இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது (அது அச்சு ஊடகம் என்றாலும், காட்சி ஊடகம் என்றாலும்) செய்தி தருகிறதா? நம்முடைய உழைப்பின் ஒரு பகுதியை செலவிட்டு நாம் படிக்கும் பார்க்கும் ஊடகங்கள், பல வழிகளில் லாபத்தை பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நமக்கு எது செய்தி, எது செய்தி இல்லை என்பதை தீர்மானிக்கவும் செய்கிறார்கள்.
ஒய்ஜி மகேந்திரன் குடும்பத்துக்குச் சொந்தமான பத்மா சேசாத்திரி பள்ளியில் ஆசிரியராலேயே மாணவிக்கு பாலியல் தொந்தரவுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதும், அது பல காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும், பல ஆசிரியர்கள் இந்த ஈனத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் இந்த ஊடகங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் இந்த விதயம் பெரிதாக விவாதிக்கப்படாமல் போயிருந்தால், இதுவும் கூட ‘ஒரு தனியார் பள்ளி’ என்பதோடு முடிந்து போயிருக்கும்.
பார்ப்பனர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செய்தி என்றால் அதை திட்டமிட்டு மறைப்பதும், ஏனையவர்கள் என்றால், குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்றால் கொடூரமான ரசிப்புடன் அதை அம்பலப்படுத்துவதும், உறுதிப்படுத்துவதற்கு முன்னே நேரடியாக குற்றம் சாட்டுவதும் நடக்கும்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் வந்த இரண்டு செய்திகளின் தலைப்பைப் பாருங்கள். “கர்ப்பிணி பசுவைக் கொன்று கறி விற்பனை செய்த முபாரக் அலி” “ஐ,எஸ்,ஐ,யுடன் தொடர்பு மபியில் சகோதரிகள் கைது” முதல் செய்தியை எடுத்துக் கொண்டால் கர்ப்பிணிப் பசு எனும் சொல்லை யாரும் பயன்படுத்துவதே இல்லை. உயர்தினைக்கு மட்டும் தான் கர்ப்பிணி எனும் சொல் பயன்படுத்தப்படும் அஃரினைகளுக்கு சினை எனும் சொல் தான் பொதுவாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சினைப்பசு என்று சொன்னால் அது உணர்ச்சியை தூண்டாது என்பதால் கர்ப்பிணி பசு எனும் சொல் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் அந்தப் பகுதியில் மாட்டு இறைச்சி வியாபாரம் செய்பவர் முபாரக் அலி என்பவர். இவர் மீது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் திட்டமிட்டு பழி சுமத்துகிறார்கள். முபாரக் பல ஆண்டுகளாக மாட்டு இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். ரவி என்பவருக்கு சொந்தமான சினைப்பசு ஒன்று காணாமல் போகிறது. இதனால் முபாரக் தான் திருடி கொன்று விற்று விட்டார் என்கிறத் ஆர்.எஸ்.எஸ். இந்த கொரோனா இரண்டாம் அலையிலும் இதற்காக மக்களைக் கூட்டி போராட்டமும் செய்திருக்கிறது. இதற்குத் தான் அப்படி ஒரு தலைப்பு.
இரண்டாம் செய்தியை எடுத்துக் கொள்வோம். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள இராணுவ கண்டோன்மெண்டில் வசிக்கும் இரண்டு சகோதரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு இராணுவ ரகசியங்களை விற்றிருக்கிறார்கள். முதல் செய்தியை விட இது மிகவும் அபாயகரமான செய்தி. ஆனால் அது எளிதாக ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு என்பதாக முடிந்து போகிறது. ஐ.எஸ்.ஐ என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இந்தச் செய்தியின் உள்ளீடு புரிவதற்கான வாய்ப்பே இல்லை. இதுவே அந்த இரண்டு சகோதரிகளும் இஸ்லாமிய பெயரை தாங்கியவர்களாக இருந்து விட்டால் இந்த செய்தியின் தலைப்பு இப்படி எளிதாக இருந்திருக்குமா?
