நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள்.

“சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு எதுவுமே விஞ்ஞானம் இல்லை என்பது பொருள்.

“அரசாங்கத்தின் மக்கள் தொடர்புத் துறை போர்க்கால நடவடிக்கையில் விழிப்புணர்வை தூண்டும் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும், தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதும் முக்கியம்” இது இன்னொரு நண்பர். அதாவது தடுப்பூசிக்கு எதிராக யார் என்ன கருத்தை சொன்னாலும் – அது சரியா தவறா என்பதற்கு அப்பாற்பட்டு – அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் அளவுக்கு குற்றம் செய்தவர் என்பது பொருள்.

இப்படி, தடுப்பூசியின் மீதோ அல்லது, கோரோனா தடுப்புக்கு செய்யப்படும் அலோபதி மருத்துவத்தின் மீதோ அல்லது, இந்த பெருந்தொற்று காலத்திலான அலோபதி அரசியல் மீதோ அல்லது, மரபு மருத்துவங்களுக்கு ஆதரவாகவோ அல்லது, இவை தொடர்பான வேறு ஏதாவது வகைகளிலோ, எதையாவது பேசி விட்டால் அவர்களை பாய்ந்து குதறுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் இவர்கள். அதில் சில தோழர்களும் இணைந்திருக்கிறார்கள்.

உங்களை ‘அலோபதி வெறியர்ஸ்’ என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களைப் போலவே நானும், மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போவது கண்டு பெரும் பதைப்புக்கு ஆளாகி இருக்கிறேன். மக்கள் மீது அக்கரை கொண்டு இந்த அரசுகள் மக்களை காக்க வேண்டுமே என்று பேராசைப் படுகிறேன். கொரோனாவுக்கு எதிரான நடபடிகள் என்று அறிவிக்கப்படுபவை எல்லாம் எளிய மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக இருக்கிறதே என்று ஆதங்கப் படுகிறேன். ஆனாலும் சில ஐயங்கள் ஏற்பட்டு விடுகிறதே தோழரே, என்ன செய்வது?

தடுப்பூசியின் தத்துவம் என்ன? வெளியிலிருந்து தொற்றும் வைரஸ் போன்ற தீநுண்மங்களுக்கு எதிராக அந்த வைரஸை அதன் தீவிரத்தை குறைத்து உடலினுள் செலுத்தினால் உடல் அதற்கு எதிராக எதிர்ப்பு ஆற்றல்களை ஆண்டிபாடிஸ்களை உற்பத்தி செய்து விடும். அதன் பிறகு மெய்யான வைரஸ் உள்ளே நுழைந்தாலும் அதனால் பாதிப்பு நேராத வண்ணம் உடலின் எதிர்ப்பு ஆற்றல் செயல்பட்டு வைரஸை முடக்கி அழித்து விடும். இது தான் தடுப்புசியின் தத்துவம். ஆனால் இப்போது போடப்படும் தடுப்பூசியின் பிறகும் கூட கொரோனா தொற்றி விடுகிறதே எப்படி?

முதலில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா தொற்றாது என்றார்கள். பின், தொற்றினாலும் அதிக பாதிப்பு இருக்காது என்றார்கள். பின்னர், அதிக பாதிப்பு இருந்தாலும் மரணம் வரை கொண்டு செல்லாது, மீண்டு விடலாம் என்றார்கள். பிறகு அரிதாக மரணமும் ஏற்படலாம் என்றார்கள். இப்போது தடுப்பூசிகள் உயிர் காப்பான்கள் என்று ஒருபோதும் நாங்கள் சொன்னதில்லை என்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது என்று குழப்பமாக இருக்கிறது தோழர்களே. கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.

(இதற்கு அலோபதியிடமிருந்து சில விளக்கங்களும் வந்திருக்கின்றன. அப்படியான விளக்கங்களில் அறிவியல் இருக்கிறதா என்று பார்ப்பதை விட, அப்படியான விளக்கம் கொடுக்கும் உரிமை கூட அலோபதியை தவிர பிற மரபு வழி மருத்துவங்களுக்கு கிடையாது என புரிந்து வைத்திருக்கிறீர்களே. அதையும் சேர்த்து விளக்கி விடுங்கள் தோழர்களே)

ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் குறைந்த அளவு ஆறு ஆண்டுகளிலிருந்து அதிக அளவாக பதினெட்டு ஆண்டுகள் வரை சோதனை செய்யப்பட வேண்டும் என்று உலக மருத்துவக் கழகம் விதி செய்திருக்கிறது. பொருந்தொற்றை கணக்கில் கொண்டு அதை தவிர்த்து விடலாம். ஆனால் இப்படி விதி செய்திருக்கும் அதே கழகம், ஆம் இது முழுவதும் சோதிக்கப்பட்ட மருந்து என்று எந்த தடுப்பூசியையும் அங்கீகரிக்க மறுக்கிறதே. இது ஏன் என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

இது இரண்டாவது அலை, இன்னும் மூன்று நான்காம் அலைகளும் இருக்கின்றன என்கிறார்கள். கடந்த இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இந்த கொரோனா வைரஸ் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் உருமாறியிருக்கிறது என்றும், மூன்றாவது தடவையாக பரிணாமம் அடைந்திருக்கிறது என்றும் அலோபதி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போது போடப்படும் தடுப்பூசிகள் எந்த உருமாற்றத்தில், எந்த பரிணாமத்தில் இருந்த வைரஸை வைத்து சோதிக்கப்பட்டது என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

பக்கவிளைவுகள் இல்லாத தடுப்பூசியே கிடையாது. கட்டாய தடுப்பூசிக்கு எதிராக உலக வரலாற்றில் பல மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் நடந்துள்ளன. அதனால், குறிப்பிட்ட தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்னென்ன என்று பயனர்களுக்கு விளக்கிக் கூறி அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அலோபதி சார்ந்து தான் விதி ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். தற்போது கொரோனாவுக்கு போடப்படும் தடுப்பூசிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா? பெருந்தொற்றில் இதை அனுமதிக்கலாம் என்றால் அதே பெருந்தொற்று என்பதால் பிற மருத்துவ முறைகளை அனுமதிக்க மறுக்கிறார்களே. அது ஏன் என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

உலகில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகள் அனைத்தும் உடல்நலத்துக்கும் மனதுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றன. உடல்நலனிலிருந்து மனதை அப்பபுறப்படுத்தி, உடலை ஓர் இயந்திரம் போல கருதி செயல்படும் ஒரே மருத்துவ முறை அலோபதி மட்டுமே. பாம்பு கடித்து செத்தவங்களை விட பயம் கடித்து செத்தவங்க தான் அதிகம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள் எங்கள் ஊர்ப்பக்கம். அதன் பொருள் உடல் நலனில் மனது குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்பது தான். இதை தங்கள் சொந்த வாழ்வில் பலரும் பல விதங்களில் உணர்ந்திருக்கலாம். நீங்களும் கூட தோழர்களே. ஆனால் கொரோனா கண்டறியப்பட்டதிலிருந்து இன்றுவரை அரசும் ஊடகங்களும் செய்யும் அனைத்து செயல்களும் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வண்ணமே இருக்கிறதே ஏன்? இப்படி கேட்டவுடன் பாசிட்டிவா பேசுங்கள் என்று சங்கிகள் விடுக்கும் கோரிக்கையோடு இதனை இணைத்து விடமாட்டீர்கள் என நம்புகிறேன். அவர்கள் தங்கள் அரசின் செயின்மையை மறைப்பதற்காக அப்படிப் பேசுகிறார்கள். மக்களை அச்சமூட்டி பீதிக்குள் தள்ளுவதினால் கொத்துக் கொத்தாக மரணங்கள் நேர்கின்றனவோ எனும் ஐயத்தில் நான் பேசுகிறேன்.

ஏனென்றால், கொரோனாவில் மரணமடைந்த எவருக்கும் அவர் எதனால் மரத்தை தழுவினார் என்று உடற்கூறாய்வு செய்யப்படுவதே இல்லை. இத்தாலியில் இருவருக்கு செய்யப்பட்ட கூறாய்வைக் கூட உலக மருத்துவக் கழகம் கடுமையாக எச்சரித்து நிறுத்துகிறது. எப்படி மரணம் ஏற்பட்ட்து என்று குறிப்பாக தெரியாமல், அதன் விளைவுகளைக் கண்டறியாமல் அதற்கு எதிராக செயல்படும் மருந்தைக் கண்டுபிடிப்பது என்பது அலோபதி மருத்துவ முறையின் படியே தவறானது அல்லவா? என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

