இதிலிருந்து படிப்பினை பெறலாமா?

எது சைத்தானின் படை? பகுதி 2

‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ எனும் இஸ்லாமிய பரப்புரை வலையொளி கம்யூனிஸத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. மட்டுமல்லாமல், அதில் இஸ்லாம் தான் உயர்ந்தது என கூறப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். அதற்கு மறுப்பாக கடந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பதிவான இதில், “உழைக்காதவர்கள் உண்ணத் தகுதியில்லாதவர்கள் என்றால், உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?” என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது தானே என்று தோன்றலாம். வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்ற உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வது? பட்டினியால் மடிந்து விட வேண்டுமா? எனும் கேள்வி பொருள் பொதிந்தது தான். ஆனால், இந்தக் கேள்வியின் பொருள் இந்த முதலாளித்துவ முதலாளித்துவ உற்பத்தி முறையில், அதாவது இந்த நடப்பு முதலாளித்துவ சமூகத்தில் இருந்து தான் அந்தக் கேள்வியின் பொருள் பிறக்கிறதேயன்றி வேறு எங்கிருந்தும் அல்ல. ஆகையால் இந்தக் கேள்விக்கு பதில் கூற வேண்டிய முழு பொறுப்பும் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஆதரிப்பவர்களுக்கே உள்ளது. என்றாலும் இந்தக் கேள்விக்கான பதிலை விரிவாக பார்க்கலாம்.

உழைக்க இயலாதவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எனும் உணர்வு மனிதர்களுக்கு நாகரீக காலகட்டத்தின் தொடக்கத்திலிருந்தே உண்டு. அவ்வாறு பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. ஆனால் சற்றேறக் குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் முதியோர் இல்லம் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். உழைக்க இயலாதவர்களை பாதுகாக்க வேண்டும் எனும் இயல்பான உணர்வு, தனி ஒரு குடும்பத்தால் ஏற்க முடியாமல் தள்ளப்படுவதும், அது ஒரு சேவையாக ஏற்பட்டதும் முதலாளித்துவ சமூகத்தில் தான். அதனால் தான் உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வது எனும் பதைப்பு ஏற்படுகிறது.

நடப்பு முதலாளித்துவ உலகிலிருந்து எடுத்துக்காட்டாய் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கணவன் மனைவி, அவர்களின் குழந்தைகள், கணவனின் பெற்றோர் கொண்ட குடும்பம் அது. இதில் கணவன் மட்டுமே உழைப்பில் ஈடுபடுகிறான். ஏனைய அனைவரும் கணவனுடைய உழைப்பிலிருந்து உண்பவர்கள். பெண்களும் சில இடங்களில் வேலைக்குச் செல்கிறார்கள் என்றாலும் குடும்பத்தில் தீர்மானிப்பவனாக கணவனே இருக்கிறான். வேலை செய்பவர்களுக்கு, உழைப்புக் கருவி என எதுவும் சொந்தமில்லை. பழைய நிலத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறையில் உழைப்பு கருவிகளான நிலம், ஏர் உள்ளிட்ட உழு கருவிகள், விதை, உரம் என அனைத்தும் உழைப்பவனுக்குச் சொந்தம் (இதனுள் நுணுக்கமாக செல்ல வேண்டாம். புரிதலுக்காக இப்படியே எடுத்துக் கொள்வோம்). ஆனால் இன்றைய முதலாளித்துவ உலகில் உழைப்பைச் செலுத்திவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு திரும்பிவிட வேண்டும், எந்தக் கருவியும் அவனுக்குச் சொந்தமில்லை. என்பதால் உழைப்பிலிருந்து, அதன் விளை பொருளிலிருந்து உழைப்பவன் விலகி நிற்கிறான். இதனால் உழைப்பின் மீது ஏற்படும் இயல்பான சலிப்பு குடும்பத்தின் பொருட்டு பொருத்துக் கொள்ள வேண்டியதாகிறது. ஏனென்றால் உழைப்புக்கு வெளியே சமூகத்தில் வேலையில்லாமல் நிறைய பேர் இருப்பதனால் அவ்வளவு எளிதாக இருக்கும் வேலையை விட்டுவிட முடியாது, விருப்பமான இன்னொரு வேலைக்கு சென்றுவிடவும் முடியாது. இப்படி கட்டாயமாக குடும்பத்தின் பொருட்டு, உழைக்க இயலாத பெற்றோருக்கு உணவிட வேண்டிய கட்டாயம் இருப்பதன் பொருட்டு கிடைத்த வேலையில் ஒட்டி இருந்தாக வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் தான் எப்போது ஓய்வு பெறுவோம் எனும் ஆவல் மேலிடுகிறது. அதாவது ஓய்வு என்பது வேலை செய்யாமல் சும்மா இருப்பது எனும் பொருள் வருகிறது. இது தான் உழைக்க இயலாதவர்கள் எனும் பொருளையே உற்பத்தி செய்கிறது.

