கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 24

பலவகைப்பட்ட காட்டுமிராண்டி மற்றும் அநாகரிக மக்களினங்களிடம் கிட்டதட்ட தூய்மையான வடிவத்தில் இன்னும் இருக்க்கின்ற குல அமைப்புகளைப் பற்றிக் கூறுவதற்கு இங்கே இடமில்லை. ஆசியாவைச் சேர்ந்த நாகரிக மக்களினங்களின் பண்டைக்கால வரலாற்றில் காணப்ப்படுகின்ற இப்படிப்பட்ட அமைப்புகளின் அடையாளங்கள் விஷயத்திலும் அப்படியே. இரண்டையும் எங்குமே காண முடியும். சில உதாரணங்கள் போதுமானவையாக இருக்கும். குலத்தை அடையாளங்கண்டு கொள்ளவதற்கு முன்பே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ள மிகப் பெரிய முயற்சி செய்த மாக்லென்னான் அதைச் சுட்டிக்காட்டி அதன் முக்கியமான உருவரைகளை மொத்தத்தில் சரியாக வர்ணித்தார்; கால்மிக்குகள், சிர்காஸியர்கள், சமோயெதுகள் இடையிலும் வார்லிகள், மஹர்கள், மணிபுரிகள் என்ற மூன்று இந்திய மக்களினங்களிடையிலும் இருந்த இந்த அமைப்பை பற்றி அவர் எழுதியிருக்கிறார். சமீபத்தில் மக்சீம் கவலேவ்ஸ்கி அதை வர்ணித்துள்ளார்; ப்ஷாவ்கள், ஹேவ்ஸுர்கள், ஸ்வானேடியர்கள் மற்றும் இதர காக்கஸஸ் இனக்குழுக்களிடையில் அவர் அதைக் கண்டுபிடித்தார். கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குலம் இருந்த்தைப் பற்றிச் சுருக்கமான குறிப்புகளைத் தருவதுடன் இங்கே நிறுத்திக் கொள்ளலாம்.

நம் காலம் வரைக்கும் நீடித்துள்ள பழமயான கெல்டுச் சட்டங்கள் குலம் இன்னும் முழு வீரியத்துடன் இருப்பதையே காட்டுகின்றன. அயர்லாந்தில் ஆங்கிலேயர்கள் அதைப் பலாத்காரமாக அழித்த பிறகும் மக்கள் மனத்தில், குறைந்தபட்சம் உள்ளுணர்வாக, இன்னும் அது உயிரோடிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஸ்காட்லாந்தில் அது முழு மலர்ச்சியுடன் இருந்து வந்தது; இங்கும் கூட ஆங்கிலேயர்களின் ஆயுதங்கள், சட்டங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்குதான் அது கீழ்ப்படிந்தது.

