SOC: சில கேள்விகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே SOC க்குள் நடக்கும் குழப்பங்கள், தங்கராசு முறைகேட்டுக்குப் பிறகு வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றன. செயலர் பக்கமும், அதற்கு எதிர்ப் பக்கமும் தங்கள் தன்னிலை விளக்கங்களை அறிக்கைகள் எனும் பெயரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களுள் தனி(!) என நம்பப்படும் SOCயில் இவ்வாறான நேர்வுகள் நிகழ்வது கண்டு, பொதுவான சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கலாம். ஆனால், இவை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியனவல்ல.

SOCயின் தொடக்க காலத்திலிருந்தே விலகல்களும், விலக்கல்களும், பிளவுகளும் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த விலகல் தான் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு கவனம் ஈர்த்தது. இதன்பிறகு நக்கீரன் இதழில் வெளிவந்த கோடிக்கணக்கிலான முறைகேடு, அதன் உள்ளீட்டை சந்தியில் போட்டு உடைத்து விட்டது. இப்போது செயலர் பக்கமும் அதற்கு எதிர்ப்பக்கமும் மாறிமாறி வெளியிட்டு வரும் அறிக்கைப் போர்கள் புரட்சிகர அக்கப்போர்களாக இருக்கின்றன. கம்யூனிச கலைச் சொற்களை பயன்படுத்தி விடுவதாலேயே அவை புரட்சிகர மீளாய்வு என்றாகிவிடுவதில்லை.

பொதுவாக மீளாய்வு அறிக்கைகள் வெளியிடுவதென்றால் அவற்றின் நோக்கம் முதன்மையானது. அமைப்பில் சிக்கல் வந்து விட்டது, அதனை அகவயமாகவும், புறவயமாகவும் ஆய்வு செய்து தீர்வுகளை முன்வைத்து வெளிவருவது ஒருவகை, சிக்கல் ஏற்பட்டு விட்டது, அது வெளிப்படுத்தப்பட்டும் விட்டது. எனவே, சூழலுக்கு பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்து தக்க வைத்துக் கொள்வோம் என்று வெளிவருவது மற்றொரு வகை. ஆனால் இந்த இரண்டாவது வகை தான் இங்கே நிகழ்ந்து கொண்டுள்ளது.

தொடக்கத்திலிருந்தே SOCயில், முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதோ, அல்லது ஏற்பட்ட முரண், அதன் சரியான விளக்கம் என்பதாக அணிகளிடம் கொண்டு செல்வதோ இல்லை. இதுவரை முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட பலர் உட்பட தனியாட்களாக எவ்வளவோ பேர் விலகியும் விலக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அமைப்பின் மீது கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை முன்வைத்தே இருக்கிறார்கள். எதற்கும் கோட்பாட்டு அடிப்படையிலான பதில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதில்லை. அணிகளில் யாரேனும், ஏதோ ஒரு வகையில் செவியுற்று காரணம் கோரினால், “அது அந்தந்த பகுதியில் நடக்கும் பிரச்சனை. முழுமையாக தெரியாமல் நாம் எதற்கு அது குறித்து விவாதிக்க வேண்டும்?” என்பது தான் பதிலாக இருக்கும். மீண்டும் கேள்வி எழுப்பினாலும் புறவயமான காரணங்கள் கிடைக்குமேயன்றி, அகவயமான மீளாய்வு இருக்காது. மறுபுறம் இது போன்ற நிகழ்வுகள் மேலிருந்து அணிகளிடம் விளக்கப்படுவதே இல்லை. வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவங்கள், படிப்பினைகளாக உங்கள் பகுதியிலும் இது போன்று செயல்படுத்திப் பாருங்கள் என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால், இப்படி ஒரு முரண்பாடு ஏற்பட்டது அது இன்ன விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது (பகுதி, தனித்த அடையாளங்களை தவிர்த்து விடலாம்) என்று அறிக்கை வந்ததில்லை. இன்று எதிரெதிராய் அறிக்கை விடுத்துக் கொள்ளும் இரண்டு பக்கத்தினரும் ஒரே அமைப்பாய் இருந்திருந்தார்களே, அப்போது இது குறித்து எதுவும் கூறியிருக்கிறார்களா? அல்லது தனித்தனியாக இருக்கும் இன்று ஏதேனும் கூறுவார்களா?

