எது சைத்தானின் படை? 1

கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு

செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா என்றொரு கட்டுரைத் தொடர் வெளிவந்தது. அதற்கு மறுப்புரையாக “விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி” என்ற பெயரிலான கட்டுரைத் தொடர் ஒன்றும் செங்கொடியில் வெளிவந்தது. உணர்வு இதழின் தொடர் கிடைக்காததால், பத்து தொடருக்கு மேல் அது வெளிவரவில்லை. உணர்வு தொடரைப் போலவே இந்தப் பதிவும் கம்யூனிசத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டிருக்கிறது. ஆக, கம்யூனிசத்தின் ஒப்பிலாத் தன்மையை இஸ்லாமியர்களிடம் விளக்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என எண்ணியதன் விளைவே, இந்தப் பதிவு. இது செங்கொடியிலும், வலையொளியிலும் வெளியாவதுடன், அவர்களுக்கும் தெரிவிக்கப்படும். அவர்கள் பதிலளிக்க முன் வந்தால் அதை மீளாய்வு செய்யவும், தேவைப்பட்டால் விவாதமாக கொண்டு செல்லவும் இது வழி சமைக்கும்.

சைத்தானின் படை எனும் தலைப்பில் அவர்கள் கம்யூனிசத்தை மட்டுமல்ல, மதச்சார்பின்மை, தேசியவாதம் உள்ளிட்ட பலதையும் விலக்கி வைக்குமாறு இஸ்லாமியர்களிடம் கோருகிறார்கள். அந்தத் தொடரின் ஐந்தாவது பகுதியாகத் தான் கம்யூனிசம் வருகிறது. அவர்கள் ஒரே பதிவில், சரியாகச் சொன்னால் 14 நிமிடத்தில் கம்யூனிசம் குறித்த தலைப்பை முடித்து விடுகிறார்கள். ஆனால் அதற்கான பதிலை, விளக்கத்தை தருவதற்கு 14 நிமிடம் போதாது. எனவே இது சில பதிவுகளாக வெளிவருவது தவிர்க்க முடியாததாகிறது.

முதலில், இஸ்லாம் போன்ற மதங்களை கம்யூனிசத்துடன் ஒப்பிட முடியுமா? இஸ்லாம் என்பது ஒரு மதம். அது நம்பிக்கையை மட்டுமே சார்ந்தது. ஆனால் கம்யூனிசம் என்பது அறிவியல், சமூக அறிவியல், ஆய்வுகள், தரவுகள், சான்றுகளை உள்ளடக்கிய ஒன்று. ஆராய்ந்து தரவுகளுடன் சான்றுகளுடன் முன் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை, கற்பனையான, நம்பிக்கையை மட்டுமே சார்ந்து இயங்கும் ஒன்றுடன் ஒப்பிட முடியுமா? கற்பனையுடன் நடப்பை ஒப்பிட முடியுமா? பொய்யுடன் உண்மையை ஒப்பிட முடியுமா? வெற்று நீதி போதனையை அறிவியல் ஆய்வுகளுடன் ஒப்பிட முடியுமா? இஸ்லாத்தை, இஸ்லாம் போன்ற மதங்களை கம்யூனிசத்துடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஆனால், இப்படி ஒப்பிட முடியாது என்பதை புனிதத் தன்மை போன்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் புனிதம் என்று எதுவும் இல்லை. இரண்டின் தன்மைகளையும் எடுத்துக் காட்டுவதற்காகவே ஒப்பிட முடியாது என்று கூறப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள் எனும் நடப்பு நிலையால், ஒப்பிட்டு சீர்தூக்கி பார்ப்பது தேவையானதாக இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் இந்த ஒப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த காணொளியின் தொடக்கத்தில் கம்யூனிசம் குறித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். கம்யூனிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் பேசிக் கொண்டிருக்கையில் கம்யூனிசம் குறித்து படித்து வந்து பேசியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் பொய்களை விட குறை உண்மைகள் ஆபத்தானவை. எனவே, மிகமிகச் சுருக்கமாக கம்யூனிசம் குறித்து அறிமுகம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.

