எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து அலசலாம்.

ஈழ அரசியல் என்பதை தமிழ்நாட்டில் சில கட்சிகள் தங்களின் இருப்புக்கான ஒரே நிரலாக கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு அது வாக்கு வங்கிக்கான மதிப்பை இழந்து பல காலம் ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சிகள் தங்களின் வசதிக்காக மறந்து போக விரும்புகின்றன. இந்தச் சிக்கலில் தான் எழுவர் விடுதலை சிக்குண்டு இருக்கிறது. மற்றப்படி தனி ஈழ கோரிக்கை எப்படி இரத்தத்தில் மூழ்கடித்து முடித்து வைக்கப்பட்டது? அதில் உள்ளார்ந்து இருக்கும் இலங்கை, இந்திய, பன்னாட்டு வலைப் பின்னல்களையும், ஏகாதிபத்திய நலன்களையும் நேர்மையாக அலசவோ மீளாய்வு செய்யவோ யாருக்கும், அதாவது எந்தக் கட்சிக்கும் இங்கு விருப்பமே இல்லை.

எழுவரின் விடுதலை ஏன் இவ்வளவு சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது? முதலில், விடுதலைக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன? முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக அவர்கள் சிறைகளில் வாடுகிறார்கள் எனும் இரக்க உணர்வைத் தவிர வேறு எதுவும் முன்வைக்கப்படுவதே இல்லை. தவிரவும், அவ்வாறு முன்வைக்கப்பட்டால் அது அவர்களின் விடுதலையை இன்னும் தள்ளிப்போடும் எனும் அச்சமும் காட்டப்படுகிறது. மொத்தத்தில் எதாவது ஒரு வகையில் விடுதலை செய்து விடுங்கள் அதைக் கொண்டு நாங்கள் இன்னும் சில காலம் தமிழ்நாட்டு அரசியலை ஈர்ப்புக் கவர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறோம் எனும் ஏக்கமே அனைத்துக் கட்சிகளிடமும் இருக்கிறது. விடுதலையை ஏற்கும் கட்சிகள் என்றாலும் விடுதலையை எதிர்க்கும் கட்சிகள் என்றாலும் இது ஒன்றே நிலைப்பாடாக இருக்கிறது.

எழுவரின் விடுதலை ஏன் இவ்வளவு சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது? கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும், மனைவி சோனியா காந்தியும், அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு மறுப்பு ஒன்றும் இல்லை என்று எப்போதோ சொல்லி விட்டார்கள். நீதி மன்றமும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் போதே மாநில அரசு விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என்று கூறி விட்டது. ஆனாலும் இந்தச் சிக்கல் மாநில ஆளுனர், குடியரசுத் தலைவர் என்று சுற்றி விடப்படுகிறது. உண்மை என்னவென்றால், இருவருமே அமைச்சரவையின் முடிவை மறுதலிக்க சட்ட அடிப்படையிலேயே உரிமையற்றவர்கள். குடியரசுத் தலைவர் அல்லது ஆளுனருக்கு ஒரு வரைவு அனுப்பப்பட்டால், அதில் ஐயம் இருந்தால் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் மீண்டும் அதை அமைச்சரவை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

அடுத்து, ஒன்றிய அரசு விசாரித்த வழக்கில் அதாவது சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஒரு வழக்கு விசாரிக்கப்படுகையில் மட்டும் தான் சிபிஐ கைகளில் இருக்கும். அது நீதி மன்றங்களில் வைக்கப்படுவதுடன் சிபிஐயின் வேலை முடிந்து விடுகிறது. அதை ஏற்பதும் மறுப்பதும் நீதி மன்றத்தின் பொறுப்பு. நீதி மன்றம் ஏற்று அல்லது மறுத்து ஒரு தீர்ப்பை வழங்கி விட்ட பிறகு நீதி மன்றமே கூட அந்த வழக்கிலிருந்து விலகிப் போய் விடுகிறது. அதன் பின்பு சிறைத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசின் கீழ் தான் அந்த வழக்கு இருக்கும், அதாவது, அந்தக் கைதியின் பொறுப்பு முழுக்க முழுக்க மாநில அரசைச் சேர்ந்தது. அந்தக் கைதியை விடுவிக்க வேண்டுமென்றால், அது மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது தானே தவிர ஒன்றிய அரசுக்கோ ஆளுனருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அதில் ஒரு பங்கும் இல்லை. வேண்டுமானால் சிபிஐ விசாரித்த வழக்கு எனும் அடிப்படையில் கருத்து கேட்கலாம். ஆனால், ஒன்றிய அரசு கூறும் கருத்தை அப்படியே மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

காங்கிரஸ் கட்சிக்கு – கொல்லப்பட்டவர் அந்தக் கட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் – இந்த வழக்குடன் தொடர்பு இருக்கிறது என்பதால் அது எழுவர் விடுதலையை எதிர்க்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பாஜக வும் இந்த விடுதலையை எதிர்க்கிறதே ஏன்? கொல்லப்படும் போது ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருக்கவில்லை என்பதால் பிரதமர் கொலை வழக்கு எனும் அடிப்படையில் தற்போதைய ஒன்றிய ஆளும் கட்சி  தலையீடு செய்கிறது என்று கூட எடுத்துக் கொள்ள முடியாது. பின் ஏன்?

