கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் ..

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஒன்றும் விலக்கானவர்கள் அல்லர். சமூக விலகல் என்று உலகமே அலறிக் கொண்டிருக்கையில் மக்களை விட்டு விலகாதீர்கள் என்று கொரோனா வந்து பாடம் நடத்தி இருக்கிறது.
ஈகை என்பதொன்றும் சாயம் போகக் கூடியது அல்ல. அன்று சிகாகோ நகரில் முன்னூற்றூக்கும் அதிகமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த போது, அதற்கான எந்த பலனையும் அவர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ கொள்ளவில்லை. இன்றோ, எட்டு மணி நேர வேலையாக உலகம் முழுவதிலும் இருப்பவர்கள் துய்த்து வருகிறார்கள். இன்று மருத்துவ, துப்புறவுத் தொழிலாளர்களின் ஈகையும் அதற்கு ஈடாக போற்றப்பட வேண்டியது. மக்கள் தங்கள் இழப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றிணைந்து இருக்கிறார்கள். கொரோனா ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக தங்கள் வாழ்வுக்கான தொழில்கள் ஊனப்படுத்தப்பட்ட போதும், தங்கள் உள்ளுணர்வு ஈனப்படுத்தப்பட்ட போதும் அந்த பொது நோக்கத்துக்காக தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஈகையும் கடந்து போகக் கூடியது அல்ல.
ஆனால் அரசு .. .. ..?
வீட்டு வாடகை கேட்காதீர்கள், வேலை இழந்த நாட்களுக்கு பிடித்தம் செய்யாதீர்கள், வேலையை விட்டு விலக்காதீர்கள் என்றெல்லாம் மக்களுக்கு பரிந்துரை கூறியது. ஆனால் இதை செய்யும் பெருநிறுவனக்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுபக்கம், வங்கிக் கடன் வட்டி தொடங்கி, மின் கட்டணம் வரை குறைந்த அளவிலான தள்ளுபடியை கூட எளிய மக்களுக்காக அரசு அறிவிக்கவில்லை. செய்திருப்பதெல்லாம் கால நீட்டிப்பு மட்டும் தான். வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை எடுத்து முதலீடு செய்து அதில் கிடைத்த லாபத்தை சுருட்டிக் கொண்ட இரக்கமற்ற குற்றக் கூட்டத்துக்கு 68,000 கோடி தள்ளுபடி, (நண்பர்கள், தள்ளுபடி, தள்ளிவைப்பு என சொற்களில் சிலம்பம் ஆட வேண்டாம். நோக்கம் என்ன? என்பதைக் கூறுங்கள். ஏழைகள் கடன் வேண்டினால் மெய்யாகவே அவர்களுக்கு கடன் தேவையா? வேறு எந்த வாய்ப்புகளும் இல்லையா? தட்டிக் கழிப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது என்று ஆராய்வார்கள். மீறி கொடுக்கும் நிலையில் அதை திரும்பப் பெறுவதற்கு தற்கொலைக்கு தூண்டுவது வரை விரட்டும் நடவடிக்கைகள் வரை எடுக்கப்படும். இது போன்றவைகளை கண்டிருக்கிறீர்கள் அல்லவா, மேற்கண்ட குற்றக் கூட்டத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது என்பதைக் கூறுங்கள். மாறாக, மறுத்து வாதாடுவதன் மூலம் உங்களை நீங்களே வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள்) பெருமுதலாளிகள் மீது கூடுதல் வரி விதித்து கொரோனா நெருக்கடியை சரி செய்யுங்கள் என அறிவுரை வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை என துள்ளும் அதே அரசு, கொரோனா விலக்கத்துக்குப் பிறகு ஒரு நாள் வேலை நேரத்தை 14 மணிநேரம் என மாற்ற திட்டங்கள் தீட்டி வருகிறது.
பெரும் வல்லாதிக்கங்களாக தங்களை முன்னிருத்திக் கொண்ட நாடுகள் எல்லாம் இறந்த உடல்களை புதைக்கக் கூட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றன. தேவையான மருத்துவக் கருவிகள் போதுமான அளவிலும், ஆயத்த நிலையிலும் எந்த நாட்டிலும் இல்லை. அதேநேரம் ஒருசில மணித்துளிகளில் உலக மக்கள் அனைவரையும் கொன்று குவிக்கக் கூடிய வல்லமை படைத்த படைக் கருவிகள் பெரும்பாலான நாடுகளிடம் உண்டு. இராணுவத்துக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக செலவு செய்யும் நாடுகள் மக்கள் உடல்நலனுக்கு ஒதுக்குவது சொற்பமே. இந்தியாவில் 0.8 விழுக்காடு தான். அனைத்து நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் இது தான் நிலமை. இது கொரோனா நெருக்கடி என்பதை விட அரசுகளின் கண்ணோட்டம் என்பதே சரியானது.
கொரோனா ஓர் உலகளாவிய பேரிடர் தான் மறுக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யார்? பலனடைந்திருப்பவர்கள் யார்? மரணம் தொடங்கி, நீண்ட நெடுந்தொலைவு சொந்த ஊர்களுக்கு நடந்தே கடப்பது ஊடாக, வாழ்வீட்டு சிதைந்தாலும், பட்டினியானாலும் வீட்டுக்குள் முடங்கி இருப்பது வரை எண்ணற்ற இன்னல்களால் வதங்குவது எளிய உழைக்கும் மக்கள். வழக்கமான வாழ்முறைக்கு ஒரு மாற்றாக, உற்பத்தி பொருட்கள் முடங்கிய நிலையை சீராக்க உற்பத்தி நிறுத்தத்துக்கு கிடைத்த வாய்ப்பாக, இதைக் காட்டியே பொதுப் பணத்தை திருட திட்டமிடுவதற்காக, அதற்காக அரசை நெருக்குவதற்காக, இன்னும் பலவாறாக இதனால் பலனடைந்திருப்பவர்கள் பெரு நிறுவனக்காரர்கள். ஏற்கனவே துலக்கமாக தெரிந்து கொண்டிருந்த இந்த இரட்டைப் பிளவை மேலும் வெளிப்படையாக காட்டியிருக்கிறது கொரோனா.
