ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 27

டாசிட்டஸ் கூறுகிறபடி, ஜெர்மானியர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருந்தார்கள். வெவ்வேறு ஜெர்மன் மக்களினங்களின் தொகையைப் பற்றி சீஸர் உத்தேசமான கணக்கைத் தந்திருக்கிறார். ரைன் நதியின் இடது கரையில் தோன்றிய உசிபேதன்கள், தென்க்தெரன்களின் எண்ணிக்கை (பெண்கள், குழந்தைகள் உட்பட) 1,80,000 என்று அவர் கூறுகிறார். ஆக, ஒரே மக்களினத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் [கோல் நாட்டின் கெல்டுகள் குறித்து டியாடோரஸ் நூலில் உள்ள ஒரு பகுதி இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துகிறது: “கோலில் வெவ்வேறு எண்ணிக்கையை கொண்ட பல மக்களினங்கள் வாழ்கின்றன; அவற்றின் மிகவும் பெரியதின் தொகை 2 லட்சம், மிகவும் சிறியதின் தொகை 50,000” (Diodorus Siculus, V, 25) எனவே சராசரித் தொகை 1,25,000. கோல் நாட்டின் தனித்தனி மக்களினங்கள் மற்றவற்றை விட அதிக வளர்ச்சியடைந்திருந்தன; எனவே அவர்கள் ஜெர்மானியர்களை விட அதிக எண்ணிக்கையில் இருந்திருக்க வேண்டும். (எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு)]. இராகோஸ்களின் மிகச் செழிப்பான காலத்தில், மாபெரும் ஏரிகளிலிருந்து ஒஹாயோ, பொடோமக் வரையுள்ள நாடெங்கிலும் அவர்கள் பீதியை உண்டாக்கிக் கொண்டிருந்த பொழுது, அவர்களுடைய தொகை 20,000 கூட இருக்கவில்லை. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் ஜெர்மானியர்களின் தொகை கணிசமானதே. ரைன் பிரதேசத்தில் வாழ்ந்த தனித்தனி மக்களினங்களை – விவரங்களின் மூலம் அவர்களைப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரியும் – ஒரு நிலப்படத்தில் திரட்டிப் பார்த்தால், அவற்றில் ஒவ்வொன்றும் சராசரி ஒரு பிரஷ்ய நிர்வாக மாவட்டத்தின் விஸ்தீரணத்தை, அதாவது சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் அல்லது 182 பூகோளச் சதுர மைல் பிரதேசத்தை நிரப்புவதை நாம் காண்போம். ரோமானியர்களின் Germania Magna [] என்பது விஸ்லா நதி வரைக்கும் செல்கிறது; அது மொத்தமாக 5 லட்சம் சதுர கிலோமீட்டர்கள்தான். எந்தவொரு மக்களினத்துக்கும் சராசரி 1 லட்சம் என்று கணக்கிட்டால், Germania Magnaஇன் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் என்றாகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 நபர்கள் அல்லது ஒரு பூகோளச் சதுர மைலுக்கு 550 நபர்கள் என்பது இன்றைய நிலைமைகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது மிகவும் சொற்பமே, எனினும் அநாகரிக நிலையிலுள்ள மக்களினக் குழுக்களுக்கு இது ஒரு பெரும் தொகைதான். ஆனால் அன்று வாழ்ந்து வந்த ஜெர்மானியர்கள் அனைவரும் இந்த எண்ணிக்கையில் அடங்கியிருக்கவில்லை. கோதிக் மூலத்திலிருந்து வந்த ஜெர்மானியர்களான பஸ்தார்னியன்கள், பியூகினியர்கள் மற்றும் இதரர்கள் டான்யூப் நதியின் முகத்துவாரத்தை எட்டும் வரை கார்ப்பேதிய மலைகளின் சாரல் நெடுக வாழ்ந்து வந்தனர் என்பதை நாம் அறிவோம். ஜெர்மானியர்களின் ஐந்தாவது முக்கியமான இனக்குழுக்களின் குழு என்று பிளினி அவர்களை வர்ணிக்கும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தது. அவர்கள் ஏற்கெனவே கி. மு. 180இல் பெர்ஸியஸ் என்ற மாசிடோனிய அரசனுடைய கூலிப் படைகளாக ஊழியம் செய்து வந்தார்கள். மேலும், அகஸ்டஸ் ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில் நெடுந்தொலைவிலுள்ள ஆட்ரியானொபிளுக்குப் பக்கம் வரை இன்னும் வழி செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தொகை 10 லட்சம் என்று நாம் வைத்துக் கொண்டால், அப்பொழுது கிறிஸ்துவ சகாப்தத்தின் தொடக்கத்தில் ஜெர்மானியர்களுடைய தொகை அநேகமாக 60 லட்சத்துக்குக் குறையாமல் இருந்திருக்கும்.

