மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த வகையில் இது வழமையான தேர்தல் அல்ல.

தேர்தல் அரசியலை ஆதரித்தது சரியா? தவறா? அல்லது அது முரண்பாடா? என்பன போன்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நெருக்கடியான சூழலுக்கு அப்பாற்பட்டு தேர்தல் அரசியலை இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு பல ஐயங்கள் இருக்கின்றன. அவைகளை தீர்த்து வைப்பதற்கு தேர்தல் ஆணையம் முன்வருமா?

ஏப்ரல் ஆறாம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. ஆனால், அதை எண்ணி முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு மே இரண்டாம் தேதி வரை, சற்றேறக் குறைய ஒரு மாதம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாக்குச் சீட்டு முறையை மாற்றி வாக்குப் பதிவு எந்திரங்களைக் கொண்டு வரும் போது, வாக்குப் பதிவு இயந்திரம் பாதுகாப்பானது, உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாக்குப்பதிவு முடிந்த அன்று மாலையே முடிவுகளை அறிவித்து விடலாம் என்று கூறித்தானே அறிமுகப்படுத்தினார்கள். பின் ஏன் இந்த காலங்கடத்தல்?

இதற்கு எளிதாக ஒரு பதில் வருகிறது. மொத்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இப்போதே முடிவுகளை அறிவித்து விட்டால் பின்னர் நடக்கும் வாக்குப் பதிவில் அறிவித்த முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே, அனைத்து இடங்களிலும் தேர்தலை முடித்து விட்டு பின்னர் ஒரே நேரத்தில் வாக்குகளை எண்ணும் பணி நடக்கிறது என்பது தான் கிடைக்கும் பதில்.

முதலில், ஒரு மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தும் காரணம் என்ன? பாதுகாப்பு சிக்கல்களா? தேர்தலுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அளவுக்கு மாநிலங்களின் காவல் துறையும், இராணுவமும் பலவீனமான நிலையிலா இருக்கின்றன? அல்லது வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது, தேர்தல் அலுவலர்களை அனுப்பி தேர்தலை நடத்துவது போன்ற நிர்வாக காரணங்களுக்காக பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறதா? அவ்வளவு சிக்கல்களுடனா மாநில நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? அப்படி என்றாலும் கூட நிர்வாகச் சிக்கல் இருக்கக் கூடிய பகுதிகள், இல்லாத பகுதிகள்; பாதுகாப்பு சிக்கல் இருக்கக் கூடிய பகுதிகள், இல்லாத பகுதிகள் என்று இரண்டாக பிரித்து இரண்டு கட்டங்களோடு வாக்குப் பதிவை நடத்தி முடித்திருக்கலாமே. எட்டுக் கட்டங்களாக நடத்த வேண்டிய தேவை என்ன?

ஒருவேளை இப்படி பல கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான சரியான காரணங்கள் இருக்கின்றன. என்றாலும் கூட, குறைவான கட்டங்களில் அல்லது ஒரே கட்டமாக நடக்கும் பகுதிகளை கடைசி கட்டத்துடன் இணைத்து வாக்குப் பதிவை நடத்தலாமே. ஏன் ஒரே கட்டத்தில் நடக்கும் தேர்தல்களை முதல் கட்டத்தோடு இணைத்து தேர்தலை நடத்தி விட்டு, வாக்குகளை எண்ண ஒரு மாதம் காத்திருக்க வைக்க வேண்டும்? இந்த ஒரு மாத காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு ஏற்படும் செலவுகளையாவது குறைக்கலாமே.

அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் வெளியில் இருந்து திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமா? அதாவது முடிவுகளை மாற்ற முடியுமா? வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகமானவை தானா? எனும் குழப்பம். இந்தக் கேள்வியை எழுப்பினால் சிலர் இது சதிக் கோட்பாடு என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். சதிக் கோட்பாடுகளை ஏற்க வேண்டியதில்லை என்பது சரி தான். ஆனால், ஐயங்களை எழுப்பி விட்டால், அது சதிக் கோட்பாடு தான் என்று முத்திரை குத்தப்படுவது ஏன்?

