மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8

என்னவாகும் அண்ணாச்சிக் கடைகள்?

உலகம் முழுவதும் விற்பனையாகும் சில்லறை வணிகத்தில் மதிப்பு 3.25 ட்ரில்லியன் டாலர்கள் (2017). இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 2019 மதிப்பின்படி 700 பில்லியனாகவும், 2025க்குள் 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் வளரும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனில், இந்திய சில்லறை வணிகத்தின் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் இந்த வணிகத்தில் ஈடுபடும் கடைகளின் எண்ணிக்கை 1.2. கோடி. இவர்களில் பாதி பேரை மட்டும் வெளியேற்றி அதை மூன்று பேர் மட்டும் பங்கிட்டுக் கொள்வதாகக் கொள்வோமானால் அதிலிருந்து வரும் லாபத்தையும் இந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற முனையும் நிறுவனங்களின் போட்டியையும் புரிந்து கொள்ளலாம்.

ஒருமுகமான போட்டி

இதன் காரணமாகவே கொரோனா பெரும் தொற்றுக்குப் பின்னர் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இந்த மாபெரும் சில்லறை வர்த்தகச் சந்தைக்குப் போட்டியிட்டன. எல்லை பிரச்சினையை காரணமாக வைத்து சீன நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. தற்போது இந்த சந்தை முழுக்க ஜியோ மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வசமாகிவிட்டது. இந்தச் சந்தையை மின்னணுமயமாக்க (Digitalize) தேவையான அடிப்படை தொழில்நுட்ப பொருட்களுக்கான (Eg. Superapp, Social media like FB, AI, Payment app etc…) சந்தையைப் பெருமளவு ஜியோ, கூகுள், முகநூல், அமேசான் ஆகியவை பிடித்துக்கொண்டுவிட்டன. நேரடி பொருள் விற்பனை சந்தையில் வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட், அமேசான், ஜியோ – கூகுள் – முகநூல் ஆகிய மூன்றுக்கும் இடையிலான போட்டி தீவிரமாக நடந்து வருகிறது.

வித்தியாசமான ஆட்டம்

விளையாட்டுப் போட்டிகளில் இருதரப்பினர் மோதிக்கொண்டு ஒருவரையொருவர் வீழ்த்த முயல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இவர்கள் மூவரும் போட்டியிட்டுக் கொண்டு ஏற்கனவே இந்தச் சந்தையில் உள்ள வியாபாரிகளில் அதிகம் பேரை வீழ்த்தி யார் அதிக சந்தையை பிடிப்பது என்ற வித்தியாசமான போட்டியை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதைவிட “அதிசயம்” இந்த ஆட்டத்தின் பார்வையாளர்களான சிறுகுறு வணிகர்களும், உற்பத்தியாளர்களும், அவர்களிடம் பொருட்களை வாங்கி நுகரும் நாமும் இந்த ஆட்டத்தில் நாம்தான் தோற்கடிக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே வேடிக்கைப் பார்ப்பதுதான். கிட்டத்தட்ட இறுதியை எட்டிவிட்ட இந்த ஆட்டத்தில் கடைசியாகத் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் விவசாயிகளைப் பார்த்துப் பரிதாபப்படுவது “அதிசயத்தின் உச்சம்”.