ஜெர்மனியில் குடியேறிய பிறகு மக்கள் தொகை மிகவும் வேகமாக அதிகரித்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட தொழில்துறை முன்னேற்றமே இதை நிரூபிப்பதற்குப் போதுமானது. ஷ்லேஸ்விக் சதுப்பு நிலத்தில் கண்டெடுத்த பொருட்கள் – அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது – 3ஆம் நூற்றாண்டிலிருந்து வந்தவை. எனவே அக்காலத்தில் பால்டிக் பிரதேசத்தில் உலோகத் தொழிலும் துணி நெசவுத் தொழிலும் ஏற்கெனவே நன்கு வளர்ச்சியடைந்திருந்தன, ரோமானியப் பேரரசுடன் விறுவிறுப்பான வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, பணம் படைத்தவர்கள் ஒரளவுக்கு வசதியாக வாழ்க்கையை அனுபவித்தார்கள் – இவை அனைத்தும் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகரித்ததற்குச் சான்றுகளாகும். இக்காலத்தில் ஜெர்மானியர்கள் ரைன் நதி, ரோமானிய எல்லையோரக் கோட்டைகள், டான்யூப் ஆகியவற்றின் வடகடலிலிருந்து கருங்கடல் வரை நீண்ட எல்லை நெடுகிலும் பொதுவான தாக்குதலைத் தொடங்கினார்கள். மேன்மேலும் பெருகிக் கொண்டிருந்த மக்கள்தொகை வெளியே பரவ முயற்சித்ததற்கு நேரடியான சான்று இது. போராட்டம் நடந்த மூன்று நூற்றாண்டுகளில் கோதிக் மக்களினங்களின் பிரதான பகுதி (ஸ்காண்டிநேவிய கோத்துக்களும் புர்குண்டியர்களும் தவிர) தென்கிழக்கு நோக்கி நகர்ந்து பரந்த தாக்குதல் முனையின் இடது அணியாக அமைந்தது. மேல் ஜெர்மானியர்கள் (ஹெர்மினோனியர்கள்) மேல் டான்ய்யுப் பகுதியிலுள்ள இந்த முனையின் நடுப்பகுதியில் முன்னேறிச் சென்றார்கள். மேலும், இன்று பிராங்குகள் என்று அழைக்கப்படுகின்ற இஸ்டெவோனியர்கள் வலது அணியில் ரைன் நதிக் கரையோரமாக முன்னேறிச் சென்றார்கள். பிரிட்டனை வெல்வது இங்கெவோனியர்களின் பொறுப்பாயிற்று. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோர்ந்து, வலிமையிழந்து, உதவியற்றிருந்த ரோமானியப் பேரரசு படையெடுத்து வந்த ஜெர்மானியர்களைத் தடுக்க முடியாதிருந்தது.

