குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 25
மக்களினங்கள் குடிபெயர்ந்து சென்ற வரைக்கும் ஜெர்மானியர்கள் குலங்களில் அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அவர்கள் கிறிஸ்ததுவ சகாப்தம் தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் டான்யூப், ரைன், விஸ்லா ஆகிய நதிகளுக்கு வடக்குக் கடல்களுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் குடியேறினார்கள் என்பது வெளிப்படை. கிம்பிரிகளும் டியூட்டானிகளும், கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வதில் இன்னும் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், சுயேவிகளோ, சீஸரது காலம் வரை எங்கும் குடியேறவில்லை. அவர்கள் குலங்களாகவும் இரத்த உறவுமுறைக் குழுக்களாகவும் (gentibus cognationibusque) குடியேறினார்கள் என்று சீஸர் திட்டவட்டமாகக் கூறுகிறார். Gens Juia [ஜூலியா குலம்]ஐச் சேர்ந்த ரோமானியர் ஒருவர் gentibus என்று சொல்லும் பொழுது அதற்குத் திட்டமான அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தைத் தவறாக புரிந்து கொள்ளவே முடியாது. இது எல்லா ஜெர்மானியர்களுக்குமே பொருந்தும். வெற்றி கொள்ளப்பட்ட ரோமானிய மாகாணங்களிலும் குல ரீதியில்தான் குடியேற்றம் நடந்ததாகத் தோன்றுகிறது. டான்யூப் நதிக்குத் தெற்கிலிருந்த படையெடுக்கப்பட்ட நிலப்பரப்பில் குலங்களாக (genealogiae) மக்கள் குடியேறினார்கள் என்ற விவரத்தை அலமான்னியச் சட்டம் உறுதி செய்கிறது [அலமான்னியச் சட்டம் – 5ஆம் நூற்றாண்டு முதல் தற்கால அல்சேஸ், கிழக்கு ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியின் தென் மேற்குப் பகுதியில் குடிபுகுந்த அலமான்னி என்னும் ஜெர்மானிய இனக்குழுக் கூட்டணியின் பொதுச் சட்டத் தொகுப்பு. அது 6ஆம் நூற்றாண்டின் முடிவுக்கும் 8ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலுள்ள காலப் பகுதியைச் சேர்ந்தது. எங்கெல்ஸ் அலமான்னியச் சட்டத்தின் LXXXI (LXXXIV) சட்டத்தை இங்கே குறிப்பிடுகிறார்]. Genealogia என்ற சொல் பிற்காலத்தில் மார்க் அல்லது கிராமச் சமூகம் என்ற சொற்களுக்குரிய அர்த்தத்திலேயேதான் உபயோகிக்கப்பட்டது. இந்த genealogiac என்பவை பெரிய வீட்டுச் சமூகங்களே, அவற்றுக்கு இடையில் நிலம் பங்கிடப்பட்டிருந்தது, அவற்றிலிருந்துதான் பிற்காலத்தில் கிராமச் சமூகங்கள் வளர்ச்சியுற்றன என்ற கருத்தைச் சமீபத்தில் கவலேவ்ஸ்கி வெளியிட்டார். Fara என்பதற்கும் இது சரியாக இருக்கலாம். அலமான்னியச் சட்டத்தில் genealogia என்று குறிக்கப்படுவதைத் துல்லியமாக இல்லாவிட்டாலும் அநேகமாக அதைப் போன்றதைத்தான் புர்குண்டியர்களும் லாங்கோபார்டுகளும் – எனவே கோதிக் இனக்குழுவும் ஹெர்மினோனியன் அல்லது மேல் ஜெர்மன் இனக்குழுவும் – fara என்ற சொல்லால் குறித்தார்கள். இது மெய்யாகவே குலத்தைக் குறிக்கிறதா அல்லது வீட்டுச் சமூகத்தைக் குறிக்கிறதா என்பது மேலும் ஆராயப்பட வேண்டியதாகும்.
