அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30

சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது.  பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் கொண்டு வந்தது. விளைநிலம் தனிப்பட்ட குடும்பங்களின் உபயோகத்திற்கென்று, முதலில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் பின்னர் சாசுவதமாகவும் கொடுக்கப்பட்டது. இணை மண முறையிலிருந்து ஒருதார மண முறைக்கு மாறுவதுடன் சேர்ந்து முழுமையான தனியுடமைக்கு மாறுவதும், படிப்படியாகவும் அதேசமத்திலும் நடைபெற்றது. தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகு ஆயிற்று.

மக்கள் தொகையின் அடர்த்தி அதிகரித்து உள்ளும் வெளியும் இன்னும் நெருக்கமாக ஒன்றுபடுதல் அவசியமாயிற்று. இரத்த உறவுமுறை இனக்குழுக்கள் கூட்டாகச் சேர்வதும் பின்னர் வெகு விரைவில் அவை ஒன்றுகலப்பதும் அதன் பிறகு தனித்தனி இனக்குழு பிரதேசங்கள் மக்களினத்தின் ஒரே பிரதேசமாக இணைவதும் எங்குமே அவசியமாயின. மக்களினத்தின் இராணுவத் தளபதி – rex, basileus, thiudans – இன்றியமையாத, நிரந்தரமான அதிகாரியாகி விட்டான். மக்கல் சபைகல் இல்லாத இடங்களிலெல்லாம் அவை அமைக்கப்பட்டன.  குலச் சமூகமும் இப்போது இராணுவ ஜனநாயகமாக வளர்ச்சியடைந்திருந்தது.  இராணுவத் தளபதி, கவுன்சில், மக்கள் சபை ஆகியவை அதன் உறுப்புகளாக ஆயின.  இராணுவ ஜனநாயகம் – ஏனென்றால் யுத்தமும், யுத்தத்துக்காக தயாராவதும் இப்போது மக்களது வாழ்க்கையின் வாடிக்கையான செயல்களாகி விட்டன. அண்டை மக்களின் செல்வம் மக்களின் பேராசையைக் கிளறி விட்டது. செல்வத்தைச் சேர்ப்பது வாழ்க்கையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று என்று அவர்கள் கருதத் தொடங்கினார்கள். இந்த மக்கள் அநாகரீகர்கள்; உற்பத்தி வகைப்பட்ட வேலை செய்வதை விட கொள்லையடிப்பது சுலபமானதாகவும், அதிக கௌரவமானதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. முன்பு ஆகிரமிப்புக்கு பழி வாங்குவதற்கு அல்லது பற்றாமல் போய்விட்ட பிரதேசத்தை விரிவாக்குவதற்குப் போர் செய்தார்கள்; இப்போது கொள்ளையடிப்பதற்கு மட்டுமே போர் செய்யப்பட்டது, அது ஒரு வாடிக்கையான தொழிலாகி விட்டது. புதிய கோட்டை நகரங்களைச் சுற்றி மாபெரும் அரண்கள் எழுப்பப்பட்டது வெறும் விளையாட்டுக்காக அல்ல, அங்கே வாயைப் பிளந்து கொண்டிருந்த அகழிகள் குல அமைப்பின் சமாதிகளாகும். அவற்றின் கொத்தளங்கள் நாகரீக நிலையை எட்டித் தொட்டுக் கொண்டிருந்தன. சமூகத்துக்குள் விவகாரங்களும் இதே மாதிரி மாறுதலடைந்தன. கொள்லைக்கார யுத்தங்கள் தலைமைத் தளபதியின் அதிகாரத்தையும் துணைத்தளபதியின் அதிகாரத்தையும் பெருக்கின.  ஒரே ஒரு குடும்பத்திலிருந்து பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வழக்கம், குறிப்பாக தந்தையுரிமையைப் புகுத்திய பிறகு படிப்படியாக பரம்பரை வாரிசுரிமையாக மாறிவிட்டது. இது முதலில் சகித்துக் கொள்ளப்பட்டது, பிறகு உரிமையாக கோரப்பட்டது, கடைசியில் அபகரிக்கப்பட்டது.  