கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 26

டாசிட்டஸ் காலத்தைச் சேர்ந்த ஜெர்மானியர்கள் ஏற்கெனவே விளை நிலங்களை முடிவாகப் பங்கீடு செய்திருந்தார்களா, இல்லையா, அது சம்பந்தப்பட்ட நூல் பகுதிகளின் சரியான அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி நடைபெற்ற உணர்ச்சிகரமான, இடைவிடாத சர்ச்சை இப்பொழுது பழைய சங்கதியாகி விட்டது. அநேகமாக எல்லா மக்களினங்களிலும் விளை நிலங்கள் குலங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன, பிற்காலத்தில் பொதுவுடைமைக் குடும்பச் சமூகங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன (இந்த வழக்கம் சுயேவிகளிடையில் இன்னும் நீடித்திருப்பதை சீஸர் கண்டார்), பிற்காலத்தில் அந்த நிலம் தனித்தனிக் குடும்பங்களிடையில் பங்கு பிரிக்கப்பட்டும் அவ்வப்பொழுது மறுபடியும் பங்கீடு செய்யப்பட்டும் வந்தது, அவ்வப்பொழுது நடைபெறுகின்ற இந்த மறு பங்கீடு இன்றைய தினம் வரை ஜெர்மனியின் சில பகுதிகளில் இருக்கிறது என்பவை நிலை நாட்டப்பட்ட பிறகு நாம் இவ்விஷயங்களில் இனியும் முயற்சியை வீணாக்க வேண்டியதில்லை. ஜெர்மானியர்கள் 150 ஆண்டுகளில் பொது விவசாயத்திலிருந்து – சுயேவிகளிடம் இவ்வழக்கம் இருந்ததாக சீஸர் திட்டவட்டமாகக் கூறுகிறார்; அவர்களிடம் பிரிவோ, பிரிவான விளை நிலமோ, தனிப்பட்ட விளை நிலமோ எதுவும் கிடையாது என்று அவர் கூறுகிறார் – டாசிட்டஸ் காலத்தில் ஆண்டு தோறும் நிலத்தை மறு பங்கீடு செய்வதுடன் சேர்ந்த தனிப்பட்ட விவசாயத்துக்கு வந்து சேர்ந்தார்கள் என்றால், அது நிச்சயமாகப் போதிய முன்னேற்றமே. அந்தக் கட்டத்திலிருந்து அவ்வளவு குறுகிய காலத்தில், வெளித் தலையீடு எதுவுமின்றி நிலத்தில் முழுமையான தனியுடைமைக்கு மாறுதல் சாத்தியமே அல்ல. எனவே டாசிட்டஸ் நூலில் அவரே அநேகமாகச் சொல்வதைத்தான் நான் உணர முடியும்: அவர்கள் ஆண்டுதோறும் விளை நிலத்தை மாற்றுகிறார்கள் (அல்லது மறு பங்கீடு செய்கிறார்கள்); அதில் போதுமான பொது நிலமும் மிஞ்சுகிறது. விவசாயத்துக்கும் நிலத்தைப் பயன்படுத்தலுக்கும் உரிய அந்தக் கட்டம் அக்காலத்திய ஜெர்மானியர்களின் குல அமைப்புக்கு முற்றிலும் சரியாக இருந்தது.

