உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் முதன்மையான காரணம் என்று தெரியாது. எனவே, பொதுவாக இருண்டு புறமும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது. இதற்குப் பெயர் ஐக்கிய நாடுகள் சபை.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நெட் பிரைஸ், “இஸ்ரேலுக்கு தன்னுடைய நாட்டையும், மக்களை பாதுகாக்க உரிமை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அதாவது பாலஸ்தீனியர்கள் மனிதர்கள் இல்லை என்பது அமெரிக்காவின் கருத்து.
இந்திய ஊடகங்கள் கொரோனா அச்சமூட்டல்களுக்கு கொடுக்கும் முதன்மையில் நூற்றில் ஒரு பங்கைக் கூட பாலஸ்தீன படுகொலைகளுக்கு கொடுக்கவில்லை.
நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்கள் இஸ்ரேல் எனும் நாட்டின் உருவாக்கத்துடன் தொடர்பு கொண்டது. (இஸ்ரேல் உருவான வரலாறு குறித்து தெரிந்து கொள்ள ‘முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? டிஎன்டிஜே வே பதில் சொல்’ எனும் கட்டுரையைப் படிக்கலாம்) என்றால், தற்போதைய தாக்குதல்களுக்கான தொடக்கப் புள்ளி என்ன?
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் நீதி மன்றத்தில் பாலஸ்தீன மக்களின் நிலங்களை கட்டிடங்களை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்த்து வழக்கு நடந்து வருகிறது. இன்னும் அந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான விசாரணை கொரோனாவை காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம் இஸ்ரேலிய அதிபர் நேதன் யாகு மீதான ஊழல் வழக்குகள் விசாரணைகள் முடிந்து தீர்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதனால் ஜனாதிபதி யுவான் ரிவ்லின் எதிர்கட்சித் தலைவரான பெயர்ட் லாபிட் என்பவரை ஆட்சியமைக்க அழைக்கும் முடிவில் இருக்கிறார். இதை மடைமாற்றி மக்களை தேசிய வெறியில் மூழ்கடிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் தான் தற்போது ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள்.
இந்தச் செய்தியை வேறு எங்கோ படித்தது போல் நினைவில் வருகிறதா? பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்கு எப்போதெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ அப்போதெல்லம் நாடளுமன்ற தாக்குதல்களோ, புல்வாமா போன்ற தாக்குதல்களோ நடக்கும், நாடு தேசிய வெறியில் மூழ்கும். அதே தான் தற்போது இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெருசலேம் நகரும் அங்கு இருக்கும் அக்ஸா பள்ளியும் இஸ்லாம், யூதம் எனும் இரண்டு மதங்களுக்கும் புனிதத் தலமாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த நகரம் ஐநா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும் பெரும்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. ஐநா இதை கண்டிக்கவோ, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலிருது இஸ்ரேலை வெளியேற்றவோ இல்லை. ஆனால் இரண்டு தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது ஐநாவிடமிருந்து அறிக்கைகள் மட்டும் வெளிவரும்.
இந்தநிலையில் தான் ரமலான் நோன்பு தொடக்கத்திலிருந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் டமாஸ்கஸ் கேட் பகுதியில் புதிய ஆக்கிரமிப்புகளும், இஸ்ரேலிய காவல்துறையினரின் அத்துமிறல்களும் தொடங்குகின்றன. கொரோனாவை காரணம் காட்டி பள்ளிக்குச் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது காவல்துறையின் திட்டம். ஏனென்றால் இராணுவத்தினர் நினைவு நாள் பேரணி நடக்க இருப்பதால் அக்ஸா பள்ளியைச் சுற்றி இஸ்லாமியர்களின் நடமாட்டம் வழக்கம் போல இருந்தால் அது மோதலுக்கு வழிவகுக்கும் என்பது இஸ்ரேலிய உளவுத் துறையினரின் எச்சரிக்கை.