பரம்பரை அரச வம்சம், பரம்பரை பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு அடிப்படை அமைக்கப்பட்டது. இவ்வாறாக, குல அமைப்பின் உறுப்புகள் மக்களிடம் குலத்தில், பிராட்ரியில், இனக்குழுவில் உள்ள வேர்களிலிருந்து படிப்படியாக பிரிக்கப்பட்டன.  குல அமைப்பு முழுவதும் அதன் எதிரிடையாக மாற்றப்பட்டது. அது சொந்த விவகாரங்களை சுதந்திரமாக நிர்வகிப்பதற்குறிய இனக்குழுக்களின் அமைப்பு  என்பது மறைந்து போய், அண்டையிலிருப்பவர்களைக் கொள்லையடித்து ஒடுக்குவதற்குரிய அமைப்பாக மாறிவிட்டது. ஆகவே, அதன் உறுப்புகள் மக்கள் விருப்பத்தை இறைவேற்றும் சாதங்களாக இருந்த நிலை மாறி, சொந்த மக்களை ஆட்சி செய்வதற்கும் நசுக்குவதற்கும் உரிய சுயேட்சையான உறுப்புகளாகி விட்டன. செல்வத்தின் மீது ஏற்பட்ட பேராசை குலத்தின் உறுப்பினர்களைப் பணக்காரன் ஏழை என்று பிரிக்கதிருந்தால், இது ஏற்பட்டிருக்க முடியாது. “குலத்திற்குள் சொத்து வேறுபாடுகள் நலன்களின் ஒற்றுமையை குலத்தின் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பகை முரண்பாடாக மாறாமல் இருந்திருந்தால்” (மார்க்ஸ்), இது ஏற்பட்டிருக்க முடியாது. அடிமை முறை வளர்ச்சியடைந்ததால், ஜீவனோபாயத்துக்கு உழைப்பது அடிமைத்தனமானது என்றும், கொள்ளையடிப்பதைக் காட்டிலும் இழிவானதென்றும் ஏற்கனவே பழிக்கப்படத் தொடங்கியிராவிட்டால் இது ஏற்பட்டிருக்க முடியாது.

***********

இது நம்மை நாகரீக நிலையின் வாசலுக்கு கொண்டுவந்து விடுகிறது. உழைப்புப் பிரிவினையில் ஏற்பட்ட கூடுதலான முன்னேற்றம் இதைத் துவக்கி வைத்தது. கடைக்கட்டத்தில் மனிதர்கள் தமது நேரடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே உற்பத்தி செய்து வந்தனர். தற்செயலாக தேவைக்கு அதிகமாக மிஞ்சினால் அவர்கள் எப்போதாவது அதைப் பரிவர்த்தனை செய்தார்கள்.  அநாகரீக நிலையின் இடைக்கட்டத்தில் கால்நடை வளர்க்கும் மக்களினங்கள் தம் கால்நடைகளின் மூலம் ஒரு சொத்து வடிவத்தைப் பெற்றிருந்தன. போதுமான கால்நடை மந்தைகள் இருக்கும் பொழுது இந்தச் சொத்து அவர்களின் தேவைக்கு அதிகமான உபரியை முறையாகக் கொடுத்து வந்தது என்பதைப் பார்க்கிறோம். மேலும், கால்நடை வளர்க்கும் மக்களினங்களுக்கும், மந்தைகள் இல்லாத பிந்தங்கிய இனக்குழுக்களுக்கும் இடையில் உழைப்புப் பிரிவினை இருந்ததையும் பார்க்கிறோம். ஆக, உற்பத்தியில் இரண்டு கட்டங்கள் அடுத்ததுத்து இருந்தன. இவை முறையான ப்ரிவர்த்தனைக்குரிய நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்தன.  