பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார்.

பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் உள்ளது என நினைக்கிறேன். பாஜக இந்திய வாக்காளர்களை இந்து, இஸ்லாமியர், கிறித்துவர்கள் எனப் பிரித்து அவரவர் தமது மத அடையாளத்தின் படி வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறது. நீங்கள் இந்து எனில் இந்து மதத்தை பிரதிநுத்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இஸ்லாமியர் எனில் ஒவைஸ்ஸி போன்றோருக்கு வாக்களிக்க வேண்டும். கிறித்துவர்கள் எனில் ஒரு மத போதகருக்கு வாக்களிக்க வேண்டும். முக்கியமாக, மக்கள் மத அடையாளம் தவிர்த்த முற்போக்கு சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது.

இது சாத்தியப்படாத போது மட்டுமே சாதி அடிப்படையில் மக்களை திரட்டி அது அரசியல் செய்கிறது; அதன் நீண்ட கால இலக்கானது மத அடிப்படையிலான தேர்தலே. சிறுபான்மையினரை கிறித்துவத்துக்காக, இஸ்லாத்துகாக வாக்களிக்க சொல்வதால் ஒரு இந்துத்துவ கட்சிக்கு என்ன லாபம்? நிச்சயமாக லாபம் உண்டு.

சிறுபான்மையினரை மதசார்பற்ற ஒரு கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் போது பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினருக்காக பேசுகிற, சமரசம் செய்கிற ஒரு லட்சிய அரசியல் உருவாகிறது. இதை பாஜக வெறுக்கிறது. இதை appeasement vote bank politics (ஆற்றுப்படுத்தும் வாக்குவங்கி அரசியல்) என நீண்ட காலமாகவே சொல்லி வருகிறது.

காங்கிரஸின் இந்த அரசியலில் பாஜகவுக்கு உள்ள முக்கிய பிரச்சனையே இது காந்தியத்தின் பாணியில் சிறுபான்மையினரை சகோதரர்களாக பாவிக்க இந்துக்களை கேட்கிறது; மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. அதனால் பாஜகவோ சிறுபான்மையினரை நோக்கி “உங்களுடைய அரசியல் பிரதிநுத்துவத்தை முற்போக்காளர்களின் இந்த ஆற்றுப்படுத்தும் அரசியல் காலி பண்ணுகிறது, நீங்கள் உங்கள் மத பிரதிநிதிகளுக்கே வாக்களியுங்கள்” என்கிறது. இது இன்று பல சிறுபான்மை வாக்காளர்களிடம் எடுபடவும் செய்கிறது.

திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் கூட சிறுபான்மையினர் அதிகமாக உள்ள தொகுதிகளில் அம்மதத்தவரைத் தானே வேட்பாளராக்குகிறது என நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒரு தொகுதியில் இருந்து ஒரு கிறித்துவரோ இஸ்லாமியரோ தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட அவர் தன்னை தனது மதத்தின் ஆளாக மட்டுமே அரசியல் வெளியில் கருத முடியாது. அவர் பேசும் அரசியலானது அனைவருக்குமான அரசியலாகவே இருந்தாக வேண்டும் என அவரது கட்சியின் கொள்கை கோரும். எடப்பாடியார் கூட இங்கு தன்னை இந்துக் கோயிலை கட்டுகிற, அங்கு பூமி பூஜை செய்கிற ஒரு இந்துவாக மட்டும் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் இந்து அரசியலை அல்ல, தமிழர் அரசியலையே பேசியாக வேண்டும். இதையே பாஜக எதிர்க்கிறது.

பாஜகவின் இந்த வியூகத்தின் விளைவு என்னவெனில் சிறுபான்மையினர் எதிர்காலத்தில் சுலபத்தில் தனிமைப்படுத்தப் படுவார்கள். குடியுரிமை போன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்காக ஒரு பெரிய கட்சி நின்று பேசாது. ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களே பேசியாக வேண்டும்.

அடுத்து, பாஜக போன்ற ஒரு பெரிய கட்சி ஒரு இஸ்லாமியருக்கு தேர்தலில் போட்டியிட இடமளித்து, அமைச்சராக்கினால் கூட அவரை இஸ்லாமிய விரோத அரசியல் பேசவே வைக்கும். ஒரு கட்டத்தில் சிறுபான்மையினர் தாம் பெரும்பான்மை மதத்தவரின் அடிமைகள் எனும் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு அதையே உண்மை என ஏற்றும் கொள்வார்கள். இதைத் தான் பாஜக எதிர்பார்க்கிறது.

அரசியல் களத்தில் சிறுபான்மை மதத்தவர்கள் தமது சிறுபான்மை இடத்தை ஏற்று, எந்த கோரிக்கையும் வைக்காமல் பெரும்பான்மைக்கு அடங்கியும், போகப் போக இந்துமத அரசியலை போற்றியும் வாழ வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.

இதை நிகழ்த்திய பின் இதை ஒரு சாதனையாக பெரும்பான்மை மக்களிடம் காட்டி விட்டு வாக்குகளை கொய்யலாம் என நினைக்கிறார்கள். இந்த ஆபத்தான அரசியல் வெற்றி பெற்றால் நமது நாட்டில் அனைத்து மதத்தினரும் சமம் எனும் நம்பிக்கை தகர்ந்து போகும். சட்டரீதியாகவே சிறுபான்மையினர் அரசியல் பிரதிநுத்துவம் மட்டும் கொண்ட ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாத மக்கள் எனும் எண்ணம் வலுப்படும். அவர்களோ அவர்களுக்காக பிறரோ எந்த விவாதத்திலோ பேச முடியாது. அவர்கள் குரலற்றவர்களாக ஆவார்கள். விளிம்புநிலை மக்களின் பிரச்சனை, ஒடுக்கப்பட்டோரின் அரசியல், எதிர்க்குரல்களின் இருப்பு எதையுமே நாம் பேச முடியாது. பேச்சு சுதந்திரத்தையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆளும் மத்திய அரசின் கிளிப்பிள்ளைகளாக மொத்த நாட்டு மக்களுமே மாற வேண்டி இருக்கும்.

அதனாலே அடுத்த முறை appeasement politics குறித்து விமர்சிக்கிறவர்களைக் கண்டாலே செருப்பை எடுத்து காட்டுங்கள்!

அபிலாஷ், செய்யது அலி வழியாக முகநூலில் இருந்து

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s