ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 28

நமக்குக் கிடைத்திருக்கும் செய்திகளில் மிகப் பெரும்பான்மை கோல் பற்றியவையே.  அங்கே கொலோன்களுக்குப் பக்கத்திலேயே சுதந்திரமுள்ள சிறு விவசாயிகளும் இன்னும் இருந்தார்கள். அதிகாரிகள், நீதிபதிகள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியவர்களின் கொடுமையான கட்டாய வசூல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அதிகாரத்திலிருந்த நபர்களின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் பெரும்பாலும் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் தனித்தனியாக மட்டுமல்ல, முழு கூட்டுச் சமூகங்களாக இப்படி செய்தார்கள். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் இந்தச் செயலைத் தடை செய்வதற்கு அடிக்கடி உத்தரவுகள் விதிக்கும் அளவுக்கு இது இருந்தது. இந்தப் பாதுகாப்பைத் தேடி வந்தவர்களுக்கு இது எப்படி உதவியளித்தது? பாதுகாப்பு அளித்தவன் அவர்களுடைய நிலத்தைத் தன் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்; அதற்குப் பிரதியாக வாழ்நாள் முழுவதும் அனுபோக உரிமையை அவர்களுக்கு உறுதிப்படுத்தினான். இது ஒரு தந்திரமே. புனித திருச்சபை இதை நினைவில் வைத்திருந்து ஆண்டவனின் மேன்மை மேலும் அதிகரிப்பதற்கும் தனது நிலவுடைமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும் 9, 10ஆம் நூற்றாண்டுகளில் தாராளமாகக் கடைப்பிடித்தது. ஆனால், அந்தக் காலத்தில், அதாவது 475 ஆம் ஆண்டு வாக்கில் மார்சேயின் பிஷப்பான சால்வியானஸ் என்பவர் இத்தகைய கொள்ளையை இன்னும் தீவிரமாகக் கண்டித்துக் கொண்டிருந்தார். ரோமானிய அதிகாரிகளின் ஒடுக்குமுறையும் பெரும் நிலக்கிழார்களின் ஒடுக்குமுறையும் சகிக்க முடியாதபடி ஆகி விட்டதால் பல “ரோமானியர்கள்” ஏற்கெனவே அநாகரிகர்கள் கைப்பற்றியிருந்த மாவட்டங்களுக்கு ஓடிப் போய் விட்டார்கள்; அங்கே குடிதங்கி விட்ட ரோமானியக் குடிமக்கள் மீண்டும் ரோமானிய ஆதிக்கத்திற்குள் அகப்பட்டுக் கொள்வோமோ என்று அஞ்சியதைப் போல் வேறெதைப் பற்றியும் அஞ்சவில்லை என்றும் சால்வியானஸ் கூறுகிறார். ஏழைப் பெற்றோர்கள் அக்காலத்தில் தங்களுடைய குழந்தைகளை அடிமைகளாக விற்று வந்தார்கள் என்பதை இந்த வழக்கத்தைத் தடை செய்த சட்டம் நிரூபிக்கிறது.

ரோமானியர்களைத் தமது சொந்த அரசிலிருந்து விடுதலை செய்வதற்குப் பிரதிபலனாக ஜெர்மன் அநாகரிகர்கள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கைத் தமதாக்கிக் கொண்டு தம்மிடையே பிரித்துக் கொண்டார்கள். இந்தப் பங்கீடு குல அமைப்புக்கேற்ற முறையில் செய்யப்பட்டது. நாட்டைப் பிடித்தவர்களது தொகை ஒப்புநோக்கில் குறைவாக இருந்தபடியால் பிரிவினை செய்யப்படாமல் பெரிய நிலப்பரப்புகள் மிஞ்சின. அவற்றில் ஒரு பகுதி மக்களினம் முழுவதின் உடைமையாகவும் எஞ்சிய பகுதி இனக்குழுக்கள் அல்லது குலங்களின் உடைமையாகவும் இருந்தன. ஒவ்வொரு குலத்திலும் விளை நிலங்களும் பசும்புல் நிலங்களும் தனித்தனிக் குடும்பங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு சம பங்குகளாக வினியோகிக்கப்பட்டன. அக்காலத்தில் அடிக்கடி மறு பங்கீடுகள் நடந்தனவா என்பது நமக்குத் தெரியாது. எப்படியிருப்பினும், ரோமானிய மாகாணங்களில் இந்த நடைமுறை சீக்கிரத்தில் கைவிடப்பட்டது; தனியாருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் தனிச்சொத்தாக, அதாவது