ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு.

கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம்.ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப் படுத்துபவர்களிடம் பேசியது நியூஸ் லாண்ட்ரி.

ஈஷா ஃபவுண்டேஷன் குறித்த பல்வேறு அரசு ஆவணங்களைப் பார்வையிட்டது. ஈஷாவுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளை ஆராய்ந்தது. ஈஷா ஃபவுண்டேஷனின் கதை ஒரு வழக்கமான ஊழல் மற்றும் பேராசை பிடித்த சாமியாரின் கதைதான். நம் மக்களிடம் மதம் மற்றும் கலாச்சாரம் மீது இருக்கும் சென்டிமென்டைப் பயன்படுத்தி சட்டவிரோத காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இக்கரைப் பொலுவம்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஈஷாவின் சாம்ராஜ்யம்.வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த இக்கரைப் பொலுவம்பட்டியில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த ஈஷா ஆசிரமம். இந்தக் கட்டடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994க்கும் 2011க்கும் இடையில் கட்டப்பட்டவை. பொலம்பட்டி காப்புக் காடுகளை ஒட்டி இந்த ஆசிரமம் அமைந்திருக்கிறது. இந்த காப்புக் காடுகள் யானைகளின் வாழிடங்கள். ஆகவே இந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பது Hill Area Conservation Authority என்ற ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மலைப் பிராந்தியக் காடுகளில் வனவிலங்கு மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக 1990ல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தப் பகுதியில் 300 சதுர மீட்டர் அளவுக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் இந்த ஆணையத்தின் அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. தமிழ்நாடு அரசின் வனத் துறை, நகர்ப்புறத் திட்டமிடல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆவணங்களை நியூஸ் லாண்டரி ஆராய்ந்தபோது, 1994ல் இருந்து 2011 வரை 63,380 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்டியிருக்கிறது ஈஷா. 1,402.62 சதுர மீட்டரில் ஒரு செயற்கை ஏரியையும் உருவாக்கியிருக்கிறது. இவற்றில் எந்தக் கட்டுமானத்திற்கும் ஒப்புதல் இல்லை.

32,855 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்ட தங்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதல் இருப்பதாக வாசுதேவனும் (ஜக்கிதான்) அவரது ஈஷா ஃபவுண்டேஷனும் சொல்கிறார்கள். உண்மையில் Hill Area Conservation Authorityயின் கீழ்வரும் பகுதியில் கட்டடம் கட்ட ஒப்புதல் அளிக்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. எல்லா சட்டவிரோத கட்டடங்களையும் கட்டி முடித்த பிறகு 2011ல் Hill Area Conservation Authorityக்கு (HACA) விண்ணப்பித்தார் வாசுதேவன். வனத்துறையில் கிடைத்த ஒரு ஆவணத்தின்படி ஜூலை 2011ல் HACAவுக்கு ஒரு விண்ணப்பத்தைப் போட்டார் இந்த நல்ல மனுசன். அதாவது ஏற்கனவே சட்டவிரோதமாக 63,380 சதுர மீடட்ருக்குக் கட்டங்களைக் கட்டிவிட்டோம். அதற்கு ஒப்புதல் கொடுங்கள். மேலும் 28582.52 மீட்டருக்கு கட்டுமானங்களைக் கட்டப்போகிறோம். அதற்கும் ஒப்புதல் கொடுங்கள் என்றது விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரின் வனத்துறை அதிகாரி வி. திருநாவுக்கரசு 2012 பிப்ரவரியில் ஈஷா ஆசிரமத்திற்குப் போனார். உள்ளே சென்று பார்த்தவர் அசந்துபோனார். சட்டவிரோதமாக ஏகப்பட்ட கட்டடங்களைக் கட்டிவைத்திருந்தது ஈஷா. 28,582.52 சதுர மீட்டருக்கு புதிதாக அனுமதி கேட்டார்களே? அதிலும் கட்டடம் கட்டிவைத்திருந்தார்கள். இதுபோக, ஆசிரமத்தின் சுற்றுச் சுவரும், பிரதான வாயிலும் வனத்துறையின் நிலத்தில் கட்டப்பட்டிருந்தன என்பதையும் அவர் கண்டறிந்தார். இதுபோக, ஈஷா கட்டிய கட்டடங்களாலும் அந்த ஆசிரமத்திற்கு பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் வந்துபோவதாலும் யானைகளின் நடமாட்டம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்திருந்தது. ஆகவே இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி மறுத்தார் திருநாவுக்கரசு.

