தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது.

பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் மட்டுமீறல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பல தனியார் பள்ளிகளில் நடந்த கொடூரங்கள் வெளியில் வந்து கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் நிறைய பெண்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பள்ளிகளில் மட்டுமல்லாது பொது வெளியில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியில் சீண்டல்களையும் தாக்குதல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்த ஆணாதிக்க சமூகம் மீண்டும் ஒருமுறை தன் அம்மணத்தை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. இவைகளிலும் எந்த அளவுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது தெரியவில்லை.

தொடர்ச்சியாக, சமூக தளங்களில் இதன் காரணம் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக மதவாத குப்பைகளை முன்னிலைப்படுத்தும் போக்கும், மற்றொரு பக்கம் அதையே சமூகத் தீர்வாக முன்வைக்கும் அசட்டுத்தனமான அறியாமையும் மேலோங்கி வருகிறது. சபரிமாலா போன்றவர்களை நாம் ஒதுக்கி விட்டாலும், தமிழ்நாட்டு அரசும் கூட பெண் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசிப்பதாக குறிப்பிட்டிருப்பது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

எதுவும் நடந்து முடிந்த பிறகு பார்த்தாயா எங்கள் வேதத்தில் அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது என சொல்லித் திரியும் ஒரு கூட்டம் இப்போதும் அதைச் செய்து புளகமடைந்து கொண்டிருக்கிறது. ஆடைக் கட்டுப்பாடு வேண்டும், சுடிதார் அணிய வேண்டும். பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். பெண் ஆசிரியர், பெண் மருத்துவர், பெண் அலுவலர் என்று விரிந்து கொண்டே செல்கிறது அவர்களின் பிதற்றல்.

பாலியல் கொடுமை என்பதை தனிப்பட்ட ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்க வேண்டுமா? இதில் ஆடை என்ன பங்கைப் பெறுகிறது? பாலியல் கொடுமைகளில் ஆடையை முதன்மைப்படுத்துவது என்பது, அந்தக் குற்றத்தின் ஆணிவேரைப் புறக்கணித்து விட்டு சல்லி வேர்களைத் தேடுவது போன்றது. பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகள் தொடங்கி வாழ்மணம் முடிந்து விட்ட கிழவிகள் வரை இங்கு பாலியல் கொடுமைகளுக்கு தப்பவில்லை. பொது இடங்களில் நடந்து போகும் போது உரசுவது, பேரூந்துகளில் மட்டுமீறுவது, பள்ளிகளில், அலுவலகங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்துவது, ஏழ்மையை, இயலாமையை பாவித்துக் கொள்வது, மத நம்பிக்கையை வாய்ப்பாக கொள்ளுவது, அறியாமையை, மூடநம்பிக்கையை வயப்படுத்திக் கொள்வது என்று இன்னும் பல்வேறு விதங்களிலும் நடக்கும் இந்த பாலியல் கொடுமைகள் எதிலாவது ஆடை காரணியாக இருக்கிறதா?

சமூக ஊடகத்தில் வந்த ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். ஒரு பெண் இரண்டு கைகளிலும், தோளிலும் பைகளை சுமந்து கொண்டு ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருக்கிறாள். மிகவும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதி. எதிரே வந்து கொண்டிருந்த ஒரு பொறுக்கி மேலே கைவைத்துவிட்டுச் செல்கிறான். ஒரு வயதான பெண்மணியைத் தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. இதில் அந்தப் பெண் சுடிதார் போட்டிருந்தாலோ அல்லது புர்கா போட்டிருந்தாலோ இது நடக்காமல் போயிருக்குமா? அவ்வளவு ஏன் புர்கா போட்டிருந்த ஒரு பெண்ணுக்குக் கூட இது போன்று நடந்திருக்கிறது, அதுவும் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு ஊரில். இவைகளில் ஆடையின் பங்கு என்ன? ஆனால் இது போன்ற அனைத்து பாலியல் கொடுமைகளுக்கு பின்னாலும் இருக்கும் காரணி ஆணின் பாலியல் வேட்கையும், அதிகார பலமும். உடல் முழுக்க ஆடையால் மூடி வந்தால் இவை தகர்ந்து விடுமா? தகராது என்பதற்கான சான்றுகள் தான் புர்கா போட்டிருக்கும் நிலையிலும் நடக்கும் பாலியல் கொடுமைகள்.