முந்திய அத்தியாயங்களில் பண்டைக்கால கிரேக்க, ரோமானிய நாகரிகத்தின் தொட்டிலின் அருகில் நாம் நின்றோம். இப்பொழுது நாம் அதன் சமாதிக்கு அருகில் நிற்கிறோம். ரோமானிய உலக ஆதிக்கத்தின் இழைப்புளி பல நூற்றாண்டுகளாக எல்லா மத்திய தரைக் கடல் நாடுகளையும் இழைத்து சமப்படுத்தி வந்தது. எங்கெல்லாம் கிரேக்க மொழி எதிர்க்கவில்லையோ, அங்கெல்லாம் தேசிய மொழிகள் விலகிக் கொள்ள, ஒரு கொச்சையான லத்தீன் மொழி வந்து சேர்ந்தது. தேசிய இன வேறுபாடுகள் எவையும் இப்போதில்லை; கோல்கள், இபேரியர்கள், லிகூரியர்கள், நோரியர்கள் என்று யாருமில்லை – எல்லோரும் ரோமானியர்களாகி விட்டனர். ரோமானிய நிர்வாகமும் ரோமானியச் சட்டமும் எங்கணுமே பழைய இரத்த உறவுமுறைக் குழுக்களை கலைத்து விட்டன, அதன் மூலம் ஸ்தல மற்றும் தேசிய சுயவெளியீட்டின் கடைசி எச்சங்களைக் கலைத்து விட்டன. புதிதாக வந்த ரோமானிய முறை இந்த இழப்பை ஈடு செய்ய முடியவில்லை. அது எந்த ஒரு தேசிய இனத்தையும் புலப்படுத்தவில்லை, தேசிய இனத் தன்மையற்ற நிலையைத் தான் புலப்படுத்தியது. புதிய தேசிய இனங்கள் அமைவதற்குரிய அம்சங்கள் எங்கும் இருந்தன. பல்வேறு மாகாணங்களில் லத்தீன் கிளைமொழிகள் மேன்மேலும் வேறுபட்டு வந்தன. ஒரு காலத்தில் இத்தாலி, கோல், ஸ்பெயின், ஆப்பிரிக்கா ஆகியவற்றை சுயேச்சையான பிர தேசங்களாக செய்து வைத்திருந்த இயற்கை எல்லைகள் இன்னும் இருந்தன, இன்னும் தம் சக்தியை உணர்த்தி வந்தன. எனினும் இந்த அம்சங்களை இணைத்துப் புதிய தேசிய இனங்களை உருவாக்கக் கூடிய சக்தி எங்குமே இருக்கவில்லை; வளர்ச்சியடைவதற்குச் சிறிதளவு திறமையோ அல்லது எதிர்க்கும் சக்திக்கு அற்ப அறிகுறியோ எங்குமில்லை; படைப்பு ஆற்றலைப் பற்றிப் பேசவே வேண்டாம். இந்த மாபெரும் பிரதேசத்திலிருந்த மிகப் பெரிய மனிதக் கூட்டத்தை ரோமானிய அரசு என்ற பந்தம் ஒன்றுதான் ஒன்றாகத் திரட்டி வைத்திருந்தது. அந்த அரசு காலப் போக்கில் அவர்களுடைய பரம விரோதியாக, ஒடுக்குபவராக மாறி விட்டது. ரோமாபுரியை மாகாணங்கள் சீரழித்திருந்தன. ரோமாபுரியே மற்ற நகரங்களை போல ஒரு மாகாண நகரமாகி விட்டது. அதற்கென்று தனி உரிமைகள் இருந்தன, ஆனால் அது இப்பொழுது ஆட்சி செய்யவில்லை, உலகப் பேரரசின் மையமாக இப்பொழுது இல்லை, சக்கரவர்த்திகள், துணைச் சக்கரவர்த்திகளின் இருப்பிடமாகவும் கூட இப்பொழுது இல்லை. அவர்கள் கான்ஸ்டாண்டிநோப்பிளிலும் டிரியரிலும் மிலானிலும் இருந்தார்கள். ரோமானிய அரசு தன் குடிமக்களைச் சுரண்டுவதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான, சிக்கல் மிகுந்த இயந்திரமாகி விட்டது. வரிகளும் அரசுச் சேவைகளும் பல விதமான கட்டாய வசூல்களும் மக்களை மேன்மேலும் வறுமையில் ஆழ்த்தின. அரசின் அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள், போர்வீரர்கள் ஆகியோருடைய பணம் பிடுங்கும் நடவடிக்கைகள் இந்தச் சுமையைத் தாங்க முடியாதபடிச் செய்தன. உலகில் ஆதிக்கம் வகித்த ரோமானிய அரசு இத்தகைய நிலைமையை ஏற்படுத்தி இருந்தது. உள்நாட்டில் ஒழுங்கை நிலைநிறுத்துவதையும் வெளிப்புறத்திலுள்ள அநாகரிகர்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதையும்தான் அது தன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தது. ஆனால் அது ஏற்படுத்திய ஒழுங்குமுறை படுமோசமான ஒழுங்கின்மையை விடக் கீழானதாக இருந்தது. எந்த அநாகரிகர்களிடமிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதாக அது நடித்ததோ, அந்த அநாகரிகர்களை விமோசனமளிப்பவர்கள் என்று குடி மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.