வெளிநாட்டில் இணைய வர்த்தகம்

இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ள வளர்ந்த நாடுகளில் தற்போது எப்படி வர்த்தகம் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். (அடிப்படை தகவல்களுக்கு பாகம்-2 காண்க). அமேசான் போன்ற இணைய வர்த்தக வளாக செயலிகளில் (Superapp) பெரும்பாலும் திறன்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட தோல் பொருட்கள், சமையலறை முதல் குளியலறை வரைக்குமான வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவை இங்கே சந்தைப்படுத்தப்படுகிறது. செயலியில் பார்த்து பொருளுக்கான பணத்தைச் செலுத்த வேண்டும். விலையுயர்ந்த பொருட்களானால் நாம் கொடுக்கும் முகவரிக்கு 24 மணி நேரத்துக்குள் பொருள் வந்தடையும். ஏனெனில் இதுபோன்ற அதிக லாபம் தரும் பொருட்களை அந்த நிறுவனம் வாங்கி எல்லா பகுதியிலும் கிட்டங்கி அமைத்து விற்பனை செய்கிறது. இந்தப் பொருட்களுக்கான லாப விகிதம் அதிகம் ஆதலால் பொருளைக் கொண்டு வந்து தர ஆகும் சரக்கு போக்குவரத்து (Logistics) சேவையை நிறுவனம் வழங்குகிறது.

சரக்கு போக்குவரத்தில் கடைகளின் பங்கு

விலை குறைந்த லாப விகிதம் அதிகமில்லாத பொருட்களை அதன் உற்பத்தியாளர்கள் இந்த செயலிகளில் குறிப்பிட்ட கட்டணம் பெற்றுக்கொண்டு சந்தைபடுத்த அனுமதிக்கின்றன. இது போன்ற பொருட்களுக்கு நாம் அனுப்பானை (Order) அனுப்பும்போது அந்த உற்பத்தியாளர் உள்ளூர் சரக்கு போக்குவரத்தின் மூலம் நமது வீட்டு முகவரிக்கு அனுப்புவார். இல்லையெனில் அருகிலுள்ள நம்மூர் அண்ணாச்சிக் கடையைப் போன்ற சங்கிலித்தொடர் கடையின் (7-Eleven or Familymart) முகவரியைக் கொடுத்தால் அவர் அவருக்கு அருகில் உள்ள அதே நிறுவனத்தை சேர்ந்த ஒரு கடையில் பணத்தைச் செலுத்தி பொருளைக் கொடுத்து விடுவார். தங்கள் கடைகளுக்கு தேவையான பொருட்களுக்கு இந்த கடைகளின் முகவர்கள் தினமும் சங்கிலித்தொடர் நிறுவனத்துக்கு அனுப்பானை அனுப்புவார்கள். அந்த பொருட்களைக்கொண்டு வந்து கொடுக்கும் வாகனங்கள் இந்த பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்து விடும். நமது ஊரில் பேருந்தில் தினசரிகளை நாடு முழுவதும் காலையில் செல்லும் பேருந்துகளில் அனுப்புவதைபோல. நமது திறன்பேசிக்கு குறுந்தகவல் வந்தவுடன் நமது அடையாள அட்டையைக் காட்டி பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மூன்றுவகை நேரடி சில்லறை விற்பனை

இந்தப் பொருட்களைத் தவிர்த்த மற்ற பொருள் விற்பனை இணைய வர்த்தகத்துக்கு (E-commerce) வெளியிலேயே நடக்கிறது. ஒரு சில இணையதள உரிமையாளர்கள் இணைய வர்த்தகத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்துவதைப் போல நேரடி பொருள் விற்பனையையும் ஒரு சில நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இவை மூன்று வகைப்படும். முதல்வகை வால்மார்ட் போன்ற மொத்த விற்பனைக் கடைகள். இங்கே மின்னணு சாதனங்கள் (Electronics), தோல்போருட்கள் மற்றும் ஆடைகளோடு நொறுக்குத் தீனிகள், சோப்பு, சிகைக்காய் உள்ளிட்ட பொருட்கள், சமையலுக்கான மளிகைப் பொருட்கள், மாமிசம் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் விற்கப்படுகின்றன.