கம்யூனிசம் என்றால் பொதுவுடமை, தனியாட்களின் சொத்துகளை அரசு பிடுங்கி எடுத்துக் கொள்ளும் என்பதாகத் தான் பொதுவாக பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். இந்த தாவா குழுவினரும் அதற்கு விலக்கில்லை. ஆனால் அப்படியில்லை என்பதை மார்க்சும் ஏங்கல்சும், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். பொதுவுடமை தத்துவம் மார்க்சுடன் தொடங்கியதோ மார்க்ஸ் கண்டுபிடித்ததோ அல்ல. மனிதன் மனிதனாகத் தொடங்கிய காலத்திலிருந்தே (கம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமலேயே மனிதன் பொதுவுடமை சமுதாயமாகவே வாழ்ந்தான்) கம்யூனிசம் இருக்கிறது. பின்பு அந்த வாழ்க்கை முறையிலிருந்து மாறி பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஆட்பட்டு எல்லா விதமான துன்ப துயரங்களுக்கும் ஆட்பட்டு வாழ்வதற்கு பெரும் இழப்பிற்கும், துன்ப துயரங்களுக்கும் ஆளாகி விட்டான் மனிதன். இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான் மனிதன். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனிதன் சிந்தித்ததெல்லாம் உருத்திரண்டதால் தான் பொதுவுடமை தத்துவம் வடிவம் கொள்ளத் தொடங்கியது. மார்க்சுக்கு முன்னால் பலர் பல பெயர்களில் பொதுவுடமை குறித்து கனவு கண்டிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அவரவர்களின் கற்பனையாக இருந்தன. அதனை உட்டோபியன் கம்யூனிசம் என்பார்கள். அதாவது கற்பனாவாத கம்யூனிசம். மார்க்ஸ் தான் இதனை ஆய்வுக்கு உட்படுத்தி, பல அறிவியல் உண்மைகளின் அடிப்படையில், மனித வரலாற்றை பொருத்திப் பார்த்து முடிவுகளைக் கண்டறிந்து, மனிதன் நேற்று எப்படி இருந்தான், இன்று எப்படி இருக்கிறான், நாளை எப்படி இருக்க வேண்டும் என்று அரிவியல் தரவுகளுடன் முன் வைத்தார். அதாவது, மார்க்ஸ் தனக்கு முன்பு இருந்த உட்டோபியன் கம்யூனிசத்தை அறிவியல் கம்யூனிசமாக மாற்றினார். இப்போதும் அவர் கொடுத்ததை அப்படியே வேதம் போல் பெயர்த்து பொருத்திப் பார்க்காமல், அந்தந்த நாட்டு வரலாற்று தரவுகளுடன் இணைத்து சோதித்துப் பார்த்து முடிவுகளை வந்தடைய வேண்டும் என்பதே கம்யூனிசம். மார்க்ஸ் செய்ய ஆய்வுகள் அடிப்படையானவை அதைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக அதை மேம்படுத்த வேண்டும் என்பதே கம்யூனிசம்.

தத்துவ அடிப்படையில் கூறினால், கம்யூனிசம் என்பது இரண்டு தூண்களின் மேல் நிற்கிறது. அவை 1. இயங்கியல் பொருள்முதல் வாதம், 2. வரலாற்றியல் பொருள்முதல் வாதம். தொடர்ந்து வந்து கொண்டிருந்த உலகின் தத்துவ வரலாற்றில் பாயர்பாக் எனும் தத்துவ அறிஞரின் இயங்கியல் கொள்கையிலிருந்த தவறுகளைக் களைந்து மேம்படுத்தியும்; ஹெகல் எனும் தத்துவ அறிஞரின் பொருள்முதல் வாத கொள்கையிலிருந்த சரியானவைகளை எடுத்துக் கொண்டு அதை தலைகீழானதாக மாற்றியும்; இரண்டையும் இணைத்துத் தான் மார்க்ஸ் தன்னுடைய இயங்கியல் பொருள்முதல் வாத கொள்கையை அறிமுகம் செய்தார். அந்த இயங்கியல் பொருள் முதவாதத்தை, அதுவரையிலான மனித வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை உருவாக்கினார். தத்துவத்தை கண்டடைந்தால் மட்டும் போதுமா? மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார், “இதுவரை இருந்த தத்துவ மேதைகள் செய்தது எல்லாம் இந்த உலகை வியாக்கியானம் செய்தது தான். ஆனால் தேவையோ இந்த உலகை மாற்றியமைப்பது”. ஆகவே, இந்த இரண்டையும் நடைமுறைப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கையே கம்யூனிசம். கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்த தேவையான திட்டமிடல்களைச் செய்வதற்காகன அமைப்பே கம்யூனிஸ்ட் கட்சி. உலகமெங்கும் இருக்கும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.

