கு செயற்கையான அமைப்புகள் என்றாலும், ஆதியில் அவை முளைத்தெழுந்த சமூகத்தின் மெய்யான, இயற்கையான மாதிரிகளைப் பின்பற்றி ஒழுங்கமைக்கப்பட்டவை. அச்சமூகம் இவற்றை எல்லாப் பக்கங்களிலும் இன்னும் சூழ்ந்திருந்தது. மேலும், இயற்கையாக வளர்ந்த பட்ரீஷியப் பிரபுத்துவம் ஏற்கெனவே பலத்தைப் பெற்றிருந்த போதிலும், ரெக்ஸ்கள் படிப்படியாகத் தமது அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கு முயன்று வந்த போதிலும் இவையனைத்தும் அமைப்பின் ஆதியான, அடிப்படையான தன்மையை மாற்றவில்லை; இது மிகவும் முக்கியமானதாகும்.
இதற்கிடையில் ரோமாபுரியில் மக்கள் தொகையும் ரோமானியப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள்தொகையும் நாடுபிடித்தலின் மூலம் விரிவடைந்து பகுதியளவுக்குக் குடியேறுதல் வழியாகவும் பகுதியளவுக்கு அடிமைப்படுத்தப்பட்ட, அநேகமாக லத்தீன் மாவட்டங்களில் வசித்தவர்களாலும் அதிகரித்தன. இந்தப் புதிய குடிமக்கள் எல்லோரும் (கிளாயெண்ட்டுகளைப் [கிளாயெண்ட் (client) – பண்டைக்கால ரோமாபுரியில் உயர்குடிப் பிரபுக்களின் பாதுகாப்பை பெற்றுவந்த, சார்புநிலையில் இருந்த சுதந்திரமான மனிதன்] பற்றிய பிரச்சினையைத் தற்சமயம் இங்கே எடுத்துக் கொள்ளவில்லை) பழைய குலங்கள், குரியாக்கள், இனக்குழுக்களுக்கு வெளியே இருந்தார்கள். எனவே அவர்கள் populus Romanus எனப்படுகின்ற முறையான ரோமானிய மக்களைச் சேர்ந்தவர்களல்ல. அவர்கள் சுதந்திரமானவர்கள்; சொந்தத்தில் நிலம் வைத்துக் கொள்ள முடியும்; அவர்கள் வரி செலுத்த வேண்டும், இராணுவச் சேவைக்கும் போக வேண்டியவர்களே. ஆனால் அவர்கள் பதவி வகிக்க முடியாது; குரியாக்கள் கூட்டத்தில் பங்கெடுக்கவோ, வெற்றி கொள்ளப்பட்ட அரசு நிலங்களின் வினியோகத்தில் பங்கு கொள்ளவோ முடியாது. அவர்கள் அரசியல் உரிமைகளிலிருந்து விலக்கப்பட்ட பிளெப்ஸ் ஆக இருந்தார்கள். இடைவிடாது அதிகரித்துக் கொண்டிருந்த எண்ணிக்கை, இராணுவப் பயிற்சி, ஆயுத பலம் ஆகியவற்றின் விளைவாக அவர்கள் பழைய populusக்கு ஆபத்தாக மாறி இருந்தார்கள். இந்த populus தன் எண்ணிக்கை அதிகரிக்காதபடி தன் அணிகளுக்குள் அந்நியர்கள் புக இடமின்றி அடைத்து விட்டிருந்தது. மேலும், populusக்கும் பிளெப்சுக்கும் இடையில் நிலம் ஓரளவுக்கு சமமாகவே பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது; ஆனால், இன்னும் கணிசமான வளர்ச்சியடையாத வர்த்தகச் செல்வமும் தொழிற்செல்வமும் பிரதானமாக பிளெப்ஸ்களிடமே இருந்திருக்கக்கூடும்.
கட்டுக்கதையாக வந்துள்ள ரோமாபுரியின் ஆரம்ப வரலாறு முழுவதும் முற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது; இதை விளக்குவதற்குச் செய்யப்பட்ட பகுத்தறிவு – காரியவாத வகைப்பட்ட முயற்சிகளினாலும் பிற்காலத்தில் வந்த, சட்டத் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் – அவர்களுடைய நூல்கள் நமக்கு மூலாதார விஷயங்களைத் தருகின்றன – தந்துள்ள செய்திகளினாலும் இந்த இருள் மேலும் அதிகமடைந்திருப்பதால், பண்டைய குல அமைப்பை ஒழித்த புரட்சியின் காலம், போக்கு, காரணங்கள் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியாது. பிளெப்சிக்கும் populusக்கும் இடையே எழுந்த மோதல்களே அதற்குக் காரணங்களாக இருந்தன என்ற ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.