இராணுவத்தினரின் நினைவு நாள் பேரணி என்பதே இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கை தான். எவ்வாறென்றால் 1967ம் ஆண்டு இஸ்ரேலுக்கு அரபு நாடுகளுக்கும் இடையிலான போரில் வெற்றி பெற்று கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடைன் இணைத்துக் கொண்டதைக் குறித்து, அந்தப் போரில் இறந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்களை நினைவுகூரும் விதமாக நடத்தப்படுவது. இந்தப் பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறிக்கூச்சல்களே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். தற்போதும் பேரனி குறித்த அறிவிப்புகளுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி அக்ஸா பள்ளியின் ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் காவல்துறையின் இந்த அடாவடி நடவடிக்கைகளை கண்டித்து ஷேக் ஜர்ரா எனும் பகுதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரள்கின்றனர். இதையடுத்து இஸ்ரேலிய ஆளும் மன்ற உறுப்பினரும், தீவிர வலது சியோனிசவாதியுமான பென்குவிர் தலைமையில் அவசர பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘அரேபியர்களுக்கு மரணம்’ என்று முழக்கமிட்டபடி கடக்கும் அந்தப் பேரணியின் முடிவில் ஏற்பட்ட கலவரத்தை காவல்துறை தடியடி நடத்தி கலைக்கிறது. ரெட் கிரஸ்ஸெண்ட் கணக்கின் படி இருநூற்றுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இந்த தடியடியில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐம்பது பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யூதர்களில் யாரும் கைது செய்யப்படவும் இல்லை, தடியடியில் காயம் படவும் இல்லை. என்ன இந்தியாவில் நாம் அடிக்கடி படிக்கும் செய்தி போலவே இருக்கிறதா?
இதனைத் தொடர்ந்து அக்ஸா பள்ளி வளாகத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது இஸ்ரேலிய காவல்துறை. அவர்கள் வெளியேற மறுத்து பள்ளிக்குள் நுழைய ஷூ காலுடன் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கி, ரப்பர் குண்டுகளால் துப்பாகிச் சூடு நடத்தி அனைத்து இஸ்லாமியர்களையும் வெளியேற்றுகிறது காவல் துறை. இதிலும் பலர் காயமடைந்தனர். இதனிடையே ஷேக் ஜர்ராவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று மரணமடைந்து விடுகிறது. இதுவும் பள்ளிக்குள் ஷூ காலுடன் நுழைந்ததும் ஆத்திரத்தை தூண்டிவிட ஆங்காங்கே காவல் துறையினர் தாக்கப்படுகின்றனர். காவல்துறையினர் தாக்கப்பட்டதும் நகரம் முழுவதும் கலவர தடுப்புப் பிரிவினர் சுற்றி வளைத்து போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை நிறுத்துகின்றனர். லைலத்துல் கத்ர் எனும் ரமலான் இறுதியில் நடக்கும் இரவுத் தொழுகைக்காக எழுபதாயிரம் இஸ்லாமியர்கள் கூட அதைத் தடுத்து தடியடி நடத்தி கலைக்கிறது கலவர தடுப்புப் படை.
இதன் பிறகு தான் ஹமாஸ் போன்ற ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இஸ்ரேலை குறிப்பாக டெல் அவிவ் நகரை தாக்கத் தொடங்குகின்றன. இதற்காகவே காத்திருந்த இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது கட்டிடங்களுக்குள் பதுங்கியிருக்கும் ஹமாஸ் படையினரை அழிக்கிறோம் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டன. இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலால் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். இது தொடக்கம் தான் என்று அறிவித்திருக்கிறது இஸ்ரேலிய இராணுவம்.
இந்த தாக்குதல்களுக்கு எதிராக உலகெங்கிலுமுள்ள குறிப்பாக இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இஸ்லாமிய நாடுகளோ ஒப்புக்கு ஒரு கண்டன அறிக்கையுடன் ஒதுங்கி விட்டன. பாலஸ்தீனத்தை உருவாக்க அல்லது இருப்பதை வலுப்படுத்த அந்த நாடுகள் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒரு நாடும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்படுவது கண்டன அறிக்கையுடன் முடிந்து போகும் ஒன்றல்ல.

இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ராமல்லா, நாஸ்ரேத் போன்ற இடங்களில் இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள். பேரணியை ஒத்தி வைக்கவும், நடந்தால் கலந்து கொள்வோர் எண்ணிக்கையைக் குறைக்கவும், அல் அக்ஸா பள்ளி வளாகத்துக்கு அருகில் பேரணி செல்லாதவாறு பாதையை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவைகளிலிருந்து இரண்டு விதயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.
பாலஸ்தீன தக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் ஜெருசலேம் மீண்டும் முஸ்லீம்கள் வசமாகும் எனும் குரான் வசனத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். முதலில் இது மதத்துக்கு எதிரான பிரச்சனை அல்ல. பிலிஸ்தியர்கள் அல்லது கானானியர்கள் என்று வரலாறுகளில் அழைக்கப்படும் ஒரு இனத்துக்கு எதிரான பிரச்சனை. யூதர்களும் அந்த இடங்களில் வாழ்ந்தவர்களே என்பதற்கு குரானே ஆதாரமாகவும் இருக்கிறது. பாலஸ்தீனியர்களில் இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் இருப்பதைப் போலவே, இஸ்ரேலியர்களிலும் யூத மதத்தைச் சேர்ந்தவர்களும், கிருஸ்தவர்களும் இருக்கிறார்கள். ஏன் முஸ்லீம்கள் கூட இருக்கக் கூடும். குரானின் மீண்டும் ஜெருசலேம் முஸ்லீம்கள் வசமாகும் எனும் வசனம் வெளிவந்த பிறகு சில முறை முஸ்லீம்கள் வசமாகவும் சில முறை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கப்பட்டும் இருக்கிறது. அடுத்து எப்போது முஸ்லீம்கள் வசமாகும் இப்போதா அல்லது இன்னும் நூறு வருடங்கள் கடந்த பின்பா? அல்லது அதை கைப்பற்றுவதற்கான முஸ்லீம்களின் உத்தி என்ன? எந்த வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் முஸ்லீம்கள் எனும் ஒரே காரணத்துக்காக பாலஸ்தீன தாக்குதல்களை எதிர்ப்பதும், இது முஸ்லீம்களுக்கான பிரச்சனை என்று பொது சமூகம் அமைதியாக இருப்பதும், கடந்து போவதும் வேறு வேறு அல்ல, இரண்டின் தன்மையும் ஒன்று தான்.
குறைந்த அளவு என்றாலும் இஸ்ரேலியர்களும் இந்த தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களின் அடிப்படை என்ன? அவர்களோடு இணக்கமாகவும் வளர்த்தெடுக்கவும் அரபு முஸ்லீம்கள் என்ன முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்பது முதன்மையான விதயமாக இருக்கிறது. அண்மையில் துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் பொருளாதார அடிப்படையிலான ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டை எதிர்த்து போராடுவது போன்று அரபு நாடுகளின் முஸ்லீம்கள் தங்கள் நாட்டின் பொருளாதார, வெளியுறவு கொள்கைகளை எதிர்த்து போராட முன் வருவார்களா?
சியோனிசம் எனும் கொள்கையோ அல்லது இஸ்ரேல் எனும் நாடோ முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக வலிந்து உருவாக்கப்பட்டு காக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் எனும் நாட்டின் பலம், அரபுலகின் எண்ணெய் வளத்துடன் தொடர்பு கொண்டது. இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் எப்படி ஏகாதிபத்திய நலன்களை வரித்துக் கொண்டு தலையிலிருந்து பிறந்தவனே மேன்மையானவன் ஏனைய அனைவரும் அவனுக்கு தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்களே எனும் நிலையை ஏற்படுத்த அனைத்து வழிகளிலும் முயல்கிறார்களோ அதேபோலவே, தாங்களே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஏனைய அனைவரும் தங்களுக்கு கீழானவர்களே எனும் பார்வையுடனேயே அரசியல் அரங்கில் நிற்கிறது. இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை. இவைகளை சமூக, அரசியல், தத்துவ நிலைகளில் புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடுவது தான் சரியானதே அன்றி, மத அடிப்படையில் போராடுவது பொருத்தமானது அல்ல.