அலோடியமாக ஆயின. காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் பொதுவில் உபயோகிக்கப்படுவதற்கென்று பிரிக்கப்படாமலே இருந்து வந்தன. இவற்றை எப்படி உபயோகிக்கப்பது என்பதையும் பங்கு பிரிக்கப்பட்ட விளை நிலத்தில் விவசாயம் செய்யும் முறையையும் பண்டை வழக்கமும் மொத்தக் கூட்டுச் சமூகத்தின் முடிவுகளும் ஒழுங்குபடுத்தி இருந்தன. கிராமத்தில் குலம் எவ்வளவு அதிகமான காலத்துக்கு வாழ்ந்திருந்ததோ, காலப் போக்கில் ஜெர்மானியர்களும் ரோமானியர்களும் எவ்வளவு அதிகமாக ஒன்று கலந்தார்களோ அந்த அளவுக்கு இரத்த உறவுத் தொடர்புகள் பிரதேச உறவுகளுக்கு முன்னால் பின்வாங்கின; மார்க் சமூகத்தில் குலம் ஒன்றுகலந்து மறைந்து விட்டது. எனினும் சமூகத்தில் உறுப்பினர்களின் ஆதி இரத்த உறவு முறையின் அடையாளங்கள் போதிய அளவுக்கு காணப்பட்டன. இப்படித்தான், குறைந்தபட்சம் மார்க் சமூகங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நாடுகளிலெல்லாம் – பிரான்சின் வடக்குப் பகுதி, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காண்டிநேவியா ஆகிய பிரதேசங்களில் – குல அமைப்பு ஒரு பிரதேச அமைப்பாக கண்ணுக்குத் தெரியாதபடியே மாற்றப்பட்டது; அதன் மூலமாக அது அரசுடன் பொருந்திக் கொள்ள முடிந்தது, எனினும் மொத்த குல அமைப்பின் குறியடையாளமான இயற்கையான ஜனநாயகத் தன்மையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது; ஆக, பிற்காலத்தில் அதன் மீது பலவந்தமாகச் சுமத்தப்பட்ட சீரழிவின் போது கூட குல அமைப்பின் ஒரு சில அம்சங்களைப் பாதுகாத்தது, அதன் மூலம் நவீன காலத்தில் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகிப்பதற்குத் தயாராக இருக்கின்ற ஓர் ஆயுதத்தை விட்டுச் சென்றது.

குலத்தினுள் இரத்த உறவு விரைவாக மறைந்து விட்டதற்குக் காரணம், நாடுபிடித்தலின் விளைவாக இனக்குழுவிலும் மக்களினம் முழுவதிலும் இருந்த குல உறுப்புகள் கூடச் சீரழிந்து போனதேயாகும். மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதென்பது குல அமைப்புடன் பொருந்தாது என்பதை நாம் அறிவோம். அதை இங்கே பேரளவில் பார்க்கிறோம். ரோமானிய மாகாணங்களின் எசமானர்களான ஜெர்மானிய மக்களினங்கள் தமது நாடு பிடிப்பை அமைப்பு ரீதியாகச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ரோமானிய மக்கள் திரளினரைக் குல அமைப்புகளுக்குப் புகுத்திக் கலப்பதற்கோ அவற்றின் உதவியைக் கொண்டு அவர்களை ஆட்சி செய்யவோ அவர்களால் முடியவில்லை. பெரிதும் தொடர்ந்து செயலாற்றி வந்த ரோமானிய ஸ்தல நிர்வாக உறுப்புகளுக்குத் தலைமை வகித்த ரோமானிய அரசுக்குப் பதிலாக ஒன்றை வைக்க வேண்டியிருந்தது. அந்த பதில் அமைப்பு மற்றொரு அரசாகத்தான் இருக்க முடியும். எனவே, குல அமைப்பின் உறுப்புகள் அரசின் உறுப்புகளாக மாற்றப்பட வேண்டியிருந்தது; சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் இதை மிகவும் வேகமாகச் செய்ய வேண்டியதாற்று. ஆனால் நாடுகளை வெற்றி கொண்ட மக்களின் முதல் பிரதிநிதி இராணுவத் தளவதியே. வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புக்கு தளபதியின் அதிகாரத்தைப் பலப்படுத்துவது அவசியமாயிற்று. இராணுவத் தலைமையை அரசனின் ஆட்சியாக மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. அந்த மாற்றம் நிறைவேற்றப்பட்டது.

