மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி மற்றும் பொருளாதார நீதி கூடுதல் கவனக்குவிப்பைப் பெறுகின்றன.

            காலம் தோறும் சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதிகளும் மனிதத் துயர்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆழமாகச் சிந்தனையைச் செலுத்தி, மிகப் பெரிய பங்காற்றிய போதும், அதற்கானத் தீர்வு கிட்டாது நழுவியே சென்றுள்ளது. ஆனால் உண்மையில் பிரச்சனையின் (நோய்) முதல் நாடி, அதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து, தீர்க்கும் திசைவழியைச் சுட்டிக் காட்டியவர் காரல் மார்க்ஸ் அவர்களே ஆவார்.

            சமூக நீதி குறித்துக் காரல் மார்க்சின் அணுகுமுறையைப் பற்றி விவாதிப்பது இன்று காரல் மார்க்சின் பிறந்த நாளில் மிகப் பொருத்தமானதாகும்.

காரல் மார்க்சும் சமூக நீதியும்

            சமூக நீதி பற்றிய கேள்வியை மார்க்ஸ் புறக்கணித்து விட்டார், அவர் வர்க்கச் சுரண்டல் பற்றி ‘மட்டுமே’ பேசுகிறார் என்று பலரும் தவறாகக் குற்றம் சாட்டுகின்றனர். அது அவர்களது அறியாமையின் விளைவு அல்லது மார்க்சின் எழுத்துகள் மற்றும் கண்டுபிடிப்புகளைச் சரியான புரிதலின்றிப் பொருள் திரிபுகளோடு படித்தது காரணமாகலாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே மார்க்ஸ் பண்பாடு, கலாச்சாரம், சமூக, சமய, பொருளாதார, வர்க்க மற்றும் இன்னபிற வகையிலான அநீதிகள் மற்றும் சுரண்டல்கள் பற்றிய கேள்விகளை மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார் என்பது புரியும். மேலும் காரல் மார்க்ஸ் இந்தியாவின் விசித்திரப் போக்குகள் மற்றும் ‘ஓரியண்டல்’ எனப்படும் கீழைச் சமூகங்கள் குறித்தும் ஆழமாக அறிந்திருக்கிறார். அவர் தன்னுடைய ‘ஐரோப்பிய முறைமையின் சமூக வளர்ச்சி’ என்பதை நகல்படுத்தியோ அன்றி அதனை இந்திய மற்றும் ஆசியச் சமூகச் சூழலின் மீது திணித்தோ ஆராயவில்லை. சிலர் குற்றம் சாட்டுவது போல அவரது அணுகுமுறை ‘ஐரோப்பிய –மையமுடையது’ அல்ல; மாறாக, (தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்)  உலகச் சமூகத்தை மையமாக உடையது.

            சமூக வளர்ச்சி குறித்த மெய்யான புறஉலகியலில் நிலவும் சட்டங்களை (objectively existing laws) மார்க்ஸ் கண்டுபிடித்தார். ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடு’ என்ற அவரது கண்டுபிடிப்பு, அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவாக உலகளாவிய அளவில் பொருந்துவதாகும். 

(கம்யூனிஸ்ட்) அறிக்கையும் அநீதி குறித்த கேள்வியும்

            ‘தி லீக் ஆஃப் தி ஜெஸ்ட்’  (சமூக நீதிக் கழகம்) என்ற அமைப்பின்(1836 – 47) தலைவர்கள் மார்க்சையும் ஏங்கெல்சையும் தங்கள் அமைப்பில் சேருமாறும், தங்களுக்கானத் திட்டத்தை எழுதித் தருமாறும் வேண்டினர். அவர்களது அமைப்பின் பெயர் சுட்டிக்காட்டுவதுபோல அந்தக் கழகம் நீதி, தார்மீக நேர்மை மற்றும் (வாழ்க்கை தேவைக்கான) பொருள் இவற்றிற்காகப் போராடியது. மேலும் சகோதரத்திற்காகவும் குரல் கொடுத்தது.