இது கம்யூனிசம் குறித்த எளிய அறிமுகம் மட்டுமே. தாவா குழுவினரின் அந்த காணொளியின் மூலம் கம்யூனிசம் குறித்து அறிந்து கொள்ள முற்படும் ஒருவரால், ஏற்கனவே நடப்பில் இருக்கும் அவதூறுகளைத் தாண்டி எதுவும் புரிந்து கொள்ள முடியாததுடன், குழப்பமும் ஏற்படும் என்பதால் இந்த எளிய விளக்கம். விரிவாக புரிந்து கொள்ள விரும்புவோர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதற்குறிய விளக்கமோ, தேவைப்படின் நூல்களோ அனுப்பி வைக்கப்படும்.

கம்யூனிசம் குறித்த பொதுவான விளக்கம் தவிர்த்து, தாவா குழுவினரின் கம்யூனிச அறிமுகத்தில் இடம்பெற்றிருந்த சில தவறான கருத்துகளுக்கான விளக்கத்தை பார்க்கலாம்.

புரட்சியில் வென்று ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்து விடுகிறது என்று கொள்வோம். உடனேயே அந்த நாடு கம்யூனிசத்துக்குள் நுழைந்து விட்டது என்பது பொருளல்ல. கம்யூனிசம் என்பது மிக உயரிய ஓர் இலக்கு. ஒரு தனி நாட்டில் கம்யூனிசம் ஏற்பட முடியாது. ஒரு தனி நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அங்கு சோசலிச அரசு பொறுப்பேற்கிறது என்பது மட்டுமே பொருள். சோசலிசம் என்பது கம்யூனிசமல்ல. இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்றால், தற்போது நடப்பில் இருப்பது முதலாளித்துவம், கம்யூனிசம் என்பது மனித குலம் சென்றடைய வேண்டிய மிக உயரிய ஓர் இலக்கு. இந்த இரண்டுக்கும் இடையில் இருப்பது தான் சோசலிசம். அதாவது முதலாளித்துவ அரசை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சோசலிச அரசு அமர்கிறது. அந்த சோசலிச அரசு கம்யூனிசத்தை நோக்கி செல்வதற்கான வேலைகளை தொடங்கும். சோசலிச அரசின் முதன்மையான வேலை, அதுவரை இருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை உழைக்கும் மக்களுக்கு இழப்போ, இடையூறோ இல்லாமல் படிப்படியாக சோசலிச உற்பத்தி முறைக்கு மாற்றுவது தான். அதாவது, முதலாளித்துவ உற்பத்தி முறை எனும் சமூக உற்பத்தி, தனியாள் பலனேற்பு என்பதை மாற்றி சமூக உற்பத்தி, சமூக பலனேற்பு என்று மாற்ற வேண்டும். இதன் பிறகு அனைத்து விதமான சுரண்டலுக்கும் முடிவு கட்டி, அதன் மூலம் தனியுடமையினால் மக்களிடம் ஏற்பட்டிருந்த எல்லாவித தீய எண்ணங்களுக்கும் இடமில்லாமல் செய்து, அரசே இல்லாத நிலையை நோக்கி பயணிப்பதாகும். ஆம் கம்யூனிசம் என்பது அரசே இல்லாத நிலை. இதை புரிந்து கொண்டால் தாவா குழுவினர் கம்யூனிசத்தின் இயலாமையாக காட்டியிருக்கும் எதுவும் இல்லாமல் போகும்.

கவனிக்கவும் ஒரே உலக அரசை உருவாக்க வேண்டும் என்பது கம்யூனிசத்தின் நோக்கமல்ல. அரசு என்ற ஒன்று இல்லாமலேயே உலகையும் இயற்கையையும், சமூகத்தையும் பாதுகாத்து பங்களித்து வாழும் மிக்குயர் வாழ்வையே கம்யூனிசம் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இதை ஒரே உலக அரசை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கம்யூனிசத்தின் குறிக்கோள் என புரிந்து கொள்வது பிழையானது.