பிராங்குகளின் இராஜ்யத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே, ரோமானிய அரசின் விரிந்த நிலப்பரப்புகள் மட்டுமன்றி, பெரிய, சிறிய மாவட்டச் சமூகங்களுக்கும் (Gau) மார்க் சமூகங்களுக்கும் கொடுக்கப்படாதிருந்த மிகப் பெரிய நிலங்கள் அனைத்தும், குறிப்பாகப் பெரிய காடுகள் அனைத்தும் வெற்றி பெற்ற சாலியன் மக்களினத்திடம் வில்லங்கமற்ற உடைமையாக வந்து சேர்ந்தன. பிராங்குகளின் அரசன் – சாதரண இராணுவத் தளபதியாக இருந்து அரசனாக மாற்றப்பட்டு விட்டவன் – செய்த முதல் வேலை இந்த மக்கள் உடைமையை அரசனின் உடைமையாக மாற்றியதே; மக்களிடமிருந்து அபகரித்து தன்னுடைய பரிவாரத்துக்கு மானியமாக அளித்ததே. இந்தப் பரிவாரம் ஆதியில் அவனுடைய தனிப்பட்ட இராணுவ ஊழியர்களையும் இராணுவத்தின் மற்ற துணைத் தளபதிகளையும் கொண்டிருந்தது, விரைவில் ரோமானியர்களை, அதாவது ரோமானியமயமாக்கப்பட்ட கோல்களை தன்னுள் கொண்டு பெருகியது. அவர்கள் வெகு சீக்கிரத்தில் அவனுக்கு இன்றியமையாதவர்களாகி விட்டார்கள்; அவர்களிடம் எழுத்தறிவு, கல்வி, ரோமான்ஸ் பேச்சு மொழியிலும் லத்தீன் இலக்கிய மொழியிலும் பயிற்சி மற்றும் ஸ்தலச் சட்டங்களைப் பற்றிய அறிவு இருந்தது இதற்குக் காரணமாகும். இவர்களுடன் அடிமைகளும் பண்ணையடிமைகளும் விடுதலை செய்யப்பட்டவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இவர்கள் அவனுடைய அரசவையாக இருந்தார்கள். அவன் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை அவர்களிடமிருந்துதான் பொறுக்கி எடுத்துக் கொள்வான். அவர்கள் அனைவருக்கும் பொது நிலத்திலிருந்து சில பகுதிகள் முதலில் அன்பளிப்புகளாகவும் பின்னர் பெனெஃபிசிகளாகவும் கொடுக்கப்பட்டன [பெனெஃபிசி (beneficium, நேர்ப்பொருளில் சன்மானம்)-அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட நிலம். 8ஆம் நூற்றாண்டின் முதற் பாதியின் போது பிராங்கு அரசில் இத்தகைய மானியங்கள் அளிப்பது வாடிக்கையாகும். துண்டு நிலங்கள் அவற்றுடன் பிணைக்கப்பட்டிருந்த விவசாயிகளுடன் சேர்த்து மானியமாக அளிக்கப்பட்டன. மானியம் பெறுபவர்கள் சில சேவைகளுக்கு (வழக்கமாக, போர் சம்பந்தப்பட்ட சேவைகள்) ஈடாக இந்த நிலங்களை ஆயுட்காலம் முழுவதும் அனுபவிக்க முடியும். பெனெஃபிசி முறை பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தரப் பிரபுக்களைக் கொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு, விவசாயிகள் பண்ணையடிமைகளாக மாற்றமடைவதற்கு, ஆண்டான் – அடிமை உறவுகள் மற்றும் நிலப்பிரபுத்துவ அடுக்குமுறை வளர்ச்சியடைவதற்குப் பங்களித்தது. பிற்காலத்தில் பெனெஃபிசிகள் பரம்பரைப் பண்ணைகளாக மாற்றப்பட்டன.] ஆதியில், அரசன் உயிரோடிருக்கின்ற காலம் வரைக்கும் நிலத்தைக் கொடுப்பதே பெரும்பாலும் வழக்கமாக இருந்தது. ஆக, மக்களுக்குப் பாதகம் செய்து ஒரு புதிய பிரபுத்துவத்துக்கு அடிப்படை அமைக்கப்பட்டது.