மேலேயுள்ள பாராவை முந்திய பதிப்புகளில் உள்ள படியே விட்டு வைக்கிறேன். இதற்கிடையில் இந்தப் பிரச்சினை மற்றொரு அம்சத்தைப் பெற்றிருக்கிறது. தந்தை வழி வீட்டுச் சமூகம் சர்வப்பொதுவாக இல்லாவிட்டாலும் வீட்டுச் சமூகம் சர்வப்பொதுவாக இல்லாவிட்டாலும் பரவலாக இருந்தது, தாயுரிமை வகைப்பட்ட பொதுவுடைமைக் குடும்பத்துக்கும் நவீன காலத்திய தனிப்பட்ட குடும்பத்துக்கும் இடையில் அது இணைப்புக் கண்ணியாக இருந்தது என்பதை கவலேவ்ஸ்கி நிரூபித்துக் காட்டியிருப்பதனால் (மேலே பக்கம் 44 பார்க்க [இங்கே எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற பக்கம் நான்காவது ஜெர்மன் பதிப்பிலுள்ள பக்கமாகும். இத்தொகுதியில் பக்கங்கள் 96-97ஐப் பார்க்க.]) நிலம் பொதுச் சொத்தாக இருந்ததா, தனிச் சொத்தாக இருந்ததா – மௌரரும் வெயிட்சும் இன்னும் இதைத்தான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் – என்பது இப்பொழுது பிரச்சினை அல்ல, பொதுச் சொத்து என்ன வடிவம் கொண்டிருந்தது என்பதே பிரச்சினையாகும். சீஸர் காலத்தில் சுயேவிகள் நிலத்தைப் பொதுவுடைமையாக வைத்திருந்தது மட்டுமன்றி நிலத்தைப் பொதுக் கணக்கில் பொதுவில் விவசாயம் செய்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுடைய பொருளாதார அமைப்பின் அலகு குலமா அல்லது வீட்டுச் சமூகமா அல்லது இடைநிலைப் பொதுவுடைமை வகைப்பட்ட இரத்த உறவுக் குழுவா; அல்லது வெவ்வேறு ஸ்தல நில நிலைமைகளைப் பொறுத்து இந்த மூன்று குழுக்களுமே இருந்து வந்தனவா என்ற கேள்விகள் இன்னும் நெடுங்காலம் வரை சர்ச்சைக்குரிய விஷயங்களாகவே இருந்து வரும். டாசிட்டஸ் வர்ணித்திருக்கின்ற நிலைமைகள் மார்க் அல்லது கிராமச் சமூங்களைப் பற்றியவை அல்ல, அதற்கு பதிலாக வீட்டுச் சமூகத்தைப் பற்றித்தான் கூறுகின்றன, வீட்டுச் சமூகம்தான் நெடுங்காலத்திற்குப் பிறகு, மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக கிராமச் சமூகமாக வளர்ந்தது என்று கவலேவ்ஸ்கி எழுதுகிறார்.

எனவே ரோமானியர் காலத்தில் தாங்கள் வசித்திருந்த பிரதேசங்களிலுள்ள ஜெர்மானியக் குடியிருப்புகளும், பின்னர் ரோமானியர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களிலுள்ள ஜெர்மானியக் குடியிருப்புகளும் கிராமங்களாக இருந்திருக்க முடியாது; அவை சில தலைமுறைகளைக் கொண்ட பெரும் குடும்பச் சமூகங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவை அதற்கேற்றபடி மாபெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்து சுற்றியுள்ள களர் நிலத்தை ஒரு பொது மார்க்காக தம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தி இருக்கின்றன. அப்படியானால், விளை நிலத்தை மாற்றுவதைப் பற்றி டாசிட்டஸ் நூலில் வருகின்ற பகுதி வேளாண்மையியல் அர்த்தத்தையே உண்மையாக கொண்டிருக்கும்; அதாவது, சமூகம் ஆண்டுதோறும் வெவ்வேறு நிலங்களில் விவசாயம் செய்து வந்தது; முந்திய ஆண்டில் விவசாயம் செய்யப்பட்ட நிலம் தரிசாக விடப்பட்டது அல்லது முற்றிலும் கைவிடப்பட்டது என்றாகும். மக்கள்தொகை அடர்த்தி இல்லாதிருந்தபடியால் கையிருப்பில் போதிய களர் நிலம் இருந்திருக்கும், அதனால் நிலத் தகராறுகளே தேவையில்லாத நிலை ஏற்பட்டிருக்கும். பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகுதான், அன்றைய உற்பத்தி நிலைமைகளில் பொது விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு வீட்டுச் சமூங்களின் உறுப்பினர்களின் தொகை அதிகரித்த பிறகுதான் வீட்டுச் சமூகங்கள் கலைந்தன என்ற சொல்லப்படலாம். முன்னர் பொதுவில் வைக்கப்பட்டிருந்த விளை நிலங்களும் பசும்புல் நிலங்களும் இப்பொழுது உருவாகியிருந்த தனித்தனிக் குடும்பங்களிடையில் எல்லோருக்கும் தெரிந்த முறையில், முதலில் அவ்வப் பொழுதும் பிறகு நிரந்தரமாகவும் பிரித்துக் தரப்பட்டன; ஆனால் காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் நீர்நிலைகளும் பொதுச் சொத்தாகவே இருந்து வந்தன.