தனது விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறிய ஈஷா, தனது விண்ணப்பத்தை அந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெற்றுக்கொண்டது. 2014வரை மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. அங்கிருந்து திருநாவுக்கரசு வேறு பணிகளுக்குப் போய்விட்டு, 2018ல் கோயம்புத்தூரின் தலைமை வனக் காப்பாளராக பதவியேற்றார். ஆனால், நான்கே நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.

2012வாக்கில் எம்.எஸ். பார்த்திபன் என்ற வனச்சரகர் ஈஷா ஆசிரமத்திற்குள் சென்றார். சாடிவயலுக்கும் தாணிக்கண்டிக்கும் இடையில் யானைகள் சென்று வரும் வழியில், ஈஷா பல இடங்களை வளைத்துப் போட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். யானைகள் வரும் வழியில் சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால், யானைகள் செம்மேடு மற்றும் நர்சீபுரத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதி வழியாக வெளியேறி விவசாயப் பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளையும் தாக்கிவந்தன.

“300 சதுர மீட்டர் பரப்பிற்கு மேல் எதைக் கட்ட வேண்டுமென்றாலும் HACAவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஈஷா எந்த அனுமதியும் இன்றி மிகப் பெரிய அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்கியிருந்தது. அவர்கள் முதலில் கட்டடங்களைக் கட்டிவிட்டு பிறகு அனுமதிக்காக விண்ணப்பித்தார்கள். அவர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும்போது எங்கள் அனுமதிக்காக காத்திருந்ததேயில்லை. விண்ணப்பித்துவிட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்கிறார் பார்த்திபனின் சோதனையின்போது உடன் சென்ற ஒரு அதிகாரி. இவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. “ஈஷா கட்டடம் கட்டிய இடங்கள் யானைகள் நடமாடும் பகுதிகள். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அந்த அதிகாரி.

இக்கரை பொலுவம்பட்டியில் 33 கட்டுமானங்களை மதரீதியான பணிகளுக்கு என ஈஷா குறித்திருக்கிறது. இவை தமிழ்நாடு அரசின் கட்டுமான விதிகளின்படி இவை பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள். இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் தேவை. மேலும் நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் துணை இயக்குனரின் ஒப்புதலும் தேவை. ஆனால், இந்த அனுமதிகளைப் பெறுவது குறித்து ஈஷா அலட்டிக் கொள்ளவேயில்லை. அதற்குப் பதிலாக அனுமதி கோரி அந்த கிராமப் பஞ்சாயத்தை அணுகினர். நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் அனுமதியின்றி அம்மாதிரி ஒப்புதலை அளிக்க அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே இல்லை.

பிறகு ஒரு வழியாக 2011ல் ஒப்புதல் கோரி திட்டமிடல் துறையை அணுகினர். ஆனால், அதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக பல கட்டங்கள் அங்கே கட்டப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டிய கட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டதோடு, புதிதாக 27 கட்டடங்களைக் கட்டவும் அனுமதி கோரினர். ஆனால், அந்த விண்ணப்பம் முழுமையானதாக இல்லை. 2012 பிப்ரவரிக்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்கும்படி நகர்ப்புற திட்டமிடல் துறை சொன்னது. ஆனால், அதற்குள் ஈஷா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை. ஏழு மாதங்களுக்குப் பிறகு புதிய விண்ணப்பத்தை அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக 2012 அக்டோபரில் திட்டமிடல் துறையின் அதிகாரிகள் ஈஷா வளாகத்திற்கு வந்தபோது, புதிய கட்டங்களைக் கட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்தன. இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2012 நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஈஷா கண்டுகொள்ளவில்லை. 2012 டிசம்பரில் நகர்ப்புறத் திட்டமிடல் துறை மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியது. ஒரு மாதத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துவிடும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் இயக்குனர் முன்பாக முறையிட்டது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் கே. மூக்கைய்யா என்பவர் நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனராக கோயம்புத்தூரில் பணியாற்றி வந்தார். நகர்ப்புறத் திட்டமிடல் துறை விதித்த ஆணைகளை ஈஷா அலட்சியப்படுத்திய நிலையில், அந்தத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? “அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை” என்கிறார் மூக்கைய்யா.

