தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்குதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோள்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்களை வைத்து கலவரத்தை தூண்டி சதித்தனமாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம்பட்ட சிலருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலைகளை ஒதுக்கி உள்ளீர்கள். கைது செய்யப்பட்டு காவல் துறையால் கொடும் தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவித்திருக்கிறீர்கள். இதை தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வரவேற்கிறது. ஆனால் இதுவே முழுமையானதோ, நிறைவானதோ அல்ல.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நடந்துள்ள சதித்திட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே உயிரை பணையம் வைத்து எடுத்த கொளுத்தியது யார் ( https://youtu.be/SlukGKrzYLc )என்ற 45 நிமிட ஆவணப்படத்தை, காவல்துறை டிஜிபி வெளியிட்ட வீடியோ மற்றும் தொலைக்காட்சிகள் – தனிநபர்கள் நேரடியாக (Live) எடுத்து ஒளிபரப்பிய தரவுகள் அடிப்படையில் யாரும் மறுக்க முடியாத வகையில் ஆவணமாக்கி வெளியிட்டு உள்ளோம்.
தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது, கடந்த 02-01-2019 அன்று மாலை தங்களை சென்னை அறிவாலயத்தில் நாங்கள் நேரில் சந்தித்து, காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் படுகொலைகள் தொடர்பான 6 நிமிட ஆவணப்பட காணொளியையும் – விபரங்களையும் மனுவாக கொடுத்து, அன்றைய தமிழக அரசை தாங்கள் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வைக்கக் கோரி பேசி வந்தது தங்களுக்கு நினைவிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்று உள்ள தாங்கள், ஸ்டெர்லைட் பிரச்சனையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
1. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
2. பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக (TNPPDL) காவல்துறையால் போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்கையும் ரத்து செய்யவேண்டும். காரணம் 22-05-2018 பகல் 12.06 மணிக்கு மேல் ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்கள்தான் காவல்துறையினரின் பாதுகாப்போடு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த அனைத்து வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதை மறுக்க முடியாத ஆதார பூர்வமாக. “கொளுத்தியது யார்” ஆவணப் படத்தில் ( https://youtu.be/SlukGKrzYLc. ) இதைச் செய்தவர்கள் யார், அவர்கள் இதை எப்படி செய்தனர் என்பதை உலகின் முன் காட்டி உள்ளோம். மேலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உள்ள 244 வழக்குகளில், பெரும்பாலான வழக்குகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் செய்ததாகவே உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே தங்களின் வழக்கு வாபஸ் என்ற அறிவிப்பு எந்தவித பயனையும் போராட்டக்காரர்களுக்கு தராது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காவல்துறை உயர்அதிகாரிகள் தங்கள் துறையை சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறை – ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து செய்த சதியை மறைப்பதற்காகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய பரிந்துரைக்காமல் உள்ளனர் என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் செய்தவர்கள் எல்லாம் யார் என்பதை குறிப்பாக ஆவணப்படத்தின் மூலம் அடையாளம் காட்டப்பட்டும், அவர்கள் சதிக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதால் சில காவல்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என்பதுதான் எதார்த்த உண்மையாகும்.
3. சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்களின் 2018- மே-20, மே-21, மே-22, என மூன்று நாட்களின் முழுமையான பதிவுகளை அரசாங்கம் உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும். இதுவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு நடத்த சதித் திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது என்பதை வெளிப்படையான அறிவிக்கும் நிர்வாக நடைமுறையாக இருக்கும்
4. குறைந்தபட்சம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 11.57.34 விநாடி வரையிலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3,4 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 12.09.43 வரையிலும் ஆன வீடியோ பதிவுகளை அரசு உடனே பொதுவெளியில் முழுமையாக வெளியிட வேண்டும். அப்போதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் உலகம் நாங்கள் சொல்வது போல் நடந்துள்ளதை அறிய முடியும்.
5. மே-22, 2018 அன்று காவல்துறையினர் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும், காவல்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
6. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், தீ வைப்பு சம்பவத்தையும் உடன் இருந்து பார்த்து காட்சிப்படுத்தியுள்ள ஊடகவியளாலர்கள், குறிப்பாக சன் டிவி நிருபர் அறிவரசு மற்றும் கேமிராமேன், நியூஸ் 7 டிவி நிருபர் ஆகியோர் 22.05.2018 காலை 11.50 நிமிடம் முதல் 12.10 வரை, அங்கு நடந்துள்ள உண்மைகளை உலகின் முன் தெரிவிக்க வேண்டும்.