தேர்தல் ஆணையம் இதற்கு பதிலாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று ஒரு வாய்ப்பை அளித்தது. அந்த வாய்ப்பில், அங்கீகரிக்கப்பட்ட எந்தக் கட்சியும் வந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் முடிவை மாற்ற முடியும் என்று செயல்படுத்தி காட்ட முயலவில்லை. எனவே, வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத் தன்மையில் எந்தக் ஐயமும் இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் வாதம். இதில் ஒரு இடறல் இருக்கிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகத் தன்மை வாய்தவை தாமா எனும் ஐயம் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் இருக்கிறது. பலர் எந்திர அறிவும், பயிற்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். என்றால், யார் வேண்டுமானாலும் வந்து வாக்குப்பதிவு எந்திரத்தை சோதித்துப் பார்த்து முடிவை மாற்ற முடியும் என்று நிரூபித்துக் காட்டலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கலாமே. மாறாக, அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்து வேறு யாரும் கலந்து கொள்ள முடியாமல் செய்தது ஏன்?

ஹரிபிரசாத் எனும் பொறியாளர் தனக்கு ஒரு இயந்திரத்தை தாருங்கள் நான் நிரூபிக்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோள் கண்டு கொள்ளப்படவே இல்லை. ஆனால் அவர் திடீரென ஒரு நாள் பத்திரிக்கையாளர்கள் முன் எந்திரத்தை கொண்டு வந்து நிரல்களை மாற்ற முடியும் என்று நிரூபித்தார். உடனே அவர் கைது செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் அவர் மீது, ‘எந்திரத்தை திருடி விட்டதாக’ வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளியது. எப்படி அவருக்கு இயந்திரம் கிடைத்தது என்பதற்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. தேர்தல் கமிசனிடம் அதிகாரபூர்வமாக 14 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவைகளை பாதுகாப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.

வாக்குப் பதிவு எந்திரங்களின் நிரல்களில் மாற்றம் செய்வது மட்டுமே முடிவை மாற்றும் ஒரே வழி அல்ல, வேறு வழிகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக எந்திரங்களின் செயலகங்கள் எளிதில் கண்டறிய முடியாத முறையைக் கொண்டிருக்கின்றனவா? என்பது. தேர்தல் கமிசன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறியாளர்களைக் கொண்டே எந்திரங்களின் மதர் போர்டு தயாரிக்கப்பட்டதாக உறுதியளித்திருந்தது. ஆனால் குயிண்ட் இணைய தளம் எந்த காப்பும் இல்லாத, தனியார் ஒப்பந்த பொறியாளர்கள் மூலம் மதர் போர்ட் தயாரிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. இதற்கு தேர்தல் கமிசன் எந்த பதிலையும் கூறவில்லை, கூற மறுக்கிறது. இப்படி தொழில்நுட்ப ரீதியில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இவைகளைத் தாண்டி நடைமுறைகளிலும் ஐயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வாக்குப் பதிவு முடிவுகளும் மொத்த வாக்காளர் எண்ணிக்கையும் அல்லது விவிபாட் எண்ணிக்கையும் முரண்படுவதாக செய்தி வெளியானது. உடனேயே இது குறித்த தகவல்களை தன் வலைதளத்திலிருந்து உடனடியாக நீக்கியது தேர்தல் ஆணையம். ஏன் அப்படி செய்தது? எப்படி அந்த எண்ணிக்கை முரண்பாடு வந்தது? எனும் கேள்விகளுக்கு இன்றுவரை தேர்தல் ஆணையம் பதிலளித்திருக்கிறதா? ஏன் பதிலளிக்க முடியவில்லை?