இத்துடன் முடிந்து விடவில்லை. பரந்து விரிந்து கிடந்த பேரரசைப் பழைய குல அமைப்பின் வழிமுறைகளைக் கொண்டு ஆள முடியவில்லை. தலைவர்களின் கவுன்சி வழக்கொழிந்ததாக ஆகி விடாமல் போயிருந்தால் கூடியிருக்க முடியாது. அதனிடத்தில் அரசனுடைய நிரந்தர அரசவை சீக்கிரத்தில் அமர்த்தப்பட்டது. பழைய மக்கள் சபை வெளிப்பார்வைக்கு பாதுகாக்கப்பட்ட மாதிரி தோன்றினாலும் மேன்மேலும் இராணுவத்தின் துணைத் தளபதிகளையும் புதிதாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த பிரபுக்களையும் கொண்ட சபையாகிக் கொண்டிருந்தது. பிராங்கு மக்களின் பெருந்திரளானவர்களான சுதந்திரமுள்ள, நிலவுடைமை விவசாயிகள் இடைவிடாத உள்நாட்டுப் போர்களாலும் நாடுபிடிக்கின்ற போர்களாலும் – பிந்தியவை குறிப்பாக மாபெரும் ஷார்லின்கீழ் நடைபெற்றன – குடியரசின் கடைசி காலத்தில் ரோமானிய விவசாயிகளைப் போல் களைத்துச் சோர்ந்து வறியவர்களாக இருந்தார்கள். இந்தப் பிராங்கு விவசாயிகள்தான் முன்பு இராணுவம் முழுவதிலும் இருந்தார்கள்; பிரான்சின் நிலப்பரப்பு கைப்பற்றப்பட்ட பிறகு அதன் உட்கருவாக இருந்தார்கள். இவர்கள் 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையடைந்து விட்டபடியால் அவர்களில் அநேகமாக ஐந்தில் ஒரு நபர் மட்டுமே யுத்தத்துக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடியவராக இருந்தார். முந்திய இராணுவம் அரசனால் நேரடியாகத் திரட்டப்பட்ட சுதந்திரமுள்ள விவசாயிகளைக் கொண்டிருந்தது; இப்பொழுது அதற்குப் பதிலாக புதிதாக வளர்ச்சியடைந்த பிரபுக்களின் ஊழியர்களைக் கொண்ட இராணுவம் ஏற்பட்டது. இந்த ஊழியர்களில் சார்புள்ள விவசாயிகளும் இருந்தனர்; அரசனைத் தவிர வேறு யாரையும் எசமானராக அங்கீகரிக்க மறுத்த முந்திய விவசாயிகளின் சந்ததியினர் இவர்கள். அதற்குச் சிறிது காலத்துக்கு முன்னால் அந்த விவசாயிகளின் முன்னோர்கள் அரசனைக் கூட எசமானனாக அங்கீகரித்ததில்லை. அவர்களுக்கு எசமானனே கிடையாது. அரசன் ஷார்லின் சந்ததியார்களின் கீழ், உள்நாட்டுப் போர்களாலும் அரச அதிகாரத்தின் பலவீனத்தாலும், அதன் காரணமாக அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பிரபுக்கள் செய்த முயற்சிகளாலும், கடைசியில் நார்மன்கள் உட்புகுந்ததாலும் பிராங்கு விவசாயிகள் முற்றிலும் அழிக்கப்பட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்த பிரபுக்களின் தொகையில் ஷார்ல் நியமித்த மாவட்ட கவுண்டுகளும் (Gaugrafen) சேர்ந்து கொண்டார்கள் [மாவட்ட கவுண்டுகள் (Gaugrafen)-பிராங்கு அரசில் மாவட்டங்களை நிர்வகிப்பதற்கு நியமிக்கப்பட்ட அரசரின் அதிகாரிகள். அவர்கள் தண்டனை அளிக்கின்ற அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள், வரி வசூலித்தார்கள், படையெடுப்புகளின் போது துருப்புகளுக்குத் தலைமை தாங்கினார்கள். அவர்களுடைய சேவைக்கு கூலியாக ஒரு மாவட்டத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் மூன்றிலொரு பகுதி அளிக்கப்பட்டது, பண்ணைகளும் வெகுமதியாகத் தரப்பட்டன. குறிப்பாக 877க்குப் பிறகு இப்பதவியை வாரிசுகளுக்குக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்ட பிறகு கவுண்டுகள் சக்திமிக்க நிலப்பிரபுத்துவக் கோமான்களானார்கள்; அவர்கள் எல்லா அதிகாரமும் உடையவர்களானார்கள்.]. அவர்கள் தம்முடைய பதவிகளைப் பரம்பரைப் பதவிகளாக ஆக்கிக் கொள்வதற்குத் துடித்தார்கள். மாபெரும் ஷார்ல் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு, நானூறு ஆண்டுகளுக்கு முன் ரோமானியப் பேரரசு பிராங்குகளின் காலடியில் நாதியற்றுக் கிடந்த மாதிரியே பிராங்குகளின் பேரரசு நார்மன்களின் காலடியில் நாதியற்றுக் கிடந்தது.