குலம் என்பதற்கு ஜெர்மானியர்கள் எல்லோரிடமும் ஒரு பொதுவான சொல் இருந்ததா, இருந்திருக்குமானால் அந்தச் சொல் என்ன என்ற விஷயத்தில் மொழி பற்றிய ஆவணங்கள் சந்தேகத்தையே தருகின்றன. சொல்லிலக்கணத்தின்படி, கிரேக்கச் சொல் genos, லத்தீன் சொல் gens ஆகிய இரண்டும் கோதிக் சொல் kuni, மத்திய மேல் ஜெர்மன் kunne இரண்டுடனும் பொருந்துகின்றன, அதே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றன. பெண் என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து – கிரேக்க மொழியில் gyne, ஸ்லாவ் மொழியில் zena, கோதிக் மொழியில் qvino, பழங்கால நோர்ஸ் மொழியில் kona, kuna – பெறப்படுவதைக் கொண்டு நாம் தாயுரிமைக் காலத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறோம். முன்னே கூறியபடி, புர்குண்டியர்கள், லாங்கோபார்டுகள் மத்தியில் fara என்று சொல் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். கிரிம் என்பவர் அதை fisan – பெற்றெடுத்தல் என்ற உத்தேச வேர்ச்சொல்லிலிருந்து பெறுகிறார். அதைக் காட்டிலும் வெளிப்படையான faran – செல்லுதல் [ஜெர்மன் மொழியில் fahren], திரிதல், திரும்ப வருதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்து அதை அடையாளம் கண்டு கொள்ளவே நான் விரும்புகிறேன். இந்தச் சொல் நாடோடியாக வாழ்கின்ற மக்களின் திட்டவட்டமான ஒரு பகுதியை – இது உறவினர்களைக் கொண்டது என்று சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம் – குறிப்பிடுகிறது. முதலில் கிழக்கிலும் பிறகு மேற்கிலும் பல நூற்றாண்டுகளாக சுற்றித் திரிந்த போக்கில் இந்தச் சொல் படிப்படியாக குலக் கூட்டுச் சமூகத்துக்கும் பிரயோகிக்கப்பட்டது. மேலும், கோதிக் மொழியில் sibja, ஆங்கில-சாக்சன் மொழியில் sib, பழங்கால மேல் ஜெர்மன் மொழியில் sippia, sippa – இரத்த உறவினர்கள் என்ற சொற்களும் உள்ளன [ஜெர்மன் மொழியில் sippe]. பன்மையை மட்டுமே குறிக்கும் sifjar என்ற சொல் (உறவினர்கள்) பழங்கால நோர்ஸ் மொழியில் உள்ளது. ஒருமைச் சொல் sif என்ற பெண் தெய்வத்தை மட்டுமே குறிக்கிறது. கடைசியாக, ஹில்டெபிரண்டைப் பற்றிய பாடலில் இன்னொரு சொல் வருகிறது [ஹில்டெபிராண்டைப் பற்றிய பாடல் – வீர யுகத்தைச் சேர்ந்த காவியம். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைக்கால ஜெர்மானிய மகாகாவியக் கவிதைக்கு ஒரு உதாரணம். இதில் சில பகுதிகள் மட்டுமே இன்று கிடைத்துள்ளது]. அப்பாடலில் ஹில்டெபிராண்ட் ஹாதுபிராண்ட் என்பவனைக் கேட்கிறார்:
”மக்களிலுள்ள ஆண்களில் உன் தகப்பனார் யார்… நீ எந்தக் குலத்தைச் சேர்ந்தவன்?”
குலம் என்பதற்கு ஜெர்மன் மொழியில் பொதுவான சொல் ஒன்று இருந்திருக்குமானால் அது கோதிக் மொழி kuni என்ற சொல்லாக இருந்திருக்கக் கூடும். நெருக்கமான உறவுள்ள இதர மொழிகளிலுள்ள சொற்களுடன் அது பொருந்துவதனால் மட்டும் இதைக் குறிக்கவில்லை; குலம் அல்லது இனக்குழுவின் தலைவனை ஆதியில் குறித்த kuning – அரசன் [ஜெர்மன் மொழியில் konig] என்ற சொல்லும் அதிலிருந்து தான் பிறந்தது என்ற உண்மையும் அதைக் குறிக்கிறது. Sibja, இரத்த உறவினர்கள் என்ற சொல் நாம் ஆராய்வதற்குத் தகுதியற்றதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம், பழங்கால நோர்ஸ் மொழியில் sifjar என்ற சொல் இரத்த உறவினர்களை மட்டுமன்றி திருமண வழியாக வந்த உறவினர்களையும் குறித்தது. எனவே அது குறைந்தபட்சம் இரண்டு குலங்களின் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. எனவே sif என்ற சொல் குலத்தை குறிக்கின்ற சொல்லாக இருக்க முடியாது.