இந்த கொடுந்தொற்று காலத்தில் கொரோனா குறித்த ஆய்வுகளுக்கு உலகெங்கிலுமுள்ள அரசுகள் (இந்திய அரசு உட்பட) பல ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ளன. அந்த மக்கள் பணத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் விளைவாக வந்த மருந்துகளை, தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப விலையை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது எப்படி? இதை நீங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும் தோழர்களே. ஆனால், இதை தனிப்பட்ட விதயமாக குறுக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதோடு தொடர்புபடுத்தாமல் இதை உடல் நலமாகவும், அதை முதலாளிகளின் லாப வெறியாகவும் பிரித்து புரிந்து கொள்கிறீர்களே, அது இயங்கியல் கண்ணோட்டத்தின்படி சரியா? என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

இன்னும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடங்கி, மக்களை அச்சமூட்டும் நடவடிக்கைகள் வழியாக, கொத்துக் கொத்தான மரணங்கள் வரை பல கேள்விகள் இருக்கின்றன தோழர்களே. விரிவஞ்சி அவைகளை தவிர்த்து விடுகிறேன். என்றாலும் கூட அடிப்படையான சில கேள்விகள் மிச்சமிருக்கின்ற தோழர்களே.

அலோபதி தவிர பிற மருத்துவ முறைகள் அறிவியலுக்கு எதிரானவை எனும் கருத்து தொடர்ந்து விதைக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் நுற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவை 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களிடம் நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்த 300 ஆண்டுகளில் உலகின் எந்த அரசாவது அலோபதிக்கு ஈடாக மாற்று மருத்துவ முறைகளை அங்கீகரித்திருக்கிறதா? அலோபத்திக்கு ஒதுகிய நிதியில் ஒரு விழுக்காடாவது மாற்று மருத்துவ முறைகளுக்கு ஒதுக்கி இருக்கிறதா? அலோபதிக்கென்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. பிற மாற்று மருத்துவ முறைகளுக்கு ஒரு பல்கலைக் கழகமேனும் இருக்கிறதா? அலோபதி மருத்துவ முறையை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு செய்யப்பட்ட முயற்சிகளில் ஒரு விழுக்காடேனும் பிற மருத்துவ முறைகளுக்கு செய்யப்பட்டிருக்கிறதா? (இந்தியாவில் தொடந்து வந்து கொண்டிருந்த பஞ்ச காலங்களில் ரொட்டியும் பாலும் இலவசமாக கொடுத்து மக்களை அலோபதியின் பக்கம் கொண்டு வந்தார்கள்) இப்படி அலோபதின் கால்களை வலுவாக்க அனைத்து ஆற்றல்களை ஒன்றுகுவித்து செலவு செய்த பின்பு, அலோபதியின் கால்களுக்கு அழுத்தம் தெரியாமலிருக்க பஞ்சு ஷூக்களையும், சிவப்புக் கம்பளமும் விரித்து வைத்துவிட்டு ஏனைய மருத்துவ முறைகளின் கால்களை உடைத்து வெறுங்கால்களுடன் கரடுமுரடான பாதையில் ஓடுவதற்கு நிறுத்தி விட்டு அலோபதி தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றது என்று கூறுகிறீர்களே. அது எப்படி என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

உலகில் நுண்கிருமிகளே நோய்களைப் பரப்புகின்றன என்பதை தொடங்கி வைத்தவர் லூயி பாஸ்டர். அவர் ஒரு அறிவியலாளர் தான் மறுக்கவில்லை. ஆனால் அவர் காலத்திலேயே அது தவறு என நிரூபித்து, கடைசி காலத்தில் லூயி பாஸ்டராலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட அந்தனியோ பீச்சாம்ப் ன் ஆய்வுகளை அறிவியல் உலகம் ஏற்க மறுத்து குப்பைக் கூடையில் தள்ளியது ஏன் தோழர்களே.

இன்று உலகில் நடக்கும் அத்தனை அலோபதி ஆய்வுகளும் லூயி பாஸ்டரின் தியரியின் படியே நடக்கிறது. அலோபதியின் அத்தனை ஆய்வு முடிவுகளும் மருந்துகளும் லூயி பாஸ்டரின் தியரிக்கு மாறுபடாதவாறு மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகிறதே. அது ஏன் தோழர்களே.