மக்களுக்கு என எதுவும் சொந்தமில்லாமல் அனைத்துக்கும் அரசை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு மக்களை தள்ளுவது கம்யூனிசத்தின் நோக்கமா? திண்ணமாக இல்லை. மாறாக, இந்த முதலாளித்துவ சமூகத்தில் அனைத்து வளங்களையும் தனதாக்கிக் கொண்டு எந்த வசதியும் வாய்ப்பும் இல்லாமல் வீதியில் தள்ளப்படும் மக்களுக்கு உணவு, உறைவிடம், குழந்தை வளர்ப்பு என்று மக்கள் வாழ்வதற்கான இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அரசே செய்து கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக மக்களிடமிருந்து அவர்களுக்கு தெரிந்த உழைப்பை பெற்றுக் கொள்கிறது. அதாவது அனைவருக்கும் அவரவர் தகுதிக் கேற்ப வேலை வழங்கும் பொறுப்பை சோசலிச அரசு கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கான எந்தப் பொறுப்பையும் ஒரு முதலாளித்துவ அரசு ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக எல்லா விதத்திலும் அவன் உழைப்பை சுரண்டுகிறது. ஆனால் சோசலிச அரசோ உணவு, வீடு, குழந்தை வளர்ப்பு, அவர்களுக்கான கல்வி, பின்னர் அவர்களுக்கு வேலை என அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்றவுடன் ஏன் கம்யூனிச கொள்கைகளை அமல்படுத்த முடியவில்லை? என்ற கேள்வியை மேற்கண்ட புரிதல்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கம்யூனிசம் என்பது உயரிய இலக்கு, சோசலிச அரசு சோவியத் யூனியனில் என்ன செய்தது என்பதை அன்றைய முதலாளித்துவ அரசுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், விவரம் புரியும். பொதுவுடமை என்பது தனி மனிதனுக்கு சொத்து என எதுவும் இல்லாமல் எல்லாம் அரசுக்கு சொந்தம் என்ற நிலை தானே. பின் ஏன் அதிலிருந்து முரண்பட்டு சோவியத் யூனியனில் மக்களுக்கு வாரிசுரிமையின் அடிப்படையில் சொத்து பிரிவினை சட்டம் கொண்டுவந்தார்கள்? என்றும் கேட்கப்படுகிறது. ஏனென்றால், அங்கு இருந்தது சோசலிசம் தான், கம்யூனிசம் அல்ல. சோசலிசத்துக்கு என்னென்ன செயல்பாடுகள் வரம்புகள் உண்டோ அந்தப் பாதையில் தான் அது பயணிக்கும்.

அதேபோல முதலாளித்துவ கொடுமைகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும் எனும் உணர்ச்சியிலிருந்து தான் கம்யூனிசம் பிறந்தது, சீரிய சிந்தனையிலிருந்தல்ல எனும் தாவா குழுவினரின் முடிவையும் கம்யூனிசம் குறித்து போதுமான புரிதல் இல்லாமையால் ஏற்பட்ட முடிவு என்று தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தில் பார்த்தபடி, பல்லாண்டு காலமாக வளர்ந்து வந்த தத்துவ ஞானங்களை தொடர்ந்து மேம்படுத்தியதன் விளைவாக மக்களின் துயரங்களுக்கான காரணம், கடந்து வந்த வரலாறு, அதை தீர்க்கும் அறிவியல் அடிப்படையிலான திட்ட வழி என அதுவரை உலகில் இருந்த எந்த கொள்கை கோட்பாடுகளையும் விட மிகமிகச் சிறப்பாக அமைந்தது தான் கம்யூனிசம். அவ்வாறான அறிவியல் ஆய்வுகளின், தத்துவ செழுமைகளின் வழியே வந்த கம்யூனிசக் கோட்பாடுகளை பிழையாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட மயக்கம் தான் தாவா குழுவினரிடம் கேள்விகளாக, முடிவுகளாக வெளிப்படுகிறது.

இனி தொடர்ந்து வரும் பதிவுகளில் கம்யூனிசம் குறித்த தவறான புரிதல்களை மட்டுமல்லாது இஸ்லாம் குறித்த போதாமைகளையும் விளக்குவோம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

கேட்பொலியாக கேட்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s