ருஷ்யாவைப் பொறுத்தமட்டில், இந்த வளர்ச்சிப் போக்கு வரலாற்று ரீதியில் முழுமையாக நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஜெர்மனியும் இரண்டாம்பட்சமாக மற்ற ஜெர்மானிய இன நாடுகளும் சம்பந்தப்பட்ட மட்டில், கிராமச் சமூகத்தை டாசிட்டஸ் காலத்துக்கு அடையாளம் கண்டுபிடித்துச் செல்கின்ற முந்திய கருத்தை விட இந்த ஊகம் பல அமசங்களில் மூலாதார விஷயங்களுக்குச் சிறப்பான விளக்கம் தருகிறது, சிக்கல்களுக்குச் சுலபமான விடையும் தருகிறது என்பதை மறுக்க முடியாது. மிகவும் பழைய ஆவணங்களை, உதாரணமாக, Codex Laureshmensisஐ [Codex Laureshmensis – லோர்ஷ் சமயத் துறவி மடத்தின் பத்திரங்கள் மற்றும் சலுகையுரிமைகளின் பிரதிகளின் தொகுதி; 12ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. 8-9 ஆம் நூற்றாண்டுகளின் விவசாயி மற்றும் நிலப் பிரபுத்துவ நிலவுடைமை முறையைப் பற்றிய மிகவும் முக்கியமான வரலாற்று ஆவணமாகும்.], பொதுவாக, கிராம மார்க் சமூகத்தைக் கொண்டு விளக்குவதைக் காட்டிலும் வீட்டுச் சமூகத்தைக் கொண்டு விளக்குவது சுலபம். மறு பக்கத்தில், அது புதிய சிக்கல்களையும் விடை காண வேண்டிய புதிய பிரச்சினைகளையும் முன்வைக்கிறது. இங்கே மேலும் அதிகமாக ஆராய்ச்சி செய்தால்தான் தீர்வு கிடைக்கும். ஜெர்மனியிலும் ஸ்காண்டிநேவியாவிலும் இங்கிலாந்திலும் வீட்டுச் சமூகம் ஒரு இடைநிலைக் கட்டமாக இருந்திருக்கக் கூடும் என்பது பெரும்பாலும் சாத்தியமே.

சீஸர் காலத்தில் ஜெர்மானியர்கள் ஒரளவுக்குத்தான் குடிதங்கி வாழத் தொடங்கியிருந்தார்கள், ஓரளவுக்கு அப்படி வாழ்வதற்கு இன்னும் வழி தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் டாசிட்டஸ் காலத்தில் அவர்கள் ஏற்கெனவே ஒரு நூற்றாண்டுக் காலம் குடிதங்கி இருந்தார்கள். அதனால் வாழ்க்கைச் சாதனங்களின் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் நன்கு தெரிந்தது. அவர்கள் மரக்கட்டைகளைக் கொண்டு வீடுகளைக் கட்டி வசித்தார்கள்; அவர்களுடைய உடை இன்னும் ஆதிகாலக் காட்டு ரகத்தைச் சேர்ந்ததாக இருந்தது, அதாவது முரட்டுக் கம்பளிகளையும் மிருகத் தோல்களையும் அணிந்தார்கள்; பெண்களும் பிரபுக்களும் சணல் உள்ளாடைகளை உபயோகித்தார்கள். அவர்கள் பால், இறைச்சி, காடுகளில் பொறுக்கிய கனிகள், இன்னும் பிளினி சொல்வதைம் போல, ஓட்ஸ் தானியக் கூழும் (அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் இது கெல்டுகளின் தேசிய உணவாக இன்று வரை இருந்து வருகிறது) ஆகியவற்றை – உண்டு வாழ்ந்தார்கள். அவர்களின் செல்வம் கால்நடைகளே; ஆனால் அவை கீழ்ரக இனத்தைச் சேர்ந்தவை: மாடுகள் சிறியவையாகவும் அவலட்சணமாகவும் கொம்புகள் இல்லாமலும் இருந்தன; குதிரைகள் சிறியவையாக இருந்தன, வேகமாக ஓட முடியாது. பணம், அதாவது ரோமானிய நாணயங்கள் மட்டுமே சொற்பமாகப் புழங்கின; அவற்றை எப்பொழுதாவது உபயோகித்தார்கள். அவர்கள் தங்கம் அல்லது வெள்ளிச் சாமான்கள் செய்யவில்லை, அந்ஹ உலோகங்களுக்கு எவ்வித மதிப்பும் தரவில்லை. இரும்பு சொற்பமாகத்தான் கிடைத்தது, குறைந்தபட்சம் ரைன், டான்யூப் நதிக் கரைகளில் வசித்த இனக்குழு மக்கள் மத்தியில் இரும்பு முழுவதும் அநேகமாக இறக்கு மதி செய்யப்பட்டது, வெட்டியெடுக்கப்படவில்லை. கிரெக்க, லத்தீன் எழுத்துகளைப் பின்பற்றிய ரூனிக் வரிவடிவம் இரகசிய பரிபாஷை என்ற முறையில் மதச் சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நரபலி இன்னும் வழக்கமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், அநாகரிக நிலையின் இடைக்கட்டத்திலிருந்து தலைக் கட்டத்துக்கு அப்பொழுதுதான் வந்து கொண்டிருந்த மக்கள் அவர்கள். ரோமானியர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்த இனக்குழுக்களுக்கு ரோமானியத் தொழிற்பண்டங்களை இறக்குமதி செய்து கொள்ள முடிந்தது; அதனால் அவை சொந்தமாக உலோகத் தொழில் மற்றும் துணி நெசவுத் தொழிலை வளர்க்காதபடித் தடுக்கப்பட்டன, ஆனால் வட கிழக்கில், பால்டிக் பிரதேசத்தில் இருந்த இனக்குழுக்கள் இந்தத் தொழில்களை வளர்த்தன என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஷ்லேஸ்விக் சதுப்பு நிலங்களில் கண்டெடுத்த கவச அணிகளும் – நீண்ட இரும்ப வாள், கவுசம், வெள்ளியில் செய்யப்பட்ட தலைக் காப்பணி முதலியன – அவற்றுடன் 2ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியைச் சேர்ந்த ரோமானிய நாணயங்களும் மக்களினங்கள் குடிபெயர்ந்ததனால் பரப்பப்பட்ட ஜெர்மன் உலோகச் சாமான்களும், ரோமானிய அசல்களை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை கூட – தனித்தன்மையுள்ள சிறந்த வேலைப்பாட்டைக் காட்டுகின்றன. நாகரிக ரோமானியப் பேரரசுக்குக் குடியேறியதினால் இந்த சுதேசித் தொழில் இங்கிலாந்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நசித்துப் போயிற்று. இந்தத் தொழில் எப்படி ஒரே சீராகத் தோன்றி வளர்ச்சியடைந்தது என்பதை வெண்கலப் பித்தான்கள் காட்டுகின்றன. புர்குண்டியிலும் ருமேனியாவிலும் அஸோவ் கடலோரத்திலும் கண்டெடுக்கப்பட்ட இம்மாதிரிப் பொருட்கள் பிரிட்டிஷ், ஸ்வீடிஷ் பொருட்களை உற்பத்தி செய்த அதே பட்டறையில்தான் செய்யப்பட்டிருக்கக் கூடும்; அதே சமயம் அவை ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை.

