கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3

எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.

‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள் ஆட்சியில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்தினார்கள் எனும் பொருளில் அது கூறப்பட்டிருந்தது. தெளிவாகச் சொன்னால் கம்யூனிசத்தால் முடியாத ஒன்றை அன்றே இஸ்லாம் நடைமுறைப்படுத்தி விட்டது என்பதே அதன் உட்கிடை.

இதற்கு பதிலாக, கம்யூனிசம் சோசலிசம் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து முந்திய பகுதிகளில் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் இன்னும் நெருக்கமாக இதைப் பார்க்கலாம்.

முதலில் ரஷாதிய கலீபாக்கள் காலத்தில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்குப் பதில் ஹதீஸ்கள் என்பது மட்டும் தான். எல்லா ஹதீஸ்களுமா என்றொரு கேள்வியை எழுப்பினால், இல்லை சஹீஹ் சித்தாஹ் எனப்படும் ஆறு ஹதீஸ் தொகுப்புகள் மட்டும் தான் என்றொரு பதில் கிடைக்கும். சஹீஹ் சித்தாஹ் எப்போது தொகுக்கப்பட்டது? என்றொரு கேள்வியை எழுப்பினால், அப்பாஸிய கலீபாக்கள் காலத்தில் என்றொரு பதில் கிடைக்கும். அப்பாஸிய கலீபாக்கள் காலம் எப்போது? என்றொரு கேள்வியை எழுப்பினால் முகம்மது நபி இறந்து இருநூற்றைம்பது ஆண்டுகள் கழித்து என்றொரு பதில் கிடைக்கும். அதாவது ரஷாதிய கலீபாக்கள் ஆண்டு முடித்து அதன் பிறகு உமையாக்கள் ஆட்சி நடந்து முடிந்து அதன் பிறகு தான் அப்பாஸியர்கள் வருகிறார்கள்.

ஏன் ஹதீஸ்கள் குறித்து இப்படி கேள்விகள் எழுப்ப வேண்டியிருக்கிறது என்றால், அவைகளின் நம்பகத் தன்மை அந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதால் தான். ஷியாக்களின் ஹதீஸ் தொகுப்புகளில் பார்த்தால் அலீயைத் தவிர ஏனையை ரஷாதிய கலீபாக்கள் குறித்து சஹீஹ் சித்தாஹ்வுக்கு மாற்றமான கருத்துகள் பதியப்பட்டுள்ளன. ஷியாக்களின் அந்த ஹதீஸ்களை, ஸன்னிகளானா ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’சை உள்ளடக்கிய குழுவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்ல ஸன்னிகள் தொகுத்த ஹதீஸ்களான, சஹீஹ் சித்தாஹ்வை விட காலத்தால் முற்பட்ட தபரி, இப்னு இஷாக் போன்றோரின் தொகுப்புகளை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேற்கண்ட இந்த விவரங்களையெல்லாம் வைத்துக் கொண்டு, ‘அந்தக் கூற்றின்’ பொருள் என்ன என்று பார்த்தால், எங்கள் ஆட்சி நல்ல ஆட்சி என்று, அந்தக் கலீபாக்கள் மறைந்து தோராயமாக இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் தொகுத்து வைத்திருக்கும் ஹதீஸ்களில் எழுதி வைத்திருக்கிறோம், அதை நீங்கள் நம்ப வேண்டும் என்பது தான்.

வேறொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இஸ்லாம் எனும் கோட்பாடு உருவானதே முகம்மது நபி இறந்து இருநூற்றைம்பது ஆண்டுகள் கடந்த பின்னரே. முகம்மது நபியின் இறப்புக்குப் பிறகான முதல் இரண்டு நூற்றாண்டுகள் முகம்மது உருவாக்கிய அரசின் வாரிசுரிமை யாருக்கு எனும் போட்டி தான் இரத்த வரலாறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷாதிய கலீபாக்களில் அபூபக்கர் தவிர ஏனைய மூன்று கலீபாக்களும் கொல்லப்பட்டு இறந்தவர்கள் தான் என்பதை மீளாய்வு செய்து பார்க்க வேண்டும். இதற்கு வெளியே ஆட்சிப் பகுதியை விரிவு செய்ய நடந்த போர்கள். இத்தனை போர்களுக்கும், வாரிசுரிமைப் போட்டிகளுக்கும் மத்தியில், அன்றைய காலத்தில் உருவாகாமல் இருந்த இஸ்லாமிய கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக நம்ப வேண்டும் என்றால் .. .. ..? மன்னிக்கவும் மதம் பீடிக்காத யாருக்கும் அவ்வாறு நம்ப சாத்தியம் இல்லை.