            அவர்களின் கோரிக்கையை மார்க்சும் ஏங்கெல்சும் ஒரு நிபந்தனையின் பெயரில் ஏற்றனர்; அது, அந்த அமைப்பு ரகசியமாகச் செயல்படுவதைக் கைவிட்டு, வெளிப்படையாக இயங்க வேண்டும், மற்றும் அமைப்பின் குறிக்கோள் திட்டத்தை ‘விஞ்ஞானப் பார்வையிலிருந்து’ மீண்டும் எழுதத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்பன. ‘நீதி’, ‘அநீதி’, ‘சகோதரத்துவம்’ போன்ற பதங்களைப் பொதுப்படையாகவும், வரையறுக்கப்படாதத் தெளிவின்மையோடும் பயன்படுத்துவதை மார்க்ஸ் ஆட்சேபித்தார்.

            அந்தச் சொற்கள் நல்ல நோக்கமுடைய கொடைப் பண்பு மிளிரும் வார்த்தைகள் என்பது தவிர அவற்றில் வரையறுக்கப்பட்ட தெளிவு இல்லை. எது ‘நீதி?’ அதன் பொருள் வரையறுப்பு விளக்கம் யாது? எப்படி அதனை அடைவது? ‘சகோதரத்துவம்’ என்பதன் மூலம் எதனை நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்கள்? யாரெல்லாம் ‘சகோதரர்கள்’ மற்றும் யாரெல்லாம் சகோதரர் ஆகமாட்டார்?  என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. மனங்குளிர ஆறுதல் தரும் வார்த்தைகளை மட்டும் பேசுவதில் மார்க்சுக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை; அந்த வார்த்தைகள் வெற்று உபசார அலங்கார வார்த்தைகளாக, உள்ளீடற்ற வார்த்தைகளாகப் போகும்.

            மார்க்சின் விஞ்ஞானபூர்வ விமர்சனங்களிலிருந்து பிறந்ததுதான் வரலாற்றுச் செயல்திட்ட ஆவணமான  புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை (1847), (‘கம்யூனிஸ்ட் மெனிபெஸ்டோ’); நீதிக் கழகம் ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற பரிணாமம் பெற்றது. இங்கேயும் தங்கள் பிற ஆக்கங்களிலும் மார்க்சும் ஏங்கெல்சும் வெறும் நல்லெண்ண நோக்கங்கள் மட்டும் போதுமானதல்ல என்பதை வலியுறுத்தி, உலகிற்குத் தேவை உறுதியான விஞ்ஞான வழிமுறையிலான சமூக ஆய்வும் அதற்கேற்ற விஞ்ஞானபூர்வத் தீர்வுகளும்தான் நமது தேவை என்றுள்ளார்கள்.

கற்பனாவாத சோஷலிசம் மற்றும் விஞ்ஞானபூர்வ சோஷலிசம்

அன்றைக்கு நிலவிய கற்பனாவாத சோஷலிசம் குறித்து விமர்சிக்கத் தொடங்கிய மார்க்ஸ் அந்த நிகழ்முறையின் ஊடே விஞ்ஞான சோஷலிசத்தை வளர்த்தெடுத்தார். நல்ல கனிவான வார்த்தைகள் மற்றும் நோக்கங்களை முன்நிறுத்திப் புனைவுகளால் நம்பவைக்க முயன்று கட்டிய (ஓர் அருபமான கற்பனை) உலகில், திட்டவட்டமான எந்தத் தீர்வும் இல்லாமல்,  கற்பனாவாத (உடோபியன்) சோஷலிசம் வாழ்ந்தது. சமூக நிகழ்வுகள் நமது விருப்பம் அல்லது விழைவின் விளைவால் ஏற்படும் ஒன்றல்ல என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தினார்கள். அந்நிகழ்வுகள், சமூகத்தில் எதார்த்தமாகக் கண் முன்னே நிலவும் இயங்கியல் விதிகளின்படி இயக்கப்பட்டு, நகர்த்தப்படுவதற்குக் காரணமாகிறது என்பதையும் கூறினார்கள்.  சுரண்டல் மற்றும் அநீதி போன்றவைகளின் மூலாதார ஊற்றை, அதனை மூடி மறைத்துள்ள திரையைச் — சமூக அமைப்பியல் மற்றும் அதன் இயக்கத்தின் அடியாழத்தில் — சென்று விலக்க வேண்டும். மனிதர்கள்தாம் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பது சரி என்ற போதும், அவர்கள் அதனைத் தன்னிச்சையாக அல்லாமல், நடைமுறையில் நிலவும் எதார்த்தமான வளர்ச்சிச் சட்டங்களின்படியே உருவாக்குகிறார்கள். சமூகச் செயற்பாட்டாளர்கள், புரட்சியாளர்களின் சரித்திரபூர்வமான பொறுப்பும் கடமையும் அந்தச் சட்டங்களை நன்கு புரிந்து கொள்வதுதான் என மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.