அவர்களுடைய நிர்வாக அமைப்பு அநாகரிக நிலையின் தலைக்கட்டத்துக்குப் பொருத்தமாகவே இருந்தது. டாசிட்டஸ் கூறுகிறபடி, எங்குமே தலைவர்களின் (principes) கவுன்சில் இருந்தது. இது சொற்ப முக்கியத்துவமுடைய விவகாரங்களை முடிவு செய்தது, மக்கள் சபை முடிவு செய்வதற்கு முக்கியமான விவகாரங்களைத் தயாரித்துக் கொடுத்தது. அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில், குறைந்தபட்சம் நமக்குத் தெரிந்த இடங்களில், அமெரிக்கர்களிடையில் இருந்த மாதிரி இந்த மக்கள் சபை குலத்தில் மட்டுமே கூட்டப்பட்டது; இனக்குழுவிலோ, இனக்குழுக்களிம் கூட்டிலோ நடைபெறவில்லை. இராகோஸ்களிடம் இருந்ததைப் போல, கவுன்சில் தலைவர்கள் (principes) இராணுவத் தலைவர்களிலிருந்து (duces) கூர்மையாக வேறுபடுத்திக் காட்டப்பட்டனர்; கவுன்சில் தலைவர்கள் ஏற்கெனவே ஓரளவுக்கு கால்நடை, தானியம், இதரவற்றை அன்பளிப்புகளாகத் தம் இனக்குழு மக்களிடமிருந்து பெற்று வாழ்ந்தார்கள். அமெரிக்காவில் நிலவியதைப் போல அவர்கள் பொதுவாக ஒரேயொரு குடும்பத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிரீசிலும் ரோமாபுரியிலும் நடந்ததைப் போல தந்தையுரிமைக்கு மாற்றம் தேர்வுப் பதவிகள் பரம்பரைப் பதவிகளாகப் படிப்படியாக மாறியதற்கு உதவியது. இது ஒவ்வொரு குலத்திலும் ஒரு பிரபுத்துவக் குடும்பத்தை உண்டாக்கியது. இந்தப் பழமையான, இனக்குழுப் பிரபுத்துவம் என்று சொல்லப்பட்டது மக்களினங்கள் குடிபெயர்ந்த பொழுது அல்லது அதற்குச் சிறிது பின்னரோ பெரும்பாலும் மறைந்து போயிற்று. பிறப்பைப் பற்றிக் கவலைப்படாமல் தகுதி ஒன்றுக்காகவே இராணுவத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய அதிகாரம் குறைவே; தம் சொந்த உதாரணத்தைக் கொண்டு அவர்கள் அதைச் செலுத்த வேண்டியிருந்தது. டாசிட்டஸ் வெளிப்படையாகவே சொல்கிறபடி, இராணுவத்தில் உண்மையான கட்டுப்பாட்டு அதிகாரம் புரோகிதர்களிடம் இருந்தது. மக்கள் சபைதான் மெய்யான அதிகாரம். அரசனோ, இனக்குழுத் தலைவனோ தலைமை வகித்தான்; மக்கள் முடிவெடுத்தார்கள்: அவர்களுடைய முணுமுணுப்பு மறுப்பைக் குறித்தது, கோஷங்களும் ஆயுதங்களின் ஒலிகளும் ஒப்புதலைக் குறித்தன. மக்கள் சபைதான் நீதிமன்றம்; அதில் புகார்கள் செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டன, மரண தண்டனைகள் விதிக்கப்பட்டன. கோழைத்தனம், துரோகம், இயற்கைக்கு விரோதமான கெட்ட பழக்கங்கள் ஆகியவற்றிற்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. குலங்களும் மற்ற துணைப் பிரிவுகளும் கூட்டமாகக் கூடித் தீர்ப்பளித்தன. அவற்றுக்குத் தலைவனே தலைமை வகித்தான்; ஆதிகால ஜெர்மன் நீதிமன்றங்கள் எல்லாவற்றிலும் இருந்ததைப் போல அத்தலைவன் நடவடிக்கைகளை இயக்குபவனாக, கேள்வி எழுப்புபவனாக மட்டுமே இருக்க முடியும். ஜெர்மானியர்களிடையில் என்றும் எங்கணும் சமூகம் முழுவதும் சேர்ந்தே தீர்ப்பளிக்கும்.