இஸ்லாம் இறைவனால் உருவாக்கப்பட்டது, முகம்மது நபியின் காலத்திலேயே முழுமையடைந்து விட்டது என்று நம்புவோர்கள் மதவாத இஸ்லாத்தை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். வரலாற்று இஸ்லாத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே பொருள். வரலாற்று இஸ்லாத்தை புரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு அவர்கள் சான்றுகள் அடிப்படையில் பார்க்க வேண்டும். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பார்ப்பது போதாது.

இன்னொரு முதன்மையான விதயமும் இங்கு கவனிக்கத் தக்கது. இன்றைய இஸ்லாமியர்களில் பலருக்கு – ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ காணொளியை உருவாக்கியவர்களுக்குக் கூட – முகம்மது நபிக்கு முன்பு அந்தப் பகுதியில் அரசு என்ற ஒன்றே கிடையாது என்றும், முகம்மது தான் அங்கு புதிதாக அரசமைப்பை ஏற்படுத்தினார் என்றும், அவர் வணிக அரேபியர்களின் சார்பாக இருந்து வணிகர்கள் விவசாயிகள் நாடோடிகள் ஆகிய மூன்று பிரிவினரை ஒன்றிணைத்தார் என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் மன்னர்களைப் போல் மாட மாளிகைகளில் வாழவில்லை என்று இன்றும் பெருமையாய் கூறிக் கொண்டிருக்க முடிகிறது. தவிரவும் இஸ்லாம் குறித்த தரவுகள் அனைத்தும் ஏன் முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது? எனும் கேள்விக்கு பதில் தேடாத யாரும் உண்மைகளை கண்டடையவே முடியாது.

கம்யூனிச கண்ணோட்டத்தின் படி உலகின் வரலாறு அனைத்தும் ஆதிக்க வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளே. மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து அது ஆய்வு செய்யப்பட்டால் மட்டுமே உண்மைகள் புரியும். எடுத்துக்காட்டாக அசோகர் மரங்களை நட்டார், கரிகாலன் கல்லணை கட்டினார், ராஜராஜசோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என்று தான் வரலாற்று நிகழ்வுகள் இருக்குமே அல்லாது, மக்கள் எவ்வாறு இருந்தனர், அவர்கள் தங்களின் தேவைகளை என்ன உழைப்பில் ஈடுபட்டதன் மூலம், எவ்வாறு ஈடுகட்டிக் கொண்டனர்? மக்களுக்கும் அரசுக்குமான உறவு என்ன? என்பன போன்று எந்த வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்காது. இந்த அடிப்படையில் தான் ரஷாதிய கலீபாக்கள் குறித்த சஹீஹ் சித்தாஹ் தொகுப்பில் இருக்கும் ஹதீஸ்களையும் பார்க்க வேண்டும். அதிலும் தபரி, இப்னு இஷாக் போன்றோரின் ஹதீஸ் தொகுப்புகள் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? முகம்மது நபியின் குரான் ஏன் கொளுத்தப்பட்டது? என்பவைகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஷியாக்களின் ஹதீஸ் தொகுப்புகளில் ரஷாதிய கலீபாக்கள் குறித்து கூறப்பட்டிருப்பதை ஒதுக்கி வைத்து விடலாம். தபரி, இஷாக் போன்றோரின் தொகுப்புகளையும் ஒதுக்கி விடலாம். சஹீஹ் சித்தாஹ் என்று விதந்தோதப்படுவதில் முதன்மையான புஹாரியிலிருந்து சில ஹதீஸ்களை மட்டும் பார்க்கலாம். இந்த ஹதீஸ்களை பார்க்கும் அதேநேரத்தில், ரஷாதிய கலீபாக்களான அபூபக்கரும் உமரும் முகம்மது நபியின் கடைசி வேண்டுகோளை நேரடியாக மறுத்து நிராகரித்தவர்கள் என்பதையும், இன்னொரு ரஷாதிய கலீபாவான உஸ்மான் முகம்மதின் குரானை எரித்தவர் என்பதையும், இன்னொரு ரஷாதிய கலீபாவான அலீ தொழுகை குறித்து முகம்மது நபியையே கேலி கிண்டல் செய்தவர் என்பதையும், இவைகள் புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