இன்னும் எத்தனையோ அறிவியலாளர்கள் செய்த ஆய்வுகள் அலோபதிக்கு எதிராக இருக்கின்றன என்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது ஏன் தோழர்களே.

அலோபதியில் கொண்டு வரப்பட்டிருக்கும் ஒழுங்குமுறைகள் எதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு தடவையில் ஒரு காம்பவுண்ட் மருந்து மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும். பல காம்பவுண்ட் மருந்துகள் ஒரே நேரத்தில் வழங்கக் கூடாது என்பது விதி. ஆனால் இப்படி ஒரு விதி இருக்கிறது என்பதே இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்களுக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு ஊசி பத்து விதமான மாத்திரைகள் உட்கொள்ளச் செய்வது இங்கு வெகு சரளம். இது ஏன் தோழர்களே.

இப்படி அலோபதியிலேயே அறிவியலுக்கு முரணான பல விதயங்கள் இருக்கும்போது, அது எதையுமே கவனிக்காமல் அலோபதிக்கு மாற்றானது என்றாலே அதை அறிவியலுக்கு எதிரானது என முத்திரை குத்த முற்படுவது ஏன்? என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

உலகின் மருத்துவ ரீதியாக இருக்கும் அனைத்து புள்ளி விவரங்களும் அலோபதிக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே எடுக்கப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன. பிற தரவுகள் அனைத்தும் குப்பைக் கூடைக்கு அனுப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக போலியோ புள்ளிவிவரத்தை கொள்ளலாம். ஒரு நாட்டில் போலியோ பாதிகப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை சேகரிக்க வேண்டும் என்றால் முதலில் அலோபதியுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே விவரங்கள் சேகரிக்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பதிவு செய்யும் முறை எப்படி இருக்கும் என்றால், ஒரு போலியோ நோயாளி தடுப்பூசி போட்டுக் கொண்டவரா என விசாரிக்கப்படுவார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்றால் அவர் போலியோ நோயாளி அல்ல. வேறு ஏதோ ஒரு குறைபாட்டால் ஊனமானவர். தடுப்பூசி போடாதவர் என்றால் அவருக்கு இருப்பது போலியோ. இப்படித்தான் விவரங்கள் பதிவு செய்யப்படும். இந்த விவரங்களிலிருந்து தொகுத்துத் தான், போலியோவை தடுப்பூசி இத்தனை விழுக்காடு ஒழித்து விட்டது என்று புள்ளிவிவரங்களாக பதிவாகும். அம்மை நோயை தடுப்பூசி தான் ஒழித்தது என்று இன்றும் கூறி வருகிறார்கள். ஆனால் அம்மையை ஒழித்தது தடுப்பூசி அல்ல என்று எத்தனையோ மருத்துவ அறிவியலாளர்கள் முதலாளித்துவ தரவுகளுடனேயே நிருவி இருக்கிறார்கள் என்பது தெரியுமா தோழர்களே.

ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய மக்களின் சராசரி வயது 28 என்று ஆங்கிலேயர்கள் தயாரித்த புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இதை வைத்துக் கொண்டு அலோபதி தான் மக்களின் வாழ்நாளைக் கூட்டியது என்று நிறையப் பேர் சமூக வலை தளங்களில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குடவோலை குறித்த உத்திரமேரூர் கல்வெட்டில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் பற்றிய விதிமுறைகளில் ஒன்று, அவர்கள் 35 வயதிலிருந்து 70 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள் தோழர்களே.

இவை எதையுமே கணக்கில் கொள்ளாமல் அலோபதிக்கு மாற்றானது எல்லாமே அறிவியலுக்கு எதிரானது என்று எப்படி கூறி விடுகிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

