
செய்தி:
8.2.2021 அன்று மாலை 4.30 மணியளவில் திருப்பதி மற்றும் அவரது நண்பர்கள் மூவர் பாண்டிகோவிலில் விழாவிற்கு டோல் அடிக்கும் பணி முடிந்து காரில் வீடு நோக்கி வந்துள்ளனர், அப்போது மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் அவர்களை வழிமறித்த போலீசார், அவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதற்கு அவர்கள் மரியாதையா பேசுங்க சார் என்று கேட்டுள்ளனர். இது போதாதா போலிசுக்கு, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அங்கிருந்த காவலர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாக தாக்கத் தொடங்கி உள்ளனர். இதில் திருப்பதியை ஷூ காலால் மிதித்ததில் அவருடைய தாடை எலும்பு நொருங்கி படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செய்தியின் பின்னே:
எத்தனை எத்தனை நிகழ்வுகள் இது போல் நிகழ்ந்து விட்டிருக்கின்றன? அத்தனையும் செய்தியாக கடந்து போகிறது. அரசின் அரசாங்கத்தின் உறுப்புகள் அனைத்தும் – நீதி மன்றங்கள் உட்பட – காவல் துறையின் இந்த ஆதிக்க வெறியை, திமிர்த்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அங்கீகரிக்கின்றன. பாலியல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எந்தவித விசாரணையும் இன்றி சட்டத்தை மீறி சுட்டுக் கொன்றதை பூப்போட்டு வரவேற்ற அத்தனை பேரும் – ஊடகங்கள் உட்பட – தற்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். உயிர் போகவில்லை அல்லவா அதனால் திருப்பதிகள் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.
இது போன்று ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக் கணக்கான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. பலர் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவர் சார்பிலும் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குகள் பதியப்பட வேண்டும். ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் காவல்துறையினருக்கு எதிராக வழக்குகள் குவிய வேண்டும். ஒவ்வொரு நீதி மன்றத்திலும் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்து காவல் துறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், எத்தனை நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பிளக்ஸ் போர்டு நிரந்தரமாக வைத்து காவல்துறையை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
இது தான் அவர்களின் திமிரை ஒடுக்குவதற்கு வாய்ப்புள்ள ஒரே வழி.
அதாகப்பட்டது, “ஊதுற சங்க ஊதிட்டோம், காதும் வாயும் இருக்குறவன் பதில சொல்லு” அம்புட்டுதேன்.
தீர்வு நல்லாத்தான் இருக்கிறது.. பாதிக்கப்பட்ட வர்கள் வழக்கு தொடுக்கவே சில ஆயிரங்கள் தேவைப்படுகிறது.. அதனால்தான் நான் உள்படி வழக்கு தொடுக்க முடியவில்லை.
ஆம் தோழர்,
இதில் தனி மனிதனாக எதுவும் செய்ய முடியாது. அமைப்புகள் தான் செய்ய முடியும். புரட்சிகர அமைப்புகள் இந்த நடைமுறையில் கவனம் குவிக்க வேண்டும்.