2012வாக்கில் ஈஷா 50 கட்டடங்களைக் கட்டியிருந்தது. மேலும் 27 கட்டடங்களைக் கட்டிவந்தது. எல்லா கட்டடங்களுமே சட்டவிரோதமானவை. ஆனால், ஈஷாவின் சட்டவிரோத செயல்பாடுகளை யாரும் எதிர்க்கத் துணியாத நிலையில், எதிர்க்கத் துணிந்த சிலர் இருந்தார்கள்.

அவர்கள் பூவுலகின் நண்பர்கள்!

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த எம். வெற்றிச்செல்வன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாசுதேவனின் சட்டவிரோதக் கட்டுமானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடிவருகிறார். 2013, 2014ஆம் ஆண்டுகளில் ஈஷாவுக்கு எதிராக இவரால் வழக்குகள் தொடரப்பட்டன. ஈஷா சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்டுமானங்களை இடித்துத்தள்ள வேண்டும் என நகர்ப்புற திட்டமிடல் துறை அளித்த ஆணையைச் செயல்படுத்த வேண்டும், இந்த சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படாத அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும், சன்ஸ்க்ருதி என்ற பெயரில் ஈஷா சட்டவிரோதமாக நடத்திவரும் பள்ளிக்கூடம் மூடப்பட வேண்டும், ஈஷாவுக்கு குறைந்த விலையில் தரப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என தனது மனுவில் வெற்றிச் செல்வன் கோரியிருக்கிறார்.

2013 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை இந்த மனுக்கள் மீது பத்து முறை விசாரணை நடைபெற்றது. அதற்குப் பிறகு விசாரணை ஏதும் நடக்கவில்லை. “ஈஷாவில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்ற எங்களுடைய மனு மீது 2013 மார்ச் 8ஆம் தேதி விசாரணை நடந்தது. ஈஷா, மாவட்ட ஆட்சியர், வனத்துறை HACA, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த விசாரணை மார்ச் 25ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென ஈஷாவின் வழக்கறிஞர் கோரினார். ஜூன் 20ஆம் தேதியன்று ஈஷா, நகர்ப்புற திட்டமிடல் துறை, மாநில அரசு ஆகியவை தங்கள் பதில்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தன. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2013 ஆகஸ்ட் 22ஆம் தேதி மேலும் மூன்று மனுக்களைத்தாக்கல் செய்தோம். இவை எல்லா மனுக்களும் சேர்த்து அடுத்த நாள் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் வாதிட்டோம். ஆனால், மாநில அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆகவே வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

2014 மார்ச் 13ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, பள்ளிக்கூடங்கள் எதையும் நடத்த தாங்கள் ஈஷாவுக்கு அனுமதியளிக்கவில்லையென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இதற்குப் பிறகு எல்லாத் தரப்பும் தங்கள் பதில் வாதங்களை சமர்ப்பித்தால், இறுதி விசாரணை நடக்குமென நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

2017ல் ஈஷாவின் மகாசிவராத்திரி விழாவை எதிர்த்து வெற்றிச்செல்வன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல்செய்த முந்தைய மனுவே நிலுவையில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. “நான் உள்நோக்கத்துடன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றம் சொன்னது. ஈஷாவின் சுற்றுப்புறத்தில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் கடந்த 15 – 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யானைகள் செல்லும் வழியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பகுதியின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கத்தான் நாங்கள் முயற்சிசெய்தோம். அதனால்தான் ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்த்துப் போராடுகிறோம். இதில் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

தனது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததற்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதாவது, மகாசிவராத்திரி போன்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியது.