வெளிநாட்டு விவகாரங்களில் பலவீனம் மட்டுமல்ல, உள்நாட்டு சமுதாய ஒழுங்குமுறையும் (அல்லது ஒழுங்கின்மை என்று கூடக் கூறலாம்) அதே மாதிரியாகவே இருந்தது. சுதந்திரமான பிராங்கு விவசாயிகள் தமக்கு முந்தியவர்களான ரோமானிய கொலோன்கள் இருந்த நிலையை ஒத்த  விதத்திலேயே இருந்தார்கள். யுத்தம், கொள்ளையினால் நசித்துப் போய் அவர்கள் தமது பாதுகாப்புக்குப் புதிய பிரபுக்களை அல்லது திருச்சபையை நாட வேண்டியிருந்தது. ஏனென்றால் அவர்களைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு அரசரது அதிகாரம் பலவீனமாக இருந்தது. ஆனால் அந்தப் பாதுகாப்புக்கு அவர்கள் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருந்தது; தமக்கு முன்னால் கோல் விவசாயிகள் செய்ததைப் போலவே தமது நிலவுடைமையைப் புரவலர்களுக்கு மாற்றித் தர வேண்டியிருந்தது. பிறகு அவர்கள் அதே நிலத்தை வெவ்வேறான, மாறிவந்த வடிவங்களில் குத்தகைதாரர்களாகப் பெற்றார்கள், ஆனால் எப்பொழுதும் புரவலர்களுக்கு கட்டாய சேவை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் பெற்றார்கள். சார்பு நிலையின் இந்த வடிவத்துக்குள் ஒரு முறை தள்ளப்பட்ட பிறகு அவர்கள் படிப்படியாகத் தம்முடைய சொந்தச் சுதந்திரத்தை இழந்தார்கள்; சில தலைமுறைகள் கழிந்த பிறகு பெரும்பான்மையானவர்கள் பண்ணையடிமைகளானார்கள். சுதந்திரமுள்ள விவசாயிகளின் வகுப்பு எவ்வளவு வேகமாக மறைந்து கொண்டிருந்தது என்பதை இர்மினோன் என்பவரால் தொகுத்துக் கொள்ளப்பட்ட சான் ஜெர்மேன் டெ பிரே மடத்தின் – அது முன்னர் பாரிசுக்கு வெளியேயும் இப்பொழுது பாரிசுக்கு உள்ளேயும் இருக்கிறது – நில ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மாபெரும் ஷார்ல் வாழ்ந்த காலத்திலேயே சுற்றிலுமுள்ள நாட்டுப்புறமெங்கும் பரந்து கிடந்த இந்த மடத்தின் பண்ணைகளில் 2,788 குடும்பங்கள் இருந்தன; அநேகமாக எல்லாமே ஜெர்மானியப் பெயர்களைக் கொண்ட பிராங்குகளே; அவற்றில் கொலோன்கள் – 2080, லிட்கள் – 35, அடிமைகள் – 220; சுதந்திர விவசாயிகள் – 8 மட்டுமே! விவசாயிகளின் நிலத்தைப் புரவலர் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு விவசாயிகள் அதை வாழ்க்கை முழுவதும் பயன்படுத்துமாறு கொடுக்கின்ற இந்த வழக்கத்தைக் கடவுளுக்கு விரோதமானது என்று சால்வியானஸ் கண்டித்த அதே வழக்கத்தைத் திருச்சபை இப்பொழுது விவசாயிகளை பொறுத்தமட்டில் சர்வாம்சத்திலும் கடைபிடித்தது. நிலப்பிரபுத்துவப் பண்ணையடிமைக் கட்டாய வேலை இப்பொழுது விவசாயிகளை பொறுத்தமட்டில் சர்வாம்சத்திலும் கடைப்பிடித்து. நிலப்பிரபுத்துவப் பண்ணையடிமைக் கட்டாய வேலை இப்பொழுது மேன்மேலும் வழக்கமாகி வந்தது; அது ரோமானிய அங்காரியாக்களை, அதாவது அரசுக்குச் செய்யப்படுகின்ற கட்டாய வேலைகளை [அங்காரியாக்கள் – ரோமானியப் பேரரசில் குடிபுந்தவர்கள் செய்த கட்டாயச் சேவைகள்; அவர்கள் அரசுப் போக்குவரத்துக்கு வண்டிகளும் குதிரைகளும் அளிக்க வேண்டும். காலப் போக்கில் இக்கட்டாயச் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டு அக்கடுஞ்சுமை மக்கள் மீது விழுந்தது.] முன்மாதிரியாகக் கொண்டிருந்ததுடன் ஜெர்மானிய மார்க் சமூகத்தின் உறுப்பினர்கள் பாலங்கள், சாலைகள் அமைத்தல் மற்றும் இதர பொதுப் பணிகளில் உழைத்ததையும் உதாரணமாகக் கொண்டிருந்தது. ஆக, நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் திரளினர் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்து சேர்ந்து விட்டது போலத் தோன்றியது.

