அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 29

மாபெரும் தனித்தனி உதாரணங்களான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய உதாரணங்களிலே குல அமைப்பு கலைந்து மறைந்து போனதை அடையாளங் கண்டு கூறினோம். முடிவாக, அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஏற்கனவே சமுதாயத்தின் குல அமைப்பை பலவீனப்படுத்தி வந்த, நாகரீக நிலை தோன்றியதும் முழுமையாக ஒழித்தும் விட்ட பொதுவான பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்போம். இதற்கு மார்கன் எழுதிய நூல் தேவைப்படுகின்ற அளவுக்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலும் தேவைப்படும்.

குலம் என்பது காட்டுமிராண்டி நிலையின் இடைக்கட்டத்தில் தோன்றி அதன் தலைக்கட்டத்தில் வளர்ந்து – நமக்கு கிடைத்துள்ள மூலாதாராங்களால் நாம் முடிவு செய்ய முடிந்த அளவுக்கு – அநாகரீக நிலையின் கடைக்கட்டத்தில் தனது வளர்ச்சியை அடைந்தது. ஆகவே இக்கட்டத்திலிருந்து நம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்குவோம்.

இந்தக் கட்டத்தில் – இதற்கு அமெரிக்க செவ்விந்தியர்கள் நமக்கு உதாரணமாக பயன்பட வேண்டும் – குல அமைப்பு முழு வளர்ச்சி அடைந்ததைப் பார்க்கிறோம். ஓர் இனக்குழு சில குலங்களாக, பெரும்பாலும் இரண்டு குலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மக்கட் தொகை அதிகரித்த போது இந்த ஆதிக் குலங்கள் சில சேய்க் குலங்களாக பிரிந்தன. இவற்றைப் பொருத்தமட்டில் தாய்க்குலம் ஒரு பிராட்ரியாகத் தோற்றமளித்தது. இனக்குழுவும் கூட சில இனக் குழுக்களாகப் பிரிந்தது. அவை ஒவ்வொன்றிலும், மிகப் பெரும்பாலும் அதே குலங்களையே மீண்டும் பார்க்கிறோம். குறைந்தபட்சம் சில சந்தர்ப்பங்களிலாவது, இரத்த உறவு முறையுள்ள இனக்குழுக்களை, ஓர் இனக்குழுக்களின் கூட்டு ஒன்றுபடுத்தி இருந்தது. இந்த எளிய அமைப்பு எந்த சமுதாய நிலைகளிலிருந்து தோன்றியதோ, அவற்றுக்கு முற்றிலும் பொருத்தமாக அது இருந்தது. அது பிரத்யேகமான, இயற்கையான அமைப்பு என்பதைத் தவிர வேறில்லை. இவ்வழியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தில் தோன்றக்கூடிய எல்லா உள் சச்சரவுகளையும் சமனப்படுத்துவதற்கு அதனால் முடிந்தது. வெளியாருடன் ஏற்பட்ட சச்சரவுகள் போரின் மூலம் தீர்க்கப்பட்டன. போரில் ஓர் இனக்குழு அடியோடு அழிந்து போகுமே தவிர அடிமைப்படாது. குலத்தில் ஆள்பவர், ஆளப்படுபவர் என்பது இல்லாதது தான் குல அமைப்பின் பெருமையும் அதே சமயத்தின் அதன் வரம்புக்கு உட்பட்ட தன்மையும் ஆகும். குல அமைப்பில் உள் விவகாரங்களில் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையில் இன்னும் வேறுபாடு ஏற்படவில்லை. பொது விவகாரங்களில் பங்கெடுப்பதும் இரத்தப்பழி வாங்குவதும் மன்னிப்புக் காணிக்கை செய்வதும் உரிமையா அல்லது கடமையா எனும் கேள்வி செவ்விந்தியனுக்கு முன்னால் ஒருபோதும் எழவில்லை. உண்பதும் வேட்டையாடுவதும் கடமையா அல்லது உரிமையா என்ற கேள்வியைப் போல அதுவும் அவனுக்கு அபத்தமான கேள்வியாகத் தோன்றியிருக்கும். எந்த இனக்குழுவும் குலமும் பல்வேறு வர்க்கங்களாகப் பிரிய முடியாது. இது, இந்த அமைப்பின் பொருளாதார அடித்தளத்தை ஆராய்வதற்கு நம்மை இட்டுச் செல்கிறது.