அநாகரீக நிலையின் தலைக்கட்டம் விவசாயத்துக்கும் கைத்தொழில்களுக்கும் இடையில் மேலும் உழைப்புப் பிரிவினையை உருவாக்கியது. குறிப்பாகப், பரிவர்த்தனைக்கு என்றே விளைபொருட்களில் மேன்மேலும் அதிகமான பகுதி உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தனித்தனி உற்பத்தியாளர்களுக்கு இடையில் பரிவர்த்தனை நடைபெறுதல் சமுதாயத்துக்கு இன்றியமையாத தேவையாகி விட்டது. நிலைத்து விட்ட இந்த உழைப்புப் பிரிவினைகளை எல்லம் நாகரீக நிலை வலுப்படுத்தி அதிகப்படுத்தி விட்டது. குறிப்பாக, நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான வேறுபாட்டைத் தீவிரப்படுத்தி (பண்டைக் காலத்தில் நாட்டுப்புறத்தின் மீது நகரம் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் வகித்த மாதிரியில் அல்லது, மத்திய காலத்தில் நகரத்தின் மீது நாட்டுப்புறம் ஆதிக்கம் செலுத்திய மாதிரியில்) இந்த உழைப்புப் பிரிவினைகளை வலுப்படுத்தி அதிகப்படுத்தியது.அத்துடன், அது தனக்கு பிரத்யேகமான, தீர்மானகரமான முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது உழைப்புப் பிரிவினையையும் கூடச் சேர்த்து விட்டது. உற்பத்தியில் பங்கெடுக்காமல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடுகின்ற ஒரு வர்க்கத்தை, வர்த்தகர்களை அது படைத்தது. வர்க்கங்கள் தோன்றுவதற்குறிய முந்திய போக்குகள் எல்லாம் உற்பத்தியுடன் மட்டுமே முழுக்கத் தொடர்பு கொண்டிருந்தன. அவை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களை நிர்வாகிகள், வேலை செய்பவர்கள் என்று அல்லது, பெரிய அளவு உற்பத்தியாளர்கள், சிரிய அளவு உற்பத்தியாளர்கள் என்று பிரித்தன. இங்கே முதல் தடவையாக ஒரு வர்க்கம் தோன்றுகிறது. அது உற்பத்தியில் எந்தப் பங்கும் கொள்ளாமலேயே உற்பத்தி நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றுகிறது. பொருளாதார ரீதியில் தன் ஆட்சிக்கு உற்பத்தியாளர்களைப் பணிய வைக்கவும் செய்கிறது. சமுதாயத்தின் எந்த இரண்டு உற்பத்தியாளர்களுக்கும் இடையில் தன்னை இன்றியமையாத இடைத்தரகனாக்கிக் கொண்டு இருவரையும் சுரண்டுகிறது. பரிவர்த்தனையில் உள்ள கஷ்டமும் ஆபத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படாமல் பாதுகாப்பதாகக் கூறியும், அவர்களுடைய விளை பொருட்களுக்கு தொலைதூரச் சந்தைகளைப் பிடித்துத் தருவதாக சாக்குக் கீறியும் புல்லுருவிகளைக் கொண்டு ஒரு வர்க்கம் தோன்றுகிறது. இவ்வர்க்கத்தினர் உண்மையில் சமுதாயத்தின் சோம்பேறிகள். அவர்கள் மிகவும் அற்பமான சேவைகளுக்கு வெகுமதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உற்பத்தியின் சிறந்த பகுதியை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். பேரளவில் செல்வத்தையும் அதற்குத் தகுந்த சமூகச் செல்வாக்கையும் விரைவாகக் குவிக்கிறார்கள்.  அதே காரணத்துக்காக நாகரீக நிலையின் காலகட்டத்தில் அவர்கள் புதிது புதிதாக கௌரவங்களைப் பெற்ருக் கொண்டே இருக்கவும் உற்பத்தி மீது மேன்மேலும் அதிகமான பிடிப்பைப் பெறுவதற்கும் விதிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் கடைசியில் சொந்தமாக ஒரு பொருளைப் படைத்து விடுகிறார்கள். அது தான் திரும்பத் திரும்ப நடைபெறுகின்ற வர்த்தக நெருக்கடிகள் என்பதாகும்.

நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சிக் கட்டத்தில் தான் செய்யப் போகின்ற பெரிய காரியங்களைப் பற்றி இந்த இளம் வர்த்தக வர்க்கத்துக்கு சூசகமாகக் கூட தெரியாது. ஆனால், அது உருப் பெற்றது, தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டது. அது போதும். அத்துடன் உலோகப் பணம், அதாவது நாணயங்கள் உபயோகத்துக்கு வந்தன. அதன் மூலம் உற்பத்தியில் ஈடுபடாதவன் உற்பத்தியளன் மீதும் அவனுடைய விளை பொருட்கள் மீதும் ஆட்சி செலுத்துவதற்கு ஒரு புதிய சாதனமும் வந்து சேர்ந்தது. பண்டங்களுக்கெல்லாம் பண்டமாக, மற்ற பண்டங்கள் எல்லாவற்றையும் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. விரும்பத்தக்க எந்தப் பொருளாகவும், தேவைப்படுகின்ற எந்தப் பொருளாகவும் தன்னை மாற்றிக் கொள்ளும் தாயத்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதை வைத்திருக்கின்ற நபர் உற்பத்தி உலகத்தை ஆட்சி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் அது யாரிடம் அதிகமாக இருந்தது? வர்த்தகர்களிடம் தான். அவனிடம் பண வழிபாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. எல்லாப் பண்டாங்களும், ஆகவே எல்லாப் பண்ட உற்பத்தியாளர்களும் பணத்துக்கு முன்னால் விழுந்து மண்டியிட வேண்டுமென்று அவன் தெளிவாகவே எடுத்துக் கூறினான்.  அது செல்வத்தின் அவதாரம், அதனுடன் ஒப்பிடுகின்ற பொழுது செல்வத்தின் மற்ற வடிவங்கள் எல்லாம் வெறும் நிழல்களே என்று அவன் நடைமுறையில் நிரூபித்துக் காட்டினான்.  பணத்தின் ஆதிக்கம் தன்னுடைய இளமைப் பருவத்தில் பூர்வீகமான முரட்டுத் தனத்துடனும் வன்முறையுடனும் தன்னை வெளிக்காட்டியது போல பின்னால் என்றைக்கும் காட்டியதில்லை. பணத்துக்கு பண்டங்களை விற்பது ஏற்பட்ட பிறகு பணத்தைக் கடனாகக் கொடுப்பது வந்து சேர்ந்தது. வட்டியும் கந்து வட்டி முறையும் அத்துடன் வந்தன.  பண்டைக்கால ஏதென்ஸ் ரோமபுரி ஆகியவற்றின் சட்டங்கள் கடன் வாங்கியவர்களைக் கந்துவட்டிக் காரனின் காலடியில் ஈவிரக்கமின்றி, நாதியற்ற நிலையில் தள்ளியதைப் போல பிற்காலத்தில் வந்த எந்தச் சட்டமும் தள்ளவில்லை. இவ்விரு சட்டத் தொகுப்புகளும் பொதுச் சட்டம் என்ற முறையில் தன்னியல்பாகத் தோன்றியவையே, பொருளாதாரக் கட்டாயத்தைத் தவிர வேறு எக்காரணத்தினாலும் அவை தோன்றவில்லை.

பண்டங்களின் வடிவத்தில் செல்வம், அடிமைகளின் வடிவத்தில் செல்வம், பண வடிவத்தில் செல்வம் ஆகியவற்றுடன் நிலத்தின் வடிவிலும் செல்வம் தோன்றியது.  ஆதியில் குலம் அல்லது இனக்குழு துண்டு நிலங்களுக்கான உரிமையைத் தனிநபர்களுக்கு வழங்கியிருந்தது. அந்த உரிமை இப்போது நிலைத்து விட்டபடியால் இந்த துண்டு நிலங்கள் அவர்களுடைய பரம்பரைச் சொத்தாகி விட்டன. தம்முடைய நிலங்கல் மீது குலச் சமூகத்துக்கு இருந்த உரிமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே அந்தக் காலத்துக்கு சிறிது முன்னாலிருந்து அவர்கல் மிகவும் அதிகமாக பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உரிமை அவர்களுக்கு விலங்காகி விட்டது. அந்த