சங்கிலித்தொடர் மொத்த விற்பனை அங்காடிகள்

இங்கே சென்று பொருட்கள் வாங்குவது துணிக்கடைக்குப் பதிலாக அவை வைக்கப்பட்டிருக்கும் கிட்டங்கியில்(Godown) சென்று வாங்குவதைப் போன்றது. ஒன்றிரண்டாக வாங்க முடியாது. மொத்தமாகத்தான் வாங்க முடியும். இப்படி மொத்தமாக வாங்கும்போது விலை மலிவாகக் கிடைக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலும் உணவகங்கள் மற்றும் தங்குமிடங்களை நடத்துபவர்கள், சிறு வியாபாரிகள் போன்றோர் வியாபார நோக்கில் இங்கே அதிக அளவில் வாங்குகிறார்கள். மக்களும் பெரும்திரளாக நேரடியாகச் சென்றோ அல்லது இந்த நிறுவனத்தின் இணைய தளத்திலோ சென்று வாங்குகிறார்கள். ஆண்டுக்கு சில ஆயிரங்கள் சந்தா கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆன பின்பே இதில் பொருளை வாங்க முடியும்.

சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடிகள்

இதே பொருட்கள் ஆனால் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளுக்கு ஒரு நிறுவனத்தை மட்டும் சார்ந்திராமல் ஒவ்வொரு பொருளுக்கும் பல்வேறு வகையான மாதிரிகளைக் கொடுத்துத் தெரிவு செய்யும் வகையில், ஒரே அடுக்குமாடி கட்டடத்தில் பொருட்களைக் குவித்து வைத்திருக்கும் சங்கிலித்தொடர் (Chainstores) பல்பொருள் அங்காடிகள் (Hypermarket) இயங்குகின்றன. இங்கு சில்லறையாக ஒன்றிரண்டு பொருட்களை வாங்கலாம். ஆண்டு சந்தா கிடையாது. இதுபோன்ற கடைகள் பெருநகரங்களின் மக்கள் அடத்தியான பகுதிகளில் இயங்குகின்றன. மின்னணு சாதனங்கள், தோல் பொருட்கள் மற்றும் ஆடைகள் தவிர்த்த மற்ற பொருட்களை விற்கும் அளவில் சிறிய சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடிகள் (Supermarket) பரவலாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் பெருநகரங்கள் முதல் சிறுநகரங்கள் வரை பெரும்பாலான பகுதிகளில் இயங்குகின்றன.

சங்கிலித்தொடர் தெருக்கடைகள்

இதை அடுத்த நிலையில் நம்மூர் பெட்டிக் கடைகளை ஒத்த வேகமாக விற்பனை ஆகக்கூடிய நொறுக்குத் தீனிகள், சோப்பு, சிகைக்காய் உள்ளிட்ட பொருட்களை (Fast-moving consumer goods-FMCG) விற்கக்கூடிய சங்கிலித்தொடர் கடைகள் கிட்டத்தட்ட எல்லா தெருக்களிலும் இருக்கின்றன. இவற்றை தவிர்த்து மருந்துகள்(Pharmacy), ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான தனித்துவம் வாய்ந்த சங்கிலித்தொடர் கடைகள் இயங்குகின்றன. சாதாரண மக்களுக்கான சிறு வியாபாரிகள் நடத்தும் காய்கறி சந்தைகள் ஆங்காங்கே இயங்குகின்றன. மற்றவை பெருமளவு உணவகங்களே. இவற்றில் பல போக்குவரத்து செயலியான ஊபர் போன்ற இணையதளங்களுடன் இணைந்துள்ளன.

இந்திய சில்லறை விற்பனை உத்தி

இப்படி பல அடுக்குகளில் பல்வேறு வியாபார உத்திகளுடன் பல்வேறு பயன்பாடுகள் சார்ந்து வியாபாரிகள், பணம் படைத்தவர்கள், சாதாரணர்கள் என நபர்கள் சார்ந்து இந்த வர்த்தகத்தின் பெரும்பகுதி சில நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சங்கிலித்தொடர் கடைகளை நடத்தும் நிறுவனங்களுக்கான அனுமதிக்கு எழுந்த பெரும் எதிர்ப்பு காரணமாக படிப்படியாக இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வந்து தற்போது முழுமை பெற்று வருகிறது. இதுவரையிலான இந்திய அரசின் கட்டுப்பாட்டின் சாரம்…

1. இணைய வர்த்தகத்தில் குறைவான செலவில் சந்தைபடுத்தும் மேன்மையைப் பயன்படுத்தி மற்றவர்களை நசுக்குவதைத் தடுப்பது.

2. உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்துதான் சந்தைபடுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி இதன் பலன்களை உள்ளூர் முதலாளிகளுக்கும் பங்கிட வைப்பது. இதனாலேயே தொழில்நுட்பம் வைத்திருக்கும் அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் மற்ற பொருள் விற்பனை செய்பவர்களுடனும், தொழில்நுட்பம் இல்லாத ஜியோ கூகுள், முகநூல் நிறுவனத்துடனும் கைகோத்திருக்கின்றன.

இணைய வர்த்தகப் போட்டி

இணைய வர்த்தகம் செய்யும் அமேசான், பொருட்களை சொந்தமாக கிட்டங்கியில் வாங்கி வைத்து விற்பனை செய்ய முடியாது. அதேபோல வால்மார்ட் நேரடியாக தனது பெயரில் கடையைத் திறந்து வாடிக்கையாளரிடம் பொருளை விற்க முடியாது. இணைய வர்த்தகத்திலும் சரி, நேரடி வர்த்தகத்திலும் சரி… இந்திய நிறுவனமான ஜியோவுக்கும் ஃப்ளிப்கார்ட் இந்திய நிறுவனமாக இருந்த வரையிலும் இந்தக் கட்டுப்பாடுகள் கிடையாது. சந்தையில் முன்னமே நுழைந்த அமேசான் இந்த விதிகளின் ஓட்டைகளை பயன்படுத்தியும் தனது சிறப்பான சரக்கு போக்குவரத்து கட்டமைப்பை (Logistics) பயன்படுத்தியும் பெருமளவு சந்தையைக் கைப்பற்றி இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் தனது கிட்டங்கியில் வைத்து பொருளை விற்க தடை இல்லை ஆதலால் அதுவும் குறிப்பிட்ட அளவு சந்தையைப் பிடித்தது. தற்போது சந்தையில் நுழைந்திருக்கும் ஜியோ, நாடு முழுவதும் ஏற்கனவே இயங்கும் 10,000க்கும் மேற்பட்ட கடைகளையும், இணையம், பெரும்தரவுகள் ஆகியவற்றை பலமாக கொண்டு களம் இறங்கி போட்டியிட்டு வருகிறது.

பிரச்சினைகள்

இதுவரையிலும் திறன்பேசி போன்ற சாதனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டு (Furnitures) பொருட்களை விற்று வந்த கடைகளை இவர்கள் மெல்ல வெளியேற்றி அந்த இடத்தை பிடித்து வருகிறார்கள். ஆனால் மொத்த சந்தை மதிப்பில் இந்த இணைய வர்த்தகம் பிடித்திருக்கும் அளவு 3 சதவிகிதம் மட்டுமே. காரணங்கள்… 1. குறைவான இணையப் பரவலாக்கம், 2. குறைவான செலவில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சரக்கு போக்குவரத்து வசதிகள் (Logistics) இல்லாமை, 3. இந்திய மக்களின் குறைவான வாங்கும் திறன்.

இணையத்துக்கு வெளியில் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான மொத்த விற்பனை சந்தையை வால்மார்ட் கைப்பற்ற 2007 முதல் முயன்று ஒன்பது நகரங்களில் 29 கடைகளை நடத்தி வருகிறது. பெரும்தொற்றுக்குப் பின்னர் மேலும் பல பகுதிகளில் 50 கடைகளைத் திறக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இணையத்திலும் இணையத்துக்கு வெளியிலும் வலுவான தடம் பதித்து வருகிறது.