மக்கள் தொகை மிகவும் நெருக்கமில்லாதைருந்தது. இனக்குழு வசித்த இடத்தில் தான் மக்கள் அடர்த்தியாக இருந்தார்கள். அந்த இடம் பரந்த வேட்டைக் காடுகளால் சூழப்பட்டிருந்தது. இவற்றுக்கப்பால் ,அற்ற இனக்குழுக்களிலிருந்து பாதுகப்பு அளித்திருந்த நடுநிலைக் காடு இருந்தது. உழைப்புப் பிரிவினை என்பது இயற்கையான வளர்ச்சியே. இது ஆண், பெண் மத்தியில் மட்டுமே இருந்தது. ஆண்கள் போர் செய்தார்கள், வேட்டயாடினார்கள், மீன் பிடித்தார்கள், உணவுக்குறிய மூலப் பொருட்களைக் கண்டெடுத்தார்கள், அத்தொழிகளுக்கு வேண்டிய கருவிகளைப் படைத்தார்கள். பெண்கள் வீட்டை நிர்வாகம் செய்தார்கள், உணவும் துணியும் தயாரித்தார்கள், சமைத்தார்கள், நெய்தார்கள், துணி தைத்தார்கள். ஆண் தன்னுடைய துறையில் எசமானனாக இருந்த மாதிரி, பெண் தன்னுடைய துறையில் எசமானியாக இருந்தாள். காட்டில் ஆண் வீட்டில் பெண். அவரவர் தயாரித்த உபயோகித்த கருவிகள் அவரவர்களுக்கே சொந்தம். போர் வேட்டை ஆயுதங்கள், மீன்பிடிக்கும் சாதனங்கள் ஆண்களுக்கு, வீட்டுப் பொருட்கள் பெண்களுக்கு. சில, பெரும்பாலும் பல குடுமபங்களைக் கொண்டு பொதுவுடமை ரீதியில் வீட்டு நிர்வாகம் இருந்தது. [குறிப்பாக அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரையில் அப்படி இருந்தது – பான்கிராஃப்ட் எழுதிய நூலைப் பார்க்க. ராணி சார்லட் தீவுகளைச் சேர்ந்த ஹோய்தாக்களிடையில் சில குடுபச் சமூகங்கள் 700 நபர் வரை ஒரே கூரையின் கீழ் திரட்டி வைத்திருக்கின்றன. நூட்காக்களிடையில் ஒரே கூரையின் கீழ் இனக்குழுக்கள் மொத்தமாக வசித்தன. (ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பு)] பொதுவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டவை எல்லாம் பொதுச் சொத்தாக இருந்தன, வீடு, தோட்டம், நீண்ட மரக்கலம் ஆகியவை.  ஆக, இங்கே – இங்கு மட்டுமே – ‘தன் உழைப்பினால் சேர்த்த உடமை’ என்பதை நாம் பார்க்கிறோம். சட்ட நிபுணர்களும் பொருளியலாளர்களும் இதைத்தான் நாகரீக சமுதாயத்தின் மீது பொய்யான முறையில் கற்பித்திருக்கிறார்கள். நவீனகால முதலாளித்துவ உடமை இந்த உறுதியான, பொய்மை மிக்க சட்ட சாக்குப் போக்கை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால், மனிதன் எல்லா இடங்களிலும் இந்தக் கட்டத்தில் நின்று விடவில்லை. ஆசியாவில் வீட்டுக்கு கொண்டு வந்து பழக்கி, கொட்டிலில் இனவிருத்தி செய்யக் கூடிய மிருகங்களை மனிதன் கண்டான். காட்டெருமையை வேட்டையாட வேண்டியிருந்தது; வீட்டுப்பசு ஆண்டு தோறும் கன்று ஈன்றது, பாலும் கொடுத்தது. மிகவும் முன்னேற்றமடைந்த சில இனக் குழுக்கள் – ஆரியர்கள், செமைட்டுகள், துரானியர்கள் கூட – காட்டு மிருகங்களை வீட்டில் வைத்துப் பழ்க்குவதையும் பின்னால் கால்நடைகளை வளர்த்து கவனித்துக் கொள்வதையும் தனது பிரதான தொழிலாகக் கொண்டனர். அநாகரீகர்களின் பொதுவான கூட்டத்திலிருந்து கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் தனியே பிரிந்து சென்றன. இது தான் சமுதாய ரீதியில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை ஆகும். கால்நடிகளை வளர்த்த இந்த இனக்குழுக்கள் மற்ற அனாகரீகர்களை விட அதிகமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தது மட்டுமின்றி பல்வேறு விதமான பொருட்களையும் அதிக அளவில் உற்பத்தி செய்தனர். அவர்களிடம் பால, பாலால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை மற்றவர்களை விட அதிகம் இருந்ததுடன் தோல்கள் கம்பளி ரோமம், ஆட்டு ரோமம் ஆகியவையும் இருந்தன. மூலப் பொருட்களின் அளவு அதிகரித்ததனால் நூல்கள் துணிமணீகள் முன்பை விட அதிகமான அளவில் உபயோகிக்கப்பட்டன.  இது முதல் தடவையாக முறையான பண்டப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கியது அதற்கு முந்திய கட்டங்களில் பண்டப் பரிவர்த்தனை எப்போதாவது மட்டுமே நடைபெற முடியும். ஆயுதங்களையும் கருவிகளையும் படைப்பதில் விசேசமான திறமை தற்காலிக உழைப்புப் பிரிவினைக்கு கொண்டு சென்றிருக்கலாம்.  உதாரணமாக, புதிய கற்காலத்தைச் சேர்ர்ந்த கற்கருவிகளைச் செய்வதற்குரிய பட்டரைகளின் சந்தேகத்துக்கு இடமில்லாத மீத மிச்சங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பட்டரைகளில் தமது திறமையை வளர்த்துக் கொண்ட கம்மியர்கள் மிகப் பெரும்பாலும் சமூகத்துக்காக வேலை செய்தார்கள். எப்படியிருப்பினும் அந்தக் கட்டத்தில் இனக்குழுவுக்குள் நடைபெற்ற பண்டப்பரிவர்த்தனையும் கூட விதிவிலக்கான விசயமே. ஆனால், கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் உருப்பெற்ற பிறகு பல்வேறு இனக்குழுக்களின் உறுப்பினர்களுக்கிடையில் பண்டப் பரிவர்த்தனை நடைபெறுவதற்கும் அது வளர்ச்சியடைந்து ஒரு முறையான ஏற்பாடாக கெட்டிப்படுவதற்கும் உரிய எல்லாச் சாதகமான நிலமைகளும் இங்கே இருப்பதைப் பார்க்கிறோம். முதலில் இனக்குழுவுக்கு இனக்குழு தத்தம் குலத் தலைவர்கள் மூலமாக பரிவர்த்தனை செய்து வந்தது. ஆனால், கால்நடை மந்தைகள் தனியாக பிரிக்கப்பட்ட சொத்தாக மாற்றப்படுதல் ஆரம்பமான பொழுது தனிநபர்களிடையே பரிவர்த்தனை நடைபெறுவது மென்மேலும் அதிகரித்தது. கடைசியில் அது ஒன்றே பரிவர்த்தனை வடிவமாகி விட்டது. கால்நடை வளர்க்கும் இனக்குழுக்கள் அண்டை மக்களிடம் பரிவர்த்தனைக்குத் தந்த முக்கியமான பொருள் கால்நடைதான். கால்நடை என்ற பண்டமே மற்ற எல்லாப் பண்டங்களையும் மதிப்பிடுவதற்குரிய பண்டமாக ஆயிற்று. மற்றப்பண்டங்களுக்கு மாற்றுப் பண்டமாக அது எங்கும் மறுப்பில்லாமல் பெற்றுக் கொள்ளப்பட்டது. சுருக்கமாகக் கூறினால், அது பணத்தின் செயற்பாட்டை மேற்கொண்டது. இந்தக் கட்டத்தில் அது பணத்தைப் போலவே பயன்பட்டு வந்தது. பண்டப் பரிவர்த்தனையின் ஆரம்பத்திலேயே பணம் என்ற விசேசப் பண்டம் வேண்டும் என்ற கோரிக்கை இப்படி அவசிஅமாகவும் வேகமாகவும் எழுந்தது.