விலங்கிலிருந்து அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டனர் – அத்துடன் விரைவாகப் புதிய நிலச் சொத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். முழுமையான, சுதந்திரமான நிலவுடமை என்பதற்குக் கட்டுப்படுத்தப்படாத, வில்லங்கம் இல்லாத உடமை என்ற அர்த்தம் மட்டுமல்ல, அதை பாராதீனப்படுத்துவதற்கு உரிமையுண்டு என்ற அர்த்தமும் அதிலடங்கும். நிலம் குலத்துக்கு சொந்தமாக இருந்தவரை இதைச் செய்கின்ற சாத்தியம் இல்லை.  ஆனால் புதிய நிலச் சொந்தக்காரன் குலத்தின், இனக்குழுவின் தலைமையிலான உரிமையின் விலங்குகளை உதறியெறிந்த பிறகு அத்துடன் நிலத்துடன் இதுவரை பிரிக்கமுடியாதபடி பிணைந்திருந்த பந்தத்தையும் அறுத்து விட்டான்.  இதன் அர்த்தம் என்ன என்பதை, நிலத்தின் மீது தனியுடமை ஏற்பட்ட பொழுது அதே காலத்தில் அத்துடன் உண்டாக்கப்பட்ட பணம் அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.  இப்போது நிலம் விற்கப்படக் கூடிய, அடமானம் வைக்கப்படக் கூடிய ஒரு பண்டம் ஆகலாம். நிலத்தின் மீது தனியுடமை ஏற்பட்ட உடனே நில அடமானம் கண்டுபிடிக்கப்பட்டது (ஏதென்ஸைப் பார்க்க).  ஒருதார மண முறையின் மீது தொத்திக் கொண்டு பொது மகளிர் முறையும் விபச்சாரமும் நுழைந்ததைப் போல இப்போது முதலாக அடமானமும் நிலவுடமையுடன் தொத்திக் கொண்டு விட்டது. சுதந்திரமான, முழுமையான, பாராதீனப்படுத்தப்படக் கூடிய நிலவுடமை வேண்டும் என்று கூச்சல் போட்டீர்கள் அல்லவா? இதோ வாங்கிக் கொள்ளுங்கள் tu l’us voulu. George Dandi nl [நீங்கள் கேட்டீர்களே, ஜார்ஜ் தாந்தேன் (மொலி யேர் ஜார்ஜ் தாந்தேன் அங்கம் 1 கட்சி 9)]

இப்படி, வர்த்தகப் பெருக்கம், பணம், கந்துவட்டி, நிலச் சொத்து, நில அடமானம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு சிறு வர்க்கத்திடம் செல்வம் குவிவதும் மத்தியப்படுத்தப்படுவதும் விரைவாக நடந்தன – இது ஒரு பக்கம். மறு பக்கத்தில், மக்கள் திரளினர் மேன்மேலும் வறுமைக்குத் தள்ளப்பட்டு ஏழைகள் திரள் திரளாகப் பெருகினர். பணம் படைத்த புதிய பிரபுத்துவம் – இது பழைய பிரபுத்துவத்துடன் தொடக்கத்திலிருந்தே இணையாமலிருந்த இடங்களில் – பழைய இனக்குழுப் பிரபுத்துவத்தை இறுதியாகப் பின்னால் தள்ளி விட்டது (ஏதென்சில், ரோமாபுரியில் செர்மானியர்கள் மத்தியில்). சுதந்திரமான மனிதர்களைச் செல்வத்தின் அடிப்படையில் வர்க்கங்களாகச் செய்த பிரிவினையுடன் சேர்ந்து, குறிப்பாகக் கிரீசில், அடிமைகளின் எண்ணிக்கை பிரமாண்டமான அளவுக்குப் பெருகியது. [ஏதென்சில் அடிமைகளின் எண்ணிக்கைக்கு, மேலே பக்கம் 117 பார்க்க. கோரிந்த் நகரம் உச்ச நிலையில் இருந்த போது அங்கே 4,60,000 அடிமைகள் இருந்தார்கள். எஜினாவில் 4,70,000. இரண்டு நகரங்களிலும் சுதந்திரமான மக்களைக் காட்டிலும் பத்துமடங்கு அடிமைகள் இருந்தார்கள். (ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பு) நான்காவது செர்மன் பதிப்பின் பக்கத்தை ஏங்கல்ஸ் இங்கே தருகிறார். இத்தொகுதியின் பக்கம் 192 பார்க்க] இவர்களுடைய கட்டாய உழைப்பை அடிப்படையாகக் கொண்டு மொத்த சமுதாய மேற்கட்டுமானம் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சமூகப் புரட்சியின் விளைவாகக் குல அமைப்பு என்ன ஆயிற்று என்பதை இப்போது பார்ப்போம்.  