மெக்சிகோ மக்கள், கிரேக்க மக்களிடையே இருந்த்தைப் போலவே ஜெர்மானியர்களிடையிலும் குதிரை வீரர்களும் ஆப்பு போன்ற காலாட்படையினரும் போர் செய்வதற்குக் குல ரீதியில்தான் அணிவகுத்து நிறுத்தப்பட்டார்கள். குடும்பங்களாகவும் இரத்த உறவினர்களாகவும் நிறுத்தப்பட்டதாக டாசிட்டஸ் எழுதுகின்ற பொழுது அவருடைய தெளிவில்லாத சொற்பிரயோகத்தை விளக்குவது எது? அவர் காலத்தில் ரோமாபுரியில் குலம் என்பது நெடுங்காலமாகவே உயிரில்லாத கூடாக இருந்தது என்பதுதான்.
டாசிட்டஸ் நூலில் தீர்மானகரமான முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு பகுதியுண்டு; அதில் அவர் பின்வருமாறு சொல்கிறார்: தாயின் சகோதரன் தனது மருமகனைத் தன் மகனாகவே கருதுகிறான்; தாய்மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலுள்ள இரத்த உறவு, தகப்பனார் – மகன் உறவை விட அதிகப் புனிதமானது, நெருக்கமானது என்று சிலர் கூறுகின்றனர்; ஆக, ஜாமீன் நபர்களைக் கோருகின்ற பொழுது, யாருக்காக ஜாமீன் கோரப்படுகிறதோ, அவனுடைய மகனை விட அவனுடைய சகோதரியின் மகனை ஜாமீனாக ஒப்படைப்பது நல்லது என்று கருதப்படுகிறது. தாயுரிமைக் குலம் – ஆக, ஓர் ஆதிக் குலம் – எச்சமாகத் தப்பிப் பிழைத்திருப்பதை இங்கே பார்க்கிறோம்; அது ஜெர்மானியர்களை இனங்காட்டுகின்ற குறியடையாளமாகவும் வர்ணிக்கப்படுகிறது. [தாய்மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலுள்ள உறவின் நெருக்கமான தன்மையை – பல மக்களினங்களிலே காணப்படுகின்ற தாயுரிமையின் எச்சமே இது – வீர யுகத்தைச் சேர்ந்த தொல்கதைகளில்தான் கிரேக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். டியாடோரஸ் எழுதிய நூலில் (IV, 34) மில்லியாகர் தெஸ்டியசின் குமாரர்களைக் கொல்கிறான். அவர்கள் அவனுடைய தாயான அல்தேயாவின் சகோதரர்களாவர். அவள் இதை மிகவும் பாபகரமான குற்றமாகக் கருதுவதால் அவனை, அதாவது தன் சொந்த மகனைச் சபிக்கிறாள், அவன் சாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள். “தெய்வங்கள் அவள் விருப்பத்தை நிறைவேற்றின, மிலியாகரின் வாழ்க்கையை முடித்தன என்று சொல்லப்படுகிறது.” அதே ஆசிரியர் சொல்கிறபடி (டியாடோரஸ், IV, 43 மற்றும் 44), ஹெராக்லசின் தலைமையில் சென்ற அர்கோனாட்டுகள் திராகியாவில் இறங்கினார்கள். அவர்கள் அங்கே பீனியஸ் என்பவன் தனது இரண்டாவது மனைவியின் தூண்டுதலின் பேரில் முதல் மனைவியின் மூலம் பிறந்த தன் புதல்வர்களை இருவரையும் மோசமாக நடத்தி வருவதைக் கண்டார்கள். அவன் முதல் மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறான். அவளுடைய பெயர் கிளியோபாத்ரா போரியாட்டு. ஆனால் அர்கோனாட்டுகள் மத்தியிலும் சில போரியாட்டுகள் இருக்கிறார்கள், அவர்கள் கிளியோபாத்ராவின் சகோதரர்கள். எனவே அவர்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்த அந்தப் புதல்வர்களுக்குத் தாய்மாமன் முறையாக வேண்டும். எனவே அவர்கள் உடனே மருமகன்களின் உதவிக்குச் சென்று அவர்களை விடுவிக்கிறார்கள், அவர்களைக் காவல் செய்தவர்களைக் கொல்கிறார்கள். (எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)]. இவ்விதக் குலத்தின் உறுப்பினன் தான் நிறைவேற்ற ஒத்துக் கொண்ட பொறுப்புக்கு ஜாமீனாகத் தன் மகனைக் கொடுத்துத் தகப்பனின் நம்பிக்கை மோசடியால் மகன் பலியாக நேர்ந்தால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவன் தகப்பன் ஒருவனே. ஆனால் ஒரு சகோதரியின் மகன் பலியாக்கப்படும் பொழுது புனிதமான குல விதி மீறப்படுகிறது. அந்தச் சிறுவனை அல்லது வாலிபனைப் பாதுகாப்பதற்கு மற்றவர்களை விடக் கடமைப்பட்டிருக்கிற அடுத்த இரத்த உறவினன் அவனுடைய மரணத்துக்குப் பொறுப்பாகிறான். அவன் அந்தச் சிறுவனை ஜாமீனாகத் தந்திருக்கக் கூடாது அல்லது ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு இருந்ததற்கு வேறெந்த அடையாளக் குறிகளும் நமக்கு இல்லாமற் போனாலும் இந்த நூல் பகுதி ஒன்றே அதற்குப் போதுமான சான்றாகும்.