கடைக் கட்டத்திலிருந்த ஆசியாவின் அநாகரீக மக்களுக்கு காய்கறித் தோட்டக்கலை அனேகமாகத் தெரிந்திருக்காது. மிக சமீப காலத்தைக் குறிப்பதென்றால், அநாகரீகத்தின் இடைக்கட்டத்தில் தான், வயல் விவசாயத்துக்கு அது அவர்களிடையே தோன்றியது. நீண்ட, கடுமையான பனிக்காலத்துக்கென்று கால்நடைத் தீவனத்தை சேகரித்துக் கொள்ளாமல் கால்நடை வளர்க்கும் வாழ்க்கையைத் துரானிய சம்வெளியின் பருவநிலை அனுமதிக்காது. எனவே புல் வளர்ப்பதும் தானியங்களைப் பயிரிடுவதும் இங்கே இன்றியமையாதவை ஆயின.  கருங்கடலுக்கு வடக்கேயுள்ள ஸ்டெப்பி பிரதேசங்களுக்கும் இது பொருந்தும். முதலில் கால்நடைகளுக்காத் தான் தானியம் பயிரிடப்பட்டது. ஆனால், விரைவில் மனிதனுக்கும் உணவு ஆயிற்று. பயிர் செய்த நிலம் இனக்குழுவின் நிலமாகவே இன்னும் இருந்தது, முதலில் அது குலத்துக்கு தரப்பட்டது, பிற்காலத்தில் அந்தக் குலம் அதை வீட்டுச் சமூகங்களிடையே உபயோகத்துக்கு வினியோகம் செய்தது, கடைசியில் தனி நபர்களுக்கு வினியோகம் செய்தது. இவர்களுக்கு சில உடமையுரிமைகள் இருந்திருக்கலாம், அதற்கு மேலில்லை.

இந்தக் கட்டத்தின் தொழிற்துறைச் சாதனைகளில் இரண்டு குறிப்பாக முக்கியமானவை: முதலாவது கை நெசவுத் தறி; இரண்டாவது உலோகத் தாதை உருக்கி உலோகச் சாமான்களைத் தயாரிப்பது. செம்பு தகரம் ஆகியவற்ரின் கலவையாகிய வெண்கலம் முக்கியமானவை. வெண்கலத்தைக் கொண்டு பயனுள்ள கருவிகளும் ஆயுதங்களும் செய்யப்பட்டன. ஆனால் அது கற்கருவிகளை அகற்றிவிட முடியவில்லை. இரும்பால் மட்டுமே அதை செய்ய முடிந்திருக்கும். ஆனால் அதன் உற்பத்தி அதுவரை யாருக்கும் தெரியாது. தங்கமும் வெள்ளியும் நகைகள் செய்வதற்கும், அலங்காரத்துக்கும் பயன்படத் தொடங்கின.  செம்பு வெண்கலத்தை விட அவை ஏற்கனவே அதிக விலை மதிப்புள்ளவையாக இருந்திருக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பு, பயிர்த்தொழில், வீட்டில் செய்யும் கைத் தொழில் ஆகிய எல்லாத் துறைகளிலும் உற்பத்தி பெருகியது.  இதனால் மனிதனுடைய உழைப்புச் சக்தி தனது வாழ்க்கைக்கு வேண்டியதைக் காட்டிலும் அதிகமாகவே உற்பத்தி செய்ய முடிந்தது. அதேசமய்த்தில், அந்தக் குலத்தின் அல்லது வீட்டுச் சமூகத்தின் அல்லது தனிப்பட்ட குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினனும் அன்றாடம் செய்து வந்த உழைப்பின் அளவு இதனால் அதிகரித்துக் கொண்டே வந்தது. இன்னும் அதிகமான உழைப்புச் சக்தி விரும்பத் தக்கதாயிற்று. யுத்தம் இந்த அதிக உழைப்புச் சக்தியை அளித்தது. யுத்தத்தில் பிடித்தவர்கள் எல்லோரும் அடைமைகளாக்கப் பட்டார்கள். ஆகவே, அன்றைக்கிருந்த பொதுவான வரலாற்று நிலைமைகளில், முதல் மாபெரும் சமூக உழைப்புப் பிரிவினை, உழைப்பின் உற்பத்தித் திற்னை அதிகப்படுத்தி, அதனால் பொருட் செல்வத்தைப் பெருக்கி, உற்பத்திஹ்ட் துறைகளையும் விரிவுபடுத்தி அதன் பின்னே அவசியத் தேவையாக அடிமை முறையையும் கொண்டுவந்து சேர்த்தது. ஆக, முதல் மாபெரும் சமூகப் உழைப்புப் பிரிவினையிலிருந்து முதன்முதலாக சமுதாயத்தின் மாபெரும் வர்க்கப் பிரிவினை தோன்றியது. எஜமானர்களும் அடிமைகளும், சுரண்டுபவர்களும், சுரண்டப்படுபவர்களும் என்று இரண்டு வர்க்கங்கள் உண்டாயின.