அதன் உதவியில்லாமல் வளர்ந்து விட்ட புதிய சக்திகளுக்கு எதிரே அது பலவீனமாகக் கிடந்தது. ஒரு குலத்தின் அல்லது ஒரு இனக்குழுவின் உறுப்பினர்கள் ஒரே பிரதேசத்தில் ஒன்றாகச் சேர்ந்து வசிக்க வேண்டும், அவர்கள் மட்டும் தான் அங்கே வசிக்க முடியும் என்ற நிபந்தனையை அந்தக் குல அமைப்பு ஆதாரமாகக் கொண்டிருந்தது, ஆனால் இது என்றோ மறைந்து விட்டது. குலங்களும் இனக்குழுக்களும் எங்குமே ஒன்றாகக் கலந்து விட்டன. எங்கு பார்த்தாலும் அடிமைகளும் பாதுகாப்பு பெற்று வந்தவர்களும் அன்னியர்களும் சுதந்திரமான குடிமக்களிடையே வாழ்ந்து வந்தார்கள்.  ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்கின்ற நிலை அநாகரீக நிலையின் இறுதிக் கட்டத்தின் முடிவில் கிடைக்கப் பெற்றதாகும்.  அதற்கு மக்கள் இடப்பெயர்வினாலும் வீடு மாற்றங்களாலும் அடிக்கடி குறுக்கீடுகள் ஏற்பட்டன. வர்த்தகம், வேலை மாற்றம், நில மாற்றம் எல்லம் அவற்றைப் பொருத்தவையாக இருந்தன.  குலக் குழுவின் உறுப்பினர்கள் இனிமேல் தங்கள் பொது விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒன்றாகக் கூட முடியவில்லை. மதச் சடங்குகள் போன்ற சில்லரைக் காரியங்கள் தான் கடைப்பிடிக்கப்பட்டன. அவை கூட அலட்சியமாகவே செய்யப்பட்டன. எந்தத் தேவைகளுக்காகவும் நலன்களுக்காகவும் குல உறுப்புகள் நியமிக்கப் பெற்றும் கவனிக்க தகுதியாக்கப்பட்டும் இருந்தனவோ, அவற்றுடன் கூடுதலாக புதிய தேவைகளும் நலன்களும் தோன்றின. வாழ்க்கைச் சாதனங்களைப் பெறுகின்ற நிலைமைகளில் ஏற்பட்ட புரட்சியினாலும் அதனால் சமூகக் கட்டுக் கோப்பில் ஏற்பட்ட  மாறுதலினாலும் இவை தோன்றின. இவை பண்டைய குல அமைப்புக்கு புறம்பானவை மட்டுமல்ல, ஒவ்வொரு வழியிலும் அதில் குறுக்கிட்டுத் தடுத்தன. உழைப்புப் பிரிவினையால் ஏற்பட்ட கைவினைஞர் குழுக்களின் நலன்கள் நாட்டுப்புறத்துக்கு எதிரிடையாக  உள்ள நகரத்தின் விசேசத் தேவைகள் ஆகியவற்றுக்குப் புதிய உறுப்புகல் அவசியமாக இருந்தன. ஆனால் இக் கைவினைஞர் குழுக்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு குலங்கள், பிராட்ரிகள், இனக்குழுவிலிருந்து வந்த நபர்கள் இருந்தார்கள், அவர்களில் அன்னியர்களும் இருந்தார்கள்.  எனவே, புதிய உறுப்புகள் குல அமைப்புக்கு வெளியே, அதனுடன் இணைகரமாக, அதேசமயத்தில் அதற்கு எதிராகவே உறுப்பெறுதல் அவசியமாயிற்று. மேலும் ஒவ்வொரு குலக் குழுவிலும் நலன்களுக்கு இடையில் மோதல் வெளிப்பட்டு வந்தது. பணக்காரகளையும், ஏழைகளையும் கந்துவட்டிக் காரர்களையும், கடனாளிகளையும் ஒரே குலமும், ஒரே இனக்குழுவும் பிணைத்துக் கொண்ட பொழுது இந்த மோதல் உச்ச நிலையை அடைந்தது. அத்துடன் பெருந்திரளாகப் புதிய குடிமக்களும் இருந்தார்கள், இவர்கள் குலச்சமூகங்களுக்கு அன்னியர்கள். ரோமாபுரியில் நடந்ததைப் போல இவர்கள் நாட்டில் ஒரு சக்தியாக மாற முடியும். மேலும், இரத்த உறவு