
வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும் ஒரு போராட்ட வடிவம் தேவைப்படுகிறது என்பது எவ்வளவு வேதனை மிக்கது. போராட்டம் என்பது உங்கள் நடைமுறைகள் மக்களாகிய எங்களுக்கு எதிரானதாக இருக்கிறது, விரும்பத் தகாததாக இருக்கிறது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு ஆறு மாத காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு விதங்களில் பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்புணர்வைக் காட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையின் அரசின் பல்வேறு ஒடுக்கு முறைகளையும், சதித் திட்டங்களையும் எதிர் கொண்டு, முறியடித்து தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசோ அதை தொடர்ந்து அசட்டை செய்து வருகிறது.
எவ்வளவு மக்கள், எவ்வளவு காலமாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை கண்டு கொள்ளாமல் ஒரு அரசால் இருக்க முடியுமென்றால், இயங்க முடியுமென்றால், இந்த அரசு எவ்வளவு கொடூரத் தன்மை கொண்டதாக, எவ்வளவு இரக்கமற்றதாக, எந்த அளவுக்கு மக்களை விட்டு விலகியதாக இருக்கிறது என்பதற்கு, இதை விட வேறொரு சான்று தேவையா?
ஆளும் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சி இப்படி இருக்கிறது என்றால் எதிர்க்கட்சி என்ற ஒன்று என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒன்றிய அளவில் இருக்கும் கட்சி, மாநில அளவுகளில் இருக்கும் கட்சிகள் தங்களின் உறுப்பினர்களை விவசாயிகளுக்கு ஆதரவாக விதிகளில் இறக்கி விட்டிருக்க வேண்டாமா? இந்தப் பிரச்சனையை சரி செய்யாத வரை அரசு, வேறெதிலும் கவனம் திருப்புவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கவனம் ஈர்த்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
விவசாயிகளின் கோரிக்கைகள் சரியா? தவறா? என்பதை ஒதுக்கி வைத்து விடுவோம். ஒருவேளை அவர்களது கோரிக்கை தவறானதாகவே இருக்கட்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானதாகவே இருந்து விட்டுப் போகட்டும். இத்தனை ஆயிரம் குடிமக்கள் தங்கள் அனைத்து இன்ப துன்பங்களையும் மறந்து மாதக்கணக்காக சாலையில் அமர்ந்திருக்கிறார்களே. இதற்கு பதில் கூறும் கடமை, அவர்களை சரி செய்யும் கடமை முதன்மையாக ஆளும் கட்சிக்கும், இரண்டாம் கட்டமாக பிற கட்சிகளுக்கும் இல்லையா? ஊடகங்களை விட்டு விடலாம். ஏனென்றால் அவர்கள் ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகளாக மட்டுமே இருந்து பழக்கப்பட்ட விலங்குகள். அந்த விலங்குகளுக்கு வேறு சிந்தனை தோன்ற முடியாது. அனால் மக்கள் .. .. ..?
இந்த கொரோனா கொடுந்தொற்று காலத்திலும் அதையும் கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் சாலையில் கிடக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று ஊரடங்கு. முகக்கவசம், சமூக இடைவெளி என்று தவிர்க்க முடியாமல் வெளியில் வரும் நேரங்களில் நீதி போதனை. அதனையும் மீறினால் அபராதத் தொகை வாங்குவது, வாகனத்தை முடிக்குவது. தடியடி, வழக்கு பதிவது என்று இந்த அரசுகள் நீட்டி முழக்குவதெல்லாம் எதற்கு? மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் அரசின் கடமையிலிருந்து தானே. அப்படியென்றால் தில்லியில் போராடுவோர் மக்களில் சேர்ந்தவர்கள் இல்லையா? அவர்கள் புழு பூச்சிகளா?
நினைத்துப் பார்த்தால் கண்களில் கண்ணீர் கொட்டும். ஆனால் அழுவது எதற்கும் தீர்வைத் தராதே. இது மக்கள் நல அரசு என்பது 80களின் பிற்பகுதியிலேயே காலம் கடந்ததாகி விட்டது. ஆனால் மக்களின், கட்சிகளின், அமைப்புகளின் (மார்க்சிய புரட்சிகர அமைப்புகள் உட்பட) போராட்ட வடிவங்கள் அனைத்தும், இருப்பது மக்கள் நல அரசு எனும் அடிப்படையில் அமைந்த போராட்ட வடிவங்களாகவே இருக்கின்றன. உள்ளீட்டில் பாசிசத் தன்மை கொண்ட ஆனால் ஜனநாயகமாக காட்டிக் கொள்ளும், அதேநேரத்தில் ஜாதிய அடிப்படையில் தமக்கான மக்கள் ஆதரவை கையில் வைத்திருக்கும் ஒரு அரசுக்கு அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்ட வடிவங்கள் எவை என்பது குறித்து யாரும் சிந்திக்கவே இல்லை என்று தோன்றுகிறது.
இன்றைய நாளை கருப்பு நாளாக கடைப்பிடிக்கிறோம் என்றால் அதன் பொருள் இதுவரை மாற்று போராட்ட வடிவங்கள் குறித்து சிந்திக்காமல், மாற்று போராட்ட வடிவங்களை கண்டு பிடிக்காமல் இருந்ததை கண்டித்துத் தான் இந்த நாளை கருப்பு நாளாக கடைப்பிடிக்கிறோம் என்று கொள்க.