நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி,

“எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது.

உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக ரீதியாகவோ சமூக ரீதியாகவோ, உட்கட்டமைப்பு ரீதியாகவோ ஒப்பிடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கலைஞரின் ஆட்சி இந்திய அளவில் முன்மாதிரியாக இருந்திருக்கிறது என்பது வரலாறு.

ஆனாலும் கலைஞர் ஓர் ஊழல்வாதி என்பதாகத்தான் பார்க்கப்படுகிறார். ஏன் என்றால் ஊடகங்களும், மத்தியில் இருந்த ஒன்றிய அரசின் ஆதரவும், திரையில் கதைநாயகனாக நடித்த புகழும்.

இன்றும் கூட நேற்று வெளியான அத்தனை நாளிதழ்களிலும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல் திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொகுத்து செய்தியைப் போல் முதல் நான்கு பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். இது விளம்பரம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தவர்கள் எத்தனை பேர்?

இன்று கலைஞர் மீது வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டுகளான அதிமுக உருவாக காரணம், சர்க்காரியா ஊழல், டாஸ்மாக், கச்சத் தீவு உள்ளிட்ட பல விதயங்களில் மெய்யாகவே கலைஞர் குற்றவாளி தானா? இதில் ஈழ நிலைபாடு குறித்து மிக விரிவாக கட்டுரையே எழுதலாம் அந்த அஆளவுக்கு கலைஞர் மீது பொய்களும் புரட்டுகளும் அப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு புனைபுரட்டுகளை வைத்து கலைஞரை மறைத்து விட்டுத் தான் இங்கே அதிமுக வளர்ந்தது. மட்டுமல்லாமல், இன்று அதன் வழியே பாஜகவும் நுழையக் காத்திருக்கிறது.

எம்ஜிஆர் ஆட்சி குறித்த பழைய, சுருக்கமான தொகுப்பு இது. ஆனால் புரிந்து கொள்ள உதவும். புரிந்து கொண்டால் .. .. ..

திமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வது இன்று நம் முன் வரலாற்றுக் கடமையாக நிற்கிறது.

************

கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே. ஆனால் MGR க்கு எதிராக பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு, ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள். ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்? இவர் சினிமாவில் நடிகராக  உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம். வேடிக்கையா இருக்குமே. ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர். ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது.  அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற  தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை. 2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்? மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார். 1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?

1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை? ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை. 1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும்  அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம். ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் இன்று வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா. அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே. அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை

எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது. கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன. மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை. ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார். அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார். சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.  இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது. இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது. தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.

மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார். மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார். வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார். ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில்  பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது. இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தழுவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது.

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அதனால், அவருக்கு எதிராக புலிகளை ஆதரித்தார்.

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார். இல்லாவிடில் பொத்திக்கொண்டு மௌனமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான். ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார். சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது  சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர். டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை. 1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு  அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர் தான்.

தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும், சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பது தான் உண்மை. மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பனியத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த ம.கோ.இராமச்சந்திரன்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s