முறையுள்ள குலங்களும் இனக்குழுக்களும் உட்கொள்ள முடியாத அளவுக்கு எண்ணிக்கையில் அதிகம் இருந்தார்கள். இந்த மக்கள் திரளினருக்கு எதிரே, குலச் சமூகங்கள் பிறரை விலக்கி வைத்துள்ள, சலுகையுரிமைகள் கொண்ட அமைப்புகளாக நின்றன. ஆதியில் இயற்கையாக வளர்ந்த ஜனநயகம் இப்போது வெறுக்கத்தக்கதொரு பிரபுத்துவ முறையாக மாறிவிட்டது. கடைசியாக, உள் பகைமைகளை அறிந்திராராத சமூகத்துக்கு உள்லிருந்து குல அமைப்பு தோன்றி வளர்ந்தது. அப்படிப்பட்ட சமுதாயத்துக்கு மட்டுமே அது பொருத்தமாக இருந்தது. பொது மக்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர வேறு கட்டாய அதிகாரம் அதனிடம் இருந்ததில்லை. ஆனால், இப்பொழுதோ ஒரு சமுதாயம் தோன்றி இருக்கிறது. அது தன்னுடைய பொருளாதார வாழ்க்கை நிலைமைகள் அனைத்தின் காரணமாகச் சுதந்திரமான மனிதர்களாகவும் அடிமைகளாகவும், சுர்ண்டுகின்ற பணக்காரர்களாகவும் சுரண்டப்படுகின்ற ஏழைகளாகவும் பிரிந்துவிட வேண்டியிருந்தது. அது இப் பகைமைகளை சமரசப் படுத்த முடியாதிருந்தது மட்டுமல்ல, அவற்றை மென்மேலும் தீவிரப் படுத்த வேண்டியிருந்தது. இந்த வர்க்கங்கள் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கின்ற வர்க்கங்களுக்கு அப்பால் நிற்பதாக வெளியில் காட்டிக் கொண்டு, அவற்றின் பகிரங்கமான சண்டையை ஒடுக்கி அதிகமாகப் போனால், பொருளாதாரத் துறையில் மட்டும், சட்ட வடிவம் என்று சொல்லிக் கொள்ளப் படுகின்ற ரீதியில் வர்க்கப் போராட்டத்தை அனுமதிக்கும். குல அமைப்பு காலங்கடந்ததாகி விட்டது. உழைப்புப் பிரிவினையும் அதனால் சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிந்த விளைவும் அந்தக் குல அமைப்பை உடைத்து விட்டன. அதனிடத்தில் அரசு வந்தது.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

 1. மாமேதை ஏங்கல்ஸ்.
 2. 1884 ல் எழுதிய முன்னுரை
 3. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
 4. பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2
 5. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாச்சாரக் கட்டங்கள்
 6. குடும்பம் – 1
 7. குடும்பம் – 2
 8. குடும்பம் – 3
 9. குடும்பம் – 4
 10. குடும்பம் – 5
 11. குடும்பம் – 6
 12. குடும்பம் – 7
 13. குடும்பம் – 8
 14. குடும்பம் – 9
 15. இராகோஸ் குலம் 1
 16. இராகோஸ் குலம் 2
 17. கிரேக்க குலம் 1
 18. கிரேக்க குலம் 2
 19. அதீனிய அரசின் உதயம் 1
 20. அதீனிய அரசின் உதயம் 2
 21. அதீனிய அரசின் உதயம் 3
 22. ரோமாபுரியில் குலமும் அரசும் 1
 23. ரோமாபுரியில் குலமும் அரசும் 2
 24. கெல்டுகள், ஜெர்மானியர்கள் குல அமைப்பு1
 25. கெல்டுகள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 2
 26. கெல்டுக்ள் ஜெர்மானியர்கள் குல அமைப்பு 3
 27. ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1
 28. ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2
 29. அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் 1

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s