
இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான கூட்டம் நடக்கவிருக்கிறது. இதற்கு, மாநிலங்களின் கல்வித்துறைச் செயலர்கள் அனைவரும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏன் மாநிலங்களின் கல்வித்துறை செயலர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்? மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் அல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்றொரு வாதத்தை தமிழ்நாடு முன்வைத்திருக்கிறது. இது சரியான வாதம் தான்.
செயலர்கள் போதுமென்றால் இந்தக் கூட்டத்தை ஒன்றிய கல்வித்துறை செயலர் தலைமையில் நடத்தி இருக்க வேண்டியது தானே. ஏன் அமைச்சர் நடத்துகிறார்? அமைச்சர் தலைமையில் நடத்துவது சரி என்றால், மாநிலங்களின் அமைச்சர்களை அழைத்திருக்க வேண்டியது தானே. ஏன் செயலர்களை அழைத்திருகிறார்கள்?
யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் என்பது ஒருபுறம். இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டதிலிருந்து கடும் எதிர்ப்பை அது சந்தித்து வந்திருக்கிறது. ஆனால் அண்மையில் மோடி இது குறித்து பேசும் போது, குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் எதுவும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வரவில்லை என்றார். இதன் பொருள் என்ன? எதிர்ப்புகள் வந்திருக்கின்றன ஆனால் அவை போதுமான அளவில் இல்லை என்பது தானே. என்றால் என்ன மாதிரியான எதிர்ப்புகள் வந்திருக்கின்றன? அவைகளுக்கான ஒன்றிய அரசின் பதில் என்ன? போன்றவற்றை விளக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா? இல்லையா? யாரேனும் பதில் சொன்னார்களா? இனி சொல்வார்களா?
புதிய கல்விக் கொள்கை எப்படி தவறானதாக இருக்கிறது? அது ஏன் கொண்டுவரப்படுகிறது? உள்ளிட்ட பல விவரங்கள் ஏற்கனவே தமிழ்ப் பரப்பில் பரவலாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இங்கு அதைக் கடந்து விடலாம்.
மாநிலங்கள் என்ன நினைக்கின்றன? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்றெல்லாம் ஒன்றிய அரசுக்கு ஒரு கவலையும் இல்லை. அவர்கள் கொண்டுவர விரும்புகிறார்கள். அவர்களுக்கு அதற்கான தேவை இருக்கிறது அல்லது கட்டளை இடப்பட்டிருக்கிறது. அதற்காக செயல்படுகிறார்கள். அவ்வளவு தான்.
ஆனால், மாநில அமைச்சர்களை அழைத்திருந்தால் அவர்கள் தங்கள் கருத்துகளை உறுதியாக முன் வைப்பார்கள். தங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். ஏற்காத நிலையில் வெளிநடப்பு போன்றவைகள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிய வைப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் செயலர்களை அழைத்திருக்கிறார்கள். அவர்கள் மாநிலங்களின் கருத்தை பதிய வைப்பார்கள் அவ்வளவு தான். அதற்காக போராடும் தேவை அவர்களுக்கு இல்லை. ஒன்றிய அரசுக்கு எதிராக, வெளிநடப்பு அல்லது மறுப்புரை போன்று தீர்மானகரமான எதிர்ப்பை தெரிவிக்க மாட்டார்கள். இந்த திட்டமிடலில் இருந்து தான் செயலர்களை அழைத்து கூட்டம் நடத்துகிறார்கள்.
மக்களுக்கு எதிராக வன்முறைய கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல, தங்களுக்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்புக் குரல் கூட இருக்கக் கூடாது என்று நினைப்பது தான் பாசிசம்.