
ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2
முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும்.
போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே அல்லாது ஓர் உணர்வாக, அனுபவமாக அது உள்ளுக்குள் கரைந்ததில்லை. ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது அந்த கொண்டாட்ட உணர்வு இருந்தது என்றாலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மே 22ல் நடந்த போராட்டத்தின் போது இருந்த உணர்வுக்கு இணையாக வேறெந்த போராட்டத்திலும் இருந்ததில்லை. அவ்வளவு மகிழ்வாக, அவ்வளவு பெருமிதமாக, அவ்வளவு செருக்காக இருந்தது. பல்லாயிரக் கணக்கானோர் என்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். நான் என்ன மனோநிலையில் இருக்கிறேனோ அதே மனோநிலையில் அதே உற்சாகத்தில் அக்கம் பக்கம் வருவோர் அனைவரும் இருக்கிறார்கள் எனும் போது ஏற்படும் பேரலையின் மிதப்பு அது.
பொதுவாக, பெருங்கூட்டத்தை குறிப்பிடும் போது அலையலையாய் திரண்ட மக்கள் என்று காட்சிப்படுத்துவது வாக்கரசியல் கட்சிகளின் வழக்கம். அதே சொல்லைக் கொண்டு இந்தப் போராட்டத்தையும், அதன் உணர்வையும் குறிப்பது பொருத்தமற்றதாக, குறை மதிப்பீடாக தோன்றும். என்றாலும் அந்தச் சொல்லின் மெய்யான பொருளில் இந்தப் போராட்ட திரளலைக் குறிப்பிடலாம். குறிப்பான நான்கு இடங்களிலிருந்து போராட்டப் பேரணி தொடங்கும் என கூறப்பட்டு, அவ்வாறே தொடங்கி இருந்தாலும், காணும் அத்தனை சந்துகளிலிருந்தும், எதிர்ப்படும் அத்தனை தெருக்களிலிருந்தும், திரும்பும் அத்தனை சாலை விலக்குகளிலிருந்தும் மக்கள் சிறு சிறு கூட்டமாய் இணைந்து கொண்டே இருந்தார்கள், இணைந்து கொண்டே இருந்தார்கள்.
லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்பது அன்றின் போராட்ட முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. ஓவ்வொருவரின் உள்ளத்தையும் பற்றிக் கொண்ட முழக்கமாக இருந்தது. ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது பௌதீக சக்தியாக மாறி விடும் எனும் கூற்றுக்கு, இலக்கண சுத்தமான நடைமுறைப் பொருளை அந்தப் போராட்டப் பேரணி வழங்கிக் கொண்டிருந்தது.
மே 22ல் நடந்த அந்தப் போராட்டப் பேரணி என்பது, முதல் நிகழ்வோ, திடீரென திட்டமிட்டு நடந்ததோ அல்ல. ஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலை தொடங்கி, அதன் தீமைகள் மக்களுக்கு புரியத் தொடங்கியதிலிருந்து சிறிது சிறிதாக நடந்து வந்திருந்த போராட்டங்களின் தொடர்ச்சி. பல்வேறு அமைப்புகளின், பலப்பல மக்கள் திரளின் தொடர்ச்சியான போராட்டங்கள் அரசின் செவிகளில் ஒலிக்க ஏறாமல் போனதின் இயலாமை அவர்களின் உள்ளில் கனன்று கொண்டே இருந்தது. அந்தக் கனலுக்கு நேர் எதிராக ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காற்று வீசியது போல் கனலில் தீ மூட்டியது. அதுவரை தனித் தனியாகவும், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பதை தாண்டி வேறெந்த உருவும் கொள்ளாத வடிவத்திலுமாக இருந்த போராட்டம் ஒருங்கிணையத் தொடங்கியது. அவரரவர் பகுதிகளில் தொடர் போராட்டமாக முன்னெடுப்போம் எனும் எளிய புரிதலிலிருந்து முதலில் குமரெட்டியாபுரம் எனும் கிராமத்தில் தொடங்கியது.
குமரெட்டியாபுரத்தில் தொடங்கியது வெகு விரைவாக அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் பரவியது. அந்த குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கியதின் நூறாவது நாள் தான் மே 22. அந்த நூறு நாட்களிலும் எளிமையான அந்த போராட்ட வடிவத்தைக் கூட மக்களால் எளிதாக நடத்திவிட முடியவில்லை. போராட்டம் நடைபெறும் ஒவ்வொரு பகுதியும் உளவுத் துறையினரால் சூழப்பட்டது. வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க வருவோரைத் தடுப்பது, தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பாகவும் போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு கிலியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவது என போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தது உளவுத்துறை. போராட்டமும் அந்த வடிவத்தில் மட்டுமே நிற்கவில்லை. போராடும் அனைத்துப் பகுதிகளுக்குள்ளும் இணைப்புகளை உருவாக்குவது, ஒரே குரலில் போராடுவது, பொராட்ட ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. மட்டுமல்லாது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பேரணியாக சென்று மனு கொடுப்பது, பொதுக்கூட்டம் நடத்தி பிற பகுதிகளுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவது, வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் பரப்புரை செய்வது என போராட்ட உணர்வை வலுப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தது.
இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போதிலும் அரசு போராடும் மக்களை மதிக்கவே இல்லை. ஸ்டெர்லைட் ஆலையின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவோ, போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ முன்வரவே இல்லை. அதனால் தான் நூறாவது நாளை மிகப்பெரிய பேரணியாக சென்று ஸ்டெர்லைட்டை இழுத்து மூடும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக் கொடுப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
தன்னை சனநாயக அரசு என்று கூறிக் கொள்ளும் அரசு, (உண்மையில் அரசு அப்படியானது இல்லை என்றாலும் அது அப்படித்தான் கூறிக் கொள்கிறது) தான் கூறிக் கொள்வதற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், போராடும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ, அல்லது உங்களின் கோரிக்கைகள் எப்படி நிறைவேற்ற முடியாத விதத்தில் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தவோ முயற்சி செய்திருக்க வேண்டும். நேர்மையாக செய்திருக்க வேண்டியதை செய்யாத அரசு செய்யக் கூடாததை செய்தது, சதி செய்தது.
போராடுவோரின் உள்ளிருந்து சதித்தனமாக ஒரு குழுவை உருவாக்கியது அரசு. பேரணிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை என்று அறிவித்தது. ஆனால் போராட்டக் குழுவோடு அல்லாமல் போரட்டக்குழு என்ற பெயரில் தான் உருவாக்கிய சதிக் குழுவினரோடு பேச்சு வார்த்தை நடத்துவதாக நாடகமாடியது அரசு. பின்னர் அந்தக் குழு நூறாவது நாள் பேரணியைக் கைவிடுவதாகவும், அதற்குப் பதிலாக ஒரு திடலில் கூடி கூட்டம் நடத்தி அரசு அதிகாரிகளிடம் மனுக் கொடுக்க விருப்பதாகவும் அறிவித்தது. போராட்டக் குழுவோ இதை மறுத்து திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என அறிவித்தது. அரசு பேச்சுவார்த்தை நடத்திய குழு போராட்டக் குழு இல்லை என வெளிப்படையாக மக்களுக்கு தெரிந்த பிறகு மே 21ம் தேதி இரவு 10 மணிக்கு அரசு தன் மெய்யான முகத்தைக் காட்டியது. அப்போதிலிருந்து 144 தடையுத்தரவு விதிக்கப்படுவதாகவும் நான்கு பேருக்கு மேல் கூடுவது சட்டப்படி குற்றம் எனவும் அறிவிக்கிறது.
போராட்டக் குழு திட்டமிட்டபடி, திட்டமிட்டிருந்த இடங்களிலிருந்து பேரணி தொடங்குகிறது. ஒரு காட்டாற்றுப் பெரு வெள்ளத்தைத் போல் நுரைப்புகளும், சுழிப்புகளுமாய் பேரணி கடக்கிறது. இந்தக் காட்டாற்று வெள்ளத்தை ஒரு மரக்கிளை தடுத்துவிட முடியுமா? அப்படி தடுத்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு பேரணியாக திரண்டு சென்று கொண்டிருக்கும் போது, நூற்றுக்கும் குறைவான காவல் துறையினர் கைத்தடுப்பையும் லத்தியையும் கொண்டு பேரணியை மறித்தார்கள். இது அமைதியான பேரணி, ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக கடந்து வந்திருக்கிறோம், எந்த வித வன்முறையோ, விரும்பத் தகாத நிகழ்வுகளோ இல்லாத இந்த பேரணியை ஏன் தடுக்க முனைகிறீர்கள்? என்ற போது, இது சட்டவிரோத பேரணி. இதற்கு மேல் செல்லக் கூடாது என்றனர். தொடர்ந்து செல்கிறது பேரணி. ஓரிருவர் லத்தி சார்ச் செய்ய முயற்சிக்க அவர்களை தூக்கி ஓரமாக ஒதுக்கி விட்டு பேரணி தொடர்கிறது.
இதில் முதன்மையான ஒன்றை கவனிக்க வேண்டும். பேரணி தொடங்கும் இடங்களில் பல நூறு காவல்துறையினர் கவச உடைகளோடும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களோடும், இன்னும் பலவாறாகவும் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவர்கள் பேரணியைத் தடுக்க சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. பேரணி கடந்த பின் அவர்களைவிட எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த, ஆயுதங்கள் எனும் அளவிலும் ஒன்றுமில்லாத அளவிலான காவல் துறையினர் ஏன் பேரணியைத் தடுக்க முயல வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று, நாங்கள் அமைதியான வழியில் பேரணியை தடுக்க முயற்சி செய்தோம் என்று காட்டுவதற்கான முயற்சியாக இருக்க வேண்டும். இரண்டு, வேறு ஏதாவது நிகழ்வுகளை எதிர்பார்த்து நடத்தி இருக்க வேண்டும். வேறு என்ன இருக்கிறது?