எனினும் இது இரண்டு விஷயங்களைத்தான் நிரூபித்தது. முதலாவது, நசித்துக் கொண்டிருந்த ரோமானியப் பேரரசில் சமுதாயப் பிரிவுகளின் அமைப்பும் சொத்து வினியோகமும் அன்று விவசாயம், தொழில்துறை ஆகியவற்றின் உற்பத்திக் கட்டத்துக்கு முற்றிலும் பொருத்த மானவையாகவே இருந்தன, ஆகவே அவை தவிர்க்க முடியாதவை; இரண்டாவது, இந்த உற்பத்திக் கட்டம் பின்வந்த நானூறு ஆண்டுக் காலத்தில் பொருட்படுத்தத்தக்க அளவுக்கு இறங்கவோ, ஏறவோ இல்லை, ஆகவே அது அவசியமாகவே அதே சொத்து வினியோக அமைப்பையும் அதே வர்க்கப் பிரிவினையையும்தான் உண்டாக்கி வைத்தது. ரோமானியப் பேரரசின் கடைசி நூற்றாண்டுகளில் நகரம் முன்னர் நாட்டுபுறத்தின் மீது கொண்டிருந்த ஆதிக்க நிலையை இழந்து விட்டது; ஜெர்மானியர்களின் ஆட்சியின் தொடக்க நூற்றாண்டுகளிலும் அதைத் திரும்பப் பெறவில்லை. விவசாயமும் தொழில் துறையும் மிகவும் கீழான கட்டத்தில் இருந்திருக்குமென்று இதிலிருந்து அனுமானிக்க முடியும். இப்படிப் பட்ட பொது நிலைமைகள் அவசியமாகவே ஆதிக்கம் செலுத்துகின்ற பெரிய நிலவுடைமையாளர்களையும் சார்பு நிலையிலுள்ள சிறு விவசாயிகளையும் தோற்றுவிக்கின்றன. அடிமை உழைப்பைக் கொண்டு நடத்தப் பட்ட ரோமானிய லாட்டிபூண்டியாக்களின் பொருளாதாரத்தையோ அல்லது பண்ணையடிமை உழைப்பைக் கொண்டு நடைபெற்ற புதிய பெரிய அளவு விவசாயத்தையோ இப்படிப்பட்ட சமுதாயத்துடன் ஒட்டுச் சேர்க்க முடியாது என்பதை மாபெரும் ஷார்ல் தன்னுடைய பிரபலமான இராஜாங்கப் பண்ணைகளில் நடத்திய விரவான பரிசோதனைகள் நிரூபிக்கின்றன. அந்தப் பரிசோதனைகள் அநேகமாக வெளியே தெரியாமல் மறைந்து போய் விட்டன; அவற்றை மடங்கள் மட்டுமே தொடர்ந்து நடத்தின; மடங்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது. ஆனால் மடங்கள் என்பவை பிரமச்சரியத்தின் அடிப்படையில் உருவாகிய, இயற்கைக்கு மாறான சமூக அமைப்புகளாகும். அவை அசாதாரணமான காரியங்களை நிறைவேற்ற முடியும்; அதனால்தான் அவை விதிவிலக்குகளாக இருந்தன.

எனினும் இந்த நானூறு ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்படவே செய்தது. ஆரம்பத்திலிருந்த அநேகமாக அதே பிரதான வர்க்கங்களைத்தான் முடிவிலும் நாம் பார்க்கிறோம் என்றாலும் இந்த வர்க்கங்களில் அடங்கிய மக்கள் மாறி விட்டார்கள். பண்டைக்கால அடிமைமுறை மறைந்து விட்டது; உழைப்பது அடிமைத்தனம் என்று பழித்துப் பேசி ஏழைகளாக இருந்த சுதந்திரமான மனிதர்களும் மறைந்து விட்டார்கள். ரோமானிய கொலோனுக்கும் புதிய பண்ணையடிமைக்கும் மத்தியில் சுதந்திரமுள்ள பிராங்கு விவசாயி இருந்தான். அழியும்படி விதிக்கப்பட்ட ரோமானிய உலகின் “பயனற்ற நினைவுகளும் வீண் சண்டைகளும்” செத்துப் புதைக்கப்பட்டு விட்டன. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக வர்க்கங்கள் சீரழிந்து வரும் நாகரிகம் என்ற சதுப்பு நிலத்தில் உருவெடுக்கவில்லை, ஒரு புதிய நாகரிகத்தின் பிரசவ வேதனையில்தான் உருவெடுத்தன. புதிதாக வந்த தலைமுறை – எசமானர்களாயினும் சரி, வேலைக்காரர்களானாலும் சரி – அதன் ரோமானிய முன்னோர்களுடன் ஒப்பிடும் பொழுது அசல் மனிதர்களைக் கொண்ட தலைமுறையாகும். வலிமை மிக்க நிலக்கிழார்களுக்கும் தொண்டூழியம் புரியும் விவசாயிகளுக்கும் இடையேயான உறவு ரோமானியர்களுக்குப் பண்டைக்கால உலகின் சீரழிவின் நம்பிக்கைக்கு இடமில்லாத வடிவமாக இருந்தது; அது இப்பொழுது புதிய தலைமுறைக்கு ஒரு புதிய வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. மேலும், இந்த நானூறு ஆண்டுகள் எதையும் படைக்கவில்லை என்று தோன்றினாலும் கூட அவை ஒரு மாபெரும் பொருளை – நவீன கால தேசிய இனங்களை – விட்டுச் சென்றன; அதாவது மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மனிதகுலத்தின் பகுதியைப் புத்தாக்கம் செய்தும் அணியைப் புணரமைத்தும் நடக்கப் போகின்ற வரலாற்றுக்குத் தாயாரித்துக் கொடுத்துச் சென்றன. ஜெர்மானியர்கள் உண்மையாகவே ஐரோப்பாவுக்குப் புத்துயிர் அளித்தார்கள்; அதனால் தான் ஜெர்மானிய காலகட்டத்தில் அரசுகள் கலைந்தாலும் அவை நார்மன் – ஸாரசன் ஆதிக்கத்துக்கு உட்படாமல் பெனெஃபெசிக்கள், பாதுகாப்பு முறை (கொமெண்டாத்சியாக்கள்[]) ஆகியவற்றில் வளர்ந்த நிலப்பிரபுத்துவத்தில் முடிந்தன. மேலும், மக்கள்தொகையும் பேரளவில் அதிகரித்தது; இதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்த சிலுவைப் போர்களால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கைக் கூடப் பாதகமின்றித் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு மக்கள் தொகை பெருகியது.

ஜெர்மானியர்கள் செத்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு எந்த மந்திரத்தின் மூலமாகப் புதிய சக்தியைப் புகட்டினார்கள்? இனவெறி பிடித்த நமது வரலாற்றாசிரியர்கள் கூறுவதைப் போல, அது ஜெர்மானிய இனத்தின் உள்ளார்ந்த மந்திர சக்தியா? சிறிதுமில்லை. குறிப்பாக அக்காலத்தில் ஜெர்மானியர்கள் ஆரியக் குழுவைச் சேர்ந்த திறமை மிக்க பிரிவினர்; அவர்கள் வீரியமான வளர்ச்சிப் போக்கில் போய்க் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. எனினும் ஐரோப்பாவுக்கு புத்துயிரூட்டியது அவர்களுடைய அநாகரிக நிலையும் குல அமைப்புமே ஆகும்.

அவர்களுடைய தனிப்பட்ட திறமை, துணிவு, சுதந்திர வேட்கை, பொதுக் காரியங்கள் எல்லாவற்றையும் சொந்தக் காரியங்களைப் போல அக்கறையுடன் செய்கின்ற ஜனநாயக உள்ளுணர்வு, சுருக்கமாகக் கூறுவதென்றால், ரோமானியர்கள் இழந்திருந்த குணங்கள் அனைத்தும், ரோமானிய உலகம் என்னும் சேற்றிலிருந்து புதிய அரசுகளையும் புதிய தேசிய இனங்களையும் தோற்றுவிக்கும் சக்தி பெற்ற ஒரே குணங்கள் – இவையாவும் தலைக்கட்டத்தில் இருந்த அநாகரிகர்களின் சிறப்பான அடையாளங்கள், அவர்களுடைய குல அமைப்பின் பலன்கள் என்பதைத் தவிர வேறு என்ன?

ஜெர்மானியர்கள் ஒருதார மணத்தின் பண்டைக்கால வடிவத்தை மாற்றி விட்டார்கள், குடும்பத்தில் ஆணின் ஆதிக்கத்தை மிதப்படுத்தினார்கள் என்றால், மூலச்சிறப்பான உலகம் என்றைக்கும் அறிந்திருந்ததை விட உயர்ந்த நிலையைப் பெண்களுக்கு அளித்தார்கள் என்றால், அவர்கள் அப்படிச் செய்ய முடிந்ததற்குக் காரணம் அவர்களுடைய அநாகரிக நிலை, அவர்களுடைய குல வழக்கங்கள், தாயுரிமைக் காலத்தின் இன்னும் வாழ்கின்ற பாரம்பரியம் என்பதைத் தவிர வேறென்ன?