இனக்குழுக்களின் கூட்டுகள் சீஸர் காலத்திலிருந்து ஏற்பட்டன. அவற்றில் சிலவற்றுக்கு ஏற்கெனவே அரசர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமானியர்களிடையே நடந்த மாதிரி தலைமை இராணுவத் தளபதி எதேச்சாதிகாரத்தை விரும்பத் தொடங்கினான்; சில சமயங்களில் அதைப் பெறுவதில் வெற்றியும் அடைந்தான். தகாத முறைகளில் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் எவ்விதத்திலும் சர்வாதிகார ஆட்சியாளர்களாக இருக்கவில்லை, எனினும் அவர்கள் குல அமைப்பின் விலங்குகளை உடைக்கத் தொடங்கினார்கள். விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் எந்தக் குலத்திலும் உறுப்பினர்களாக இருக்க முடியாத காரணத்தால் பொதுவாகத் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள். எனினும் புதிய அரசர்களுக்குப் பிரியமானவர்கள் என்ற முறையில் அவர்கள் பதிவி, செல்வம், பட்டங்களை அடிக்கடி பெற்றார்கள். ரோமானியப் பேரரசைத் தோற்கடித்த பிறகு இராணுவத் தளபதிகள் விஷயத்தில் இப்படியே நடைபெற்றது; அவர்கள் இப்பொழுது பெரிய நாடுகளுக்கு அரசர்களானார்கள். பிராங்கு மக்கள் மத்தியில் அரசனுடைய அடிமைகளும் விடுதலை பெற்றவர்களும் முதலில் அரசவையிலும் பிறகு அரசிலும் முக்கியப் பாத்திரம் வகித்தார்கள். புதிய பிரபுக்களில் பெரும்பகுதியினர் அவர்களுடைய சந்ததியில் வந்தவர்களே.

அரச மரபு தோன்றுவதற்குக் குறிப்பாக ஒரு அமைப்பு மிகவும் சாதகமாக இருந்தது. அதுதான் பரிவாரம் எனப்படுவது. சொந்த விருப்பப்படி யுத்தங்களை நடத்துகின்ற நோக்கத்துக்காக, குலத்துக்குப் பக்கத்திலேயே தனிப்பட்ட படைகள் அமெரிக்க செவ்விந்தியர்களிடையில் எப்படி ஏற்பட்டிருந்தன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஜெர்மானியர்களிடையில் இந்தத் தனிப்பட்ட படைகள் நிரந்தரமான படைகளாக வளர்ச்சியடைந்திருந்தன. புகழ் பெற்ற இராணுவத் தளபதி தன்னைச் சுற்றி யுத்தக் கொள்ளைக்கு ஆசைப்படுகின்ற இளம் போர்வீரர்களின் படையைச் சேர்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு அவனும், அவனுக்கு அவர்களும் விசுவாசமாக இருப்பதாகப் பிரதிக்ஞை செய்திருந்தனர். அவன் அவர்களுக்கு உணவளித்தான். பரிசுகள் கொடுத்தான்; ஒரு மெய்காப்பாளர் படை, உடனடியாகச் சிறு படையெடுப்புகளில் இறங்கக் கூடிய துருப்புகள், பெரிய யுத்தங்களை நடத்துவதற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகளின் குழு என்ற வரிசைக் கிராம முறையில் அவர்களை அணிதிரட்டினான். இப்பரிவாரங்கள் பலவீனமாகவே இருந்திருக்க வேண்டும்; உதாரணமாக, இத்தாலியில் ஓடொவாகரில் அவை அப்படித்தான் இருந்தன என்று அறிகிறோம். எனினும் பழைய வெகுஜன சுதந்திரத்தின் நசிவுக்கு அவை கருவாக இருந்தன; மக்களினங்கள் குடிபெயர்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அவை அப்படித்தான் இருந்தன; காரணம், முதலாவதாக, அவை அரசனுடைய