கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில் தளர்வுகள் இருக்கின்றன. இது மேலிருந்து கீழாக பார்க்கும் பார்வை. அதிகார மாடங்களிலிருந்து எளிய மக்களைப் பார்க்கும் பார்வை. தெளிவாகச் சொன்னால் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தவிர்க்க முடியாதது. என்றாலும், வேறு வழியில்லாமல் எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்களே என்பதனால் கருணையாக கருதி இரண்டு நாட்கள் தளர்வு அளிக்கப்படுகிறது.
அலுவல் ரீதியாக யாரும் இப்படி கூறவில்லை என்றாலும், அரசின் நடவடிக்கைகளில் இப்படி பொருள் கொள்ளத்தான் இடம் இருக்கிறது. ஊரடங்கில் கட்டிட வேலை தொடங்கி கிராமப்புற பெட்டிக் கடைகள் வரை எதற்கும் அனுமதி இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உற்பத்திக் கூடங்கள் இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. 50 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறினாலும் எந்தப் பெரு நிறுவனமும் அதை கடைப்பிடிக்கப் போவதில்லை என்று அனைவருக்குமே தெரியும். சில தொழிற்சாலைகளில் கொரோனாவினால் பத்து பேர் வரை இறந்து போனதாக தகவல் வந்திருக்கும் நிலையிலும் கூட தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இங்கு அனைவருக்கும் பொதுவான ஊரங்கு விதிக்கப்படவில்லை. எளிய மக்களுக்கு ஊரடங்கும் கார்ப்பரேட்களுக்கு ஊரையடக்கும் தான் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.
கொரோனா தொற்றுக்கு அதன் இயல்பை மீறி செயற்கையான, மிகையான அச்ச உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் உலகின் அனைத்து நாடுகளுமே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொராவினால் உலகமெங்கும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சம். ஆனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் உலகமெங்கும் தொற்று நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சம் பேர். ஆனால் கொரோனாவின் அச்சுறுத்தல் பிற நோய்களுக்கு இல்லை. கொரோனாவின் விவரங்களுக்குள் இந்தவிதமாக உள்ளே சென்றால் அறிவியலுக்கு எதிரானவன் என முத்திரை குத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதனால் வெளியில் வந்து விடுவோம். இந்த அச்சுறுத்தலில் இருந்து தான் ஊரடங்கு பீரிட்டுக் கிளம்புகிறது. மும்பை தாராவி பகுதியும், தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடங்களும் இந்த ஊரடங்கை எதிர்த்து வாதம் புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது அரசின் செவிகளில் ஏற மறுக்கிறது.
அரசு என்றால் என்ன? எனும் கேள்விக்கு கார்ப்பரேட்களின் கௌரவப் பணியாளர்கள் என்பது தான் பதிலாக இருந்து வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இந்த ஊரடங்கு கொரோனாவுக்கு தேவையா? இல்லையா? என்பதை விட கார்ப்பரேட்களுக்கு தேவையா? இல்லையா? என்பது தான் முதன்மையாக இருக்கிறது. ஐயம் இருப்பவர்கள் 2019ன் கடைசி இரண்டு காலாண்டுகளின் பொருளாதார ஆய்வறிக்கைகளை காணலாம். இதன் வழியே பார்க்கும் போது இந்த ஊரடங்கு மட்டுமல்ல கொரோனாவும் கூட இன்னும் அதிக காலம் நீடிக்காது, விரைவிலேயே முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் .. .. ..?