சோசலிச உற்பத்தி முறை கொண்ட ஒரு நாட்டில் இந்த நிலை இருக்காது. அங்கு ஓய்வு என்பதன் பொருள் சமூகத்துக்காக சிந்தித்தல், சமூகத்துக்காக வேலை செய்தல் என்பதாக இருக்கும். முதலில் வேலையில்லாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேலை கொடுப்பது சோசலிச அரசின் பொறுப்பு. மொத்த மக்கட் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியாக இருக்கும் பெண்களும் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். குழந்தைகளை வளர்க்கும், கல்வி கற்பிக்கும் பொறுப்பும், குடும்ப வேலைகளான உணவு தயாரித்தல், வீட்டு பராமரிப்பு உட்பட பெண்கள் ஈடுபடும் அனைத்து பொறுப்புகளும் அரசே மேற்கொள்ளும் என்பதால், பெண்களும் உற்பத்தி வேலைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இரட்டைச் சுமையாக இருக்காது. இன்னொரு பக்கம் அறிவியல் வளர்ச்சியின் பலன் உழைப்பவர்களுக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒரு தொழிற்சாலையில் 100 பேர் வேலை செய்வதாகக் கொள்வோம். அங்கு புதிதாக ஓர் இயந்திரம் கொண்டு வரப்படுகிறது என்றால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் அங்கு 10 பேர் வேலை இழப்பார்கள். முதலாளிக்கு 10 பேருக்கு கொடுக்கும் சம்பளம் மிச்சமாகும். அதாவது அறிவியல் கண்டுபிடிப்பின் பலன் முதலாளிக்குச் செல்லுமே தவிர தொழிலாளிக்குச் செல்லாது. மாறாக சோசலிச உற்பத்தி முறை என்றால் இயந்திர உற்பத்தியின் மூலம் மிச்சமாகும் நேரம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது இயந்திர வருகைக்கு முன்னால் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்த்தார்கள் என்றால் இயந்திரம் வந்த பிறகு தொழிலாளர்கள் ஏழு மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என மாற்றப்படும். தெளிவாகச் சொன்னால் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க, உழைப்போருக்கு வேலை நேரம் குறையும். ஆக, விருப்பமற்ற வேலையில் கட்டாயமாக நீடித்திருக்க வேண்டிய தேவையும், குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து ஒருவரே உழைக்க வேண்டிய தேவையும் இல்லாமல் ஆவதால், இன்னும் வேலை நேரமும் குறைவதால் ஓய்வு என்பது வேலையில்லாமல் அப்பாடா என்று சும்மா இருப்பதாக இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆவலாக வெளிப்படும். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் என யாவரும் சமூகத்திற்கு சுமையாக இருக்க மாட்டார்கள். மாறாக அவர்களால் இயன்ற எதையும் வேலையாக செய்யலாம் என்று ஆகும்.

இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ உலகில் வேலை என்பதன் பொருள் ஒரு பக்கம், தன்னுடைய குடும்பத்துக்காக விருப்பம் இல்லாத வேலையாக இருந்தாலும் ஈடுபட்டாக வேண்டும் என்பதுடன், மறுபக்கம், தன்னுடைய வேலை முதலாளிக்கு லாபம் ஈட்டிக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். சோசலிச உலகில் வேலை என்பதன் பொருள் ஒரு பக்கம் சலிப்பு இல்லாத உற்பத்தியாகவும் மறுபக்கம், எந்த குடும்ப சுமையும் இல்லாமல் வேலை நேரம் குறைந்து செல்வதாகவும் இருக்கும். இந்த வித்தியாசம் புரியாததால் தான்; வேலை என்றால் கடினமாக விருப்பமில்லாமல் ஈடுபடுவதான ஒன்றாக இருப்பதால் தான் வயதானவர்களும், மாற்றுத் திறனாளிகளும் அதை எப்படிச் செய்ய முடியும் எனும் பதைப்பு ஏற்படுகிறது.

சரி. தற்போதைய முதலாளித்துவ உலகில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வேலை செய்யாமல் தான் இருக்கிறார்களா? வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பேரக் குழந்தைகளை பராமரித்தல், சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்தல் போன்ற வேலைகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளும் இப்படித்தான். ஆனால் இவைகளை வேலைகளாக நாம் கருதுவதில்லை. ஆனால் சோசலிச சமுதாயத்தில் இது அவர்களுக்கான வேலையாக கருதப்படும்.

இப்போது சொல்லுங்கள் இரண்டில் எது சிறந்தது? வேலை செய்ய இயலாதவர்கள் என்ற பெயரில் அவர்களால் இயன்ற அத்தனை வேலைகளையும் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் இருப்பவர்கள் எனும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதா? அல்லது அவர்களால் எதைச் செய்ய முடியுமோ அதை வேலையாகச் செய்து சுயமரியாதையுடன் வாழ வைப்பதா? எது சிறந்தது?

இப்போது முதன்மையான கேள்விக்கு திரும்புவோம். மேற்கண்ட இந்த இரண்டு நிலைகளில் இஸ்லாம் எதை ஆதரிக்கிறது? ஐயத்துக்கு இடமே இல்லாமல் இஸ்லாம் முதலாளித்துவ முறையைத் தான் ஆதரிக்கிறது. ஆணே நிர்வகிப்பவனாக இருக்கிறான் என்கிறது குரான். ஆணைச் சார்ந்தவளாகவே பெண் இருக்கிறாள். மனைவி பெற்றோர் குழந்தைகள் உட்பட அனைத்துக்கும் கணவனே பொறுப்பு என்று தான் குரான், ஹதீஸ்கள் கூறுகின்றன. குடும்ப பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு உள்ளிட்ட எதையும் அரசு பொறுப்பேற்றுக் கொள்வதாக குரான், ஹதீஸ்களில் எங்கும் குறிப்பு இல்லை. எனவே, குரான் முதலாளித்துவ முறைக்கு நெருக்கமாகவே இருக்கிறது.

ஆகவே, முஸ்லீம்களே, ஏன் குரான் முதலாளித்துவ முறைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பது குறித்து சிந்தியுங்கள். குரான் தான் சரியானது என்று தான் நீங்கள் கூற விரும்புவீர்கள் என்பது தெரியும். ஆனால் எந்த அடிப்படையில் முதலாளித்துவ முறைக்கு நெருக்கமாக இருப்பது சரியானது என்று விளக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். கூடவே, மேற்கண்ட சோசலிச உற்பத்தி முறையின் சமூக நிலை குறித்து சிந்தியுங்கள். ஐயம் இருந்தால் இன்னும் மேலதிக விளக்கங்களுடன் விரிவாக பதிலளிக்கப்படும். இரண்டாவது பகுதியை முடிப்பதற்கு முன், குரானில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியத்தை உங்களை நோக்கி பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும், “இதிலிருந்து படிப்பினை பெறுவோர்கள் உண்டா?”

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

கேட்பொலியாக கேட்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s