அன்றிலிருந்து முழுநேர ஊழியர்கள் பலர் வெளியேறி இருக்கிறார்கள். ஆனால், 2020 பிப்ரவரியில் வெளியேறியவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு அதற்கு முன்னர் வெளியேறியவர்களுக்கு கிடைக்கவே இல்லை. பிழைப்புவாதிகள் என்பதில் தொடங்கி கலைப்புவாதிகள் ஈறாக பல அடைமொழிகள் வெகுமதிகளாக கிடைத்திருக்கின்றன அவர்களுக்கு. இவர்களும் இன்னும் பிறரும் SOC மீது வத்திருக்கும் விமர்சனங்களுக்கு விடையளிக்கப் போவது யார்? இரண்டு பக்கத்தினருக்கும் அந்தக் கடமை இருக்கிறது தானே. வலது திசைவிலகல் என்று கூறிவிடுவதாலோ, குற்றங்களை மறைக்கும் கோட்பாட்டு விளக்கம் என்று கூறிவிடுவதாலோ அந்தக் கடமை இல்லாமல் போய்விடுமா?

  1. இந்தியாவின் சமூக நிலைமைகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தாமல், சீனாவின் நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்பதை பெயர்த்தெடுத்து வைத்துக் கொண்டு, நாங்கள் மட்டுமே ஆய்வு செய்திருக்கிறோம் எனும் மாயையை அணிகளிடம் ஏற்படுத்தியது ஏன்?
  2. நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்று கொள்கை வகுத்து விட்டு இப்போது 92 லிருந்து தன்னெழுச்சிப் பாதைக்கு சென்று விட்டோம் என்று விளக்குவதன் பின்னாலிருக்கும் காரணம் என்ன? அது எவ்வாறு நிகழ்ந்தது?
  3. இதுவரை கூறிக் கொண்டிருந்த மேம்போக்கான காரணங்களை விடுத்து, மிக நீண்டகாலமாய் ஆய்வுப் பணியை செய்யாமல் முடக்கிப் போட்டிருந்ததற்கான மெய்யான காரணம் என்ன?
  4. ஆய்வு செய்யாமல், அதிலிருந்து முடிவுகளைப் பெறாமல் இருந்திருந்த நிலையையும், 80களின் பிற்பகுதியில் உலகமய பொருளாதாரம் திணிக்கப்பட்டிருந்த மாறுபட்ட நிலையையும், அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் மீளாய்வு செய்யாமலேயே ‘கட்டமைப்பு நெருக்கடி’ எனும் புதிய செயல் தந்திரத்தை அறிவித்து நடைமுறைக்கு கொண்டுவந்தது எப்படி? அமைப்பு, கோட்பாட்டு அடிப்படையிலேயே இது சரிதானா?
  5. ஆய்வு, பிளீனம், இடைக்கால கமிட்டி, பெரும்பான்மை, சிறுபான்மை என்று குழப்பங்கள் மையம் கொண்டிருந்த போதும் பிளீனம் என்பதை விட (பிளீனமே செட்அப் எனும் கண்ணோட்டமும் உண்டு) அணிகளுக்குள் பொது விவாதமாக, சீர்செய் இயக்கமாக இதை கொண்டு போக வேண்டும் எனும் சிந்தனை யாருக்குமே தோன்றவில்லையே ஏன்?
  6. கட்டமைப்பு நெருக்கடி தொடங்கி கார்ப்பரேட் காவி பாசிசம் வரை அமைப்பின் கோட்பாட்டு முடிவுகளின்(!) மீது உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்காமல் கடந்து போகத் தூண்டியது எது? இது ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறை இல்லையல்லவா?
  7. நில முறைகேடு என்பது முதலாளித்துவ பார்வையில் தனிநபர் மீதான குற்றச்சாட்டு. ஒரு புரட்சிகர அமைப்பின் பார்வையில் தன்னுடைய மக்கள் திரள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது குற்றச்சாட்டு என்றாலும் அது தனிநபர் மீதான குற்றச்சாட்டு தானா? அதில் அமைப்பின் பங்களிப்பு ஒன்றுமே இல்லையா?
  8. அமைப்புக்குக்கும் உளவியல் சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு என்ன? பல தோழர்கள் (குறிப்பாக சென்னையை சூழ்ந்த பகுதி தோழர்கள்) அதில் சிக்கியுள்ளதன் பின்னணி என்ன?

நுணுகிப் போனால் இன்னும் பல விமர்சனங்கள் கேள்விகள் உண்டு. இந்தக் கேள்விகளுக்கு உள்ளேயும் கூட பல துணைக் கேள்விகள் உண்டு. அனைத்துக்குமான விடை கிடைக்காதவரை இதுவரை வந்தவையும், இன்னும் வரப்போகும் அத்தனை அறிக்கைகளும் மேற்குறிப்பிட்டபடி கலைச் சொற்களை ஆங்காங்கே தூவி அளிக்கப்படும் விளக்கமாக மட்டுமே இருக்கும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s