சமூக நிலைமைகளும் அதே அளவுக்குப் படுமோசமாக இருந்தன. குடியரசின் கடைசி ஆண்டுகளிலிருந்தே ரோமானிய ஆதிக்கம் வசப்படுத்தப்பட்ட மாகாணங்களை ஈவிரக்கமின்றிச் சுரண்டுவதை ஆதாரமாகக் கொண்டிருந்தது. இந்தச் சுரண்டலைச் சக்கரவர்த்திகள் ஒழிக்கவில்லை; அதற்கு பதிலாக அதை ஒழுங்குபடுத்தினார்கள். பேரரசு எவ்வலவு அதிகமாக சீரழிந்ததோ, அந்த அளவுக்கு வரிகளும் கட்டாயச் சேவைகளும் அதிகரித்தன, அந்த அளவுக்கு வெட்கமின்றி அதிகாரிகள் மக்களைக் கொள்ளையடிக்கவும் பயமுறுத்திப் பிடுங்கவும் செய்தார்கள், மொத்த மக்களினங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதிலேயே குறியாக இருந்த ரோமானியர்கள் வர்த்தகம் அல்லது தொழிலில் அக்கறை காட்டியதில்லை. கந்துவட்டியில் மட்டுமே அவர்கள் தமக்கு முந்தியவர்கள், பிந்தியவர்கள் எல்லோரையும் மிஞ்சியிருந்தனர். முன்னரே ஏற்பட்டிருந்து அதன் பிறகு தானாகவே நிலைத்திருந்த வர்த்தகமும் அதிகாரிகள் பிடுங்கும் வசூல்களால் நாசப்படுத்தப்பட்டது. அதிலிருந்து தப்பிப் பிழைத்த வர்த்தகம் பேரரசின் கிழக்குப் பகுதியில், கிரேக்கப் பகுதியில் தொடர்ந்து நடந்தது. ஆனால் இது நமது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். சர்வவியாபகமான ஏழ்மை, வர்த்தகம், கைத்தொழில்கள், கலைகள் ஆகியவற்றின் நலிவு, மக்கள்தொகையின் குறைவு, நகரங்களின் சீரழிவு, விவசாயம் நசித்துக் கீழ்நிலைக்கு இறங்குதல்-ரோமானிய உலக ஆதிக்கத்தின் இறுதி விளைவு இவையே.

விவசாயம்தான் பண்டைக்கால உலகம் முழுவதிலும் தீர்மானமான உற்பத்திப் பிரிவாக இருந்தது; அது முன்னைவிட இப்பொழுது அதிகத் தீர்மானமானதாகி விட்டது. இத்தாலியின் குடியரசு முடிந்த காலத்திலிருந்து அநேகமாக நிலப்பரப்பு முழுவதையும் அணைத்துக் கொண்டிருந்த பிரம்மாண்டமான பண்ணைகளின் கூட்டுகள் (லாட்டிபூண்டியாக்கள்) இரு வழிகளில் பயன்படுத்தப்பட்டன; ஒரு வழி: மேய்ச்சல் நிலங்களாக-இவற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு ஆடுகளும் மாடுகளும் வைக்கப்பட்டன; அவற்றை கவனித்துக் கொள்வதற்கு சில அடிமைகள் இருந்தால் போதும்; அடுத்த வழி: கிராமாந்திரப் பண்ணைகளாக-இவற்றில் ஏராளமான அடிமைகளைப் பயன்படுத்திப் பழத் தோட்டங்கள் பெரிய அளவில் வளர்க்கப்பட்டன; இவை தோட்ட உடைமையாளர்களின் சொகுசான வாழ்க்கைத் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்திச் செய்வதற்கும் ஓரளவு நகரச் சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் பயன்பட்டன. பெரும் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்கப்பட்டு ஓரளவுக்கு விரிவுபடுத்தவும் செய்யப்பட்டன. ஆனால் கிராமாந்திரப் பண்ணைகளும் அவற்றிலிருந்த பழத் தோட்டங்களும் நசித்தன. அவற்றின் உடைமையாளர்கள் நசித்துப் போனதும் நகரங்கள் சீரழிந்ததும் இதற்குக் காரணமாகும். அடிமையுழைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்த லாட்டிபூண்டியாக்களின் பொருளாதாரம் இனிமேல் லாபமளிக்கவில்லை. ஆனால் அன்று அதுதான் பெருமளவு விவசாயத்துக்குச் சாத்தியமான ஒரே வடிவமாக இருந்தது. சிறு அளவு விவசாயம் என்ற