காறித் துப்பும் உண்மைகள்

தெருவில் திரியும் அல்லது வலியுடன் உயிர்பிடித்து மூச்சுவிடமுடியாமல் இருக்கும் அத்தனை நோயாளிகள் சார்பாகவும், நோயாளிகள் சாவதை அருகில் நின்று கையறு நிலையில் வேடிக்கைப்பார்க்கும் அவர்களது நண்பர்கள் & உறவினர்கள் சார்பாகவே கேட்கிறேன்.

என் கேள்விகள் மத்திய அரசை பார்த்து மட்டும் அல்ல. அவர்களை ஆதரிக்கும் மூடர்களைப் பார்த்தும் தான்.

1. நுரையீரல் தொற்றை ஓரளவிற்குச் சரி செய்யும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை 4500 ரூபாய்க்கு விற்கும் தருவாயில் , ஒரு மருந்து கம்பெனி தானாய் முன்வந்து 1500 ரூபாய்க்கு விலையைக் குறைக்கும்பொழுது மற்ற நிறுவனங்களைக் குறைக்கச்சொல்லி மத்திய அரசு சொல்லாதது ஏன். எப்படி என வெள்ளந்தியாய் கேட்காதீர்கள். முதல் அலையின்போது கடந்த வருடத்தில் சானிட்டைசரின் விலை எக்கச்சக்கமாக இருந்தபொழுது 5 லிட்டர் 2500 ரூபாய் எனக் கனக்கச்சிதமாக விலை நிர்ணயம் செய்யும் அனுபவம் வாய்ந்த மருந்து கட்டுப்பாட்டுத்துறை மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது. ஒருவருடமாக அதைச் செய்யாதது ஏன்?

2. முதல் அலையின் போதே அப்படியான மருந்துகள் பற்றாக்குறையாக இருக்கக்கூடாதென நிறுவனங்களைப் பணிக்காதது ஏன்?

3. தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என பொய் சொல்லும் மத்திய அரசின் கண் முன் தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் ஊசிகளை இலவசமாகப் போட்டுக்கொண்டிருந்தனர். திடீரென சப்ளை நிறுத்தப்பட்டது. அந்த மருந்தின் எக்ஸ்பயரி ஆறுமாதம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றால், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்திற்கு வரும் மருந்துகளின் பட்டியலில் இந்த ஊசியை ஏன் மோடி கொண்டுவரவில்லை. மத்திய அரசின் தொழிற்சாலைகளில் ஏன் தயாரிக்கவில்லை? இது அஜாக்ரதை தானே?

4. கோவிட் தடுப்பூசிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு ஒரு கொடுந்தொற்று காலத்திலும் அதனை விற்பனைக்கு அனுப்புவதன் காரணம் என்ன. எவன் செத்தாலும் பரவாயில்லை, என் பங்காளிக்கு விற்பனை வேண்டும் என்ற கருத்தா?

5. கோவிட் தடுப்பூசி, ரெம்டிசிவிர் வகை மருந்துகளுக்கு இன்னும் 12 சதவீத ஜி எஸ் டி தேவையா, எமர்ஜென்சி மருந்துகளுக்கும் வரி போட்டு அதன் வருமானத்தில் உங்களுக்கு தனி சொகுசு விமானமும், பெரிய புது பார்லிமெண்ட் கட்டிடமும் தேவையா?

6. pmcares fund லிருந்து விற்பனைக்கு ஆகும் தடுப்பூசிக்கு மானியம் தராதது ஏன்?

7. உலக நாடுகள் எச்சரித்த போதும் கடந்த வருடத்தில் ஈரான் இத்தாலி சிக்கித் தவித்ததை நேரில் பார்த்தபோதும் போதுமான வெண்டிலேட்டர்களைத் தயார் செய்யாமல் விட்டது தான்தோன்றித் தனம் இல்லையா?

8. ஆக்ஸிஜன் பற்றாக்குறை வரும் என்று கடந்த வருடம் உலக நாடுகளும் who வும் எச்சரித்த போதும் எத்தனை மத்திய அரசின் ஆக்ஸிஜன் ப்ளான்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அல்லது எத்தனை மாநில அரசுகளுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க நிதி ஒதுக்கி அதற்கான செயல்திட்டங்கள் இந்த ஒரு வருடத்தில் நடந்துள்ளது. ?

9 . தேசத்தின் கால்மாட்டில் டெல்லியிலேயே ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியவில்லையே நாட்டின் மூலை முடுக்குகளில் எப்படி சமாளிக்கப்போகிறதென்று , மோடி ஏன் கடைசி நேரலையில் வாய் திறக்கவில்லை?

10. இன்னும் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் விற்பனனக்கு 12 சதவீத ஜி எஸ் டி வரி எதற்கு? மக்களை ஆளத்தான் வருமானம் வேண்டும். எங்களைச் சாக கொடுப்பதிலும் வரி வேண்டுமா? உண்மையில் பிஜேபியின் நோக்கம் மக்களைக் காப்பதா? அல்லது மக்களைக் கொள்ளையடிப்பதா?

11. எமர்ஜென்சி சமயத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என மக்கள் ஆம்புலன்சிலும், மருத்துவமனை வாசலிலும் மூச்சுத்திணறி கடக்கையிலும், டெல்லி நீதிமன்றம் களவாடு, பிச்சை எடு, கடன் வாங்கு, ஆக்சிஜனை சப்ளை செய் என்று கடிந்துகொண்டாலும், நேற்றைக்குத் தேதியில் ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. ஏன் நாடெங்கும் பற்றாக்குறை உள்ள நிலையில், ஆக்ஸிஜன் தயாரிப்பு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல டோல்கேட் கட்டணத்தை விலக்க அரசு ஏன் முடிவெடுக்கவில்லை?இதை ஒருவர் சொல்லவேண்டுமா, இல்லை யாராவது பொதுநல வழக்கு போட்டுத்தான் சொல்லவேண்டும் என்றால் கோர்ட்டே ஆளட்டுமே, சிந்தக்கத்தெரியாத தற்குறி அரசு எதற்கு?

மக்களைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு அரசு முன்வரவில்லை. மேற்கொண்ட கேள்விகள் ஒரு சாமான்யனால் கேட்கமுடிகிறதென்றால் உங்களைச்சுற்றியுள்ள ஐ ஏ எஸ் படித்தவர்களும் மெத்த படித்தவர்களும் யோசிக்காதது ஏன்?

தனிமனிதனின் மிகப்பெரிய ஆசுவாசம் என்பது தான் வலியில்லாது சாகவேண்டும் என்பதும், அடுத்தவனுக்குத் தொந்தரவு இல்லாமல் சாகவேண்டும் என்பது தான். உங்கள் ஆதரவு மத்திய அரசு அதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.

இன்னும் இப்படியான திராணியற்ற, சுய சிந்தனையுடன் செயல்பட வலிமையற்ற , மூளையற்ற அரசை ஆதரிக்கும் உங்களை நோக்கித்தான் இத்தனை கேள்விகள் வலம் வரும்.

நீங்கள் கேள்விகளை நிராகரிக்கலாம். அவற்றிற்குப் பதில் தரலாம். ஆனால் அவற்றின் பின் இருக்கும் உண்மை உங்களைக் காறி துப்பும்.

முகநூல் பதிவிலிருந்து

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s