குறைந்தபட்சம் ஜெர்மனி, வடக்கு பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய மிக முக்கியமான மூன்று நாடுகளில் மார்க் சமூகம் என்ற வடிவத்தில் உண்மையான குல அமைப்பின் சிறு பகுதியைப் பாதுகாத்து நிலப்பிரபுத்துவ அரசில் கொண்டு போய்ப் புகுத்தி, அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட வர்க்கமாகிய விவசாயிகளுக்கு – மத்திய காலப் பண்ணையடிமை முறையின் மிகக் கடுமையான நிலைமைகளிலும் கூட – பண்டைக்கால அடிமைகளுக்கு அல்லது நவீன காலப் பாட்டாளி வர்க்கத்தின் கையில் உடனே கிடைக்க முடியாமல் போன ஸ்தல ஒற்றுமை மற்றும் எதிர்ப்புச் சாதனங்களை அவர்களால் கொடுக்க முடிந்தது என்றால், அதற்குக் காரணம் அவர்களின் அநாகரிக நிலை, குல ரீதியில் குடிதங்கும் பிரத்யேகமான அநாகரிக முறை என்பதைத் தவிர வேறென்ன?

கடைசியாக, சொந்த நாட்டில் ஏற்கெனவே கையாண்டு வந்த அடிமையுழைப்பின் மிதமான வடிவத்தை அவர்கள் வளர்த்து சர்வவியாபகமாகப் புகுத்தினார்கள்; அது ரோமானியப் பேரரசிலும் அடிமை முறையை மேன்மேலும் அப்புறப்படுத்தி அதனிடத்தில் அமர்ந்து விட்டது; இது வடிவம், ஃபூரியே முதலில் வலியுறுத்திக் காட்டியபடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்க்கம் என்ற வகையில் படிப்படியாக விடுதலை அடைவதற்கு சாதனத்தைத் தந்தது (fournit aux cultivateurs des moyens d’affranchissement collectif et progressif [விவசாயிகளுக்குக் கூட்டு வகையில், படிப்படியாக விடுதலை அடைவதற்குரிய சாதனங்களைத் தருகிறது.]); எனவே இவ்வடிவம் அடிமை முறையை விட எவ்வளவோ மேலானது; அடிமை முறை என்பது, இடைக்கட்டம் எதுவுமில்லாமல், ஒரு தனிநபர் உடனடியாக விடுதலை பெறுவதையே அனுமதிக்கிறது (வெற்றிகரமான புரட்சியின் மூலம் அடிமை முறை ஒழிந்ததாகப் பண்டைக்காலம் அறிந்ததில்லை); ஆனால் மத்திய காலப் பண்னையடிமைகளோ, படிப்படியாக வர்க்கம் என்ற வகையில் தமது விடுதலையைச் சாதித்துக் கொண்டார்கள் என்றால், அவர்களுடைய அநாகரிக நிலையைத் தவிர வேறென்ன இதற்குக் காரணம்? அநாகரிக நிலையின் காரணத்தால்தான் அவர்கள் – பண்டைக்கால அடிமை உழைப்பு என்ற வடிவத்திலோ அல்லது கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வீட்டு அடிமை முறை என்ற வடிவத்திலோ – முழு அடிமை முறைக்கு இன்னும் வந்து சேரவில்லை.

ரோமானிய உலகத்தில் ஜெர்மானியர்கள் புகுத்திய வீரியமுள்ள, உயிரூட்டுகின்ற அனைத்தும் அநாகரிக நிலை என்பது தான். செத்துக் கொண்டிருக்கும் நாகரிகத்தின் மரண வேதனையில் கஷ்டப்படுகின்ற உலகத்துக்குப் புத்துயிர் அளிக்கின்ற சக்தி உடையவர்கள் அநாகரிகர்கள் மட்டுமே என்பது உண்மையே. மேலும், மக்களினங்கள் குடிபெயர்வதற்கு முன்னால் ஜெர்மானியர்கள் எந்த அநாகரிக நிலையின் தலைக்கட்டத்தை நோக்கி முன் சென்றார்களோ, எந்த அநாகரிக நிலையின் தலைக்கட்டத்தில் ஜெர்மானியர்கள் உழைத்து முன்னேறினார்களோ, அதுவே இந்த நிகழ்ச்சிப் போக்குக்கு மிகவும் சாதகமானதாக இருந்தது. எல்லாவற்றையும் இது விளக்குகிறது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2
  17. கிரேக்க குலம் 1
  18. கிரேக்க குலம் 2
  19. அதீனிய அரசின் உதயம் 1
  20. அதீனிய அரசின் உதயம் 2
  21. அதீனிய அரசின் உதயம் 3
  22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
  23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2
  24. கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1
  25. கெல்டுகள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 2
  26. கெல்டுக்ள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 3
  27. ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s