7. தமிழக அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம், நாட்டிற்க்கு உண்மையை உணர்த்த, உடனடியாக கடந்த 3 ஆண்டுகளாக ( 36 மாதமாக) இதுவரை விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை தங்களிடம் (தமிழக அரசிடம்) 14-05-2021 அன்று கொடுத்துள்ளனர். அதை அரசு பொதுவெளியில் உடனே வெளியிட வேண்டும்.
8. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு போல் இல்லாமல், வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை விரும்புவதாக அறிவித்துள்ள தங்களின் அரசு சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
9. திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் 22-05-2018 அன்று பகல் 12.06.08 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கிழக்கு பகுதியிலிருந்து காவல்துறை அரண் பகுதிக்குள் வந்து விட்டார். அதன் பின்தான் அனில் அகர்வால் (ஸ்டெர்லைட்) அவர்களின் அடியாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் சாவகாசமாக வந்து, அங்கிருந்த வாகனங்களைத் தீ வைத்து எரித்தும், சிசி டிவி 3, 4 கண்காணிப்பு கேமிராவை உடைத்து முடித்தும், பின்பு அவர்கள் எஸ்.பி இருந்த காவல்துறை அரண் பகுதிக்குள் வந்த போதும் அவர் எதுவும் செய்யாமல் ஏன் இருந்தார்? என்பதற்கு அன்றைய திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் வெளிப்படையாக பதில் அளிக்க வேண்டும்.
10. துணை வட்டாச்சியர் சேகர் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் மீது காலை 11.00 மணிக்கு தெரிவித்துள்ள புகாருக்கு(FIR) பதில் அளிக்க வேண்டும்.மேலும், தீ வைப்பு பற்றி தனக்கு காலை 11.48 க்கு தகவல் வந்தது என தெரிவித்து 11.50 க்கு அனைத்துவிட்டதாக ஆவணமாக்கியுள்ள தீயணைப்பு துறை அதிகாரி சண்முகம், 11.48 மணிக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது என பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீ வைப்பு நடந்துள்ளது என புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, பலரும் கைதாகி சிறை செல்ல காரணமான துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோரை மக்கள் பணியில் தொடர அருகதை அற்றவர்கள் என உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
11. 22.05.2018 அன்று திட்டமிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டை, தீ வைப்பு சம்பவங்களை சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கர், இவர்களை பின்னிருந்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
12. சுற்றுச்சூழல் முறைகேடுகள் மட்டுமின்றி, நேரடியாக அடியாட்களை தயார் செய்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கலவரத்தை ஏற்படுத்தி தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட, கிரிமினல் நடவடிக்கையில் பங்கேற்ற ஸ்டெர்லைட் உள்ளிட்ட வேதாந்தா குழும நிறுவனங்கள் அனைத்தையும், தொழில் நடத்த தகுதியற்ற கறுப்பு நிறுவனங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், தமிழகத்தின் கடல் பகுதிகளில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பெட்ரோலிய, எரிவாயு கிணறு ஒப்பந்தங்களையும், கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட கறுப்பு நிறுவனம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்திலுள்ள மால்கோ உள்ளிட்ட அனைத்து ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனங்களையும் தமிழக அரசு நிபந்தனையின்றி , கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட கறுப்பு நிறுவனமாக அறிவித்து பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள தாங்கள், தூத்துக்குடி மக்களின் அறமான, நியாயமான போராட்டத்திற்கு உரிய நீதி கிடத்திட, அவர்களின் மனக் காயங்களை ஆற்றிட, உரிய நடவடிக்கைகளை காலதாமதம் இன்றி எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். செய்வீர்கள் என நம்புகிறோம்.
முகிலன்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
இணைப்பு படங்கள் : மே-22,2018 அன்று ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்கள் காவல்துறையின் பாதுகாப்போடு சிசிடிவி கேமரா உடைப்பது, கல்லெறிவது, தடியோடு சுற்றுவது, கலவரம் செய்வது என பொதுச் சொத்துக்களை சேதம் செய்யும் படங்கள் சில