எழுவர் விடுதலை எனும் குரல் ஒலிக்கத் தொடங்கிய அன்றிலிருந்து இன்று வரை எழுவர் விடுதலையை ஆதரிக்கும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தான் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், விடுதலை மட்டும் நடக்கவே இல்லை என்றால் அதன் பின்னிருக்கும் காரணம் என்ன?

இவைகளெல்லாம் மெய்யாகவே அவர்களுக்கும் நடந்துவிட்ட ராஜிவ் காந்தி கொலைக்கும் தொடர்பு இருக்கிறது எனும் கோணத்தின் பார்வைகள். ஆனால் இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது மிகமிக திசை திருப்பப்பட்ட, திட்டமிட்டு இலக்கை முடிவு செய்த பின்பு நடத்தப்பட்ட விசாரணை என்பது அப்பட்டமான ஒன்று. வழக்கை விசாரித்த உயர் அலுவலர்கள் ஆகட்டும், ஒன்றிய, மாநில அரசுகளாகட்டும், இன்னும் அந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆணையங்கள் ஆகட்டும் எதுவுமே இந்த வழக்கில் இருக்கும் அடிப்படையான ஐயங்கள் குறித்து விளக்கமளிக்க ஆயத்தமாக இல்லை, கனத்த அமைதி இன்றுவரை நீடிக்கிறது. குறிப்பாக இந்த எழுவரில், அதிலும் குறிப்பாக பேரறிவாளனின் வழக்கில் நிறைய மோசடிகள் நடந்திருக்கின்றன (எடுத்துக்காட்டாக வாக்குமூலத்தில் செய்யப்பட்ட திருத்தம்: கூறாததை சேர்த்தது, கூறியதை விட்டுவிட்டது) என்று அதன் விசாரணை உயர் அலுவலரே ஒப்புக் கொண்டது என இந்த வழக்கின் நம்பத்தன்மையில் ஏராளமான சிதைவுகள் இருக்கின்றன.

இவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தூக்குத் தண்டனை, அது குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை, என ஒட்டு மொத்தமாக முப்பது ஆண்டுகள் கடந்து விட்டது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நினைத்தால் தண்டனை நீக்கம் செய்து விடுவித்து விட முடியும். அப்படி ஆயிரக் கணக்கான தண்டனை கைதிகள் அண்ணா பிறந்த நாள், காமராஜர் பிறந்த நாட்களின் போது நன்னடத்தை என்று கூறி விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் எழுவர் விடுதலை என்றால் மட்டும் அது சிக்கல் நிறைந்ததாகி விடுகிறது. என்றால், இங்கு சிக்கல் சட்டத்திலோ நடைமுறையிலோ இல்லை என்று தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கோடு தொடர்புடைய பலர் கொல்லப்பட்டு விட்டார்கள். மீதமுள்ள எழுவர் அன்றிலிருந்து இன்று வரை சிறைகளில் இருக்கிறார்கள். மிக விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகளும் ஐயங்களும் இருக்கின்றன என்பதையெல்லாம் ஒன்றிணைத்து பார்க்கும் போது; ஒன்றிய, மாநில அரசுகளையும் மிகைத்த ஆற்றல் ஒன்று இவர்களுக்கு ஆணையிட்டுக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. இதுவும் அன்றிலிருந்து இன்று வரை அலுவலற்ற முறையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான்.

எனவே, எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தங்கள் குரலை மாற்றியாக வேண்டும். எழுவர் விடுதலை என்பது கருணையல்ல, இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான உரிமை. இதை உரக்கச் சொல்லுங்கள் அல்லது இதிலுள்ள பன்னாட்டு சதி குறித்து விசாரிக்க கோருங்கள். இதை செய்ய முடியாது என்றால் அமைதியாக விட்டுவிடுங்கள். மாறாக, ஒரு சடங்கைப் போல் ஆண்டுக்கு ஒருமுறை விடுதலை, விடுதலை என்று கூவுவதை மட்டும் நிகழ்ச்சி நிரல் ஆக்கிக் கொண்டிருக்காதீர்கள்.

இந்த எழுவர் விடுதலை மட்டுமல்ல, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் அநீதியாகவே பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும். இவர்களை எல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு எழுவர் விடுதலை என்று மட்டும் பேசுவது அறுவறுப்பானது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

கேட்பொலியாக கேட்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s