அநீதி மற்றும் சுரண்டல், இவையன்றி வர்க்கம், சாதி, கலாச்சாரம் இப்படி எதுவாயினும், அதுபற்றிய பூடகமான தெளிவற்ற கருத்துநிலை கோட்பாடுகளை மார்க்ஸ் நிராகரிக்கிறார்; அநீதி மற்றும் சுரண்டலின் (சமூக வரலாற்று நிலையில் நிலவும்) ஆணி வேரைத் தேடி அடையும் மார்க்ஸ், எந்தப் புறச்சூழல் நிலையில் அவை மறையும் என்பதையும் காட்டுகிறார்.

(சமூக வரலாற்று நிலை என்பது ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலவும் சமூக, சமய, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளை ஒட்டுமொத்தமாகச் சுட்டும் அரசியல் கலைச் சொல்லாகும்)

அடிப்படை கட்டுமானமும் மேற்கட்டுமானமும்

            அடிப்படை மற்றும் மேற்கட்டுமானம் இரண்டிற்குமிடையே பரஸ்பரமாக நிலவும் இயங்கியல் உறவை மார்க்ஸ் கண்டுபிடித்தார். மனிதர்களிடையே உருவாக்கப்பட்டப் பொருளாதார உறவு, சமூகத்தில் உள்ள ஏனைய அனைத்து உறவுகளுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது என்பதை எடுத்துக் காட்டினார்.  சமூகத்தின் பிற உறவுகள் என்பதில் வர்க்கம், அரசு, வர்ணம்/ சாதி, தத்துவம், கலாச்சாரம், சமய உறவு உட்பட பிற உறவுகளும் அடங்கும். வர்க்கம் என்பது புறநிலையான அமைப்பாக (உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு) இருக்கும் அதே வேளையில், அதன் உறவு அகவயப்பட்டதாக (யூகம், தனிமனித எண்ணம் சார்ந்ததாக) உள்ளது. இதே போன்றுதான் சாதி, இனம் முதலியனவும். (அந்த வகையில்) மதம் கூட இறுதியான சமூகப்பொருளாதார அடிப்படை உடையதாக உள்ளது.

            (புரிதலுக்காக இந்தப் பத்தி ஆங்கிலத்தில் உள்ளவாறு : Karl Marx made the discovery of the mutually dialectical relation between basis and superstructure, showing that the economic relations between humans constituted the basis for all other relations in the society, including class, state, family, varna/caste, ideology, culture, religious and others. Class is an objective structure as well as subjective relations. Similar is the case with caste, guild, etc. Religion too has ultimate socioeconomic base.)

            சமத்துவமின்மையும் சுரண்டலும் ‘இறுதியாக’ (இந்த வார்த்தையைக் குறித்துக் கொள்க) உபரி மதிப்பு, உற்பத்தி சக்தி மற்றும் உற்பத்தி கருவிகள் யாருடைய உடைமையாக   உள்ளன என்பது போன்ற பொருளாதார அலகுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார். இவற்றை அவர் பொருள் சார்ந்த புறவயநிலையாகக் குறிப்பிட்டதன் காராணமாக அவருடைய கோட்பாடு ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடு’ என்று அழைக்கப்படுகிறது.

            பண்பாட்டு கலாச்சார மேற்கட்டுமானமும், ‘மனுஸ்மிருதி’ போன்ற நூல்களும் இந்தியச் சமூகத்தின் சிக்கல்களைப் பிரதிபலிப்பதோடு பொருளாதாரச் சுரண்டலை  மட்டுமல்லாது சமூகக் கலாச்சாரச் சுரண்டலையும் நியாயப்படுத்தவும் செய்கின்றன.