சிறிய அளவிலான வணிகக் கடைக்காரர்களும், அன்றாட கூலி உழைப்பாளர்களும் தான் இந்த தொடர் ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், விவசாயம் அரசால் திட்டமிட்டு அழிவுக்கு உள்ளாக்கப்பட்டதினால் தங்கள் சொற்ப அளவிலான நிலத்தை விற்றுவிட்டு கடை போட்டவர்கள், அல்லது விவசாயக் கூலிகள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விட்டு விட்டு தொடரும் ஊரடங்கினால் கொடுமையாக நலிவுற்று மீண்டும் ஒருமுறை இரந்துண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரளவு சேமிப்பில் இருந்தவர்கள் தங்களின் பல ஆண்டு கால சேமிப்பை இந்த ஒன்றரை ஆண்டுகளில் இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் புதிதாக கடன் வாங்கும் நிலைக்குள் இழுத்துவரப் பட்டிருக்கிறார்கள். மற்றப்படி கார்ப்பரேட்களும் அவர்களை ஒட்டி இருப்பவர்களுமே இந்த ஊரடங்கை, ஒழிவாக இருக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை இன்பமாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால் மக்களில் பெரும்பான்மையினர் இந்த ஊரடங்கினால் கொடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்பதால் தனித்தனியாக தங்களின் பொருளாதாரத்தை மீட்டமைக்க, ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகான சில ஆண்டுகளை எடுத்துக் கொள்வார்கள். இந்த ஆண்டுகளில் அவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள், அல்லது சிக்கனமாக இருக்க முயல்வார்கள். இதனால் நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரம் (இது மக்களின் வாங்கும் ஆற்றலை நம்பியே இருப்பதால்) தள்ளாடும். இப்படி தள்ளாடுவதினால் ஏற்படும் பாதிப்பும் மக்களின் தலைகளில் தான் கட்டி வைக்கப்படும்.
இது ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டின் பொருளாதார நிலமை பள்ளத்தை நோக்கி இழுக்கப்படும் நிலையில் இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் அதிமுக அறிவித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அன்றைய மொத்த கடன் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி. இந்த ஆண்டில் வாங்கத் திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட கடன் 84 ஆயிரத்து 680 கோடி. திட்டமிடப்பட்டிருந்த இந்த கடன் வாங்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது, கடன் வாங்கவில்லை என்றால் அரசை நடத்த முடியாது.
மாநிலங்களின் வரி வருவாயை ஒன்றிய அரசு தனக்கு வேண்டும் என்று பறித்துக் கொண்டதற்குப் பெயர் தான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை. இதனால் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு வருவாய் இல்லாமல் பெட்ரோலையும், டாஸ்மாக்கையும் மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, மாநிலங்கள் தலைகீழாக நின்றாலும், மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும், பெட்ரோல் விலையைக் குறைப்பதும், டாஸ்மாக்கை மூடுவதும் சாத்தியமே இல்லாதவைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
ஒன்றிய அரசு தன் வழிப்பறிக் கொள்ளையை (ஜி.எஸ்.டி) அறிவிக்கும் போது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று கூறியதன்படி தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொகை தோராயமாக 15 ஆயிரத்து 500 கோடி. இதை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் ஒன்றிய அரசு அதற்குப் பதிலாக சேமநல வங்கியிடமிருந்து (ரிசர்வ் வங்கி) மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு சேமநல வங்கியிலிருந்து எவ்வளவு கடன் பெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் வாங்கியிருந்தால் அதற்கு வட்டி கட்ட வேண்டும். இது மாநிலங்களுக்கு – தமிழ்நாட்டுக்கு – கூடுதல் சுமை.
இந்த நிலையில் பொறுப்பேற்றிருக்கும் திமுக, தற்போது 9000 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ்நாடு வெளியிட்டிருக்கும் இந்த கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அரசுக்கு ஒன்பதாயிரம் கோடி கிடைக்கும். ஆனால் இதற்கு தோராயமாக 6.75 விழுக்காடு வட்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்பதால், தோராயமாக ஆண்டுக்கு 610 கோடி வட்டியாக கட்ட வேண்டும். ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் வழக்கம் போல் இயங்க அனுமதித்தாலும் இந்த நிதி நெருக்கடி எனும் பெரும் சுமையை தமிழ்நாடு தன்னுடைய தலையிலிருந்து இறக்கி வைத்து விட முடியாது. அதாவது மக்கள் தலையிலிருந்து இந்தச் சுமை இறங்காது.
