ஆக்சிஜனை விலைக்கு வாங்குங்கள் அல்லது கடனுக்கு வாங்குங்கள், உற்பத்தி செய்யுங்கள் அல்லது இறக்குமதி செய்யுங்கள், திருடுங்கள், கொள்ளையடியுங்கள் அல்லது பிச்சை எடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜனை வழங்கி விடுங்கள். என்று பதறுகிறார் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி.
ஆக்சிஜன் கிடைப்பதற்கு தடையாக இருந்தால் அவரை தூக்கில் போடவும் தயங்க மாட்டோம் என ஆவேசப்படுகிறார் இன்னொரு நீதிபதி.
இன்னும் சில மணி நேரத்துக்குத் தான் ஆக்சிஜன் இருப்பு தாக்குப்பிடிக்கும் என்று கதறுகின்றன மருத்துவமனைகள்.
ஆக்சிஜன் கிடைக்கவில்லையென்றால் தில்லியே சீர்குலையும் என கைசேதப்படுகிறார் கேஜ்ரிவால்.
தொழிற்சாலை ஆக்சிஜன் உருளைகளுடன் மக்கள் வீதிகளில் அலைகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கொடூரமாக இருக்கிறது. உபியிலிருந்து வரும் செய்திகள் பதற வைக்கின்றன. வட மாநிலங்கள் அனைத்திலுமே நிலமை கைமீறி சென்று கொண்டிருக்கிறது. எல்லை கடந்து விட்டது என்று மோடி தன்னுடைய குரங்குப் பேச்சில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு கேள்வி தான் மிச்சம் இருக்கிறது.
கடந்த ஓராண்டாக என்னடா புடுங்கிக் கிட்டு இருந்தீங்க?
நிற்க. இது கொரோனா பற்றிய பதிவோ தடுப்பூசி பற்றிய பதிவோ அல்ல. ஆனால், காட்டப்படும் காட்சிகள் நம்மை கட்டமைக்கும் வேலையைச் செய்கின்றன என்பது தான் என்னுடைய புரிதலாக இருக்கிறது. ஆக்சிஜன் தயாரிப்பது என்பது,
இந்தியாவுக்கு இன்னும் கைவரப் பெறாத உயர் அறிவியல் தொழில்நுட்பமா?
இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களே இல்லையா?
மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு என்பது மீப்பெரும் செலவைக் கோரும் ஒன்றா?
ஏன் மக்களை இந்த அளவுக்கு பதற வைக்கிறார்கள்?
சற்றேறக் குறைய 300க்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவைகளை ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, போர்க்கால அடிப்படையில் சில ஏற்பாடுகளைச் செய்தால் எளிதாக சில மணி நேரத்தில் தீர்ந்து விடக்கூடிய இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதை, ஏன் இவ்வளவு பெரிய சிக்கல் நிறைந்ததாக காட்டுகிறார்கள்? ஏன் மக்களை இந்த அளவுக்கு பதற வைக்கிறார்கள்?
சில ஆண்டுகளுக்கு முன்னான காட்சிகளோடு இதை தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருந்த நேரம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்துக்கு மின்சார தன்னிறைவை அளிக்கும் எனும் வாதம் எடுபடாமல், கவனிக்கப்படாமல் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டிருந்த நேரம். அப்போது தான் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு மக்களிடம் திணிக்கப்பட்டது.
மாணவர்களால் படிக்க முடியவில்லை.
தொடர்ச்சியான மின்வெட்டால் இணையம் கணிணி தடையை காரணம் காட்டி அரசு அலுவலகங்களில் மக்களின் எல்லா கோரிக்கைகளும் புறந்தள்ளப்பட்டன.
சிறு குறு நிறுவனங்களில் உற்பத்தி பெருமளவு முடங்கி, அவை பாரிய இழப்பை சந்தித்தன.
விவசாயிகள் இருக்கும் சொற்ப நீரையும் நிலத்துக்குப் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகிப் போயின.
மத்தியதர உற்பத்தி நிலையங்களிலோ குறித்த நேரத்தில் கேட்டதை அளிக்க முடியாததால் வெளிநாட்டு வேண்டல்கள் பல ரத்தாயின.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் நெருக்கடியை உணர்ந்து விலையை பன்மடங்கு ஏற்றின.
மக்கள் புழுங்கினார்கள், அவிந்தார்கள்.
இப்படித்தான் கூடங்குளத்தின் தேவை மக்களுக்கு புரிய வைக்கப்பட்டது. இப்போதும் அதே ‘புரிய’ வைக்கும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறதா? வேதாந்தாவின் ஸ்டெர்லைட், ஆலையை திறக்க அனுமதியுங்கள், ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் என்று கோரிக்கை வைக்கிறது. ஒன்றிய அரசு எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று நீதி மன்றத்தில் அறிவிக்கிறது. தமிழ்நாட்டு அரசோ ஆலையை திறக்கலாமா என்று தூத்துக்குடி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.
ஆனால், ஓர் அகர்வாலுக்காகவா? ஒரு ஸ்டெர்லைட்டுக்காகவா? இவ்வளவும் நடத்தப்படுகிறது. இருக்காது, பெரிய திட்டங்கள் இருக்கக் கூடும்.
தண்ணீர் தனியார்மயம் போல, ஆக்சிஜன் தனியார்மயமும், தனிநபர் ஆக்சிஜன் நுகர்வும் இந்தியாவிலிருந்து தொடங்கப் போகிறதா? இவை ஐயம் மட்டுமே. என்றாலும் இந்த எளிய கேள்விக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை. காலம் பொட்டிலறைந்தாற் பதில் கூற தவறப் போவதும் இல்லை. மக்கள் (குறிப்பாக வட மாநில மக்கள்) மதத்தையும் அரசியலையும் ஒன்றுகலக்காமல் எதிர்த்துப் போராடும் வடிவங்களில் கவனம் செலுத்த வேண்டும்.