பண்பாடு மற்றும் பொருளாதார அடிப்படை

            இதே பொருளாதார மற்றும் பொருள்வயமான சூழ்நிலையில்தான் பண்பாடு பிறக்கிறது. கற்களைக் கொண்டு கருவிகள் ஆயுதங்கள் செய்த கற்காலத்தவருக்குச் சொந்தமான ஒரு பண்பாடு, வேளாண் சமூகத்தவருக்கென ஒரு பண்பாடு என இருந்தன; முதலாளித்துவ காலகட்டத்தில் பண்பாடானது, – கடந்தகாலப் பண்பாடு, நிகழ்காலப் பண்பாடு என கலந்து– ஒரு புதிய கலவையாக உள்ளது.

            பண்டைய சமூகத்திலும் இடைக்காலச் சமூகத்திலும் பண்பாடு, தத்துவம் மற்றும் சமயங்களின் கலப்பட  உருச்சிதைவு மக்கள் திரளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், சாதிகள் மற்றும் சமூகப் பிரிவு மக்களை ஒடுக்குவதற்காகப்  பொருளாதாரச் சக்திக்கு வெளியே இயங்கிய கூடுதல் சக்தியாக (எக்ஸ்ட்ரா எக்கனாமிக் போர்ஸ்) ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன. முழுமையாக வளர்ச்சிபெறாத முதலாளித்துவத்தின் கீழ் இத்தகைய தத்துவார்த்த மற்றும் பொருளாதாரத்திற்கு வெளியே இயங்கிய கூடுதல் சக்திகளின் மிச்சங்கள் புதிய வடிவங்களை எடுத்து, கூடுதலான அதிகார சக்தியை வரித்துக் கொண்டன.

            சிலர் நினைப்பதுபோல மார்க்ஸ் ‘குழம்ப’வும் இல்லை, கீழைப் பண்பாட்டைப் பற்றிய புரிதலில் ‘குறைவுடை’த் தகவல்களைப் பெற்றவராகவும் இல்லை. அவர் ‘சமூகத்தை முழுமையாக’ ஆராய்ந்தவரே அன்றி ஐரோப்பியச் சமூகம் என்று ஆராய்ந்தவரில்லை.  சமூக வளர்ச்சி பற்றிய விதிகளைக் கண்டறிந்த அவருடைய ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடு’ அனைத்துச் சமூகங்களுக்கும் பயன்படு பொருத்தமுடையது. இந்தியச் சமூகத்தைப் பற்றி ஆழமாகக் கற்ற மார்க்ஸ் அதன் தீவிரச் சிக்கல்களையும் வெகு நன்றாக உணர்ந்தவரும் கூட.

            பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் முதலிய சமயங்களின் மாறுதல்களோடு சில முக்கியமான சரித்திர திருப்பங்களும் உடன் நிகழ்ந்ததாக ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். ஏங்கெல்ஸ்சுக்கு மார்க்ஸ் எழுதிய (1853, ஜூன் 2) கடிதத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்: “கீழை நாடுகளின் சரித்திரம் ஏன் சமயங்களின் சரித்திரமாக இருக்கிறது?”. ஏங்கெல்ஸ் (1853, ஜூன்6) கடிதத்தில் பதிலெழுதினார் இவ்வாறு : “கீழை நாடுகள் முழுமையிலும் நிலமானது தனிஉடைமையாகக் காணப்படாதது என்பது உண்மையில் இதற்கானத் திறவுகோலாகும்”

