லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு

நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் பாஜக எனும் விலங்கு தற்போது லட்சத் தீவை நோக்கி தன் பார்வையைத் திருப்பி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. கேரள நடிகர்கள் தொடங்கி, சற்றேறக் குறைய பாஜக மற்றும் அதனைச் சார்ந்த கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின, வெளிப்படுத்தி வருகின்றன. அந்த விலங்கு தொடர்ந்து இப்படி வேட்டையாடிக் கொண்டிருப்பதை எப்படி தடுக்கப் போகிறோம்? என்பது தான் தற்போது முதன்மையான கேள்வியாக இருக்கிறது.

பிரபுல் பட்டேலிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குவதாகவே அனைவரும் கருதுகிறார்கள் என தோன்றுகிறது. பிரபுல் பட்டேல் முதன்முதலில் லட்சத் தீவின் நிர்வாகப் பொறுப்பேற்று வரும் போது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்கள் தாங்கிய மோடியை விமர்சிக்கும் சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டதாம். உடனே அவர் வண்டிய நிறுத்தி விட்டு தானே இறங்கிச் சென்று அந்த சுவரொட்டியை கிழித்தாராம். அப்போது, ஓராண்டைக் கடந்த பின்னும் ஏன் இந்த சுவரொட்டி அப்படியே விடப்பட்டிருக்கிறது? இது போன்ற சுவரொட்டி ஒட்டியவர்களைக் கண்டுபிடித்து ஓராண்டுக்கு மேல் சிறையிலடையுங்கள் என்றாராம். அதற்கு அப்படியான சட்டம் எதுவும் இங்கே இல்லை என்று பதில் சொல்லப்பட்டதாம். அதனால் தான் குற்றங்களே நடைபெறாத லட்சத் தீவில் குண்டர் சட்டத்தைப் போட்டாராம், என்று கதை சொல்கிறார்கள். இது மெய்யா? இந்த உரையாடலைக் கேட்டது யார் என்பன போன்ற கேள்விகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுவோம். இந்தக் கதையில் இருக்கும் அரசியல் என்ன?

தற்போது லட்சத் தீவை தலைகீழாக கவிழ்க்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் (சற்றேறக் குறைய அனைவரும்) வைக்கும் முழக்கங்களான, ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன் தள்ளும் அரசியல் என்ன? பிரபுல் பட்டேலை நீக்கி விட்டால் லட்சத் தீவின் தற்போதைய சிக்கல் நீங்கி விடுமா? லட்சத் தீவைக் காப்போம் என்றால் எப்படி யாரிடமிருந்து? காப்பது என்பதன் பொருள் என்ன?

அந்தக் கதை எப்படி, ஒரு பிரபுல் பட்டேலின் தனிப்பட்ட வெறுப்பு இது போன்ற சட்டங்களை கொண்டுவரத் தூண்டியதான அரசியலை உள்ளீடாகக் கொண்டிருக்கிறதோ, அது போலவே போராடுவோரின் முழக்கங்களும் பிரபுல் பட்டேலோடு முடிந்து விடும் அரசியலை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது.

அதனால் தான் பாஜக, இவை வளர்ச்சித் திட்டங்கள், இதை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், லட்சத் தீவு மக்களின் கருத்துகளைக் கேட்காமல் இதில் எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என்றும் பதில்களைக் கூறி எளிதாக கடந்து செல்கிறது. மக்களின் கருத்துகளுக்கு பாஜக எந்த அளவுக்கு மதிப்பளிக்கும் என்பதை கடந்த ஏழு ஆண்டுகளாக கண்டு வருகிறோம். ஆறு மாதங்களுக்கும் மேலாகியும் குன்றாத வீரியத்துடன் தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது பாஜக என்ன மதிப்பு வைத்திருக்கிறது என்பதையும் கண்டு வருகிறோம். எனவே இதை நுணுக்கமாக பார்க்காமல் சில முழக்கங்களோடும், வழமையான போராட்டங்களோடும், எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் ‘லட்சுமண ரேகை’க்கு உள் நின்று போராடுவதோடும் முடித்துக் கொண்டால். அந்த ரத்தம் சொட்டும் பற்களின் அடுத்த கடி நாமாகவே இருப்போம்.

இன்றைய லட்சத் தீவு சிக்கலை, பிரபுல் பட்டேல் கொண்டு வந்த சட்டங்கள் என அனைத்து சட்டங்களையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது பிழையான பார்வையாகவே இருக்கும். அதை இரண்டு கூராக பிரித்துப் பார்க்க வேண்டும்.

1. லட்சத் தீவில் வசிப்பவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது என்பதை மாற்றி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் எனும் சட்டத் திருத்தம்.

2. லட்சத் தீவின் நிரந்தர குடி மக்கள் என்பதை மறுக்கும் விதமாக எந்த நேரத்திலும் தேவைப்படும் நிலத்தை அரசு எடுத்துக் கொள்வதை அனுமதிக்கும் சட்டத் திருத்தம்.