புதிய நிர்வாக அமைப்பு ரெக்ஸ் செர்வியஸ் துல்லியஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அது கிரேக்க மாதிரியில், குறிப்பாக சொலோன் அமைப்பின் மாதிரியில் அமைந்திருந்தது. அது ஒரு புதிய மக்கள் சபையை உருவாக்கியது; populus, பிளெப்ஸ் என்ற வேற்பாடு இல்லாமல் இராணுவச் சேவை செய்பவர்கள் எல்லோரும் அதில் சேர்க்கப்பட்டனர், இராணுவச் சேவை செய்யாதவர்கள் விலக்கப்பட்டனர். இராணுவச் சேவை செய்ய வேண்டிய ஆண் மக்கள்தொகை முழுவதும் சொத்தின் அடிப்படையில் ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் ஐந்து வகுப்புகளிலும் சொத்து வகைப்பட்ட குறைந்தபட்சத் தகுதிகள் பின்வருமாறு இருந்தன: முதல் வகுப்பு – 1,00,000 அஸ்கள் [அஸ் – பழைய ரோமானிய நாணயம்]; இரண்டாம் வகுப்பு – 75,000 அஸ்கள்; மூன்றாம் வகுப்பு – 50,000 அஸ்கள், நான்காம் வகுப்பு – 25,000 அஸ்கள், ஐந்தாம் வகுப்பு – 11,000 அஸ்கள். இவை முறையே சுமா 14000, 11000, 10500, 7000, 3600, 1570 மார்க்குகளுக்கு சமம் என்று டியூரோ டெ லா மால் கூறுகிறார். இதை விடக் குறைவான சொத்தை உடையவர்கள் பாட்டாளிகள் என்ற ஆறாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இராணுவச் சேவை, வரிகள் ஆகியவற்றிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. செந்தூரியாக்களின் சபை (comitia centuriata) என்ற புது சபையில் குடிமக்கள் போர்வீரர்களின் ஆணியைப் போல அமைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் நூறு நபர்களைக் கொண்ட செந்தூரியாக்களாகத் திரட்டப்பட்டிருந்தார்கள். அவற்றில் ஒவ்வொரு செந்தூரியாவுக்கும் ஒரு வாக்கு இருந்தது. முதல் வகுப்பினர் 80 செந்தூரியாக்களையும் இரண்டாவது வகுப்பினர் 22 செந்தூரியாக்களையும் மூன்றாவது வகுப்பினர் 20 செந்தூரியாக்களையும் நான்காவது வகுப்பினர் 22 செந்தூரியாக்களையும் ஐந்தாவது வகுப்பினர் 30 செந்தூரியாக்களையும் ஆறாவது வகுப்பினர் முறைமைக்காக ஒரு செந்தூரியாக்களையும் திரட்டிக் கொடுத்தார்கள். இவற்றுடன் கூடுதலாக, பெரும் செல்வர்களான குதிரைப் படையினரின் 18 செந்தூரியாக்களும் இருந்தன. மொத்தம் 193 செந்தூரியாக்கள் இருந்தன. பெரும்பான்மைக்கு 97 வாக்குகள் அவசியம். ஆனால் குதிரைப் படையினரும் முதல் வகுப்பினரும் மட்டுமே சேர்ந்தால், 98 வாக்குகள் ஆகின்றனர். எனவே அவர்களே பெரும்பான்மையாகின்றனர். அவர்கள் ஒன்றுசேர்ந்திருக்கும் பொழுது மற்ற வகுப்பினரைக் கலந்து கொள்ளாமலேயே செல்லத்தக்க முடிவுகள் செய்யப்பட்டன.