இனக்குழுவின் அல்லது குலத்தின் பொதுச் சொத்தாக இருந்த கால்நடை மந்தைகள் தனிப்பட்ட குடும்பத் தலைவர்களின் சொத்தாக எப்படி எப்போது மாற்றப்பட்டன என்ற விபரம் இன்று வரை நமக்குத் தெரியாது.  ஆனால், அந்த மாற்றம் பிரதானமாக இந்தக் கட்டத்தில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். மந்தைகளும் மற்ற புதிய செல்வப் பொருட்களும் குடும்பத்தில் ஒரு புரட்சியை உண்டாக்கின. ஜீவனோபாயத்துக்கு வழி தேடுவது எப்பொழுதும் ஆணின் வேலையாக இருந்தது. எனவே, அதற்குரிய சாதனங்களை அவன் உற்பத்தி செய்தான்.  அவை அவனுடைய உடமையாக இருந்தன.  கால்நடை மந்தைகள் என்பவை வாழ்க்கைக்குரிய புதிய சாதனம். அவற்றை முதலில் பழக்கி, பிபு பராமரித்தது ஆண் செய்த வேலையே. எனவே கால்நடைகள் அவனுக்கே சொந்தம். அவற்றைப் பரிவர்த்தனை செய்து பெற்ர பண்டங்களும் அடிமைகளும் அவனுக்கே சொந்தம். இப்போது உற்பத்தியிலிருந்து கிடைத்த உபரி எல்லாம் ஆணுக்கே சொந்தமாயிற்று. அதை அனுபவிப்பதில் பெண் பங்கு கொண்டாள். அதன் உரிமையுடைமையில் அவளுக்குப் பங்கு இல்லை.  “காட்டுமிராண்டிப்” போர்வீரனும் வேட்டைக்காரனும் வீட்டில் இரண்டாம் நிலையை வகித்துக் கொண்டு முதலிடத்தை பெண்ணுக்குத் தருவதில் திருப்தியடைந்தார்கள். “மென்மையான” ஆட்டிடையனோ, தனது செல்வத்தைக் காட்டி முண்டியடித்து முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டான். அவளால் புகார் செய்யவும் முடியவில்லை.  குடும்பத்தில் இருந்த உழைப்புப் பிரிவினை. கணவன் மனைவிக்கு இடையில் சொத்து வினியோகத்தை முறைப்படுத்தி வைத்திருந்தது. இந்த உழைப்புப் பிரிவினை மாறாமலேயே தான் இருந்தது. எனினும் இது முந்திய குடும்ப உறவு முறையைத் தலைகீழாக்கி விட்டது.  ஏனென்றால், குடும்பத்துக்கு வெளியே இருக்கின்ற உழைப்புப் பிரிவினை மாறி விட்டது. வீட்டு உழைப்பு செய்வதுடன் நின்று கொள்ள வேண்டிய நிலையினால் முன்னர் பெண் வீட்டின் தலைமை நிலையில் இருந்தாள். அதே காரணம் இப்போது வீட்டில் ஆணுக்கு தலைமை நிலையை உறுதிப்படுத்தியது. ஜீவனோபாயத்துக்கான ஆணினுடைய உழைப்புடன் ஒப்பிடுகின்ற பொழுது பெண் செய்த வீட்டு வேலை அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஆணின் உழைப்பு தான் எல்லாம், பெண்ணின் வேலை ஒரு அற்பமான பங்குதான். சமூக ரீதியில் பயனுள்ல உழைப்பிலிருந்து பெண் விலக்கப்பட்டு, வீட்டு வேலை செய்வதுடன் நிறுத்தப்படுகின்ற வரை பெண்கள் விடுதலை அடைவதோ ஆண்களுடன் சமமாக இருப்பதோ சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே இங்கு காண்கிறோம்.  பெண்கள் பெரிய, சமூக அளவில் உற்பத்தியில் பங்கு கொள்வதற்கு வசதியளிக்கிற பொழுது தான், வீட்டு வேலைகளை சொற்ப அளவில் செய்தால் போதும் என்ற நிலை ஏற்படுகின்ற பொழுது தான் பெண்களின் விடுதலை சாத்தியமாகும். இது நவீன காலப் பெரிய அளவு தொழிற்சாலையின் விளைவாகவே சாத்தியமாயிற்று. இந்த பெரிய அளவிலான தொழிற்துறை பெண்கள் அதிக அளவில் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வசதியளிக்கிறது. அது மட்டுமல்ல, இவ்வாறு பெண்கள் ஈடுபடுதல் அதற்கு அவசியமாகவும் இருக்கிறது. மேலும் அது தனிப்பட்ட வீட்டு வேலையைக் கூட ஒரு சமூக உற்பத்தியுடன் இணைக்க முயல்கிறது.