3. கடற்கரைகளில் அதாவது தனி மனிதனுக்கு சொந்தமாக இல்லாத எந்த இடத்தையும் அனுமதி இன்றி – மீன் வலைகளை காய வைப்பது, படகுகளை நிறுத்தி வைப்பது உட்பட – பயன்படுத்தக் கூடாது என்று கொண்டு வந்த சட்டத் திருத்தம்.

4. உலக அளவில் மிக மிக குறைந்த குற்றம் நடக்கும் பகுதியாக இருக்கும் லட்சத் தீவில் யாரையும் எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் ஓர் ஆண்டு வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சிறை வைக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் ஆகியவைகளை தனித்த ஒரு தொகுப்பாக பார்க்க வேண்டும்.

பிற சட்டங்களான

1. மாட்டு இறைச்சி உண்ண, வைத்திருக்க, கொண்டு செல்ல தடை. பள்ளிகளில் மாட்டு இறைச்சி போடப்படுவது நிறுத்தம்.

2. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பங்களிக்கத் தடை. உள்ளாட்சிப் பணிகளுக்கு லட்சத் தீவு மக்களை எடுக்காமல் பிற பகுதி மக்களை – குறிப்பாக குஜராத் மக்களை – பணியில் அமர்த்துவது.

3. சாராயம் விற்க குடிக்க ஏற்பு வழங்கி இருப்பது.

4. பால் சேகரிப்பு. விளம்பல் ஆகிய இரண்டையும் குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனமே மேற்கொள்ளும் என மாற்றி இருப்பது.

5. கேரளாவுடன் இருக்கும் போக்குவரத்து தொடர்பை துண்டித்து, கர்னாடகாவின் வழியாகவே போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருப்பது

ஆகிய திருத்தங்களை மேற்கண்ட தொகுப்பிலிருந்து மாறுபட்ட தனியானதாக பார்க்க வேண்டும்.

ஏன் இப்படி பிரித்து தனித்தனியாக பார்க்க வேண்டும்? முதல் தொகுதியிலிருக்கும் சட்டத் திருத்தங்கள் உலகளாவியவை. அதாவது பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்கள் லட்சத் தீவை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடையாக இருக்கும் சட்டங்களை நீக்கி தேவையான மாற்றங்களைச் செய்வதற்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மக்கள் போராட்டத்தின் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ இந்த சட்டங்களில் எந்த மாற்றத்தையோ, நீக்கத்தையோ கொண்டுவர முடியாது. இரண்டாவது தொகுப்பில் கொண்டுவரப் பட்டிருக்கும் திருத்தங்கள் உள்நாட்டுக்கானவை. அதாவது அங்கு குடியிருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களைத் தூண்டும் விதத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள். ஒட்டு மொத்த திருத்தத்துக்கு எதிராக போராடுடினாலும் அவை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக மடை மாற்றப்பட்டு அதைக் கொண்டு பிற பகுதி மக்களிடம் அவர்கள் மதத்துக்காக போராடுகிறார்கள் என்று அன்னியப்படச் செய்வதற்கும். தேவைப்பட்டால் ஒன்றிரண்டு மாற்று திருத்தங்களை, அதாவது போராட்டம் மிகவும் தீவிரமாகி தவிர்க்கமுடியாத நிலை வந்தால், ஒன்றிரண்டு மாற்று திருத்தங்களை கொண்டு வந்து அதன் மூலம் முதன்மையான சட்டத் திருத்தங்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. இந்த திட்டமிடல்களுடன் தான் அவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வளவு தெளிவான திட்டமிடல்களுடன் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மாற்றங்களின் நோக்கம் என்ன? லட்சத்தீவின் ஆட்சியராக இருக்கும் அஸ்கர் அலி என்பவர் கூறுகிறார், “இந்தத் திட்டங்கள் முழுமை பெற்றால் லட்சத் தீவு மாலத் தீவுக்கு மாற்றாக இருக்கும்” அப்படியானால் தற்போது மாலத்தீவு என்னவாக இருக்கிறதோ அதற்கு மாற்றாக லட்சத்தீவை முன்வைக்கும் திட்டத்தின் ஒரு படியாகத் தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய கடல்பகுதிகளை இராணுவ ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் கண்காணிக்கும் புவியியல் முதன்மைத்தனம் மிகுந்த பகுதியாக லட்சத் தீவை மாற்றுவது. தற்போது மாலத் தீவு பெற்றிருக்கும் முதன்மையில் முதலிடத்தில் இருப்பது நிதி மூலதன வரியில்லா நாடு என்பது. மாலத்தீவிலிருந்து இந்தியாவுக்கு நிதி முதலீடு செய்தால் இந்தியாவில் வரி விதிக்க முடியாது என்பதைப் போல் லட்சத்தீவை தனித்த ஆட்சிப் பகுதியாகவும் நிதி மூலதன வரியில்லா பகுதியாகவும் மாற்றியமைப்பது. பெரும் கார்ப்பரேட் அதிபர்களின் கேளிக்கை சொர்க்கமாக லட்சத் தீவை மாற்றுவது. அதாவது மொத்தம் இருக்கும் 36 தீவுகளில் ஒன்றிரண்டை நிர்வாக, இராணுவ தேவைகளுக்காக எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் தீவுகளை மது, மாது உள்ளிட்ட அனைத்து விதமான போதைகளிலும் மிதக்கும் உல்லாச சொர்க்கபுரியாக மாற்றுவது. இவைகளை இலக்காகக் கொண்டு தான் பாஜக செயல்படுகிறது என்பதை அதன் செயல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. அதிலும் இது பாஜகவின் சொந்த திட்டமாக இருக்காது, காரப்பரேட்களின் திட்டமாகவே இருக்கும். ஆகவே, இதில் மாற்றமோ, குறைப்போ செய்யவதற்கு எந்த விதத்திலும் பாஜகவோ இந்திய அரசோ முன்வராது.