இதை விடத் தீர்மானகரமான சான்று – அது சுமார் 800 ஆண்டுகள் கழித்து வருவதால் அதைத் தீர்மானகரமானது என்கிறோம் – Voluspa என்கிற பழங்கால நோர்ஸ் பாடலில் தெய்வங்களின் அந்திக்காலம் மற்றும் உலகத்தின் முடிவு பற்றி எழுதப்பட்டிருக்கின்ற ஒரு பகுதியாகும். “பெண்ஞானியின் மனக்காட்சி” என்னும் இப்பகுதியில் கிறிஸ்துவ சமயத்தின் அம்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று பாங்க், புக்கே ஆகியோர் காட்டியிருக்கின்றனர். ஊழிப் பெருவெள்ளத்துக்கு முன் ஒழுக்கக் கேடும் ஊழலும் எங்கும் நிறைந்திருக்கின்ற காலப் பகுதியைப் பற்றிய வர்ணனையில் இந்த வாசகம் காணப்படுகிறது:
”Broedhr munu berjask ok at bonum verdask, munu systrungar sifjum spilla.”
“சகோதரர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்; ஒருவரையொருவர் மடித்துக் கொள்வார்கள். மேலும், சகோதரிகளின் குழந்தைகள் இரத்த உறவுமுறையின் பிணைப்புகளை முறித்தெறிவார்கள்.”
Systrungr என்பதற்குத் தாயின் சகோதரியின் மகன் என்று அர்த்தம். சகோதரிகளின் குழந்தைகள் இரத்த உறவை நிராகரிப்பது சகோதரனைக் கொலை செய்த குற்றத்தை விடக் கொடிய குற்றமாகும் என்று கவிஞர் கருதுகிறார். தாயின் தரப்பைச் சேர்ந்த இரத்த உறவை வலியுறுத்துகின்ற syskina-born (சகோதரர், சகோதரிகளின் குழந்தைகலள்) அல்லது syskina-synir (சகோதரர், சகோதரிகளின் புதல்வர்கள்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தால், இரண்டாவது வரி முதல் வரியிலிருந்து உச்ச நிலைக்குப் போயிருக்காது, அதற்கு பதிலாக கீழ்நிலைக்கு இறங்குவதாக இருக்கும். எனவே voluspa இயற்றப்பட்ட வைக்கிங்குகள் காலத்திலும் ஸ்காண்டிநேவியாவில் தாயுரிமை பற்றிய நினைவு இன்னும் அழியாமலிருந்தது.