ஆங்கிலேய நாடுபிடிப்புக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் – 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வராத – பண்டைய வேல்ஸ் சட்டங்கள் முழுக் கிராமங்களில் – விதிவிலக்குகளாகவும் முன்பு எங்கும் நிலவியிருந்த ஒரு வழக்கத்தின் எச்சங்களாகவும் இருந்த போதிலும் – பொது விவசாயம் இருந்ததைக் காட்டுகின்றன [ஆங்கிலேயர்கள் 1283இல் வேல்ஸ் பிரதேசத்தை வெற்றி கொண்டிருந்தாலும், அது அச்சமயத்தில் தன்னுடைய சுயாட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் அது இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.]. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்த விவசாயத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. அதே சமயத்தில், வேறொரு நிலப் பகுதியும் பொதுவில் விவசாயம் செய்யப்பட்டு அதன் பலன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து உதாரணங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது இந்த கிராமச் சமூகங்கள் குலங்களையும் குலங்களின் துணைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது. நேரமின்மையால் (என்னுடைய குறிப்புகள் 1869இலிருந்து உள்ளன [எங்கெல்ஸ் 1869 – 1870 இல் அயர்லாந்தின் வரலாற்றைப் பற்றிய புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தார், ஆனால் அவரால் அதை முடிக்க இயலவில்லை. எங்கெல்ஸ் கெல்டுகளின் வரலாற்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த பொழுது பண்டைய வேல்ஸ் சட்டங்களைப் பகுப்பாய்வு செய்தார்.]) நான் மேற்கொள்ள முடியாதிருக்கின்ற வேல்ஸ் சட்டங்கள் பற்றிய மறு விசாரணை இதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால், கெல்டுகளிடையில் இணை மணம் 11ஆம் நூற்றாண்டில் ஒருதார மண முறைக்கு இன்னும் இடம் கொடுக்காமலே இருந்தது என்பதை வேல்ஸ் மற்றும் அயர்லாந்தின் மூலாதரங்கள் நிரூபிக்கின்றன. வேல்சில் திருமணம் என்பது ஏழாண்டுகள் பூர்த்தியடைவதற்கு முன் ரத்து செய்யப்படக் கூடியதாக அல்லது ரத்து செய்வதற்குரிய அறிவிப்புத்தரக் கூடியதாக இருந்த்து. ஏழாண்டுகள் பூர்த்தியடைவதற்கு இன்னும் மூன்றே இரவுகள் எஞ்சியிருந்தாலும் கூட தம்பதிகள் பிரிந்து போக முடியும். அப்பொழுது அவர்களுடைய சொத்து அவர்களுடையில் பிரிக்கப்பட்டது. பெண் பாகப் பிரிவினையைச் செய்வாள்; ஆண் இரண்டு பாகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வான். வீட்டுச் சாமான்கள் சில விசித்திரமான விதிகளின்படி பிரிக்கப்பட்டன. திருமணத்தை ஆண் ரத்து செய்தால், அவன் பெண்ணின் சீதனத்தையும் மற்றும் இதர சில சாமான்களையும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பெண் ரத்து செய்ய விரும்பினால், அவர்களுடைய பங்கு குறைவாகக் கிடைக்கும். குழந்தைகளில் இரண்டு கணவனுக்கும் ஒன்று (அதாவது நடுக் குழந்தை) மனைவிக்கும் தரப்பட்டனர். திருமண ரத்துக்குப் பிறகு பெண் மீண்டும் மணம் புரிந்து, புதுக் கணவனுடைய கட்டிலில் ஒரு காலை வைத்திருந்த நிலையிலும் முதல் கணவன் வந்து அவளைக் கூப்பிட்டால், அவள் அவனைப் பின் தொடர்வதே கடமையாகும். ஆனால் இருவர் ஏழு ஆண்டுகள் கூடி வாழ்ந்தால், திருமணச் சடங்குகள் எதுவுமின்றியே, கணவன், மனைவி என்று கருதப்பட்டார்கள். திருமணத்துக்கு முன்னால் பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்பது கண்டிப்பாகப் பின்பற்றப்படவில்லை; அது வற்புறுத்தப்படவுமில்லை. இவ்விஷயங்கள் சம்பந்தமான விதிமுறைகள் மிகவும் தளர்வாக இருந்தன. அவை பூர்ஷ்வா ஒழுக்கமுறைகள் எல்லாவற்றுக்கும் எதிரானவை. ஒரு பெண் சோரம் போனால், அவளை அடிப்பதற்குக் கணவனுக்கு உரிமையுண்டு (தண்டனை இல்லாமல் அவளை அடிப்பதற்கு உரிமை அளிக்கப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களில் இது ஒன்று); ஆனால் அதற்குப் பிறகு அவன் வேறு பரிகாரம் கோர முடியாது, ஏனென்றால்,

“ஒரு குற்றத்துக்குப் பரிகாரம் பெற வேண்டும் அல்லது பழிவாங்க வேண்டும், இரண்டும் அமுலாக்கப்பட முடியாது.” [பி. எங்கெல்ஸ், வேல்சின் பண்டைய சட்டங்களும் விதிமுறைகளும், தொகுதி 1, 1841, பக்கம் 93.]

