
செய்தி:
பெட்ரோலில் எத்தனால் கலந்து வினியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி எனக் கூறி, மத்திய அரசு இது பற்றி ஒரு ஆணை போட்டது. எத்தனால் கலப்பு இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனால் வாகன உரிமையாளர்கள்தான் எரிச்சலடைந்துள்ளனர். பெட்ரோல் டேங்க் பக்கத்தில், தண்ணீரால் கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்க் உள்ளே தண்ணீர் கலந்து விடக்கூடாதாம்.பெட்ரோல் டேங் மூடியை சரியாக மூடி வைக்க வேண்டுமாம். ஒருவேளை தண்ணீர் உள்ளே போனால் அவ்வளவுதான் என்கிறார்கள்.
பெட்ரோலில் உள்ள எத்தனாலை இழுக்க சிறிதளவு தண்ணீர் போதும். தண்ணீர் கலந்தால் பெட்ரோலிலுள்ள எத்தனால் தண்ணீராக மாறிவிடும். அது பெட்ரோல் டேங் அடியில் சென்று சேர்ந்துவிடும். இதனால் வாகனம் பழுதாக வாய்ப்புள்ளது. இதன் விளைவுக்கு வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
செய்தியின் பின்னே:
முதலில், பெட்ரோல் விலை என்பது அரசு மக்களிடம் செய்யும் வழிப்பறிக் கொள்ளை. எல்லா விற்பனையும், சேவையும் GSTக்குள் அடக்கம் என்றார்கள். ஆனால் பெட்ரோல் டீசலை GSTக்குள் கொண்டுவர மறுக்கிறார்கள். பெட்ரோலின் அடக்க விலையைப் போல் சற்றேறக் குறைய இரண்டு மடங்கு வரியாக விதிக்கப்படுகிறது. இது இரக்கமற்ற, கொடூரமான வழிப்பறிக் கொள்ளை.
தற்போது 10 சதவீதம் எத்தனால் கலக்க ஆணை பிறப்பித்துள்ளது அரசு. இதை இருபது சதவீதம் வரை அதிகரிக்க திட்டம் இருக்கிறது. இதை பெட்ரோல் விலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பெட்ரோல் விலையில் தற்போது 10 சதவீதமும் விரைவில் 20 சதவீதமும் எத்தனாலுக்கு கொடுக்கப் போகிறோம். தங்கத்தில் 24 காரட்டில் நகை செய்ய முடியாது எனவே சிறிது செம்பும் கலந்தால் தான் நகை செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒருபோதும் செம்புக்கான எடையை தங்க நகையிலிருந்து கழிப்பதில்லை. 50 கிராம் நகை வாங்குகிறோம் என்றால் அதில் 3 கிராம் வரை செம்பை தங்க விலையில் வாங்குகிறோம் என்பது பொருள். அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 200 மில்லிகிராம் எத்தனாலை பெட்ரோல் விலையில் வாங்குகிறோம் என்று பொருள். (எத்தனால் என்பது சர்க்கரை தயாரிக்கும் போது கரும்புச் சக்கையிலிருந்து பெறப்படும் ஒரு கழிவுப் பொருள் (துணை விளைபொருள்)
அடுத்து, பெட்ரோல் பல்குகள் பெரும்பாலானவற்றில் கலப்படம் செய்யப்படுகிறது. அளவில் முறைகேடு நடைபெறுகிறது, மீட்டரில் வேகமாக சுற்றும்படி செய்கிறார்கள், நிரப்பும் போது முழுமையாக நிரப்பாமல் வால்வுகளை மாற்றி அமைக்கிறார்கள், பெட்ரோலில் கலப்படம் செய்கிறார்கள். இப்படி எத்தனையோ விதங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இப்போது அரசே அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. எத்தனை சதவீதம் எத்தனால் கலந்திருக்கிறது என்பதை வாடிக்கையாளர் சோதனை செய்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்குத் தான் எத்தனால் கலக்கிறோம் என்பது மோசடியான முடிவு. சுற்றுச் சூழலை பாழ்படுத்துவதில் முதல் இடம் வகிப்பது தொழிற்சாலைகள் தான். அவை வெளியேற்றும் கழிவுகளுக்கு எந்த ஒரு தணிக்கையும் கிடையாது. பெயரளவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிகள் இருந்தாலும் எந்த பெரிய ஆலையும் அதை மதிப்பதே இல்லை. அடுத்த இடங்களில் இருப்பவை மரங்களை அழிப்பதும், நீர்நிலைகளை பாழ்படுத்துவதும். இவைகளையும் அரசு முன்னின்று நடத்துகிறது. இவைகளோடு ஒப்பிட்டால் வாகனங்கள் வெளியேற்றும் புகை என்பது சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் குறைந்த அளவு பங்கே செலுத்துகிறது. பெருமளவு சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் திட்டங்களை எல்லாம் அரசே முன்னின்று பெரும் முனைப்புடன் நடத்தி விட்டு வாகனப் புகையைக் கட்டுப்படுத்த எத்தனால் கலக்கிறோம் என்பது யாரை ஏமாற்ற?
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது மக்களின் மீது கொஞ்சமேனும் அக்கரை மிச்சமிருக்கும் அரசு என்ன செய்யும்? மக்களுக்கு அதைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்காக பெட்ரோலுடன் எத்தனால் கலக்கிறோம் என்று மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக அரசு எதையாவது செய்திருக்கிறதா? ஒவ்வொரு பெட்ரோல் பல்கிலும் மோடி படம் மிகப் பெரியதாக கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும். மோடியை புகழ்வதற்கும், ஓட்டுப் பொறுக்குவதற்கும் பெரிய பெரிய கட்டவுட் வைக்க கட்டாயப்படுத்தும் அரசு எத்தனால் கலப்பை மக்களுக்கு தெரிவிக்க என்ன செய்தது?
இவை அனைத்தையும் எப்போது செய்திருக்கிறார்கள்? கொரோனாவால் பெரு முடக்கத்தை சந்தித்து வாழ வழியில்லாமல் இருந்து தற்போது தான் கொஞ்சம் மூச்சு விடத் தொடங்கியிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். ஏற்கனவே இப்படியான திட்டம் முன்பே தீட்டப்பட்டிருந்தது என்றாலும், இந்த நேரத்தில் இப்படி நடந்து கொள்வதன் பொருள் என்ன? ஏற்கனவே பாசிஸ்டுகளாக, இரக்கமே இல்லாத கொடூரர்களாக இருக்கும் அரசாங்கமும் அரசும் தங்களின் கொடூரத் தன்மையில் வார்த்தைகளால் தெரிவிக்க இயலாத எல்லைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைத் தான் இது பொருளாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
அதாகப்பட்டது, “குப்புறக் கவுந்த குதிர குழியும் பறிச்சது போல” அம்புட்டுதேன்.