நேரடி விற்பனை சந்தையில் ப்யூச்சர் குழுமம்

இணையத்துக்கு வெளியில் சில்லறை சந்தையில் சில இடங்களில் மட்டும் இயங்கும் எல்லா பொருட்களையும் விற்கும் பிக்பஜார் போன்ற பல்பொருள் அங்காடிகளையும் (Hypermarket), ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் தவிர்த்த பல இடங்களில் இயங்கும் நீல்கிரீஸ் போன்ற பல்பொருள் அங்காடிகளையும் (Supermarket) நடத்தி வரும் ப்யூச்சர் குழுமம் இந்தச் சந்தையைப் பெருமளவு வைத்திருந்தது. அதுமட்டுமல்ல; சில்லறை வர்த்தகத்தில் தனிச்சிறப்பான ஆடையகங்கள் முதல் பல்வேறு விதமான கடைகளை நடத்தி எல்லா பகுதியிலும் தடம் பதித்திருந்தது. இறுதியாக கொரோனா வருவதற்கு முன்பாக சங்கிலித்தொடர் பெட்டிக்கடை (அ) அண்ணாசிக்கடை நிறுவனமான 7-லெவன் (7-Eleven) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அவ்வாறான கடைகளைத் திறக்க ஆரம்பித்தபோதே கொரோனா வந்து இந்த குழுமம் நட்டத்தைச் சந்தித்தது.

பணக்காரர்களுக்கான கடைகள்

இணையச் சந்தையின் வரம்பை உணர்ந்த அமேசான் இந்தக் குழுமத்தில் ஏற்கனவே முதலிட்டு இருந்தது. இறுதியாக சந்தையில் நுழைந்த கூகுள் + முகநூல் + ஜியோ கூட்டணி இதைக் கைப்பற்றி நேரடியாக சந்தையை கைப்பற்ற முனைந்தது. இந்தப் போட்டியில் கடைசியாக வந்த செய்தியின்படி ஜியோ வெற்றி பெற்றிருக்கிறது. பிக்பஜார், நீல்கிரீஸ் போன்ற பல்பொருள் அங்காடிகள் க்ரோபெர்ஸ்(Grofers) போன்ற இணைய மளிகை விற்பனை செயலிகள் பெரும்பாலும் பணக்கார நடுத்தர வர்க்கத்துக்கானது. இந்த சில கோடி மக்களுக்கு வெளியில் பல கோடி மக்கள் தமக்கு அருகில் உள்ள அண்ணாச்சிக் கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில்தான் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தக் கடைகள் பெரும்பாலும் மளிகைப் பொருட்கள் மற்றும் வேகமாக விற்பனை ஆகக்கூடிய (FMCG) பொருட்களையே விற்பனை செய்கின்றன.

பொருளை ஒப்படைக்க அண்ணாச்சிக் கடைகள்

நாடு முழுக்க கோடிக்கணக்கில் இயங்கும் இந்தக் கடைகள் பெருநிறுவனங்களின் பார்வையில் மிகப்பெரிய சந்தை. அதேநேரம் இவை இணையச் சந்தைக்கான சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைத்து வாடிக்கையாளர்களிடம் பொருளை ஒப்படைக்கும் மையமாகவும் (Delivery point) விளங்கும். தற்போதைக்கு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பல ஆயிரம் கடைகளைத் தங்களது இணைய வலைப்பின்னலில் இணைத்துக்கொண்டு பொருட்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் செயல்பாடுகளில் இயங்கி வருகின்றன. ஜியோ ஒருபடி மேலே சென்று இப்படி பொருட்களை ஒப்படைப்பது மட்டுமல்ல; அந்தக் கடைகள் தங்களது பொருள் வரத்து, இருப்பு, விற்பனை, இணையப் பரிவர்த்தனை, முதலீடு ஆகிய சேவைகளை உள்ளடக்கிய விற்பனையகப் புள்ளி சாதனங்களை (Point of Sale) வழங்கி வருகிறது.