இவைகளெல்லாம் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே நமக்குத் தெரிந்தவை தான். தப்லீக் ஜமாத்தால் தான் கொரோனா பரவுகிறது என்று அனைத்து ஊடகங்களிலும் அறிக்கை வாசித்தவர்கள், கும்பமேளாவினால் கொரோனா பரவவில்லையா என்று கேள்வி கேட்டவரைக் கைது செய்ததையும் செய்தியாக வெளியிடுகிறார்கள். ஆனால், இதன் விளைவுகள் என்ன? என்பதைத் தான் சிந்திக்க வேண்டியதிருக்கிறது. இந்தச் செய்தி வெளியான செய்திப்புனல் எனும் ஊடகமோ அல்லது தினமலர் போன்ற ஊடகங்களோ மட்டுமல்ல. அனைத்து ஊடகங்களும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. அளவுகள் வேண்டுமானால் மாறுபடலாம். நீண்ட காலமாக ஊடகங்கள் இதைத் தான் செய்து வருகின்றன. குஜராத், உபி போன்ற வட மாநிலங்களில் அக்கம் பக்கமாக பழகியவர்களே எவ்வாறு, முன்திட்டமிட்ட கலவரங்களின் போது அவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடிகிறது? எனும் கேள்விக்கான பதில் இதில் தான் ஒழிந்து கொண்டிருக்கிறது.
நீண்ட காலமாக இது போன்ற செய்திகளை படித்து, பார்த்து, கேட்டு வருபவர்களின் உளவியல் அவைகளை உண்மை என ஏற்று அதன் அடிப்படையிலேயே தம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறது. அதனால் தான் இவர்கள் நம் மதத்துக்கு எதிரி என்று ஒரு சிறு தீப்பொறி கிளப்பி விடப்பட்டால், அவர்கள் யார்? எப்படி பழகுகிறார்கள்? அவர்கள் செய்த தீங்கு என்ன? என்பன போன்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் கொன்று குவித்து விடுகிறார்கள்.
தற்போது விவாதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தொலைதூரக் கல்வியில் இளநிலை முதுநிலைக்கான பாடங்களில் திட்டமிட்டு சிறுபான்மையினர், பொதுவுடைமைக் கட்சி குறித்து இட்டுக்கட்டப்பட்ட அவதூறான பகுதிகள் மேற்கண்ட உளவியல் நீதியில் வளர்த்தெடுக்கும் பொருட்டு திட்டமிட்டு புகுத்தப் பட்டிருக்கின்றன. அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்பதில் ஐயம் ஏதும் தேவையில்லை. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் இப்படி மக்களை மத ரீதியில் பாகுபடுத்துவதற்காகவே வேலை செய்கிறார்கள், இனியும் அப்படித்தான் செய்வார்கள். இதில் சிந்திக்கும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக இதை பாடமாக படித்த மாணவர்களில் எவருக்குமே இது தவறு எனும் உறுத்தல் ஏற்படவே இல்லையா? இவ்வளவு காலமாக அது வெளியில் தெரியாமலேயே இருந்திருக்கிறதே. (இன்னும் எவ்வளவு இருக்கிறதோ) என்றால் மெய்யான ஆபத்து இது தான். இதை பாடமாக படித்த ஒருவருக்கும் இது தவறு என்று தெரியவில்லை என்றால் நம்மை சூழ்ந்து இருக்கும் இளைய சமுதாயம் எவ்வளவு சீர்கேடு அடைந்திருக்கிறது என்பதன் அடையாளம் அல்லவா இது. பாடம் சரி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், இதை செய்தவர்கள், செய்யத் திட்டமிட்டவர்கள், செய்ய அனுமதித்தவர்கள் என்று ஒருவர் விடாமல் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இது பாடத்தை மாற்றியமைத்த குற்றமல்ல. சமூகத்தை சீர்கெடுத்த குற்றம்.