புஹாரியில் 1399/1400 ஹதீஸாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹதீஸ், முகம்மது நபி மரணமடைந்த பிற்கான காலத்தில் அபூபக்கருக்கும் உமருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிலர் அரசுக்கு வரி கட்ட மறுக்கின்றனர், அதாவது ஜகாத் செலுத்த மறுக்கின்றனர். ஜகாத் செலுத்த மறுக்கும் அவர்கள் இறை மறுப்பாளர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களோடு போர் செய்வேன் என்று கோபப்படுகிறார் அபூபக்கர். அதற்கு உமர் முகம்மது நபி இப்படிக் கூறவில்லையே என்று மறுக்கிறார். மீண்டும் அபூபக்கர் தொழுகையும் ஜகாத்தும் ஒன்று தான் என்று வாதாடி உமரை ஏற்க வைக்கிறார். இந்த ஹதீஸிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்கள் ஏன் வரி கொடுக்க மறுத்தார்கள்? நாடோடி வாழ்வில் ஒட்டகங்கள் செல்வங்களாக கணக்கிட்டது அவர்களுக்கு உவப்பானது தானா? பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் போன்ற விவரங்கள் எதுவும் கிடைக்காது. இங்கு சிக்கலாக இருப்பது, வரி கொடுக்க மறுத்தது இஸ்லாத்தின் கொள்கைக்கு நேரானதா? மாறானதா? என்பது அல்ல. கொடுக்க மறுக்கும் நிலை அங்கு இருந்திருக்கிறது என்பதும், போர் செய்வது என்பது போன்ற கடுமையின் மூலமே மக்கள் வரி கட்டிக் கொண்டிருந்தார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? இந்த நிலைக்கும் சோசலிசத்தின் மக்கள் வாழ்வுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

அபூபக்கரின் ஆட்சியின் கீழ் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழ்ந்திருக்க முடியாது என்பதை புஹாரி 3447 விளக்குகிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறது அந்த ஹதீஸ். ஊன்றிப் பார்த்தால் அவர்கள் மதம் மாறியவர்கள் அல்ல, மீண்டும் மாறியவர்கள் என்பது புரியும். ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், மீண்டும் ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாத்திலிருந்து மாறி இருக்கிறார்கள். என்ன அந்த ‘ஏதோ ஒரு காரணம்’? அந்த ஏதோ ஒரு காரணம் சமூகத்தில் இருந்திருக்கிறது அல்லவா? அது என்ன மாதிரியான விளைவை சமூகத்தில் ஏற்படுத்தியது? என்று ஏதேனும் ஒரு பதிவு உண்டா? பின் எப்படி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்க முடியும்? ஆனால் சோவியத் யூனியனில் மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றவும் தேவைப்பட்டால் மாறிக் கொள்ளவும், இன்னும் தேவைப்பட்டால் மதங்களை உதறிக் கொள்ளவும் செய்தார்கள். ஏன் முதலாளித்துவ போக்கினர் கூட இருந்தார்கள். சோசலிசமும் இஸ்லாமும் ஒன்றாக முடியுமா?