மற்றபடி, டாசிட்டஸ் காலத்தில், ஜெர்மானியர்களிடையில் – குறைந்தபட்சம், அவர்களைப் பற்றித்தான் அவருக்கு அதிகமாகத் தெரியும் – ஏற்கெனவே தாயுரிமை தந்தையுரிமைக்கு வழிவிட்டு விட்டது. குழந்தைகள் தகப்பனாரின் வாரிசுகளே; குழந்தைகள் இல்லாவிட்டால், சகோதரர்களும் தந்தை, தாய் வழி வந்த மாமன்மார்களும் வாரிசுகளாவார்கள். தாயின் சகோதரனை வாரிசுரிமைக்குள் அனுமதிப்பது மேற்கூறிய வழக்கத்தைப் பாதுகாப்பதுடன் சம்பந்தப்பட்டதாகும்; மேலும், அக்காலத்தில் ஜெர்மானியர்களிடையில் தந்தையுரிமையின் அடையாளச் சின்னங்களை நாம் பார்க்கிறோம். இக்காலகட்டத்தில், குறிப்பாகப் பண்ணையடிமைகள் மத்தியில் தந்தைமை இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக, ஓடிப் போன பண்ணையடிமை ஒரு நகரத்திலிருந்து திருப்பியனுப்பப்பட வேண்டுமென்று ஒரு நிலக்கிழார் கோரிய பொழுது, அவன் பண்ணையடிமைதான் என்பதை நிலைநாட்டுவதற்கு அவனது தாய் தரப்பிலிருந்து மட்டுமே வந்த மிக நெருங்கிய ஆறு இரத்த உறவினர்களின் பிரதிக்ஞைகள் தேவைப்பட்டன; உதாரணமாக, ஔக்ஸ்பர்க், பாஸெல், கைஸர்ஸ்லவுடர்ன் ஆகிய இடங்களில் இப்படித்தான் இருந்தது (மௌரர், நகர அமைப்பு, I, பக்கம் 381).
அன்று நசியத் தொடங்கியிருந்த தயுரிமையின் மற்றொரு எச்சம் பெண்ணினத்தின் பால் ஜெர்மானியர்கள் வைத்திருந்த மதிப்பே; ரோமானியக் கண்ணோட்டத்தின்படி இதை விளக்குவது மிகக் கடினமே. ஜெர்மானியர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதமாக உயர்குடிக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் சிறந்த பணயக் கைதிகள் என்று கருதப்பட்டார்கள். தமது மனைவியரும் புதல்வியரும் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படலாம் என்ற பயங்கரமான சிந்தனையைப் போல் யுத்தத்தில் அவர்களுக்கு வீரியத்தைக் கொடுத்த சிந்தனை வேறொன்றும் இல்லை; பெண் புனிதமானவள், ஓரளவுக்கு எதிர்காலத்தை முன்னறிவிக்கக் கூடியவள் என்று அவர்கள் கருதினார்கள்; மிகவும் முக்கியமான விவகாரங்களில் அவளுடைய அலோசனையின் படி நடந்தார்கள். லீப் நட்தி மேலிருந்த புருக்டேரிய இனக்குழுவின் விலேடா என்கிற பூசாரிப் பெண் படேவிய எழுச்சி முழுவதையும் இயக்குகிற சக்தியாக இருந்தாள். இந்த எழுச்சியின் போது ஜெர்மானியர்களுக்கும் பெல்ஜியர்களுக்கும் தலைமை தாங்கிய சிவிலிஸ், கோலில் ரோமானிய ஆட்சியின் அடிப்படைகளையே குலுக்கினான் []. வீட்டில் பெண்களுக்கிருந்த அதிகாரத்தை யாரும் மறுக்கவில்லை என்று தெரிகிறது. கிழவர்கள், குழந்தைகளின் உதவியுடன் பெண்கள்தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது; ஆண்கள் வேட்டையாடச் சென்றார்கள், குடித்தார்கள், வீணே காலத்தைக் கழித்தார்கள் என்று டாசிட்டஸ் கூறுகிறார். ஆனால் நிலங்களைப் பயிர் செய்தது யார் என்று அவர் எழுதவில்லை; அடிமைகள் கட்டாயக் கட்டணங்களை மட்டுமே கொடுத்து வந்தார்கள், அவர்கள் கட்டாய உழைப்பு எதுவும் செய்யவில்லை என்று அவரே தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே செய்ய வேண்டிய விவசாய வேலை எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை வயதுவந்த ஆண்களின் பெரும் பகுதியினர்தான் செய்தார்கள் என்று தோன்றுகிறது.