இந்திய விடுதலைப் போர் குறித்து மார்க்ஸ்

            1850களில் இந்தியா குறித்து விரிவாகப் புகழ்மிக்கச் சில கட்டுரைகளை எழுதிய மார்க்ஸ் சில குறிப்பிட்ட முக்கிய முடிவுகளுக்கும் வருகிறார். எங்கோ தொலைவான லண்டனின் ஒரு மூலையில் இருந்தாலும், இந்தியாவின் 1857–59 முதல் சுதந்திரப்போரின்போது சண்டையிட்ட படைஅணியினரின் போர்கள் மற்றும் விடுதலை இயக்கங்கள் குறித்த மிக நுட்பமான தகவல்களைத் தருகிறார் மார்க்ஸ். சிர்சா, சுல்தான்பூர், சத்தாரா, லக்னோ, ஃபைசாபாத், பண்டல்கண்ட், மதராஸ், நாக்பூர், ஹைத்ராபாத் (அதனை ‘சிந்தில் உள்ள’ ஹைத்ராபாத் என மார்க்ஸ் அடைமொழி தந்தார்) முதலிய பற்பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறார்.

            1853ல் இந்தியாவில் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கோட்பாட்டியலாளர் மார்க்ஸ் மட்டுமே; இரயில்வேயின் வருகை இந்தியாவில் சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும் எனச் சரியாகக் கணித்துக் கூறினார். எலெக்ட்ரானிக் டெலிகிராப் பயன்பாடு இந்தியாவில் அரசியல் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் என மார்க்ஸ் கருதினார் என்பது அதிகம் அறியப்படாத ஒரு தகவல் ஆகும். (ஆதாரம்: 1853, ஜூலை 22 அனுப்பிய செய்திக்குறிப்பு). மார்க்ஸ் கூறினார், “பிரிட்டீஷ் பூட்டிய நுகத்தடி அடிமை தளையை உதறி எறியாதவரை, புதிய தொழில்நுட்பங்களின் பயனை இந்தியர்கள் அறுவடை செய்ய முடியாது”

            இதன் தொடர்பாக மேலும் கூடுதலாக இந்தியாவைப் பற்றி எழுதும் மார்க்ஸ், ஜமீன்தாரி மற்றும் ராயத்வாரி முறைகள் பற்றியும் விவரிக்கிறார்.

சாதி குறித்த ‘புரிதல்’ மார்க்சுக்கு உண்டா?

            சில பேதை மனிதர்கள் நம்ப வைக்க முயல்கிறார்கள், இந்தியாவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் ‘துண்டிக்கப்பட்ட’ ‘குறைபாடுடைய’ மார்க்ஸ், அவர்களுடைய(?) பண்பாடு மற்றும் ‘சாதிய முறை’யைப் பற்றி அறிந்திருக்கவே இல்லை. இந்தக் கூற்று அவர்களது சொந்த அறியாமையை –மார்க்ஸ் குறித்த ஞானத்தின் வறுமையை—மட்டுமே வெளிச்சமிட்டுக் காட்டும்! ‘சாதி’ என்பது என்ன என்பதை எவராலும் வரையறுத்துச் சொல்ல இயலவில்லை என இன்றைக்கும் நம்மால் சொல்ல முடியும். ஆனால் மேலதிகமாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு வரையறை விவரிப்பை ஒருவர், மார்க்ஸ் அவர்களின் படைப்புக்களில் மட்டுமே காண முடியும். ஆனால் அது தொடங்கி மதிக்கத்தக்க பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன என்பது உண்மையே.

            மார்க்சின் புகழ்பெற்ற ஆக்கங்களான ‘ஜெர்மானிய தத்துவம்’, ‘தத்துவத்தின் வறுமை’, மற்றும் பெரும் படைப்பான ‘மூலதனம்’ போன்ற நூல்களிலும் இந்தியச் சமூகத்தில் சாதியப் பிரிவினை என்பது தொழிற் பிரிவின் விளைவே என மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். ஒரு மனிதனின் பகுதி நேர பணி அவனது வாழ்நாள் முழுமைக்குமான பணியாக மாற்றப்படுவதால், அந்தத் தொழில்களைப் பரம்பரைத் தொழில்களாக ஆக்கி, அவர்களையே ஒரு பரம்பரை சாதியாகச் சமூகச் சட்டங்களின் மூலம் நிர்பந்தித்து மாற்றப்பட்டதே சாதி என்று ‘மூலதனம்’ (முதல் தொகுதி)யில் சாதி குறித்து எழுதும்போது மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.