அதிகாரம் எழுவதற்குச் சாதகமான நிலையை உண்டாக்கின, இரண்டாவதாக, டாசிட்டஸ் குறிப்பிட்டபடி, தொடர்ச்சியான யுத்தங்களினாலும் கொள்ளையடிக்கும் படையெடுப்புகளாலும் தான் அவற்றை ஒன்றாகத் திரட்டி வைத்திருக்க முடியும். கொள்ளையடித்தலே முக்கியமான நோக்கமாக மாறி இருந்தது. அக்கம்பக்கத்தில் கொள்ளைக்கு வழியில்லா விட்டால் தலைவன் மற்ற மக்களினங்களின் மீது தனது பரிவாரங்களை நடத்திச் சென்றான்; அங்கே போர் இருக்கும், கொள்ளையடிக்க வாய்ப்பும் இருக்கும். ரோமானியக் கொடியின் கீழ், ஜெர்மானியர்களுக்கு எதிராகவே பெரும் எண்ணிக்கையில் போரிட்ட ஜெர்மன் துணைப் படைகளில் இப்படிப்பட்ட பரிவாரங்கள் சில இருந்தன. ஜெர்மானியர்களுக்கு அவமானமும் பழியும் ஏற்படுத்திய கூலிப் படைகளின் முதல் வித்துகள் அவை. ரோமானியப் பேரரசை வென்ற பிறகு அரசர்களின் இந்த பரிவாரமும் சுதந்திரமற்றவர்கள் மற்றும் ரோமானியர்களைச் சேர்ந்த அரசு சேவகர்களும் சேர்ந்து, பிற்காலத்தில் உருவான பிரபுத்துவத்தின் இரண்டாவது பிரதானப் பகுதியாக அமைந்தனர்.

பொதுவாகக் கூறினால், மக்களினங்களாக இணைந்த ஜெர்மானிய இனக்குழுக்கள் வீர யுகத்தில் கிரேக்கர்களிடையேயும் அரசர்கள் என்று சொல்லப்பட்டோரின் காலத்தைச் சேர்ந்த ரோமானியர்களிடையேயும் வளர்ந்திருந்த அதே நிர்வாக அமைப்பைத்தான் கொண்டிருந்தன: அதாவது மக்கள் சபைகள், குலத் தலைவர்களின் கவுன்சில்கள், மெய்யான அரச அதிகாரத்துக்கு ஆசைப் பட்டுக் கொண்டிருந்த இராணுவத் தளபதிகள். குல அமைப்பில் தோன்றக் கூடிய, உச்ச வளர்ச்சி பெற்ற நிர்வாக அமைப்பு இதுதான்; அநாகரிக நிலையின் தலைக்கட்டத்தின் ஆட்சியின் ஆதர்ச வடிவம் இதுவே. இந்த நிர்வாக அமைப்பு எந்த வரம்புக்குள் போதுமானதாக இருந்ததோ, அதைக் கடந்து சமுதாயம் மேலே சென்றதுமே குல அமைப்பு முடிந்து விட்டது; அது உடைந்து போய் அதன் இடத்தில் அரசு ஏற்பட்டது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

 1. மாமேதை ஏங்கல்ஸ்.
 2. 1884 ல் எழுதிய முன்னுரை
 3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
 4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
 5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
 6. குடும்பம் – 1
 7. குடும்பம் – 2
 8. குடும்பம் – 3
 9. குடும்பம் – 4
 10. குடும்பம் – 5
 11. குடும்பம் – 6
 12. குடும்பம் – 7
 13. குடும்பம் – 8
 14. குடும்பம் – 9
 15. இராகோஸ் குலம் 1
 16. இராகோஸ் குலம் 2
 17. கிரேக்க குலம் 1
 18. கிரேக்க குலம் 2
 19. அதீனிய அரசின் உதயம் 1
 20. அதீனிய அரசின் உதயம் 2
 21. அதீனிய அரசின் உதயம் 3
 22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
 23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2
 24. கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1
 25. கெல்டுகள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s