வாக்குப்பதிவு முடிந்த பின், ஒரு எம்.எல்.ஏவின் காரில் வாக்குப் பதிவு எந்திரம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. டூவீலர்களில் எடுத்துச் செல்லும் போது பொதுமக்கள் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். இது போன்று ஒன்றல்ல, இரண்டல்ல. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது இது போன்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் ஒரு ஆயத்தப் பதிலை தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறது. கொண்டு செல்லும் வழியில் வாகனம் பழுதாகி விட்டது எனவே, மாற்று வண்டிகளில் கொடுத்து விட்டோம் என்பதே அந்த பொறுப்பற்ற ஆயத்தப் பதில். தேர்தல் கமிசனே வகுத்திருக்கும் விதிமுறைகள் என்ன சொல்கின்றன? காவல்துறை வாகனம் இல்லாமல், இருப்பிட கண்காணிப்புக் கருவி பொறுத்தப்படாத வாகனங்களில் எந்திரங்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்கிறது விதி. ஏன் இந்த விதி மீறப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் வாக்குப் பதிவு எந்திரம் பழுதாகும் போதெல்லாம் அது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே பழுதாகிறதே எப்படி? ஒருமுறை கூட எதிர்க் கட்சிக்கு வாக்குகள் விழுவது போல் பழுதாகிய எந்திரம் என்று செய்தி வந்ததே இல்லையே எப்படி?

பல முறை அதிகாரிகள் வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்ட பின்பு சீலை உடைத்து அறையையும் எந்திரங்களையும் திறந்திருக்கிறார்கள். அது போன்ற நேரங்களிலெல்லாம் பாட்டரியை வெளியில் எடுக்க மறந்து விட்டார்கள் என்பன போன்ற பதில்கள் தரப்படுகின்றன. அப்படியான நிகழ்வுகளின் போது அனைவரையும் அழைத்து உடன் வைத்துக் கொண்டு விபரம் கூறி எல்லார் முன்னிலையிலும் திறந்து மூட வேண்டும் என்று விதி இருக்கிறதல்லவா? ஏன் இந்த விதி கடைப்பிடிக்கப்படுவதே இல்லை?

கடந்த முறை ஓர் அலுவலர் சீலை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்று அரைமணி நேரம் உள்ளே இருந்தார் என்று செய்தி வந்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறவே இல்லை. அந்த அலுவலர் இன்னமும் தன் கடமையை ஆற்றிக் கொண்டே இருக்கிறார். இப்படி ஏராளமான விதயங்கள் தெரிய வந்திருக்கின்றன. தெரியவராமல் .. .. .. ?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் எனும் ஆங்கிலப் பழமொழியைப் போல் தன்னைக் கருதிக் கொள்கிறதா தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் தான் இப்படி என்றால் நீதி மன்றங்களோ சீசரைப் போலவே நடந்து கொள்கின்றன. அப்பாவு வழக்கில் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவுகளை அறிவிக்க தடை விதித்திருந்த நிலையிலேயே பதவிக்காலம் முடிந்து போனது. இனி அந்த வழக்கை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? பன்னீர் தியானம் செய்த 11 ச.ம.உக்கள் வழக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் தூ.. .. .. ..ங்கிக் கொண்டே இருக்கிறது. இது போல பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. இவ்வளவு சிங்கம் புலிகளுக்கு இடையே தான் முதலாளித்துவ ஜனநாயகம் ஓடிக் கொண்டிருக்கிறது காயம்பட்ட காட்டுப் பன்றியைப் போல்.

இவைகளைத் தான் தோழர் ஸ்டாலின் தெளிவாகச் சொன்னர், “தேர்தல் முடிவுகள் வாக்காளர்களால் அல்ல, வாக்கை எண்ணுவோர்களால் தீர்மானிக்கப்படுகின்றன” என்று. காயம்பட்ட காட்டுப் பன்றியை காப்பாற்றுவதற்கான உத்தியை வகுப்பதே இப்போதைக்கு பொருத்தமானது.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s