வடிவம் ஒன்றே லாபகரமானதாக மறுபடியும் ஆயிற்று. பண்ணைகள் ஒவ்வொன்றாகப் பிரிக்கப்பட்டன, சிறு நிலத் துண்டுகளாகப் பரம்பரைக் குத்தகைதாரர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வந்தார்கள் அல்லது அவை பார்ட்டியாரிகள் (partiarii) என்பவர்களிடம் விடப்பட்டன; இவர்களைக் குத்தகைதாரர்கள் என்பதை விட பண்ணை நிர்வாகிகள் என்று கூறலாம். அவர்கள் தமது உழைப்புக்காக வருடாந்தர விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு அல்லது ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே கூடப் பெற்று வந்தார்கள். ஆனால் இந்தச் சிறு நிலத் துண்டுகள் கொலோன்கள் (coloni) என்பவர்களிடம்தான் பிரதானமாக வினியோகிக்கப்பட்டன. அவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறீப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள், நிலத் தோடு இணைக்கப்பட்டிருந்தார்கள், நிலங்களுடன் சேர்த்து அவர்களையும் விற்பனை செய்ய முடியும். அவர்கள் அடிமைகளல்ல; அதே சமயத்தில் சுதந்திர மனிதர்களும் அல்ல. அவர்கள் சுதந்திரமான குடிமக்களை மணக்க முடியாது; அவர்கள் தமக்குள்ளே மணந்து கொள்வதும் செல்லத்தக்க திருமணமாகக் கருதப்படவில்லை; அடிமை விஷயத்தில் இருந்ததைப் போல வெறும் காமக்கிழத்தி (contubernium) முறையாகவே கருதப்பட்டது. அவர்கள் மத்திய காலப் பண்ணையடிமைகளுக்கு முன்னோடிகளாவர்.

பண்டைக்கால அடிமை முறை வழக்கில்லாமற் போய்விட்டது. கிராமங்களில் பெரிய அளவு விவசாயத்திலோ, நகரங்களில் தொழில் பட்டறைகளிலோ அது பயனுள்ள லாபம் எதுவும் தரவில்லை. அதன் பொருட்களுக்குரிய சந்தை மறைந்து போய் விட்டது. பேரரசின் வளமான காலங்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான உற்பத்தி இப்பொழுது சிறு அளவு விவசாயம், சிறு கைத்தொழில்கள் என்ற அளவுக்கு தாழ்ந்து விட்டது. அங்கே எண்ணற்ற அடிமைகளுக்கு அவசியமில்லை. செல்வர்களின் வீட்டு வேலைகளைச் செய்த அடிமைகளுக்கும் அவர்களின் சொகுசான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்த அடிமைகளுக்கும் மட்டுமே சமுதாயத்தில் இடம் தரப்பட்டது. ஆனால் சுதந்திர ரோமானியர்கள் (இப்பொழுது எல்லாக் குடிமக்களும் சுதந்திர ரோமானியர்களே) எல்லா உற்பத்தி வகைப்பட்ட வேலையையும் தம்முடைய கௌரவத்துக்குப் பொருந்தாத அடிமை உழைப்பு என்று கருதுகின்ற அளவுக்கு மரணத் தறுவாயிலிருந்த அடிமைமுறை போதிய வீரியம் பெற்றிருந்தது. அதன் காரணமாக, ஒரு பக்கத்தில், தேவையற்ற அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது; அவர்கள் ஒரு சுமையாகி விடவே விடுதலை செய்யப்பட்டார்கள். மறு பக்கத்தில், கொலோன்களின் எண்ணிக்கையும் ஏழைகளாகிவிட்ட சுதந்திர மனிதர்களின் (அமெரிக்காவில் முந்திய அடிமை மாநிலங்களில் இருக்கும் poor whites [ஏழை வெள்ளையர்கள்] போன்றவர்கள் இவர்கள்) தொகையும் அதிகரித்தன. பண்டைக்கால அடிமைமுறை இப்படி படிப்படியாக அழிந்ததற்கு கிறிஸ்துவ சமயம் பொறுப்பாளியே அல்ல. ரோமானியப் பேரரசில் பல நூற்றாண்டுகளாக இருந்த அடிமைமுறையின் பலன்களில் அது பங்கு