மிக நீண்ட ஹதீஸ்களில் ஒன்றான புஹாரி 3700 உமர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை விவரிக்கிறது. அதில் விவாதிக்கப்படும் காரணங்களில் ஒன்று அதிகமான வரி விதிப்பு. மத ரீதியாக இதற்கு என்ன காரணங்களை வழுவமைதிக்காக கூறிக் கொண்டாலும் உயிரைக் கொல்லும் அளவுக்கு வரி விதிப்பு அதிகமாய் இருந்திருக்கிறது என்பது தான் இதில் விளங்கிக் கொள்ள வேண்டியது. இதை எப்படி சோசலிசத்துடன் ஒப்பிட முடியும்?

கலீபாவாக இருந்த உஸ்மானை கலகக்காரர்கள் முற்றுகை இட்ட நிகழ்வை விவரிக்கிறது புஹாரி 2778. கலீபாவாக இருப்பவர் பொதுச் சொத்திலிருந்து உண்ணலாமா? என்பது தான் முற்றுகை இடப்பட்டதன் காரணம். உடனே மன்னரையே முற்றுகை இடும் அளவுக்கு அங்கு மக்களுக்கு உரிமை இருந்திருக்கிறது பார்த்தீர்களா? என்று திசை திருப்ப வேண்டாம். அன்று இருந்தது ஆரம்ப கட்டத்தில் இருந்த அரசு அமைப்பு, பின்னைக் காலத்தில் ஏற்பட்ட ஆடம்பரங்களும், அதிகாரங்களும் அன்று இருந்ததில்லை. பொதுச் சொத்தை உண்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதா? உஸ்மான் குறைவாக எடுத்தாரா? தேவைக்கு அதிகமாக எடுத்தாரா? என்பதெல்லாம் இங்கு கேள்விகள் அல்ல. பொதுச் சொத்தை மக்களுக்கு தெரியாமல் தனதாக்கிக் கொள்வது 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது என்று தானே கொள்ள வேண்டும். சோசலிச அரசின் பக்கத்தில் நிற்க முடியுமா இவை?

வரி வசூலிப்பதில் முறைகேடுகள் நடக்கின்றனவா? என்பதற்கு பதிலளிக்கிறது புஹாரி 3111. இந்த ஹதீஸிலும் இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி வரி வசூலிப்பு நடந்ததா? இல்லையா? என்பது நம்முடைய விவாதம் அல்ல. ஏற்கனவே நம்மிடம் உள்ளது என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டிருக்கிறார்களே என்பதும் நம்முடைய புளகம் அல்ல. இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி நடக்கவில்லை எனும் ஐயம் ஏற்பட்டு அது பொது வெளியில் பேசப்படும் விதயமாகும் அளவுக்கு வரிவசூலிப்பு வெளிப்படையாக நடக்கவில்லை என்பதற்கான சான்று அல்லவா இந்த ஹதீஸ்.

இது போன்று ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நிறைய விவரங்களை ஹதீஸ்களிலிருந்து திரட்ட முடியும். இங்கு எடுத்தாளப்பட்டிருப்பவை வகை மாதிரிகளே. இன்றைய முஸ்லீம்களைப் பொருந்தவரை அவர்கள் தங்கள் வேத உபனிடதங்களை – குரான் ஹதீஸ்களைத் தான் குறிப்பிடுகிறேன் – படிப்பதே இல்லை. அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது என்று தங்கள் தலைவர்கள் கூறுவதை அப்படியே நம்பி கிளிப்பிள்ளை போல் கூறிக் கொண்டிருப்பவர்கள். இதிலிருந்து மாறி குரான் ஹதீஸ்கை ஊன்றிப் படிக்குமாறு முஸ்லீம்களைக் கோருகிறேன். ரஷாதிய கலீபாக்களின் காலத்தோடு ஒப்பிட்டால் சோசலிச காலம் மிகவும் பிந்தியது. அங்கு மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் படித்துப் பாருங்கள் பிறகு ஒப்பிடலாம்.

மின்னூல் பதிப்பாக (PDF) பதிவிறக்க

யூடியூபில் காணொளியாக காண

கேட்பொலியாக கேட்க

இத்தொடரின் முந்திய பகுதிகள்

எது சைத்தானின் படை 1

எது சைத்தானின் படை 2

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s