சொத்துப் பிரிவினையின் போது தனக்குரிய உரிமைகளுக்குப் பாதகம் ஏற்படாமல் பெண் திருமணத்தை ரத்து செய்ய அனுமதித்த காரணங்கள் மிகவும் மாறுபாடானவையே. ஆணின் வாய் நாற்றம் போதுமான காரணமாக இருந்தது. முதல் இரவில் பெண்ணை அனுபவிக்கின்ற உரிமையைத் திரும்பப் பெறுவதற்காக இனக்குழுத் தலைவனுக்கு அல்லது அரசனுக்குத் தர வேண்டிய பணம் (இது gobr merch எனப்பட்டது; மத்திய காலச் சொல்லான marcheta என்பதும் marquette என்ற பிரெஞ்சுச் சொல்லும் இதனடியாகப் பிறந்தவை) சட்டத் தொகுப்பில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்கள் சபைகளில் பெண் வாக்களிக்க உரிமையிருந்தது. இம்மாதிரியான நிலைமைகள் அயர்லாந்திலும் இருந்தன என்று காட்டப் பட்டிருக்கிறது; கால வரம்புள்ள திருமணங்கள் அங்கும் வழக்கமாக இருந்தன; பாகப் பிரிவினையின் போது வீட்டு வேலை செய்ததற்குப் பெண்ணுக்கு ஊதியமுண்டு என்ற அளவுக்குத் தாராளமான, நன்கு வரையறுக்கப்பட்ட சலுகைகள் இருந்தன; மற்ற மனைவியருக்குப் பக்கத்திலேயே “முதல் மனைவி” இருந்து வந்தாள்; மரணமடைந்தவனுடைய சொத்தைப் பிரிக்கின்ற பொழுது ஒழுக்கமுறையில் பிறந்த குழந்தைகளுக்கும் ஒழுக்கக்கேடாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படவில்லை – இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது இணை மணத்தைப் பற்றிய ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இதனுடன் ஒப்பிடுகின்ற பொழுது வடக்கு அமெரிக்காவில் செல்லத்தக்கதாயிருந்த திருமண வடிவம் கண்டிப்பானது என்று தோன்றும். ஆனால் சீஸருடைய காலத்தில் குழு மண முறையில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மக்களினத்துக்கு 11ஆம் நூற்றாண்டில் இது வியப்பான விஷயமல்ல.