முன்னர் குரியாக்களின் கூட்டம் பெற்றிருந்த அரசியல் அதிகாரங்கள் எல்லாம் (பெயரளவில் இருந்த சில அதிகாரங்கள் மட்டும் இல்லை) இப்பொழுது செந்தூரியாக்களின் இந்தப் புதிய சபையிடம் வந்து சேர்ந்தனர்; ஆகவே குரியாக்களும் அவற்றிலிருந்த குலங்களும் – ஏதன்சில் நடைபெற்றதைப் போல – வெறும் தனிப்பட்ட, மத சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. அவை இன்னும் நெடுங்காலத்துக்கு இதே நிலையில் உறங்கிக் கொண்டிருந்தன. குரியாக்களின் கூட்டம் விரைவில் மறைந்து விட்டது. மூன்று பழைய குல இனக்குழுக்களையும் அரசிலிருந்து விலக்குவதற்காகப் பிரதேச ரீதியிலமைந்த நான்கு இனக்குழுக்கள் புகுத்தப்பட்டன. ஒவ்வொரு இனக்குழுவும் நகரத்தின் கால் பகுதியில் வசித்தது. அவை சில அரசியல் உரிமைகளையும் பெற்றிருந்தன.
ஆகவே ரோமாபுரியுலும் கூட அரச அதிகாரம் என்று சொல்லப்படுவது ஒழிக்கப்படுவதற்கு முன்பே, தனிப்பட்ட இரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பழைய சமூக அமைப்பு ஒழிக்கப்பட்டது. அதனிடத்தில் பிரதேசப் பிரிவினை, சொத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய, உண்மையான அரசு அமைப்பு வந்து சேர்ந்தது. இராணுவச் சேவை செய்ய வேண்டியவர்களான குடிமக்களைக் கொண்டு இங்கே சமூக அதிகாரம் அமைந்திருந்தது. அந்த அதிகாரம் அடிமைகளுக்கு எதிராக மட்டுமன்றி, பாட்டாளிகள் எனப்பட்டோருக்கும் எதிராகத் திருப்பப்பட்டிருந்த்தது. இவர்கள் இராணுவச் சேவையிலிருந்தும் ஆயுதம் வைத்திருக்கின்ற உரிமையிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
உண்மையான அரச அதிகாரத்தை அபகரித்திருந்த டார்க்வினியஸ் சுபெர்பஸ் என்ற கடைசி ரெக்ஸ் துரத்தப்பட்ட பிறகும் ரெக்ஸ் ஸ்தானத்தில் இரண்டு இராணுவத் தளபதிகள் (கான்சல்கள்) சம அதிகாரங்களுடன் (இராகோஸ்களிடையே இருப்பதைப் போல) நியமிக்கப் பட்ட பிறகும் இந்தப் புதிய அமைப்பு மேலும் வளர்க்கப்பட்டது. பதவிகளைப் பெறுவதற்கும் அரசு நிலங்களில் பங்கு பெறுவதற்கும் பட்ரீஷியன்களுக்கும் பிளெபியன்களுக்கும் இடையில் நடந்த போராட்டத்தைக் கொண்ட ரோமானியக் குடியரசின் வரலாறு முழுவதும் இந்தப் புதிய அமைப்பிற்குள் வளர்ந்தது. கடைசியில், பட்ரீஷியப் பிரபுக்கள் பெரிய நிலவுடைமையாளர்களை, பணக்காரர்களைக் கொண்ட ஒரு புதிய வர்க்கத்தில் கலந்து விட்டனர். அவர்கள் இராணுவச் சேவையினால் சீர்குலைவுற்ற விவசாயிகளின் எல்லா நிலங்களையும் படிப்படியாகக் கவர்ந்தார்கள், இப்படி உருவக்கப்பட்ட பிரம்மாண்டமான பண்ணைகளை அடிமைகளை உபயோகித்து விவசாயம் செய்தார்கள்; இத்தாலியின் மக்கள்தொகையைக் குறைத்தார்கள், அதன் மூலம் சக்கரவர்த்தி ஆட்சிக்கு மட்டுமின்றி, பின்னர் வந்த ஜெர்மானிய அநாகரிகக் கூட்டங்களுக்கும் வழி திறந்தார்கள்.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
- மாமேதை ஏங்கல்ஸ்.
- 1884 ல் எழுதிய முன்னுரை
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
- ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
- குடும்பம் – 1
- குடும்பம் – 2
- குடும்பம் – 3
- குடும்பம் – 4
- குடும்பம் – 5
- குடும்பம் – 6
- குடும்பம் – 7
- குடும்பம் – 8
- குடும்பம் – 9
- இராகோஸ் குலம் 1
- இராகோஸ் குலம் 2
- கிரேக்க குலம் 1
- கிரேக்க குலம் 2
- அதீனிய அரசின் உதயம் 1
- அதீனிய அரசின் உதயம் 2
- அதீனிய அரசின் உதயம் 3
- ரோமாபுரியில் குலமும் அரசும் 1