மார்க்ஸ் குறிப்பிடும் ‘ஆசிய முறை உற்பத்தி’ (AMP)

            மார்க்ஸ் ‘ஐரோப்பிய–மைய’ கருத்துடையவரென நினைப்பவர்களுக்கான மிகச் சரியான பதிலே மார்க்சின் ‘ஆசிய உற்பத்தி முறை’ கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை வளர்த்தெடுத்து இந்திய, ஆசிய சமூகங்கள் மற்றும் ஐரோப்பிய பகுதிகள் சிலவற்றின் சில சிறப்பியல்புக் கூறுகளை விளக்குகிறார் மார்க்ஸ்.  அந்த AMP கோட்பாடு ஆசிய சமூகங்களின் இயக்கவியல் ஆற்றலை புரிந்து கொள்ள உதவுகிறது. சமூகங்களின் அடுத்தடுத்த தொடர்ச்சி ஐரோப்பாவில் காணப்படுவது போல ஆசிய சமூகங்களில் அவ்வளவு கடுமையாகத் தொடர்ச்சியாக வருவதில்லை என மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார். இந்தியாவில் அடிமைத்தனமும் நிலப்பிரபுத்துவமும் முழுமையாக காணப்படவில்லை அல்லது கலந்த வடிவத்தில் இருக்கிறது என்பது மார்க்ஸின் கருத்து.

            மேலே குறிப்பிட்ட 1853 ஜூன் 6 கடிதத்தில் ஏங்கெல்ஸ் இந்த கேள்வியை முன் வைக்கிறார் : (அரேபியா, பெர்ஷியா, இந்தியா மற்றும் துருக்கிய மொழி பேசும் டார்டாரிய பகுதி முதல் ஆசிய பீடபூமி வரையிலான) கீழை நாடுகளில் நிலப்பிரபுத்துவ வடிவத்தில் கூட எவ்வாறு மற்றும் எதனால் தனிஉடைமை நுழைந்துவிட வில்லை?. பருவநிலையும் மண்ணின் இயற்கை இயல்புநிலையுமே அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. நீர்ப்பாசன வசதி முக்கியமாக, மத்திய அரசால் (அரசர்களால்) வழங்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டது. அரசுகள் நிதி, போர் (பாதுகாப்பு) மற்றும் பொதுப்பணி பராமரிப்பு துறைகள் மூன்றையும் தங்கள் வசம் வைத்துக் கையாண்டனர். பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் முதலிரண்டையும் தவறாகக் கையாண்டனர், மூன்றாவதை அழித்துவிட்டதன் மூலம் விவசாயம் நிர்மூலமாக்கப்பட்டது.

            இந்தியாவில் கிராம சமூகம் மையமாகவும், சமூக அமைப்பு மற்றும் வளர்ச்சியின் அலகாகவும் கொண்ட பெரும் பரப்பாக விரிந்திருக்கக் காரணம் ஆற்றுவெள்ளப் பாய்ச்சலால் வளமான சமவெளி; இதனால் அடிப்படை அமைப்பைக் கட்டுக்குலையாது வைத்திருக்க முடிகிறது. கிராமச் சமூகம் தன்னிறைவு பெற்றது, வெளி உலகோடு அதற்குரிய ஒரே தொடர்பு அரசருக்கு வரி செலுத்துவது மட்டுமே. அந்தச் சமூகம் அதனுள் பரம்பரையாக வரையறுக்கப்பட்ட சாதிகளாக பிரிக்கப்பட்டும், இயல்பான பொருளாதாரமாக விவசாயம், கைவினை, மற்றும் பழங்கால உற்பத்தி முறை பொருளுற்பத்தி முறைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாக இயங்கியது; நிலம் பொதுவான உரிமை உடையதாகவும், பொது மராமத்துப் பணிகள் வேளாண்மைக்கு முன்நிபந்தனையாகவும், உபரி உற்பத்தி அரசுக்குக் குடிகளால் வழங்கப்படுவதாகவும் அமைந்தன என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். மூடப்பட்ட ஒரு கிராமச் சமூகமாக விளங்கிய அதனுள் நிலவிய உற்பத்தி முறை, தொழிற்பிரிவினையாகத் துவங்கியது வருணம் என்ற வடிவத்தை எடுத்து, பின்னர் பாரம்பரிய சாதிய முறை தொழிற்பிரிவாகியது. எனவே உழைப்பு அதன் முழுமையான பொருளாதார வடிவத்தை, குடும்ப, பண்பாடு மற்றும் சமய வடிவங்களை எடுக்காமல் தலைமுறை தலைமுறையாகக் கையளித்துக் கடத்தப்பட்டது. இப்படித்தான் ‘சாதி’ உற்பத்தி முறையின் ஓர் அலகாக மாறியது.

