அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,
கடந்த ஒரு மாதமாக செங்கொடி தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் இடப்படவில்லை. அதற்கான காரணமோ விளக்கமோ எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இது குறித்து தோழர்கள் சிலர், “என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியதால், அதுகுறித்த சிறு தன்னிலை விளக்கமே இந்தப் பதிவு.
முன்னர் சிலமுறை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் எனும் அளவுக்கு பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு வலைப்பதிவில் இயல்பாக வரும் இடைவெளி என்பதாக கடந்து விடும். மாதக்கணக்கிலும் கூட ஓரிரு முறை பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அவ்வப்போதில் அதன் காரணங்கள் வெளியில் தெரிந்திருந்தது என்பதால் அது குறித்தான விசாரித்தல்கள் மட்டுமே இருந்தன. இப்போது அது போன்ற காரணங்கள் ஏதும் இல்லை என்பதால் விசாரித்தல்கள் எழுந்து விட்டன. அந்த விளக்கத்தை பொதுவில் கூறி விடலாமே என்பதே இப்பதிவின் நோக்கம்.
இந்த செங்கொடி வலைப் பக்கத்தில் முன்பு எழுதியிருந்த தொடர் ஒன்றை நூலாக வெளியிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். அது கைகூடி வருகிறது. அதனால், அதை புதிய விளக்கங்கள், கூடுதல் தகவல்களை இணைத்து புத்தாக்கம் செய்வதும், அதை பிழைதிருத்தம் செய்து முடிக்க வேண்டியதுமான தேவை, அதையும் விரைந்து செய்ய வேண்டியதாகவும் இருந்ததால், பிற பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு அதற்கு நேரமுதன்மை கொடுக்க வேண்டியது இன்றியமையாததாகியது.
– அந்நூல் குறித்தான முன்வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது தோழர்கள், நண்பர்கள் அந்நூலை வாங்கவும், பரப்பவும் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். –
மட்டுமல்லாது, சொந்த வேலை காரணமாக தள்ளவியலாத பயணங்கள் ஒன்றிரண்டை மேற்கொள்ள வேண்டிய தேவை வந்ததும் பதிவுகள் இடுவதை தள்ளி வைக்கக் கோரியது.
இவை தவிர வேறெந்தக் காரணமும் இல்லை. இனி இவ்வாறான அறிவிப்பற்ற இடைவெளிகள் ஏற்படாதவாறு கவனம் கொள்கிறேன் என்று தோழகள், நண்பர்களிடம் உறுதியேற்றுக் கொள்கிறேன்.
இடுகைகள் எதுவும் இடாத போதும் கூட தினமும் செங்கொடி வலைப் பக்கத்தை தொடர்ந்து பார்த்து, எண்ணிக்கை குறையாமல் கவனித்துக் கொண்ட தோழர்கள், நண்பர்களுடன் என்னுடைய மகிழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.