இதேபோன்ற சல்லி வேர்த்தனமான தீர்வு தான் பெண்களுக்கு பெண் ஆசிரியர்கள் என்பதும். இது ஆணாதிக்க சமூகம் என்பதால் ஆண்கள் மட்டுமே ஆணாதிக்கவாதிகளாய் இருப்பார்கள் என நம்புவதும் ஒரு விதத்தில் மூடநம்பிக்கை தான். ஆணாதிக்க சமூகம் என்பதன் பொருள் சமூகமே ஆணாதிக்க வடிவில் இருக்கிறது என்பது தானேயன்றி, ஆண்கள் மட்டும் ஆதிக்கவாதிகளாய் இருக்கிறார்கள் என்பதல்ல. சமூகத்தில் ஆண்களும் பெண்களும் அடக்கம். ஆணை எதிர்த்து கேள்வி கேட்கும் முனைப்புடன் ஒரு பெண் வளர்ந்தால் அவளை அடக்கி, ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று பெண்ணுக்கு கற்பித்து ஆணாதிக்க சமூகத்தினுள் அடைப்பதில் பெண் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறாள். எனவே, ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் பெண்களும் ஆண்களைப் போலவே ஆணாதிக்கவாதிகளாகவே இருக்கிறார்கள்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். இதுவும் சமூக ஊடகத்தில் வந்தது தான். அது பெண்கள் மட்டுமே படிக்கும், பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும் இருக்கும் பள்ளி. ஒரு மாணவி சுடிதாரில் போடும் ஷாலை தோளில் ஊக்கினால் குத்தாமல் கழுத்தில் மாலை போல் போட்டு முழுதாக மறைத்து வருகிறாள். இது குறித்து ஆசிரியர் கேட்கும் போது தனக்கு ஒவ்வாமை இருப்பதால் தோளில் புண்களும், தடிப்பும், அரிப்பும் இருப்பதாக கூறுகிறாள். ஆசிரியரோ ஊக்கில் ஒவ்வாமை இருந்தால் தங்க ஊக்கு செய்து போட்டுக் கொண்டு வா, ஆனால் இப்படி வரக் கூடாது என்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? தவிரவும் தாமதமாக வரும் மாணவிகளை எங்கு சென்று மேய்ந்து விட்டு வருகிறாய் என்று அனைத்து மாணவிகளின் நடுவிலும் இரக்கமே இல்லாமல் கேட்கும் பெண் ஆசிரியர்கள் இங்கு ஏராளம் இருக்கிறார்கள்.

அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்த நிர்மலா போன்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இங்கு இல்லவே இல்லை என்று கூறிவிட முடியுமா? அல்லது இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பத்மா சேசாத்திரி பள்ளியில் பெண் ஆசிரியர்கள் யாருக்கும் இந்த விவகாரம் எதுவுமே தெரியாது என்று கூறி விட முடியுமா? பல முறை பல மாணவிகள் முறையீடு செய்திருந்தும் பொறுப்பில் இருந்த பெண்கள் என்ன செய்தார்கள்? நடவடிக்கை எடுக்காததன் காரணம் கூற முடியுமா? நாளிதழ்களில் வரும் எத்தனையோ செய்திகள் வெறும் செய்திகளாக கடந்து போகின்றன. இவைகளின் உள்ளீடு ஏன் நமக்கு புரிவதில்லை?

இங்கு முதன்மையாய் கேட்க வேண்டிய கேள்வியே ஆண்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள்? என்பதும், பாதிக்கப்படும் பெண்களை எதிர்க்க முடியாமல் செய்வது எது என்பதும் தான்? அது ஆணின் பாலியல் வேட்கையும், அதிகார பலமும் தான். இப்போதும், உலக அளவிலான மீடூ என்றாலும், தற்போதைய அம்பலப்பட்டுதல்கள் என்றாலும், இவ்வளவு தாமதமாக ஏன் வெளியில் சொல்லி அசிங்கப் பட வேண்டும் என்று கேட்கும் எத்தனையோ பேர் ஆண்களிலும் இருக்கிறார்கள், பெண்களிலும் இருக்கிறார்கள். என்றால் பெண் ஆசிரியர்களை நியமிப்பது இதற்கான தீர்வாக இருக்க முடியுமா?

பாலியல் சுரண்டல்களிலிருந்து மட்டுமல்ல, குடும்பம் எனும் சுரண்டல் உட்பட அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் வெளியேறி பெண் சுதந்திரமாய் செயலாற்ற வேண்டுமென்றால் பெண் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். ஆணின் பாதுகாப்பில் தான் பெண் இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பதை உடைத்து பெண்கள் தன்னிச்சையாய் இருக்க வேண்டும். குடும்ப அமைப்பிலும் கூட பெண்னின் விருப்பங்களை ஆண் தீர்மானிப்பவனாக இருக்கக் கூடாது. அதற்கு பெண்களும் ஆண்களும் தனித்தனி பள்ளி கல்லூரிகளில் பயில்வதும், பெண்களுக்கு பெண் ஆசிரியர்களை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்பதும் கண்டிப்பாக உதவாது. அதுவரை கல்லூரிகளில் மாணவ மாணவிர்டையே தேர்தல் நடத்தி மாணவர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தி வலுப்படுத்தலாம். பெற்றோர் ஆசிரியர் அமைப்பை பலப்படுத்தி கண்காணிக்கும் அமைப்பாகவும், பள்ளி கல்லூரிகளின் மாணவர் சார்ந்த முடிவுகளில் வீட்டோ அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கலாம். அனைத்து பள்ளி கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்தலாம் அல்லது, முறையீடு வந்தால் எப்போது வேண்டுமானாலும் கையகப்படுலாம் எனும் ஏற்புடன் தனியாரை அனுமதிக்கலாம். இந்த தற்காலிக தீர்வுகளிலிருந்து நிரந்தரத் தீர்வான பெண் தன்னிச்சையாய் இருப்பது என்பதை நோக்கி நகரலாம்.

மதவாதிகளால் இதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் மக்களால் புரிந்து கொள்ள முடியும்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s