இதை தடுக்க முடியுமா? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மத்திய அரசா ஒன்றிய அரசா எனும் விவாதம் இன்றியமையாதது. பொதுவாக ஒன்றிய அரசு என அரசியல் சாசனம் குறிப்பிட்டிருந்தாலும் மைய அரசாகவே அது (காங்கிரஸ் காலத்தையும் உள்ளடக்கி) அன்றிலிருந்து இன்று வரை செயல்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக மோடி வந்த பிறகு அது பேரரசு போலவும், மாநிலங்கள் எல்லாம் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசுகள் போலவும் தான் செயல்பட்டு வந்திருக்கிறது. எனவே, அது மைய அரசு அல்ல, ஒன்றிய அரசு தான் எனும் சுட்டல் இந்த இடத்தில் இன்றியமையாததாகிறது. ஆனால் இது சுட்டலுடன் நின்றுவிடக் கூடாது. இந்திய அளவிலான பெரும் விவாதமாக மாற்ற வேண்டும். இதற்காக பாஜக ஆளாத மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும். இந்த பொழுதில் மேற்கு வங்க மம்தா, கேரள பினராய், தமிழ்நாட்டு ஸ்டாலின் ஆகியோர் இதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஸ்டாலின் இதில் முதன்மையான பாத்திரம் வகிக்க முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, தேர்தல் வெற்றி என்பதைத் தவிர வேறெதையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நிலையில் இருக்கிறது. பாஜகவை தேர்தல் அரசியலில் அடித்து நொறுக்க வேண்டிய இந்த நேரத்தில் தேர்தல் வெற்றிக்காகக் கூட காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டுகிறது. காங்கிரசும் ஒரு பிற்போக்குக் கட்சி தான் என்பதினாலோ, பாஜகவும் காங்கிரசும் கொள்கையில், பார்ப்பனிய ஆதரவில் ஒன்றுதான் என்பதினாலோ அல்ல. தான் ஆள வாய்ப்புள்ள மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணியோ உடன்பாடோ கொண்டால் வேறு எதை எதிர்த்து அரசியல் செய்வது எனும் கேள்வியை முன்னிருத்தியே சிபிஎம் காங்கிரசுடன் இணைய மறுக்கிறது. திருணமூலை பொருத்தவரை அது காங்கிரசிலிருந்து பிரிந்து தான் இருக்கும் பகுதியில் வெற்றிகரமாக தன்னை ஆளும் கட்சியாக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு கட்சி என்பதைத் தாண்டி வேறு பின்னிலங்கள் இல்லை. சரியாகச் சொன்னால் தன்மையிலும் செயல்பாடுகளிலும் மம்தா இன்னொரு ஜெயலலிதா என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. திமுகவைப் பொருத்தவரை அதுவும் ஒரு முதலாளித்துவ கட்சி தான் என்றாலும், இந்த நிலையில் இந்த சூழலைக் கையாள பொருத்தமான கட்சியாகவும் தலைமையாகவும் இருக்கிறது.

எனவே, இந்திய ஒன்றியம் எனும் விவாதத்தை இந்திய அளவில் மிக வீரியமாக எடுத்துச் செல்வதும், அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து மாநில உரிமைகளை கேட்டு தீவிரமாக போராடுவதும், பாஜகவின் தேர்தல் வெற்றியை உடனடியாக தடுத்து நிறுத்துவதும், இந்து எனும் நினைப்பில் இருப்பவர்களை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்று பிரிப்பதும் அதற்காக போராடுவதும் திமுகவின் முதற்கடமை ஆகிறது. திமுகவின் செயல்பாடுகளை இதனை நோக்கி திரும்ப வைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதும், ஏனைய மாநிலங்களில் மாநில உரிமைகளை மீட்கும் போராட்டத்தை கட்டியமைப்பதுமே, தற்போதைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் எனும் வெறி பிடித்த விலங்கை குறைந்த அளவில் கூண்டில் அடைக்கவாவது முடியும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s