இந்த நிதிச்சுமையிலிருந்து மீளவே முடியாதா? முடியும். ஒரு சோசலிச அரசால் முடியும். ஆனால் முதலாளித்துவ அரசால் ஒருபோதும் முடியாது. நேர்முக வரியை அதிகப்படுத்தி மறைமுக வரியை கூடுமானவரை குறைத்தால் அது நிர்வாகம் என்று பொருள்படும். மாறாக, மறைமுக வரிய அதிகப்படுத்தி நேர்முக வரியை குறைத்தால் அது நிர்வாகமல்ல கொள்ளை என்றே அறியப்படும். ஆனால் ஒன்றிய அரசு நேர்முக வரியை விட பல மடங்கு அதிகமாக மறைமுக வரியை விதிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நேர்முக வரி செலுத்துவோருக்கு ஏராளமான சலுகைகளையும் வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு வழங்கப்படும் பல சலுகைகளில் ஒன்று தான், அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட வாராக்கடன் தள்ளுபடியான 12 லட்சம் கோடி. நாட்டின் ஒட்டு மொத்த வாராக் கடன் 12 லட்சம் கோடி அல்ல. இது தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் தான். மொத்த வாராக்கடன் இன்னும் பல மடங்கு இருக்கிறது.
வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கடன்களை வாங்கியவர்கள் யாரும் கஞ்சிக்கு இல்லாத ஏழைகள் அல்ல. இந்த ஊரடங்கு காலத்திலும் தம்முடைய லாபத்தை மடங்குகளில் உயர்த்திக் கொண்ட கார்ப்பரேட்கள் தான். இவர்கள் பெற்றிருக்கும், வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் மொத்த கடனையும் தனித்தனியாக வெளிப்படையாக அறிவித்து அதில் 10 விழுக்காட்டை மட்டும் இந்த மாதத்திற்கும் திரும்பச் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு நடைமுறைப்படுத்தினால் போதும். இந்தியா முழுதும் எளிய மக்கள் அனைவருக்கும் கொரோனா முடியும் வரைக்கும் ஊரடங்கு போட்டு எவரும் வெளியே வரும் தேவை இன்றி ஒவ்வொருவருக்கும் மூன்று வேளை உணவுத் தேவைகள் உட்பட, வெளியில் வராமால், தொழில் செய்ய முடியாமல் முடக்கி வைத்திருப்பதற்கான இழப்பீடும் கூட வழங்க முடியும்.
இந்தத் தீர்வை யாரும் முன்வைத்து விடக் கூடாது என்பதால் தான், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுத்தால் போதும், மீதியை வைத்து கொரோனாவை சமாளிக்கலாம் என்று ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கிளப்பி விடுகிறார்கள்.
இதை எளிமையாக புரியவைக்க ஒரு கதை சொல்லலாம். மனநல மருத்துவ மனைகளில் குணமடைந்தவர்களை சோதிக்க ஒரு ஏற்பாடு செய்வார்கள். வாளியில் தண்ணீர் நிறப்பி வைத்து ஒரு கரண்டியையும், ஒரு குவளையும் கொடுத்து விரைவில் வாளியில் இருக்கும் நீரை காலி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அவர்கள் கரண்டியைப் பயன்படுத்துவார்களா? குவளையைப் பயன்படுத்துவார்களா?
அதாவது உங்களுக்கு முன் சில வாய்ப்புகளை காண்பித்து விட்டால், அந்த வாய்ப்புகளை விடுத்து வேறொன்றைப் பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். அதைப் போல எண்ணித்தான், நம்முன்னே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை செய்யாமல் முழுச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஒரு வாய்ப்பை முன் வைக்கிறார்கள்.
மக்களே, நாம் மனநலம் குன்றியவர்கள் அல்ல. மொத்த வாளியையும் ஒரே நொடியில் கவிழ்த்துக் காலி செய்வோம்.