
திமுக தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் சட்டமன்றக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்தக் கூட்டத்தின் ஆளுனர் உரையில் தமிழ்நாட்டு நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு ஆலோசனை கூறுவதற்காக ஐந்து பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்திக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மாற்றுக் கண்ணோட்டத்திலும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
திமுக பொறுப்பேற்ற பிறகு அது வெளியிடும் அறிவிப்புகளியெல்லாம் சிக்சர்களாக கருதி புழகமடையும் கூட்டம் ஒன்று இருக்கிறது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு வெளியில் இயல்பாக இப்படி ஒரு கூட்டம் இருப்பதாக தோன்றுகிறது. ஒரு வகையில் இது வரவேற்கத் தக்கதும் கூட. ஏனென்றால், இந்திய அரசியல் கட்சிகளில் திமுக அளவுக்கு அவதூறு செய்யப்பட்ட ஒரு கட்சி இல்லை என்றே சொல்லலாம். இன்று திமுகவுக்கு இருக்கும் இழிபெயர்களில் பெரும்பாலும் இட்டுக்கட்டி பழி சுமத்தப்பட்டவை என்றும் கூட சொல்லலாம். இந்த நிலை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சற்றே மாறியது. பெரும்பாலானோர் – புரட்சிகர மார்க்சிய அமைப்புகள் உட்பட – திமுகவுக்கு ஆதரவு நிலையெடுத்தனர். அத்நேரம், திமுக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இப்படி கண்மூடி விதந்தோதிக் கொண்டிருக்கக் கூடாது எனும் எச்சரிக்கையை பொருளாதார ஆலோசனைக் குழு குறித்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் மக்கள் இயக்கம் என்பதோ, அனில்களால் மின்தடை என்பதோ (இவை இரண்டும் வலிந்து உருவாக்கப்பட்ட பொருள் என்றாலும் கூட) எதிர்க்கப்பட்ட அளவுக்குக் கூட இந்த பொருளாதார ஆலோசனைக் குழு விமர்சிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பொருளாத ஆலோசனைக் குழு தீங்கானது.
ரகுராம்ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்ரமணியன், நாராயணன், ஜான் ட்ரெஸ் எனும் இந்த ஐவர் குழுவில் இருக்கும் அனைவருமே முதலாளித்துவ பொருளியல் வல்லுனர்கள். இந்த குழு குறித்து அறிந்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன. 1991ல் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி முதலாளித்துவ பொருளியல் வல்லுனராக இருந்த, உலக வங்கிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த மன்மோகன் சிங் திடீரென நிதியமைச்சர் ஆக்கப்பட்டார். பின் பத்தாண்டுகள் பிரதமராகவும் இருந்து விட்டார். இந்த பொருளாதார வல்லுனரால், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா அடைந்த பொருளாதார முன்னேற்றங்கள் என்ன? அரசு தரும் புள்ளிவிவரங்களுக்கும் மக்களின் நடைமுறை வாழ்வுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. 2019ம் ஆண்டு இந்தியா பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அதே ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி 5வது பெரிய நாடாக விளங்கியது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் எடுத்துக்காட்டு தான். இது போல் ஏராளம் இருக்கின்றன.
ரகுராம்ராஜன் சேமநல வங்கி (ரிசர்வ் வங்கி) ஆளுனராக இருந்த போது வாராக்கடன் தள்ளுபடி குறித்து மோடியுடன் மாறுபட்டதாக பேசப்பட்டது. அந்த முரண்பாட்டின் தன்மை என்ன? குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாராக்கடன் தள்ளுபடி அதிகரிக்கக் கூடாது என்பது தான் சிக்கலின் மையப் புள்ளியே தவிர வாராக்கடன் தள்ளுபடி வழங்கலாமா? கூடாதா? என்பதல்ல. வாராக்கடன் தள்ளுபடி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ரகுராம்ராஜனுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மாற்றுக் கருத்து இருந்திருந்தால் அவர் பொருளாதார வல்லுனராக இருந்திருக்கவே வாய்ப்பில்லை.