அயர்லாந்தில் குலம் (sept; இனக்குழு clainne, கிளான் என்று சொல்லப்பட்டது) இருந்ததாகவும் அதை வர்ணித்தும் பழங்காலச் சட்டத் தொகுப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது; அவை மட்டுமன்றி, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலச் சட்ட நிபுணர்களும் அதை உறுதிப்படுத்தியும் வர்ணித்தும் எழுதியிருக்கிறார்கள். கிளான் நிலங்களை ஆங்கில அரசனுடைய சொந்த நிலங்களாக மாற்றுவதற்காக அவர்கள் அங்கே அனுப்பப்பட்டார்கள். இக்காலம் வரை நிலம், தலைவர்கள் அதை ஏற்கெனவே தம்முடைய சொந்த நிலமாக மாற்றியிருந்த இடங்களைத் தவிர, கிளானின் அல்லது குலத்தின் பொதுச் சொத்தாக இருந்து வந்தது. ஒரு குல உறுப்பினன் இறந்து அதன் விளைவாக ஒரு குடும்பம் கலைக்கப்படும் பொழுது அந்தக் குலத்தின் தலைவன் (ஆங்கிலச் சட்ட நிபுணர்கள் அவனை caput cognationis என்று அழைக்கிறார்கள்) குலத்தின் நிலம் முழுவதையும் மறுபடியும் மற்ற குடும்பங்களிடையே பிரித்துக் கொடுத்தான். ஜெர்மனியில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்ற விதிகளின்படியே இந்தப் பிரிபினை பொதுவாக நடைபெற்றிருக்க வேண்டும். Rundale எனப்பட்டவற்றில் விளைநிலங்கள் பொதுவில் வைக்கப்பட்ட சில கிராமங்களை நாம் இன்னும் காண முடியும். 40 – 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவை அதிகமாகவே இருந்தன. ஒவ்வொரு விவசாயியும் – முன்பு குலத்தின் பொதுச் சொத்தாக இருந்து இப்பொழுது ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட அந்த நிலத்தின் தனிப்பட்ட குத்தகைதாரன் – தனது பங்கு நிலத்திற்குக் குத்தகை செலுத்துகிறான். ஆனால் சாகுபடிக்குரிய நிலம், பசும்புல் நிலம் எல்லாம் ஒன்றாக்கப்பட்டு இடத்துக்கும் தரத்துக்கும் தக்க முறையில் துண்டு நிலங்களாகப் பிரித்துத் தரப்படுகின்றன. மோசெல் நதிப் பிரதேசத்தில் அவற்றை Gewanne என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு Gewanneஇலும் ஒவ்வொருவருக்கும் பங்கு கிடைக்கிறது. சதுப்பு நிலமும் மேய்ச்சல் நிலங்களும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட மறுபிரிவினை எப்பொழுதாவது – சில சமயங்களில் ஆண்டுதோறும் – செய்யப்பட்டது. இப்படிப்பட்ட  rundale வகைக் கிராமத்தின் நிலப் படம் ஜெர்மனியில் மோசெல் நதிப் பிரதேசத்தில் அல்லது ஹோஹ்வால்தேயில் உள்ள விவசாயக் குடும்பச் சமூகத்தை (Gehoferschaft) போலவே காணப்படுகிறது. குலம் “factions” [”கட்சிகள்”] என்பவற்றிலும் பிழைத்திருக்கிறது. மிகவும் முட்டாள்தனமான, அர்த்தமற்ற வேறுபாடுகளின் அடிப்படையில் எழுந்ததாகத் தோன்றக் கூடிய, ஆங்கிலேயர்கள் அறவே புரிந்து கொள்ள முடியாத கட்சிகளை ஐரிஷ் விவசாயிகள் அடிக்கடி நிறுவுகிறார்கள். ஒருவரையொருவர் செமத்தியாக அடிக்கும் பொழுதும் வேடிக்கை பார்ப்பதற்குத் திரள்வதே இந்தக் கட்சிகளின் ஒரே நோக்கம் என்று தோன்றுகிறது. அவை அழிக்கப்பட்ட குலங்களின் செயற்கையான அவதாரங்கள், பிற்கால மாற்றுப் பொருட்கள்; அவை பரம்பரையாக வருகின்ற குல உணர்வின் தொடர்ச்சியை அலாதியான முறையில் வெளிப்படுத்துகின்றன. நிற்க, சில இடங்களில் ஒரே குலத்தின் உறுப்பினர்கள் அநேகமாகப் பழைய பிரதேசத்திலேயே ஒன்றாகக் கூடி வாழ்கின்றனர். உதாரணமாக, 1830ஆம் ஆண்டுகளில் மொனாகான் பிரதேச வாசிகளில் மிகப் பெரும்பான்மையினர் நான்கு குடும்பப் பெயர்களை மட்டுமே கொண்டிருந்தனர்; அதாவது அவர்கள் நான்கு குலங்களிலிருந்து அல்லது கிளான்களிலிருந்து சந்ததியினராக வந்தவர்கள். [நான் அயர்லாந்தில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது அங்குள்ள கிராம மக்கள் எப்படி குலக் காலத்தியக் கருத்தமைப்புகளில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மறூபடியும் உணர்ந்தேன் [1891 செப்டெம்பரில் எங்கெல்ஸ் ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் சுற்றுப் பிரயாணம் செய்தார்]. விவசாயி நிலக்கிழாரின் குத்தகைக்காரனாகத்தான் இருக்கிறான். அந்த நிலக்கிழாரை ஒரு மாதிரியான கிளான் தலைவனாகவே விவசாயி இன்னும் கருதுகிறான்; அவர் எல்லோருடைய நன்மைக்காகவே விவசாயத்தை மேற்பார்வை செய்ய வேண்டும். குத்தகையின் வடிவத்தில் கப்பம் வாங்குகின்ற உரிமை அவருக்கு உண்டு, விவசாயி கஷ்டப்படுகின்ற பொழுது அவர் உதவி செய்ய வேண்டும் என்று அவன் கருதுகிறான். அதே போல் வசதியாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் அண்டையில் ஏழ்மையிலுள்ளவர்கள் கஷ்டப்படுகின்ற காலங்களில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது கடமை என்றும் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட உதவி தர்மம் செய்வதல்ல. கிளானின் ஏழை உறுப்பினன் கிளானின் பணக்கார சக உறுப்பினனிடமிருந்து அல்லது கிளான் தலைவனிடமிருந்து உரிமையின் பேரில் பெறுவது அது. ஐரிஷ் விவசாயிகளுடைய மூளையில் முதலாளி வர்க்கச் சொத்து பற்றிய நவீனக் கருத்துகளைப் பதிய வைப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று அரசியல் பொருளியலாளர்களும் சட்ட நிபுணர்களும் ஏன் புகார் செய்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. உரிமைகளை மட்டுமே பெற்ற, கடமைகளே இல்லாத சொத்து ஒன்று இருக்க முடியும் என்பது அந்த விவசாயிகளுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். பல ஐரிஷ்காரர்கள் இப்படிப்பட்ட அப்பாவித்தனமான குலக் கருத்தமைப்புகளுடன் திடிரென்று இங்கிலாந்து அல்லது அமெரிக்காவின் பெரிய நகரங்களில் முற்றிலும் வேறுவிதமான ஒழுக்க, சட்ட அளவுகோல்களுடன் உள்ள மக்களிடையே தள்ளப்படுகின்ற பொழுது அவர்கள் ஒழுக்கம், நீதி பற்றிய தமது கருத்துகளில் குழப்பமடைந்து சிறிதும் பிடிப்பில்லாது கூட்டம் கூட்டமாக மனமுறிவுக்கு இரையாக வேண்டிய நிலைக்கு ஆளாவதில் வியப்பில்லை. (1891ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட நான்காம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]