வீட்டில் ஆண் நடைமுறையில் தலைமையைப் பெற்றது அவனுடைய எதேச்சதிகாரத்துக்கு இருந்த கடைசித் தடையையும் வீழ்த்தி விட்டது.  தாயுரிமையை ஒழித்தது, தந்தையுரிமையைப் புகுத்தியது, இணைமண முறையிலிருந்து படிப்படியாக ஒரு தார மணத்துக்கு மாறியது ஆகியவை மூலமாக இந்த எதேச்சதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டது. இது பண்டைக்கால குல அமைப்பில் பிளவை ஏற்படுத்தியது.  தனிப்பட்ட குடும்பம் ஒரு சக்தியாகி, குலத்தைப் பயமுறுத்துகின்ற முறையில் எழுந்தது.

அடுத்தபடி நம்மை அநாகரீக நிலையின் தலைக்கட்டத்துக்கு கொண்டுவந்து விடுகிறது. இந்தக் கால்ப் பகுதியில் எல்லா நாகரீக மக்களினங்களும் தமது வீர யுகத்தைக் கடந்து வந்தன. இரும்பு வாளின் காலகட்டம் இதுவே. அதுமட்டுமல்லாமல், இரும்புக் கலப்பை கோடாலியின் காலகட்டமும் இதுவே. இரும்பு, மனிதனுக்கு சேவை செய்யத் தொடங்கியது. வரலாற்றில் புரட்சிகரமான பாத்திரத்தை வகித்த  மூலப் பொருட்களில் கடைசி, மிக முக்கியமான பொருள்  இதுவே; கடைசி – அதாவது உருளைக்கிழங்கை நாம் விலக்கி விட்டால், இரும்பு, வயல் விவசாயத்தை முன்னிலும் பெருமளவு நடத்துவதையும் விரிந்த காட்டுப் பிரதேசங்களில் மரங்களை வெட்டிப் பண்படுத்துவதையும் சாத்தியமாக்கியது. எந்தக் கல்லும் அப்போது அறிந்துள்ள எந்த உலோகமும் எதிர் நிற்க முடியாத அளவுக்கு உறுதியும் கூர்மையும் உள்ள கருவிகளை அது கைவினைஞனுக்கு அளித்தது. இவையெல்லாம் படிப்படியாகத் தான் நடந்தன.  முதன்முதலில் தயாரிக்கப்பட்ட இரும்பு பெரும்பாலும் வெண்கலத்தை விட மென்மையாக இருந்தது. இப்படி கல் ஆயுதங்கள் மெதுவாக மறைந்தன. கல்கோடாலிகள் போரில் உபயோகிக்கக்ப்பட்டு வந்தன.  ஹில்டெபிராண்டைப் பற்றிய பாடலில் குறிப்பிடப்படுவது மட்டுமின்றி 1066ம் ஆண்டில் ஹேஸ்டிங் போரிலும் [நார்மண்டியின் கோமகன் வில்ஹெல்ம் – சாக்சன் அரசரான ஹெரால்டை 1066 அக்டோபர் 14ல் ஹேஸ்டிங்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முறியடித்தார். ஆங்கில சாக்சன் இராணுவம் குல அமைப்பின் எச்சங்களைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது, துருப்புகள் பூர்வீகமான ஆயுதங்களை வைத்திருந்தன. வில்ஹெல்ம் இங்கிலாந்தின் அரசரானார். வெற்றியாளர் வில்ஹெல்ம் என்று பிரபலமடைந்தார்] அவை உபயோகிக்கப்பட்டன. ஆனால் இப்போது முன்னேற்றம் தடுக்க முடியாததாகி விட்டது. முன்னைவிடக் குறுக்கீடுகள் குறைவு, வேகமும் அதிகம். கல் அல்லது செங்கல்லினால் கட்டப்பட்ட வீடுகள், கொத்தளமும் துவார வரிசைகளும் அமைந்த கற்சுவர்கள் சூழ்ந்த நகரம் இனக்குழு அல்லது இனக்குழுக்களின் கூட்டிற்கு இருப்பிடமாயிற்று. இது கட்டிடக் கலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டதைக் குறித்தது.  அதேசமயத்தில், ஆபத்து அதிகரித்திருப்பதற்கும் பாதுகாப்பு அவசியமாகி விட்டதற்கும் இது அறிகுறியாகும்.  செல்வம் வாகமாகப் பெருகியது.  