நூல்களில் எனக்கு பிடிக்காத வகை என்றால் அது சுய முன்னேற்ற நூல்கள் எனும் தலைப்பில் வருபவை தாம். ஏனென்றால் அந்த வகை நூல்களைக் கையில் எடுக்கும் போதே நாம் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறோம் எனும் உணர்வைத் தந்து விடுகிறது. மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சூழலின் தாக்கத்தினாலேயே உருவாகிறான் எனும் பொருள்முதவாத பேருண்மைக்கு எதிராக செல்வது தான் சுய முன்னேற்ற நூல்கள்.
இந்த நூலும் அந்த எல்லையைத் தொட்டு நிற்கும் நூல் தான். என்றாலும், ஒரு முதன்மையான, பழமையான, பொருத்தமான தலைப்பை எடுத்துக் கொண்டு உளவியல் அடிப்படையில் ஆராய்கிறது எனும் அறிமுகம் தான் என்னை இளக வைத்தது.
இதில் எனக்கு உடன்படாத கருத்துகள் இருக்கின்றன என்றாலும், ஆண் ஏன் இப்படி இருக்கிறான்? எனும் கேள்வி இந்த ஆணாதிக்க உலகில் இன்றியமையாதது. அந்தக் கேள்விக்கு ஏதோ ஒரு வகையில் விடை கூற முயலும் நூல் என்பதே இதன் சிறப்பாக நான் பார்க்கிறேன்.
பேலியோ உணவு முறை குறித்து எழுதிக் கொண்டிருக்கும் நியாண்டர் செல்வனின் உங்கள் மகனிடம் சொல்லுங்கள் எனும் நூலிலிருந்து,
.. .. .. வாழ்க்கை என்பது நன்றாக பாதுகாக்கப்பட்ட உடலுடன் சவக்குழியை நோக்கி செல்வது அல்ல. அடித்து நொறுக்கப்பட்ட உடலுடன், “என்ன திரிலான ஒரு பயணம்” என சிலாகித்தபடி மரணத்தை ஒருவன் தழுவ வேண்டும்.
படியுங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்.