பெற்றுக் கொண்டது. பிற்காலத்தில் கிறிஸ்துவர்கள் செய்த அடிமை வர்த்தகத்தை – வடக்கே ஜெர்மானியர்களோ, மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் வெனிஷியர்களோ நடத்திய அடிமை வர்த்தகத்தைத் – தடுப்பதற்கு அது ஒன்றும் செய்யவில்லை; அதற்குப் பிந்திய ஆண்டுகளைச் சேர்ந்த நீக்ரோ அடிமை வர்த்தகத்தைத் தடுக்கவும் அது ஒன்றும் செய்யவில்லை [10ஆம் நூற்றாண்டில் வெர்டேனில் (அதாவது புனிதமான ஜெர்மன் பேரரசில் [ஜெர்மானிய இனத்தின் புனிதமான ரோமானியப் பேரரசு 962இல் நிறுவப்பட்டது. ஜெர்மானியும் இத்தாலியில் ஒரு பகுதியும் அதில் அடங்கியிருந்தன. பிற்காலத்தில் பிரான்சின் சில பிரதேசங்கள், செக், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் இதர நாடுகளும் அதில் சேர்க்கப்பட்டன. இப்பேரரசு மத்தியப்படுத்தப்பட்ட அரசு அல்ல. அது சக்கரவர்த்தியின் தலைமையான அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட நிலப்பிரபுத்துவ ராஜ்ஜியங்கள் மற்றும் சுதந்திர நகரங்களைக் கொண்ட தளர்வான ஐக்கியமாகும். 1806இல் பிரான்சுடன் நடைபெற்ற யுத்தத்தில் ஹாப்ஸ்புர்குகள் தோல்வியடைந்ததால் புனிதமான ரோமானியப் பேரரசின் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைக் கைவிடும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர்; அத்துடன் இப்பேரரசு தகர்ந்தது]) அலிகளை உண்டாக்குவது முக்கியமான தொழிலாக இருந்தது; அந்த அலிகள் மூர்களின் அந்தப்புரங்களுக்காக அதிகமான லாபத்தில் ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டார்கள் என்று கிரிமோனாவின் பிஷப் லியூட்பிராண்ட் கூறினார். (எங்கெல்ஸ் எழுதிய குறிப்பு)]. இனிமேல் அடிமைமுறை லாபகரமாக இல்லாதபடியால் அது அழிந்து விட்டது. ஆனால் அழிந்து கொண்டிருந்த அடிமைமுறை, சுதந்திர மனிதர்கள் செய்து வந்த உற்பத்தி வகைப்பட்ட வேலை கேவலமானது என்று முத்திரை குத்தியதன் மூலம் தனக்குப் பின் தனது விஷக் கொடுக்கை விட்டுச் சென்றது. இந்த முட்டுச் சந்தில்தான் ரோமானிய உலகம் சிக்கிக் கொண்டது. பொருளாதார ரீதியில் அடிமைமுறை சாத்தியமற்றதாகி விட்டது; ஆனால் சுதந்திர மனிதர்களின் உழைப்பு தார்மிகத் தடைக்கு உட்பட்டிருந்தது. முந்தியது சமூக ரீதியான உற்பத்தியின் ஆதார வடிவமாக இனிமேல் இருக்க முடியாது; பிந்தியதோ இன்னும் அப்படி உருப்பெற முடியாததாக இருந்தது. ஒரு முழுமையான புரட்சிதான் இங்கே உதவ முடியும்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2
  17. கிரேக்க குலம் 1
  18. கிரேக்க குலம் 2
  19. அதீனிய அரசின் உதயம் 1
  20. அதீனிய அரசின் உதயம் 2
  21. அதீனிய அரசின் உதயம் 3
  22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
  23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2
  24. கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1
  25. கெல்டுகள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 2
  26. கெல்டுக்ள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 3

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s