பளபளப்பானதாக மாறப்போகும் அண்ணாச்சிக் கடைகள்

ஜியோ இந்த வியாபாரத்தில் ஈடுபடாது என்றும் இந்த சேவைகளோடு நிறுத்திக்கொள்ளும் என்றும் அம்பானி கூறுகிறார். இந்தக் கடைக்காரர்கள் தங்களது சொந்த சரக்கையோ அல்லது ஜியோவிடம் இருந்தோ பெற்று விற்பனை செய்யலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த சாதனங்கள் வழியாக கடையை நடத்தும்போது எந்தெந்த பகுதியில் என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகிறது. நாடு முழுதும் மக்கள் எந்த பொருட்களை அதிகம் வாங்குகின்றனர் என்ற தரவுகளை ஜியோ நிறுவனம் பெற்று விடும். ஏற்கனவே இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரவுகளை திரட்டும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெர்மானிய நிறுவனம் ஒன்று மாதிரி சங்கிலித்தொடர் கடைகளை பெங்களூரில் நிறுவி விட்டது.

இதன்வழி மையப்படுத்தப்பட்ட (Centralized) மொத்த விற்பனையை நோக்கி இந்த சந்தை நகர்ந்து கொண்டு இருக்கிறது. ப்யூச்சர் குழுமத்தின் 7-லெவன் நிறுவனத்துடனான திட்டம் கைவிடப்பட்டு இந்தியாவுக்கே உரிய தனித்துவமான சங்கிலித்தொடர் கடைகளின் உருவாக்கமாக மாற்றம் கண்டு வருகிறது. பெருநகரங்களில் மட்டும் இயங்கி வரும் நீல்கிரீஸ் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு விரிவாகலாம். விவசாயிகள் பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னோ அல்லது போதுமான அளவு ஜியோவின் விற்பனையகப் புள்ளி சாதனங்கள்வழி தரவுகள் பெறப்பட்ட பின்னரோ தெருவுக்குத் தெரு அழுக்கான அண்ணாச்சிக் கடைகளுக்கு அருகில் பளபளப்பான ஜியோவின் கடைகள் முளைக்கலாம்.

விவசாயச் சட்டத்தின் தேவை

அவர் சொன்ன சொல்லை மீறாமல் நடப்பார் என்று கடைக்காரர்கள் நம்புவதும் இதெல்லாம் நடக்காத கற்பனை கதை என்று உதாசீனம் செய்வதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. இப்படி இந்தியாவின் சில்லறை சந்தை ஒருமுகப்படுத்தப்பட்டு வரும்நிலையில் அதற்கான உற்பத்தி மட்டும் இப்போது இருப்பதுபோல சிதறி கிடக்க வாய்ப்பில்லை. FMCG உள்ளிட்ட பொருள் உற்பத்தியை பொறுத்தவரையில் ஒருமுகப்படுத்துவதில் பிரச்சினை இருக்க போவதில்லை. விவசாய உற்பத்தியை ஒருமுகப்படுத்த சிதறிக்கிடக்கும் விவசாய நிலங்களை ஒன்றிணைக்க வேண்டும் தேவை இங்கே எழுகிறது. இங்கே யாருக்கும் விவசாயச் சட்டங்களும் அதற்கு எதிரான போராட்டங்களும் மனதில் தோன்றாமல் இருக்க முடியாது.

விவசாயம், தன உற்பத்தி, விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களின் தேவை குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

வளரும் .. .. ..

பாஸ்கர் செல்வராஜ் – மின்னம்பலம்

தொடரின் முந்திய பகுதிகள்

  1. மின்னணு பொருளாதாரம் 1
  2. மின்னணு பொருளாதாரம் 2
  3. மின்னணு பொருளாதாரம் 3
  4. மின்னணு பொருளாதாரம் 4
  5. மின்னணு பொருளாதாரம் 5
  6. மின்னணு பொருளாதாரம் 6
  7. மின்னணு பொருளாதாரம் 7

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s