இத்தனைக்கும் மேலாக அறிவியல். அறிவியல் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளிலேயே இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான எந்த ஆய்வும் எங்கும் நடப்பதில்லை. தனக்கு தேவையான விவரங்களை பெறுவதற்கு மட்டுமே கார்பரேட்டுகள் அறிவியலை பயன்படுத்துகிறார்கள். எய்ட்ஸ் எங்கிருந்து தொடங்கியது என்பதை ஆய்வு செய்த பல்வேறு நாடுகளின் 18 அறிவியலாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த உலக நாட்டின் காவல்துறையும் அவர்களின் கொலையாளிகளையோ, கொலைக்கான காரணத்தையோ கண்டுபிடிக்கவில்லை. அம்மைத் தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் எத்தனை பேரை அம்மை தாக்கி இருக்கிறது? அதற்கான காரணம் என்ன? அம்மை தடுப்பூசியினால் மக்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளின் தன்மை என்ன? அந்த பக்க விளைவுகளால் எத்தனை பேர் இறந்திருகிறார்கள்? என்று எந்த ஆய்வாளராவது ஆராயவோ, அல்லது தரவுகளைச் சேகரிக்கவோ முடியுமா? அப்படியான தரவுகள் செய்யப்படுவதும் அதை பாதுகாப்பதும் மனித குலத்துக்கு அத்தனை தீங்கானதா? ஏன் அவ்வாறான ஆய்வுகள் செய்யப்படவோ, தரவுகள் சேகரிக்கப்படவோ இல்லை? ஏனென்றால் கார்பரேட்டுகளுக்கு எதிரான எதையும் அறிவியல் ஆய்வுகள் பேசாது.

அறிவியல் என்பது ஓர் ஆய்வு முறை என்பது எனக்கு தெரிந்து தான் இருக்கிறது. ஒரு கருத்துமுதல்வாதி போல் அறிவியலுக்கு எதிராக நான் பேசவில்லை. ஆனால் அதன் கைகளும் கால்களும் கார்ப்ப்ரேட்டுகளால் கட்டப்பட்டு அவர்கள் விரும்பும் இடத்துக்கு அதனை தூக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறேன். எனவே, அறிவியலுக்கு எதிரானது என்று கூறும் போது எந்த அறிவியலுக்கு எதிரானது – கைகால் கட்டப்பட்ட அறிவியலுக்கு எதிரானதா? அல்லது ஆய்வு முறையான அறிவியலுக்கு எதிரானதா – என்பதையும் சேர்த்துக் கூறுங்கள் தோழர்களே.

கடைசியாக, எந்த மருத்துவ முறைக்கும் எதிரானவன் அல்ல நான். ஆனால் மருத்துவம் என்பது நோய்களிலிருந்து விடுதலை அளிப்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். மாறாக நம் உடலை தூண்டில் புழுவைப் போல் பயன்படுத்தும் மருத்துவமாக இருக்கக் கூடாது என்று கூறுகிறேன். பகத்சிங் கூறியதைப் போல், ‘நுண்கிருகிகளுக்கு எதிரான இந்தப் போர் கொரோனாவோடு தொடங்கியதும் இல்லை, கொரோனாவோடு முடிந்துவிடப் போவதும் இல்லை’ இன்னும் தொடர்ந்து பலப்பல வைரஸ்கள் புதுப்புது பெயர்களில் வந்து கொண்டே தான் இருக்கப் போகின்றன. என்றால் பல ஐயங்களுடன் கூடிய தனித்தனி பெயர்களிலான தடுப்பு மருந்துகள் வேண்டுமா? அல்லது எந்த வைரஸையும் எதிர் கொள்ளும் அளவுக்கு உடலை ஆயத்தப்படுத்துவது வேண்டுமா? அன்றிலிருந்து இன்றுவரை உலகம் தடுப்பு மருந்துகளின் பின்னே தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் ஓடும். உடலை ஆயத்தப்படுத்துவது என்ற திசையில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியையாவது கூற முடியுமா? என்றால் இந்தக் கொடுந்தொற்றுக் காலத்தில் இதைப் பேசாமல் வேறு எப்போது பேச வேண்டும் என்பதையும் கொஞ்சம் விளக்கி விடுங்கள் தோழர்களே.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

One thought on “நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

  1. யார் தெரியுமா நாங்க இந்த உலகத்துலேயே இயங்கியல் பூர்வமாக சிந்திக்க கூடியது நாங்க, நாங்க கம்யூனிஸம் படிச்சவங்க, எங்ககிட்டேவா
    மற்ற மருத்துவ முறையில எ‌ன்ன தத்துவம் இருக்கு, Modern medicine யின் தத்துவம் என்ன தத்துவம் இருக்கா அதன் பார்வை நோய்யை குறித்து என்ன இருக்கு, இதெல்லம் எங்களுக்கு தெரியாது வேண்டாம் எங்களுக்கு. ஏன்னா நாங்க இயங்கியல் பூர்வமாக சிந்திப்போம் நாங்க சொல்கிறது தான் சரி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s