வெற்றிச்செல்வனைப் போலவே The Velliangiri Hill Tribal Protection Society என்ற அமைப்பும் நீதிமன்றத்தை அணுகியது. இக்கரைப் பொலவம்பட்டியில் உள்ள முட்டாத்து ஆயல் குடியிருப்பைச் சேர்ந்த 49 வயதான பி. முத்தமாள் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார். ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்து ஆதிவாசிகளின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதாக முத்தம்மாள் வாதிட்டார். எவ்விதமான அனுமதியையும் பெறாமல் 112 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆதியோகி வடிவத்திற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்த நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனர் ஆர். செல்வராஜ், அந்த ஆதியோகி வடிவம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் கட்டப்பட்டது என்று நீதின்றத்தில் தெரிவித்தார். ஆனால், செல்வராஜ் தனது பதிலை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அந்த ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அந்த ஆதியோகி சிலை என்பது சட்டச்சிக்கலில் இருக்கிறது என்பது தெரிந்தும் அதனைத் திறந்துவைக்க நரேந்திர மோதி தயங்கவில்லை.

ஈஷா இவ்வளவு தைரியமாக சட்டமீறல்களைச் செய்வதற்குக் காரணம், அந்த அரசுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு. குறிப்பாக அப்போதைய தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு. ஈஷா ஆசிரமம் ஒன்றும் யானைகள் செல்லும் பாதையில் அமைந்திருக்கவில்லை என தனது நிலைப்பாட்டை மாற்றி நீதி மன்றத்தில் கூறியது தமிழக வனத்துறை. நியூஸ்லாண்டரிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, 2012ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக்காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுமானங்களும் அங்கு வந்து குவியும் மக்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிப்பதாக குறிப்பிட்டார். மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் அங்கு வந்து குவிகின்றனர். மிகப் பெரிய வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் பொறுத்தப்பட்டு, பெரிய பெரிய ஒலிபெருக்கிகளும் வைக்கப்படுகின்றன.

2013ல் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஈஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இக்கரைப் பொலுவம்பட்டியின் காப்புக்காட்டுப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டடங்களால் யானைகள் செல்லும் பாதைகள் மறிக்கப்படுவதாகவும் இதனால் மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் கூறிய அறிவிப்பு, மின்சாரம், குடிநீர் ஆகியவை துண்டிக்கப்படும் எனக் கூறியது. HACA ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருப்பதால் அந்த இடம் இடித்துத்தள்ளப்படும் என்றும் அறிவிப்பு கூறியது. ஆனால், 2020வாக்கில் வனத்துறை அதிகாரிகள் வேறு கதை சொன்னார்கள்.

2013ல் ஈஷாவில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் சொன்ன நிலையில், 2020ல் தமிழக வனத்துறை அப்படியே தன் நிலையை மாற்றிப் பேச ஆரம்பித்தது. 2020 ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை வனப் பாதுகாப்பாளற் பி. துரையரசு என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈஷாவின் வளாகம் என்பது இக்கரை பொலுவம்பட்டியில் பிளாக் – 2 காப்புக்காடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது என்றும் இது பிரபலமான யானை வாழிடம் என்றும் குறிப்பிட்டது. இருந்தபோதும், அந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டார் துரையரசு. ஒவ்வொரு ஆண்டும், யானைகள் ஈஷா வளாகம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி செல்வது வழக்கம்தான் என்றாலும், இந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப் படுவதில்லை என்றது அறிக்கை. இக்கரை பொலுவம்பட்டி குறித்து வனத்துறை இப்படி மாற்றிப் பேசியது, ஈஷாவுக்கு வசதியாகப் போனது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, மலைப்பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைபடுத்தலாம் என்றது. HACA அனுமதியளிக்க வேண்டிய நிலங்கள், அதாவது இக்கரை பொலுவம்பட்டியும் இதில் அடங்கும் என்றது. “சட்டவிரோத கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தி ஈஷா அமைப்புக்கு உதவுவதற்காகவே இந்த விதி கொண்டுவரப்பட்டதாக கருதுகிறோம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தர்ராஜன்.