மேலே எடுத்துக்காட்டியபடி, திருமண வடிவம், ஒருதார மணத்தைப் போல படிப்படியாக ஆகிக் கொண்டிருந்த இணை மணமே ஆகும். கண்டிப்பான ஒருதார மணம் இன்னும் ஏற்படவில்லை, ஏனென்றால் பலதார மணம் செல்வர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் (கெல்டுகளைப் போலன்றி) பெண்கள் கண்டிப்பாகக் கற்புடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. ஜெர்மானியர்களுடைய திருமண பந்தத்தின் மீறமுடியாத தன்மையைப் பற்றி டாசிட்டஸ் மனமுருகி எழுதுகிறார்; பெண் சோரம் போவது ஒன்றைத்தான் திருமண ரத்துக்குக் காரணமாகக் காட்டுகிறார். ஆனால் அவருடைய வர்ணனையில் பல இடைவெளிகள் இருக்கின்றன; மேலும், ஒழுக்கக் கேட்டில் திளைத்த ரோமானியர்களை ஒழுக்கத்தின் ஆதர்சமாகக் காட்டுவதற்கு அது வெளிப்படையாக முயற்சி செய்கிறது. ஒன்று மட்டும் உறுதி: காடுகளில் வாழ்ந்த ஜெர்மானியர்கள் ஒழுக்கத்தின் பேருருவமாக இருந்தார்களென்றால், அவர்களை மற்ற சராசரி ஐரோப்பியர்களின் தரத்துக்கு இறக்கி விடுவதற்கு வெளியுலகத்துடன் சிறிதளாவு தொடர்பு மட்டுமே போதுமானதாக இருந்தது. ரோமானிய வாழ்க்கையின் வேகச் சுழலில் கண்டிப்பான ஒழுக்கத்தின் கடைசி அறிகுறி ஜெர்மன் மொழியை விட விரைவாக மறைந்து விட்டது. தூர் நகரத்து கிரிகோரியைப் படித்தால் போதும். நாகரிக முலாம் பூசிய சிற்றின்ப வாழ்க்கை ரோமாபுரியில் இருந்ததைப் போல ஜெர்மானியின் ஆதிகாலக் காடுகளில் இருக்க முடியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும். ஆக, இந்த அம்சத்திலும் ரோமானிய உலகை விட ஜெர்மானியர்கள் உயர்ந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அதற்காக எந்த மக்களினத்திலும் எக்காலத்திலும் பொது விதியாக இருக்காத காம இச்சைக் கட்டுப்பாடு அவர்களிடம் இருந்ததாகக் கற்பிக்க வேண்டியதில்லை.
தனது தகப்பனார், உறவினர்களின் நட்புகளை மட்டுமன்றி சண்டைகளையும் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய கடமையும் குல அமைப்பிலிருந்துதான் தோன்றியது. மன்னிப்புக் காணிக்கை (wergeld), அதாவது கொலை செய்ததற்கு அல்லது காயப்படுத்தியதற்கு இரத்தப் பழி வாங்குவதற்கு பதிலாகப் பிராய்ச்சித்தம் செய்கின்ற முறையில் செலுத்தும் தொகையும் அதைப் போன்றதே. இந்த மன்னிப்புக் காணிக்கை ஓர் அலாதியான ஜெர்மன் ஏற்பாடு என்று ஒரு தலைமுறைக்கு முன்னர் கருதப்பட்டது. குல அமைப்பிலிருந்து தோன்றிய இரத்தப் பழியின் இந்த நயமான வடிவத்தை நூற்றுக்கணக்கான மக்களினங்கள் கடைபிடித்தன என்று அதற்கு பின்னர் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, விருந்தோம்பல் என்ற கடமையைப் போல, அமெரிக்க செவ்விந்தியர்களிடம் அது காணப்படுகிறது; விருந்தோம்பல் முறையைப் பற்றி டாசிட்டஸ் தரும் வர்ணனை (ஜெர்மானியா, அத்தியாயம் 21) விவரங்களில் கூட செவ்விந்தியர்களைப் பற்றி மார்கன் அளித்த வர்ணனையை ஒத்திருக்கிறது.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
- மாமேதை ஏங்கல்ஸ்.
- 1884 ல் எழுதிய முன்னுரை
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
- பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
- ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
- குடும்பம் – 1
- குடும்பம் – 2
- குடும்பம் – 3
- குடும்பம் – 4
- குடும்பம் – 5
- குடும்பம் – 6
- குடும்பம் – 7
- குடும்பம் – 8
- குடும்பம் – 9
- இராகோஸ் குலம் 1
- இராகோஸ் குலம் 2
- கிரேக்க குலம் 1
- கிரேக்க குலம் 2
- அதீனிய அரசின் உதயம் 1
- அதீனிய அரசின் உதயம் 2
- அதீனிய அரசின் உதயம் 3
- ரோமாபுரியில் குலமும் அரசும் 1
- ரோமாபுரியில் குலமும் அரசும் 2
- கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1