பேரணி மேலும் ஓரிரு கிலோமீட்டர்களைக் கடந்து, நகர எல்லையைத் தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நெடுஞ்சாலை பாலத்தை நெருங்குகிறது. அப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கண்ணீர் புகை குண்டுகள் சுடப்படுகின்றன. தொடர்ந்து பல குண்டுகள். பேரணி சிதறிவிடும் என எதிர்பார்த்தார்களா என்பது தெரியாது. பேரணியின் போராட்ட உறுதியில் எந்தச் சலனத்தையும் அந்த கண்ணீர் புகை குண்டுகள் ஏற்படுத்தவில்லை. மாறாக கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த நூறு நாட்களாக அரசின் பாராமையையும், காவல் துறையின் அத்துமீறல்களையும் சொந்த அனுபவத்தில் நேரடியாக கண்டு வந்திருக்கும் அவர்கள், கோபப்படாமல் இருந்தால் தான் பொருத்தமற்றதாக இருந்திருக்கும். அதன் விளைவு வழியில் காவலர்கள் விட்டுச் சென்றிருந்த ஒன்றிரண்டு காவல் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தொடர்ந்து இலக்கை நோக்கி முன்னேறுகிறது பேரணி. பாலத்தின் மேல் ஏராளமான காட்சி அச்சு ஊடக நிருபர்களும், ஒளிப்பதிவாளர்களும், காவல் துறையினரும் நின்று கொண்டிருக்கின்றனர். பாலத்தைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்குகிறது பேரணி. இந்த இடத்தில் தான் போராட்டக்காரர்கள் கொஞ்சம் குழம்புகிறார்கள். நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்வதா? அல்லது வாயிலை அடைத்து உட்கார்ந்து மறியல் செய்வதா? என்று. சில தோழர்கள் முன்வந்து அப்படியே நுழைவு வாயிலை மறித்து உட்காரத் தொடங்கினால் தொடர்ந்து வரும் பேரணி மொத்தமும் சாலையில் உட்கார்ந்து விடலாம் என்று முயற்சித்தார்கள்
ஆட்சியரிடம் மனு கொடுப்பது தானே திட்டம், அதை செயல்படுத்த வேண்டியது தானே. உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டியது தானே என்று தோன்றலாம். ஆனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவில்லை. முதல் நாளே விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் ஒரு சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளச் சென்றவர், மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பவே இல்லை. மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகள் என்றும் யாரும் இல்லை. ஒருசில கடைநிலை ஊழியர்களைத் தவிர அன்று அலுவலகத்தில் எவரும் இல்லை.
ஒரு பிரிவினர் அலவலக நுழைவு வாயிலை அடைத்து உட்கார இன்னொரு பிரிவினர் உள்ளே சென்றனர். உள்ளே நுழைந்தவர்களை காவல் துறை தடியடி நடத்தி விரட்டியது. இப்படி உள்ளே நுழைவதும் வெளியே விரட்டப்படுவதுமாக சில முறை நடந்தது. நுழைவு வாயிலின் உள்ளே நுழைந்து இடது புறம் இருக்கும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயற்சிப்பதும் விரட்டியடிப்பதுமாய் நடந்து கொண்டிருக்க வலது புறம் ஊழியர் குடியிருப்பு பகுதியில் பொருட்களை அள்ளி வெளியே கொட்டுவதும் தீவைப்பதும் நடக்கிறது. வெளியே பாலத்துக்கு அருகிலும் ஒரு வண்டி தீவைத்து எரிக்கப்படுகிறது.
இதன் பிறகு தான் குமுறலுக்கும் கொந்தளிப்புக்கும் காரணமான அரசின் கொடூர முகம் வெளிப்படுகிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேராக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டுமென்றால், முதலில் எச்சரிக்க வேண்டும், பிறகு வானத்தை நோக்கி சுடவேண்டும், அதன் பிறகு ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்த வேண்டும், அதற்கும் கூட்டம் கலையவில்லை என்றால் கால்களை நோக்கி சுட வேண்டும், கடைசியாகத் தான் நேராக ஆட்களை கொல்லும் நோக்கில் சுட வேண்டும். இது காவல்துறை கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிகளில் அடங்கியிருப்பது. ஆனால் அன்று எந்த வித அறிவிப்பும் இன்றி நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
அன்று 13 உயிர்களும் அதன் பிறகு 2 உயிர்களுமாக மொத்தம் 15 உயிர்கள் இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. அன்று மூடப்பட்ட ஆலை இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும், திறக்கும் திசையில் வேதாந்தா குழுமம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. கொரோனா ஆக்சிஜன் தட்டுப்பாடு எனும் வாயில் வழியாக ஆக்சிஜன் தயாரிக்க இயங்கலாம் என்பது அது பெற்றிருக்கும் வெற்றி. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையின் வெற்றிகளுக்காக அரசும் அதன் அத்தனை உறுப்புகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகின்றன.
இன்னும் தூத்துக்குடி மக்கள் அதே உறுதியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த உறுதியை அவர்கள் மீது ஏவப்பட்ட பல இன்னல்களையும் கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தூப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு போராட்டக் களத்தில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
இத்தொடரின் முந்திய பதிவு