ஆனால் அது தனி நபர்களின் செல்வமே. துணி நெய்தல் உலோகச் சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைத்தொழில்கள் மென்மேலும் தனித்தன்மை பெற்ரு வந்தன. அவை பலப்பல ரகங்களில் மேன்மேலும் கலைச் சிறப்புடன் மிளிர்ந்தன. விவசாயம் இப்போது தானியங்களையும் அவரை வகையைச் சேர்ந்த கொடிகளையும் கனிகளையும் அளித்ததோடு மட்டுமின்றி, எண்ணெயையும் மதுவையும் தந்தது. அவற்றைத் தயாரிக்கும் முறை இப்போது கற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. இப்படிப்பட்ட பல்வேறு செயல்களை ஒரு தனி நபர் செய்வது இனிமேல் சாத்தியமில்லாமல் போய் விட்டது. இரண்டாவது மாபெரும் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. விவசாயத்திலிருந்து கைத்தொழில்கள் பிரிந்தன. உற்பத்தி தொடர்ச்சியாக அதிகரித்து, அதனுடன் உழைப்புத் திறனும் அதிகரித்தபடியால், மனித உழைப்புச் சக்தியின் மதிப்பு உயர்ந்தது.  முந்திய காலகட்டத்தில் ஆரம்ப நிலையிலும் அங்குமிங்குமாகவும் இருந்த அடிமை முறை இப்போது சமூக அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகி விட்டது.  அடிமைகள் வெறும் உதவியாளர்களாக இருந்த நிலை மாறி விட்டது. அவர்கல் வயல்களிலும் பட்டறைகளிலும் வேலை செய்வதற்கு கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்டார்கள்.  உற்பத்தி விவசாயம், கைத் தொழில் எனும் இரண்டு மாபெரும் கிளைகளாக பிரிந்ததிலிருந்து பரிவர்த்தனைக்கு உற்பத்தி செய்யும் முறை, அதாவது பண்ட உற்பத்தி முறை பிறந்தது. அத்துடன் வர்த்தகமும் வந்து சேர்ந்தது. அது இனக் குழுவுக்குள் மட்டுமல்ல, இனக்குழுவின் எல்லையோரங்களில் மட்டுமல்ல, கடல்கடந்த நாடுகளுடனும் நடைபெற்றது. இவையெல்லாம் இன்னும் மிகவும் வளர்ச்சி குன்றிய நிலையில் தான் இருந்தன. சர்வப் பொதுவான பணப்பண்டம் என்ற முறையில் தங்கமும் வெள்ளியும் முதன்மை அடைந்தன.  எனினும் நாணயங்கள் இன்னும் அச்சிடப்படவில்லை. எடையைக் கொண்டுதான் அவை பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

  1. மாமேதை ஏங்கல்ஸ்.
  2. 1884 ல் எழுதிய முன்னுரை
  3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
  4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
  5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
  6. குடும்பம் – 1
  7. குடும்பம் – 2
  8. குடும்பம் – 3
  9. குடும்பம் – 4
  10. குடும்பம் – 5
  11. குடும்பம் – 6
  12. குடும்பம் – 7
  13. குடும்பம் – 8
  14. குடும்பம் – 9
  15. இராகோஸ் குலம் 1
  16. இராகோஸ் குலம் 2
  17. கிரேக்க குலம் 1
  18. கிரேக்க குலம் 2
  19. அதீனிய அரசின் உதயம் 1
  20. அதீனிய அரசின் உதயம் 2
  21. அதீனிய அரசின் உதயம் 3
  22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
  23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2
  24. கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1
  25. கெல்டுகள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 2
  26. கெல்டுக்ள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 3
  27. ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1
  28. ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்