ஆனால், உழைக்கும் மக்கள் இதை இந்தவாறாக அரசியல் அடிப்படையில் புரிந்திருக்கிறார்களா? புரியவைக்கப் பட்டிருக்கிறார்களா? ஜாதி மதம் தொடங்கி அனைத்து வித பிரிவுக்கும் ஆட்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள் என்பது பொதுவானது. அவர்களை இணைக்கும் ஊடு இழை என்ன? எந்தக் கோட்டில் செயல்பட்டால் அவர்களை ஒன்றிணைக்க முடியும்? இது தான் உழைக்கும் மக்களை நேசிக்கும் அனைவரின் முன்னிலும் விரிந்து நிற்கும் கேள்வி. பொருளாதாரம் மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கும் ஒரே ஆணிச்சரடு.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் என்றதும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, கடன்கள், வருவாய், வரி, பங்கு வணிகம் என விரிந்து செல்லும். அதேநேரம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொருளாதார வடிவங்களும் இருக்கும். அதாவது நிறுவனங்கள், அவைகளின் உற்ப்பத்தி திறன், வணிகம், வாய்ப்புகள், இயற்கை வளங்கள், கனிம வளங்கள், அரசு வாய்ப்புகள் என இருக்கும். தெளிவாகச் சொன்னால் ஒரு பெரு முதலாளியின் தனிப்பட்ட பொருளாதாரம் நாட்டின் பொருளாதாரத்துடன் இணைந்திருக்கும். பெரு முதலாளியின் தனிப்பட்ட பொருளாதாரம் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தனக்குள் இறக்குமதி செய்து கொண்டு, தன் தனிப்பட்ட பொருளாதார இழப்பை ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றுமதி செய்கிறான். ஆனால் எளிய உழைக்கும் மக்களின் தனிப்பட்ட பொருளாதாரமோ நாட்டின் பொருளாதாரத்தோடு இணையாமல் தனியாய் இருக்கும். நாட்டின் பொருளாதார வடிவம் எளிய மக்களின் தனிப்பட்ட பொருளாதரத்தினால் பாதிப்பைப் பெறுமேயன்றி இணைந்திருக்காது. துல்லியமாக சொன்னால் நாட்டின் பொருளாதார இழப்புகளை தன் தனிப்பட்ட பொருளாதாரத்துக்குள் இறக்குமதி செய்து கொண்டு; தன் தனிப்பட்ட பொருளாதாரத்தின் வளர்சியை நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றுமதி செய்கிறான். இந்தக் குறிப்பான வேறுபாடு உள்வாங்கிக் கொள்ளப்படாமல் நாட்டின் பொருளாதாரம் என மொத்தமாகவே பார்க்கப்படுகிறது. அது இடதுசாரி பொருளாதார வல்லுனராக இருந்தாலும், வலதுசாரி பொருளாதார வல்லுனராக இருந்தாலும் அவர்களின் பார்வை இந்த வகையில் தான் இருக்கிறது.
இதை மாற்ற வேண்டும். தொழிலாளர் வர்க்கமே புரட்சிகர வர்க்கம் என்று மார்க்ஸ் கூறியதற்கான வரையறைகளில் முதன்மையான ஒன்று அவர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கம் என்பது. இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் வழியாக எளிய மக்களின் பொருளாதாரம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும். இதை ஆளும் வர்க்கம் செய்யாது, இடதுசாரிகளே செய்ய வேண்டும். எளிய மக்களின் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட்டு அதை கூட்டு தலைமைக்குள் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நிலமை என்னவாக இருந்தாலும் அதிக இழப்பை சந்திக்காத வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே உழைக்கும் மக்களை நாட்டின் பொருளாதார அழுத்தங்களிலிருந்தும், பாசிச அபாயத்தின் அடிப்படையிலிருந்தும் பாதுகாக்கும். மட்டுமல்லாது முதலாளித்துவ உற்பத்தி முறையினுள்ளேயே (இதில் கருத்து வேறுபாடு இருந்தாலும்) சோசலிச உற்பத்தி முறையை வாழ்க்கைக்கு இயைந்த ஒரு பழக்கமாக உழைக்கும் மக்களிடம் அறிமுகம் செய்யும். இது தான் சோசலிச சிந்தனையையும், ஜாதி மத இன்னும் பிறவான வேறுபாடுகளையும் கழித்து உழைக்கும் மக்களாக அவர்கள் ஒன்றுபடுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
இது ஒன்றும் மலைக்க வைக்கும் வேலையல்ல. நாடெங்கும் அமைப்பை கட்டி வைத்திருக்கும் எந்தக் கட்சியும் நெஞ்சுரத்தோடு முனைப்பைக் காட்டினால் கைவரக் கூடிய வேலை தான். நாடெங்கும் நூற்றுக் கணக்கான இடதுசாரிக் கட்சிகள் இருக்கின்றன. உழைக்கும் மக்களை இனிமேலும் சாவின் விழிம்புக்குள் தள்ள விட மாட்டோம் எனும் உறுதி இருந்தால் அவைகளில் பல கட்சிகள் ஒன்றிணைவதும், மக்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் கடினமானதே அல்ல. இந்தப் பாதையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மே நாள் ஈகியருக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்களுக்காக உழைத்து இம்மண்ணில் விதையாகிய அத்தனை ஈகியருக்கும் நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.