அரவிந்த் சுப்ரமணியன் பொருளாதார ஆலோசகராக இருக்கும் போது தான் பண மதிப்பிழப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதில் அரவிந்து சுப்ரமணியத்தின் பங்கு என்ன? பண மதிப்பிழப்பு என்பது அதன் எல்லா பக்கங்களிலும் தோல்வியைத் தழுவி வெகு மக்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போன ஒரு பொருளாதார நடவடிக்கை. இந்த பொருளாதார நடவடிக்கை குறித்து தற்போது அரவிந்த் சுப்ரமணியத்தின் கருத்து என்ன?
முன்னாள் நிதித்துறை செயலரான நாராயணன் 60களிலிருந்து நிதித்துறையில் பல பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். தற்போதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதி ஆலோசகராக இருந்து வருகிறார். இந்திய விவசாயத்தை ஈரத்துண்டை போட்டு கழுத்தறுத்த பசுமைப்புரட்சி எனும் திட்டம், வகுத்து செயல்படுத்தப்பட்ட காலத்தில் செயலராக இருந்த இவர் பசுமைப் புரட்சி குறித்து கொண்டிருந்த கருத்து என்ன? அதை எங்கேனும் பதிவு செய்திருக்கிறாரா? தற்போது பசுமைப் புரட்சி எனும் திட்டம் குறித்தோ, கடந்த 25 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது குறித்தோ இந்த நாராயணனின் கருத்து என்ன?
ஒரு பக்கம் அரசின் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை வதைத்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் எஸ்தர் டஃப்லோ, ஜான் ட்ரெஸ் போன்றோர் மடைமாற்றும் திட்டங்களை தயாரித்துக் கொண்டிருந்தனர். நூறு நாள் வேலைத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற திட்டங்கள், அரசின் மக்கள் விரோத திட்டங்களை, மக்கள் நடைமுறையில் புரிந்து கொண்டு எதிர்த்து விடக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்டவை. முதன்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி அரசு மக்களுக்கான திட்டங்கள் தீட்டுகிறது எனும் மயக்கத்தில் மக்களை ஆழ்த்துவதற்காக பயன்பட்டவர்கள் தான் இந்த வல்லுனர்கள். அதாவது அரசு மக்களை கழுத்தறுக்கும் போது ஏன் கொல்கிறீர்கள் என்று எதிர்த்து நிற்பதற்காக எழும் கோபத்தை மழுப்ப உங்கள் ரத்தத்தை துடைத்து விடுகிறோம், காயத்துக்கு மருந்திடுகிறோம் என்று கூறிக் கொண்டு வந்தவர்கள்.
இவர்களை இணைத்து குழுவாக்கி, இவர்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் அது எப்படி மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்? ஏற்கனவே தமிழ்நாடு 5.7 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் எப்படி கடன் வாங்குவது? கடன் வாங்கும் போது போடும் நிபந்தனைகளை மக்களை ஏமாற்றி நிறைவேற்றுவது எப்படி? என்பன போன்ற ஆலோசனைகள் தான் இவர்களால் தர முடியும். தருவார்கள்.
இவர்கள் உள்நாட்டு வல்லுனர்களா? வெளிநாட்டுக்காரர்களா? என்பதில் இல்லை பிரச்சனை. அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் மேலும் மக்களை ஒட்டாண்டிகளாக்கவே பயன்படும் என்பது தான் பிரச்சனை. திமுக ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று யாரும் எண்ணவில்லை, அது ஒரு முதலாளித்துவ கட்சி தான். என்றாலும், அது மோடியில் வேகத்தில் செல்லக்கூடாது என்பது தான் குறைந்த அளவிலான ஆவல். அது நடக்காது என்றால், பாசிச எதிர்ப்பு என்பதன் பொருள் பாசிச ஆதரவு என்பதாகவே முடியும்.
மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க