தாங்கள் ஏற்கனவே கட்டிய கட்டடங்களுக்கு HACA ஒப்புதல் கேட்டு 2017ல் ஈஷா விண்ணப்பித்தபோது அப்போதைய தலைமைக் காப்பாளரான எச். பசவராஜு இந்த விண்ணப்பம் குறித்து பரிசீலிக்க ஒரு கமிட்டியை அமைத்தார். ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளூர் வனச் சூழலையும் சுற்றுச்சூழலையும் அந்தக் கமிட்டி கண்டறிந்தது. இந்தக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால் சில சாலைகளை அவர்கள் பயன்படுத்தக்கூடாது; ஏற்கனவே கட்டிய சில கட்டங்களில் மாறுதல்களைச் செய்ய வேண்டும்; காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தக் கட்டுமானத்தையும் செய்யக்கூடாது என்று தெரிவித்தது கமிட்டி.

ஈஷா சட்டவிரோதமாக கட்டடங்களைக் கட்டிவருகிறது என்பது 2012லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன் என அதே ஆண்டு இந்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தமிழக வனத்துறையிடம் கேள்வி எழுப்பியது. HACAவின் ஒப்புதல் பெறாமல் அந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை சிஏஜி சுட்டிக்காட்டியது. ஆனால், தாங்கள் எல்லா கட்டடங்களுக்கும் எச்ஏசிஏ ஒப்புதல் பெற்றிருப்பதாக மார்ச் 16, 2017ல் தெரிவித்தது ஈஷா. ஆனால், ஈஷா வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்பதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டதே அதற்கு அடுத்த நாள்தான். அதாவது மார்ச் 17ஆம் தேதிதான். இந்தக் குழு மார்ச் 29ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஏப்ரல் நான்காம் தேதிவாக்கில்தான் முதன்மை தலைமை வனக்காப்பாளர், ஈஷாவின் கட்டுமானங்களுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம் என கடிதம் எழுதினார். இதையடுத்து நகர்ப்புற திட்டமிடல் துறை, கோயம்புத்தூரில் இருந்த மண்டல துணை இயக்குனரை வைத்து மே 3ஆம் தேதி ஒப்புதல் அளிக்கச் சொன்னது. இதற்கு வனத்துறை விதிக்கும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்பதோடு, நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்று சொன்னது. அப்படி இருக்கும்போது மார்ச் 16ஆம் தேதியே HACA எப்படி ஒப்புதல் அளித்திருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கும் சரி, மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் சரி ஈஷா பதிலளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக Newslaundry அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த ஈாவின் செய்தித் தொடர்பாளர், உங்களுடைய முன்அனுமானங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ஃபவுண்டேஷனைப் பற்றி தூற்றி எழுதினால், அது உங்கள் ரிஸ்க்தான்” என்று எச்சரித்தது.

கட்டுமானங்களைக் கட்டி முடித்த பிறகு அனுமதி அளிக்கும் பிரிவு என்பது தமிழக விதிகளில் கிடையாது. நகர்ப்புற திட்டமிடல் துறையானது கட்டிமுடிக்கப்பட்ட கட்டடத்தை வரைமுறைப் படுத்தலாம். ஆனால், அந்தத் துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அப்படியே வரைமுறைப்படுத்தினாலும் சுற்றுச்சூழல் அனுமதியை நகர்ப்புற திட்டமிடல் துறை அளிக்க முடியாது.

ஈஷாவின் கட்டுமானங்களுக்கு, அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்த பசவராஜு நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை. அவருக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்த துரையரசு “போதுமான நிபந்தனைகளை விதித்த பிறகுதான் வரைமுறைப்படுத்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. அவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினார்களா என்பது தெரியாது. எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு HACA ஒப்புதல் இப்போதுவரை கிடைக்கவில்லை” என்றார்.

கோயம்புத்தூரின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் HACAவின் தலைவராக இருந்த ராஜாமணி ஈஷாவுக்கு அளிக்கப்பட்ட HACA ஒப்புதல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று சொன்னார். “ நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ, எழுதிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் அவர்.

முதற்பதிவு: பூவுலகின் நண்பர்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s