ஸ்காட்லாந்தில் குல அமைப்பின் வீழ்ச்சி 1745ஆம் ஆண்டுக் கலகத்தை ஒடுக்கியதிலிருந்து ஆரம்பமாகிறது [ஸ்காட்லாந்தின் குன்றுப் பிரதேசக் கிளான்கள், ஆங்கில மற்றும் ஸ்காட்லாந்து நிலவுடைமைப் பிரபுக்கள் மற்றும் முதலாளி வர்கத்தினரின் நலன்களுக்காகத் தங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் நிலம் பறித்தலை எதிர்த்து 1745 – 1746இல் புரட்சிகர எழுச்சியில் ஈடுபட்டன. குன்றுப் பிரதேச மக்கள் பண்டைய குல அமைப்பை ஆதரித்தார்கள். அந்த எழுச்சி நசுக்கப்பட்ட பிறகு ஸ்காட்லாந்தின் குன்றுப் பிரதேசங்களில் கிளான் அமைபு அழிக்கப்பட்டது; குல நிலவுடைமையின் எச்சங்கள் ஒழிக்கப்பட்டன. ஸ்காட்லாந்தின் விவசாயிகள் மேன்மேலும் அதிகமாக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்; குலச் சட்ட நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டன; குல மரபுகள் சில தடை செய்யப்பட்டன.]. இந்த அமைப்பில் ஸ்காட்லாந்து கிளான் துல்லியமாக எந்த கண்ணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. வால்டர் ஸ்காட்டின் நாவல்கள் ஸ்காட்லாந்தின் குன்றுப் பிரதேசங்களைச் சேர்ந்த கிளானைப் பளிச்சென்று நம் கண்களுக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அதைப் பற்றி மார்கன் பின்வருமாறு கூறுகிறார்: இந்த கிளான்

“அமைப்பிலும், உணர்ச்சியிலும் குலத்தின் மிகச் சிறந்த மாதிரியாகும். தன் உறுப்பினர்கள் மீது குல வாழ்க்கைக்கு இருந்த சக்திக்கும் அது ஒரு அசாதாரணமான உதாரணமாகும்… அவர்களுடைய விரோதங்கள், இரத்தப் பழி வாங்குதல், குல ரீதியில் அங்கங்கே வசித்தல், நிலங்களைப் பொதுவில் பயன்படுத்தல், கிளான் உறுப்பினன் தலைவனிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் காட்டும் விசுவாசம் – இவற்றில் குல சமுதாயத்தின் வழக்கமான, விடாப்பிடியான குணாம்சங்களைக் காண்கிறோம்… மரபுமுறை ஆண்வழியில் இருந்தது; ஆண்களின் குழந்தைகள் கிளானின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள். அதன் பெண் உறுப்பினர்களது குழந்தைகள் முறையே தங்கள் தகப்பனாருடைய கிளான்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.” [L. H. Morgan, Ancient Scociety, pp. 357 – 358]

ஸ்காட்லாந்தில் முன்பு தாயுரிமை அமுலில் இருந்தது. இதைப் பிக்டுகளின் அரச குடும்பம் நிரூபிக்கிறது. இந்த அரச குடும்பத்தில் வாரிசுரிமை பெண்வழியில் இருந்தது என்று பீட் கூறுகிறார். மேலும், மத்திய காலம் வரை ஸ்காட்லாந்து மக்களிடையிலும் வேல்ஸ் மக்களிடையிலும் பூனலுவா குடும்பத்தின் அடையாளங்கள் இருந்தன என்பதை முதல் இரவு உரிமை எடுத்துக்காட்டுகிறது. நஷ்ட ஈடு கொடுத்து இவ்வுரிமையை மீட்காவிட்டால் முந்திய பொதுக் கணவன்மார்களின் கடைசிப் பிரதிநிதியான கிளான் தலைவன் அல்லது அரசன் ஒவ்வொரு மணமகளிடமும் இவ்வுரிமையைக் கோர முடியும்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2
  17. கிரேக்க குலம் 1
  18. கிரேக்க குலம் 2
  19. அதீனிய அரசின் உதயம் 1
  20. அதீனிய அரசின் உதயம் 2
  21. அதீனிய அரசின் உதயம் 3
  22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
  23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

2 thoughts on “கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1

  1. எந்தப் பகுதி புரிவதில் சிரமம் தருகிறது எனக் குறிப்பிட்டால் விள்க்குவதற்கு முயல்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s