            நிலம் அதன் ‘பயன்’பாட்டில் சுலபமாக இணைக்கப்படக் கூடுமாகையால், இந்தியாவிலும் கீழை நாடுகளிலும் நிலஉடைமை என்பது பிரச்சனைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

            இந்தியச் சமூகத்தை நிலப்பிரபுத்துவச் சமூகம் என வகைப்படுத்தும் புகழ்பெற்ற ரஷ்ய கல்வியியலாளர் எம்எம் கோவலெவ்ஸ்கி முயற்சியை மார்க்ஸ் நிராகரிக்கிறார், இந்தியாவில் முக்கியமாகப் பண்ணை அடிமைமுறை இல்லாதிருப்பதைச் சுட்டிக்காட்டி. நிலம் ‘பயன்பாடு’ உடையதாக இருந்ததே தவிர பெரிதும் உடைமைப் பொருளாக இருந்ததில்லை; இந்தியாவில் அது விலைமதிப்பில்லாத பெருமைக்குரிய பொருளாக இல்லை. ஐரோப்பாவில் காண்பதற்கு மாறாக நிலம் ‘சாதாரணமானவர்’களிடமிருந்து விலக்கப்பட்டதாகவே இருந்தது.

ஆசிய முறை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், அது ‘வர்க்கப் பகுப்பாய்வுக்கு’ மிகக் குறைவாகவே முயலப்பட்டது; அதனினும், பிற வகை முரண்பாடுகள் மற்றும் சுரண்டல்களுக்கே அது பெரிதும் உபயோகிக்கப்பட்டது. 

மார்க்சும் சமூக –பண்பாட்டு நீதி குறித்த கேள்வியும்

            இந்திய சமூகத்தில் பண்பாடு மற்றும் சமூக ஒடுக்குமுறை குறித்து எவ்வாறெல்லாம் மார்க்ஸ் கேள்வி கணைகளைத் தொடுத்தார் என்பதை விவரிக்க இந்தக் கட்டுரையில் இடம் குறைவு. ஆசிய உற்பத்தி முறை அம்சங்களிலிருந்து இந்தியா தனித்து வேறுபடும் இடங்களைப் பாகுபடுத்தி மார்க்ஸ் இந்தப் பிரச்சனைகளை வகுத்துத் தந்துள்ளார். இந்தியச் சமூகத்தின் முரண்படும் இயல்பு அம்சங்களை எடுத்துக் காட்டும் மார்க்ஸ், எவ்வாறு அது தனிநபர் மற்றும் மக்கள் திரளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது என விளக்குகிறார். “சாதி மற்றும் அடிமைத்தனத்தின் தனித்தன்மையால் இந்தச் சிறிய சமூகங்கள் எவ்வாறு  மாசடைந்து பாழ்பட்டன என்பதை நாம் மறந்துவிட முடியாது…’ என்கிறார் மார்க்ஸ்.

            மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதானால், “காலங்காலமாகத் தொடரும் சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர நவீன சமூகப் புரட்சி ஒன்றினால் மட்டுமே முடியும்!

மார்க்சியத்தைக் கடைபிடிப்போம்!

மானுட நேயம் காப்போம்!

மார்க்சியம் வாழ்க!  மார்க்சியம் வெல்க!

தமிழில்: நீலகண்டன்,

கடந்த ஆண்டு, மார்க்ஸ் பிறந்த நாளான இதே நாளில் ‘நியூ ஏஜ்’ ஏட்டில் அனில் ரஜீம்வாலே எழுதியிருந்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s